வரலாற்றுச் சுவடுகள்

2022 டிசம்பர் 1-15 2022 வரலாற்றுச் சுவடுகள்

தமிழ்நாடும் பார்ப்பனரும்
ஸ்ரீமான் கி.அனந்தாச்சாரியார் (சேலம் வழக்கறிஞர்)

தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பன வகுப்பினர்
ஆரிய நாட்டிலிருந்து ஈண்டுக் குடியேறினவ-ரென்றும், அவர்களுடைய பழய நாகரிகமும் மதமும் கல்வியும் பயிற்சியும் தமிழ்நாட்டில் கலந்துபோய் இப்பொழுது ஒன்றினின்றும் மற்றொன்றைப் பிரித்துச் சொல்லவியலா மலிருந்தபோதிலும், ஆரியர்களுடைய தரும சாஸ்திரங்களென்று சொல்லப்படுகிற ஸ்மிருதி நூல்களும் அவர்களுடைய சமூகக்கட்டுப்பாடுகளும் இந்நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சிறிதும் பொருந்தாவென்றும் கருதப்பட்டு வருகின்றன. இக்கொள்கை ஆராய்ச்சி அளவில் சரியானதென்று ஏற்கப்பட்டு வருவதாகும். ஆரியர்களுடைய பண்டை நூல்களிலும் பிற்றைப் புராணங்களிலும் ஆரியா வர்த்தம் அல்லது ஆரிய நாடென்பது இமைய மலைக்குத் தெற்கிலும் இரு கடல்களுக்கு மிடையிலும் விந்திய மலைக்கு வடக்கிலுமுள்ள நிலப்பிரிவேயென்று சொல்லியிருப்பதும், மற்ற தேசமெல்லாம் அசுத்தமான மிலேச்ச அதாவது அன்னிய நாடென்று கூறியிருப்பதும் இதை முற்றிலும் வலியுறுத்துவனவாயிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் குடியேறின பார்ப்பனர் நாளடைவில், தமிழ் நாட்டினர் நாகரிகமும் மேன்மையும் வாய்ந்த ஒரு தனிக் கூட்டத்தினரென்பதை மறந்து. அவர்களைத் தங்களுடைய சாஸ்திர ஒழுங்கு-களுக்குட்பட்டவராகக் கருதி, அவர்களிற் சிலரை வைசியராகவும் ஏனையோரைச் சூத்திரராகவும் நடவடிக்கையில் பாகுபடுத்தி நடத்தி வந்திருக்கின்றனர்.

இப்பாகுபாடு தமிழ் மக்களிற் சிறந்தோரால் ஏற்றுக்கொள்ளப் பட்டதாய் கொள்ளுதற்கில்லை. இன்றளவும் தமிழரிற் சைவராவார் பார்ப்-பனரை உயர்ந்தோராகப் போற்றாமலும், அவர் தீண்டியதை யுண்ணாமலும் ஒழுகி வருவதைப் பார்க்கிறோம். ஆனால் சாதாரண மக்கள் இக்கட்டுப்பாட்டுக் குடன்பட்டுப் பார்ப்பனருக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்திருக்கின்றனர். இவ்வளவில் நில்லாமல், இவர்கள் க்ஷத்திரிய, வைசிய பதவிகளுக்காகத் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டும் பல வகைத்தான புராணச் சான்றுகளைப் பற்றிக் கொண்டும் வந்திருக்கின்றனர். ஆரிய நூல்களில் ஒரு ஜாதி மற்றொரு ஜாதியுடன் கலப்பதினால் சங்கர ஜாதி உற்பத்தியாகிறதென்று சொல்லியிருப்பதால், பார்ப்பனரும் தமிழரும் ஒன்று சேர்ந்து இந்நாட்டு ஆதிகுடி மக்களைப் பஞ்சமரென்றழைத்து இப்பகுதியையும் பூர்த்தி செய்தனர்.

