ஆசிரியர் பதில்கள்

2022 ஆசிரியர் பதில்கள் டிசம்பர் 1-15 2022

தனியார் மயத்தால் ஒடுக்கப்பட்டோருக்கு
வேலை வாய்ப்பிழப்பு

கே : காசி தமிழ்ச்சங்கம் நிகழ்வில், இச்சங்கமத்தின் மூலம் தி.மு.க.வை வீழ்த்துவோம் என்று பி.ஜே.பி.யினர் பேசியுள்ளது, அவர்களின் நோக்கம் அதுதான் என்பதை வெளிப்படுத்துகிறதல்லவா?

ப : முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். -_பா.ஜ.க.வின் ஏற்பாடு மற்றொருவகை காவிக்கொள்கை பரப்பு விழா. தமிழ்ப் போர்வை போர்த்தப்பட்டு அரசு செலவில் நடத்தப்படும் ‘காசி யாத்திரை’ கூத்து எதற்கு என்பது அதன்மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது பார்த்தீர்களா? பூனைக்குட்டி சாக்குப் பையிலிருந்து வெளியே வந்துவிட்டது என்பது இப்போது அதன்மூலம் புரிகிறதல்லவா?

கே : எட்டு ஆண்டுகளாக வேலை வாய்ப்பை பறிக்க, ஒழிக்க முயற்சி செய்த பா.ஜ.க. ஒன்றிய அரசு, தற்போது வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது தேர்தலுக்கான
நாடகம்தானே?

ப : 16 கோடி வேலைவாய்ப்பு _ ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று? 70 ஆயிரம் வேலைவாய்ப்பு என்று அரசு காலி இடத்தை நிரப்பும் வழமையான விழாவாக  ‘மேளா’வாகக் கொண்டாடி கண்ணில் மண்ணைத் தூவுகிறார்கள். ஏற்கனவே பொதுத்துறை தனியார் துறையிடம் மாற்றப் பட்டதால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு குறிப்பாக OBC,ST ஆகியவர்களுக்கு வெளி
யேற்றம்தானே பரிசு_அந்த இடங்கள் பறிபோய் இருக்கின்றனவே!

கே : காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொள்ள தமிழறிஞர்கள் யாரையும் அழைக்காதது, அது காசி காவிச்சங்கம் என்பதைத்தானே காட்டுகிறது?

ப : அதில் என்ன ‘அட்டி?’ (சந்தேகம்?)

கே : பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க.வின் பலவந்த பிணைப்பு, அ.தி.மு.க.விற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் கேடு. பக்கத்து வீட்டில் தீபிடிப்பது போன்றது. இந்நிலையில்
பி.ஜே.பி.யுடன் உறவு வேண்டாம் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் மொத்தமாக போர்க்கொடி பிடிப்பதுதான் ஒரே தீர்வு என்பது சரியா?

ப : தொண்டர்களின் உணர்வை மதித்து இரண்டாம் கட்டத் தலைவர்கள் வெளிப்படையாய் இதை ஒலித்து, கிளம்பி, அக்கட்சியைக் காப்பாற்றி, எம்.ஜி.ஆர்., ஜெ., ஆகியோர் வழியில் நடக்கச் செய்யலாமே!

கே : அந்தந்த ஜாதி மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தந்தால், 100 க்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு அது நடைமுறை சாத்தியமா? தற்போதுள்ள ஜாதித்தொகுப்பிலுள்ள மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு இடஒதுக்கீடு செய்யலாம் அல்லவா?

ப : கொள்கையளவில் இத்திட்டத்தை ஒப்புக்கொண்டால், முந்தைய வகுப்புரிமை ஆணையை அடிப்படையாக வைத்து புதிய தொகுப்பு முறைகளை, பலஜாதிகளை இணைத்து தீர்வு காணுவது எளிது! பலருக்கு rotation முறையில் வாய்ப