ஆரியருடைய ஜாதி முறையானது அது தோன்றிய போழ்தும், பின்னர் நெடுங்காலமும் அவசியமறிந்ததேயாயினும், அஃது இக்காலத்துக் கொவ்வாதென்றும் தேச ஒற்றுமையைக் கெடுப்பதென்றும், அதைத் தொலைப்பது இயலாதாயினும் அதன் முறைகளைத் திருத்தியமைப்பது அவசியமென்றும் பல ஆன்றோர்களால் கருதப்பட்டு வந்திருக்கின்றன. இக்கருத்துக் கிணங்க நமது தேசத்தில் ஆங்காங்கு ஆசார சீர்திருத்த ஜனங்கள் அமைக்கப் பெற்று இயங்கி வந்தன. தமிழ்நாட்டினரும் இவ்வித திருத்தங்களின் பயனாக இங்கு காணப்படும் உயர்வு தாழ்வுகளும் மற்ற முறைகளும் மறைந்துவிடுமென எதிர்பார்த்துவந்தனர். ஆனால் இவ்வியக்கம் நாட்டில் நிலைக்கவில்லை.

தனிப்பட்ட மனிதர்களைத் தவிர எந்தச் சமூகமும் இதன் கொள்கைகளில் ஈடுபட
வில்லை. இவ்வியக்கம் பொதுஜன சமூகத்தைக் கைப்பற்ற வேண்டுமென்கிற முறையில் நடத்தப் பெறவுமில்லை. இதில் ஈடுபட்டிருந்தவர்களும், காலப்போக்கில், ஊக்கம் குறைந்து தம்முடைய மனைவி குழந்தைகளையும், சுற்றத்தினரையும் வியாஜமாகக் கொண்டு இதைக் கைவிட்டனர். சில்லறைப் பிராயச்சித்தங்களினுதவியால், அவர்கள் தத்தம் சமூகத்தினரோடு ராஜியும் செய்து கொண்டனர். இப்போது அவ்வியக்கத்தின் அடிச்சுவடும் காண முடியாமல் போய்விட்டது.

இவ்வாறிவ்வியக்கம் பொறியற்று வீழந்ததும் தமிழ்நாட்டு மக்கள் பெருத்ததோர் ஏமாற்றத்தையடைந்தனர். தமிழ்நாட்டில் பார்ப்பனர் உயர்ந்தோரெனப் போற்றப்படுதற் கெத்துணையாதரவுமில்லை என்பது வெளிப்படை. அன்னாரும் தங்களுடைய ஜனத்தொகைக்கும், தொழிலின் முறைக்கும் ஏற்றவளவுக்குப் பன்மடங்கதிகமான சலுகையும், செல்வாக்கும் அதிகார வர்க்கத்தாரிடத்தும், பொது மக்களிடையும் அடைந்து வாழ்ந்து வந்தனர். பார்ப்பனரில் பொது நன்மைக் குழைத்தார் பலருளரேனும் அன்னார் பொது நலத்துடன் தஞ்சுயநலத்தையும் கருதாமற் போகவில்லை. அன்றியும் கைம்மாறு வேண்டாது பொதுக் கடமையாற்றுவோரிடத்தும் இவ்வன்னிய வரசாங்கம் சுயநன்மைப்பயன் நல்கும் தத்துவமும் உணரப்பட்டது. இவ்வுண்மைகளை ஆழவறிந்த பார்ப்பனரல்லாரிற் சிலர் தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஆதிக்கத்தை யொடுக்க முன் வந்தது எவ்வாற்றானும் வியக்கத்தக்கதன்று.

பார்ப்பனரல்லாதாரின் இவ்வியக்கம் தோன்றிய காலை இதற்கு வெளிப்படையாக ஆதரவளிக்கப் பல தமிழர் அஞ்சினர்: ஆனால் இது தன்னுடைய கொள்கைகளின் மெய்ம்மையால் நிலையுற்றது. இதுபோதும் அறிவும் சுயமரியாதையும் வாய்ந்த தமிழரில் இதைப் போற்றாதார் யாருமிலரென்று சொல்லுதல் மிகையாகாது. ஆனால் சிலர் இதற்கு அரசியல் அமைப்பு இழுக்கென்றும், இன்னுஞ் சிலர் இதன் அரசியல் முறை பிற்போக்கான தென்றும் குறை கூறுவர். இவ்வியக்கத்துக்கு அரசியல் பற்றில்லாவிடின் இது வேரற்று சாய்ந்து விடுமென்பது அறிவுடையோர் அறிந்ததாகும். மற்றும் இதனுடைய அரசியல் முறைகள் சீக்கிரத்தில் சீர்மை பெறுமென்று கருதத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. இப்பொழுதும் இவ்வியக்கத்தைக் குறை கூறிப் பார்ப்பனவாதிக்கத்தை விரும்புவோர், பிரிட்டிஷ் அரசாட்சியின் மீதுள்ள மோகத்தால் அது நீங்கின நமது தேசம் உயிர் நிலையற்றுச் சீர்குலைந்து விடுமென்றெண்ணும் அடிமைத்தன்மை வாய்ந்த நம்முடைய மற்ற சகோதரர்களையே ஒப்பாராவர்.

இவ்வியக்கம் பார்ப்பனரைச் சுட்டியெழுந்த தாதலின், இதன்பால் பார்ப்பனர் எங்ஙனம் ஒழுகி வந்திருக்கின்றன ரென்பதைக் கவனிப்பது மிகையாகாது. பார்ப்பனச் சமுகம் இவ்வியக்கத்தை இதுகாறும் பொருட்
படுத்தாமலும் உதாசீனித்தும் வந்திருப்பது மிகவும் விசனிக்கத் தகுந்ததாகும். பார்ப்பனரல்-லாதாருக்குச் சமூக வாழ்க்கையில் பலவகைக் குறைகள் இருக்கின்றன வென்பதை எவரும் மறுக்க முடியாது. ஆலயங்களில் எவரும் தம்முடைய ஒழுக்கத்துக்கும் பக்திக்கும்” ஏற்றவாறு நடத்தப் படுகிறதில்லை. பிறப்பு காரணமாக அநேக வேற்றுமைகள் செய்யப்-படுகின்றன. பார்ப்பனரல்லாதாரிற் பலர் கடவுளைப் பணிதற்குக் கூடத் தகுந்த வசதி பெற முடியாமற் போகிறது. எப்பார்ப்பனச் சிறுவனும் எத்தகைச் சீலம் வாய்ந்த பார்ப்பனரல்லாத பெரியாரையும் சூத்திரனென்று அழைக்கிறான்.

பார்ப்பனரின் உதாரணம் காரணமாக வகுப்பு வித்தியாச உணர்ச்சியும், உயர்வு தாழ்வுக் கொள்கைகளும், சமூகத்தில் பலவித உட்பிரிவுகளும் பார்பன
ரல்லாதாருக்குள் பெருகி வருகின்றன. பார்ப்பனரை உயர்ந்தோரெனக்கருதி அவர்களுடைய வழக்கத்தைப் பின்பற்றுவதால் பார்ப்பனரல்லாதாரிற் பெரும்பான்மையோர் பாலிய விவாகம், விதவைகளுக்கு மறுவிவாக மறுத்தல் முதலிய தீயவொழுக்கங்களுக்காளாகி வருகின்றனர்! தங்களுடைய சொந்தநாட்டில் தமிழர் அதிகாரமும், ஆதிக்கமும் அடைதற்கு இப்பார்ப்பனர் ஒரு பெருந்தடையாகவுமிருந்து வருகின்றனர். பார்ப்பனரல்லாதாரின் இயக்கம் வளர்வதற்கு இவ்வகைக் காரணங்கள் இருக்கவும் இதனிடத்துப் பார்ப்பனர் வாளாவிருந்தது சிறிதளவு ஆணவம் பற்றியும் பெரிதும் அறியாமையாலுமென்று கொள்ளுதல் தகுதியுடைத்தாகும்.

“பார்ப்பனர்” என்னும் சொல்லும் இக்குழாத் தினருக்குச் சீற்றத்தை விளைத்த்தோமென்று அய்யுறவும் வேண்டியிருக்கிறது. இச்சொல் பெரும் பொருள் கொண்டதொரு தமிழ்ச் சொல்லென்பதையும், இது நெடுக பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாண்டெடுத்தேத்த” என்பதிற்
போல இலக்கியங்களில் வழங்கி வந்த-தென்பதையும் இஃது ஒரு வசைச்சொல் லாகாதென்பதையும் இச்சமூகத்தனரிற் பெரும்பாலோர் அறிந்திலர் போலும். பார்ப்பனச் சமூகம் இவ்வாறு வாளாவிருந்திருக்க தனிப்பட்ட பார்ப்பனர் தங்களுக்குட்பட்ட பார்ப்பனரல்லாதாரிற் சிலரைக் கிளப்பி விட்டு நேர்முறையல்லாது அவர் முகமாக இவ்வியக்கத்தைத் தாக்கியிருக்கின்றனர். ஆனால் வாய்மையில்லா இப்போலியர்கள் உண்மையில் ஊன்றிய இவ்வியக்கத்தையொரு சிறிதும் அசைக்கத் திறன் பெற்றாரில்லை. தனிப்பட்ட பார்ப்பனருடைய இத்தகைய செய்கையே நமது நாட்டில் பார்ப்பனச் சூழ்ச்சியென்று அழைக்கப்பட்டு வருகிறது. இவ்விதச் சூழ்ச்சியின் பயனாக நாளும் மறுதினமும் மூலை முடக்குகளி லிருந்தெல்லாம் பார்ப்பனச் சமூகத்தைத் தாக்கிப் பேசும் “பார்ப்பனரல்லாத தலைவர்கள்” புதிது புதிதாகக் கிளம்பி வரும் காட்சியை நமது நாடு கண்ணுற்று வருகிறது.

இது பொது ஜனங்களிடத்துப் பெருமயக்கத்தை யுண்டுபண்ணி அவர்களுக்குத் தேசீய இயக்கங்களிலுள்ள ஊக்கத்தையும் நம்பிக்கையையும் குன்றச்செய்கிறது
அன்னிய ஆட்சிக்குட்பட்ட எவ்விடத்தும் வகுப்புப் பூசல்கள் தோன்றுவது தேச முன்னேற்
றத்திற்குப் பெரிதும் இழுக்கென்பது யாவருமறிந்தது. ஆதலால் தமிழ்நாட்டிலுள்ள இவ்வேற்றுமையை நீக்க வழி தேடுவது இந்நாட்டுத் தலைவர்களின் முதற் கடனாகும். இவ்வேற்றுமை நீங்கி ஒற்றுமை தழைக்க வேண்டுமாயின் இரு சமூகத்தினரும் குற்றங்குறைகள் யாரிடத்துளவாயினும் அவைகளைக் களைந்தொழிக்க வேண்டு-மென்கிற நல்ல எண்ணத்துடன், தகுந்த பிரதிநிதிகள் மூலமாக, விவாத விஷயங்களைக் கலந்து ஆலோசித்து வித்தியாசங்களை யொருவாறு முடிவு கட்டிக்கொள்ளவேண்டும். அவ்வித ஏற்பாடுகள் நடைபெறுவதன் முன் பார்ப்பனச்

சமூகத்தினர் கவனம் செலுத்த-வேண்டிய சில விஷயங்கள் வருமாறு:-
(1) தமிழ் நாட்டின் பெருமை, பண்டைக் காலத்துடன் நின்ற தொன்றன்று. சைவம் பிறந்தது இந்நாட்டிலேயே, வைஷ்ணவம் வளர்ந்ததும் வியாஸ சூத்திரங்கட்கு மூவர் பாஷியங்கட்கும் முந்திய பாஷியங் கண்டதும் ஈண்டாகும்.
(2) தமிழ்நாட்டுச் சமூகவாழ்க்கை யமைப்பில் தமிழர் சுயநிர்ணயம் தேடுவது சாலவும் தகுதியுடைத்து. வாழ்க்கையில் செம்மையாய் அனுஷ்டிக்கும் அன்னியருடைய தருமத்தைக் காட்டினும் ஏற்றக்குறைவுடன் அநுஷ்டிக்கும் ஒருவருடைய சுயதருமமே சிறந்ததாகும்.
(3) பார்ப்பனரல்லாதாருக்குச் சமூக வாழ்க்கையிலும் மற்ற விஷயங்களிலும் அநேக குறைகள் இருக்கின்றனவென்பது ஒப்பத்தக்கது. இவைகளை நீக்குதற்கு அரசாங்கத்தாருடைய சகாயத்துடன் பார்ப்பனருடை மனமார்ந்த உதவியும் அவசியமாகும்.
(4) பார்ப்பனர் இந்நாட்டில் மற்ற தமிழ் மக்களுடன் நேசமாகவும் சமரசமாகவும் வாழ
வேண்டியவராவர். இவ்வரசாங்கமாவது வேறு அன்னிய வரசாங்கமாவது தங்களுக்கு ஊழியம் கொடுத்து என்றும் தங்களைக் காப்பாற்றி வருமெனவெண்ணி அன்னியருக்கடிமை பூண்டு வாழக் கருதுவது அவர்கள் பால் தவறாகும்.
(5) பார்ப்பனரிற் பலர் இந்நாட்டுக்கும் தேசத்துக்கும் அரிய தொண்டியற்றியுளராயினும் அவர்களிற் சுயநலமும் அடிமைப்பான்மையும் கொண்ட பல பிரமுகர்கள் இருந்து வருவதை யவர்கள் உணரவேண்டும். நமது தேசத்தில் ஒத்துழையாமை இயக்கம் தழைத்தோங்கிய நாளில் பிற நாடு பலவேகி ஆங்கு நம்மையும் நம்மியக்கத்தையும் குறை கூறி யெள்ளி நகைத்தும் உலக அநுதாபம் நம்மை யணுகவொட்டாமற் றடுத்தும் இவ்வன்னிய அரசாட்சிக்கு வலி தேடிக்கொடுத்த புண்ணியர் அதிக கனம் சீனிவாச சாஸ்திரியாரும், தங்க மாலைகளையும் நவரத்தினங்கள் பதித்த கண்டிகளையும் வட மொழிச் சுலோகங்களையும் நெடு வழி சுமந்து சென்று உலகத்தார் முன்பு நமது தாய்நாட்டின் சுயமதிப்பைக் குலைத்து நம்மை நகைப்புக்கிடமாக்கிய மகான் திவான் பகதூர் அரங்காச்சாரியாரும் தமிழ்நாட்டுப் பார்ப்பனச் சமூகமீன்ற புனிதரென்பதை இவர்கள் என்றும் மறந்து விடலாகாது
7) பார்ப்பனரல்லாத சமூகத்தை இருகக்ஷியி-னராகப் பிரிக்க முயலுவதும் வாய் திறக்கவிடாமல் அமைதியாய்க் கிடக்கும் பார்ப்பனரல்லாதாருக்குத் தாங்கள் தான் சரியான பிரதிநிதிகள் என்றும், அவர்களும் தங்கள் ஆதிக்கத்தை விரும்புகிறார்களென்றும் சொல்லத் துணிவதும் தங்களுக்கு அடாததாகுமென்பதைப் பார்ப்-பனர்கள் உணரவேண்டும்.
— ‘குடி அரசு’ 12.6.1927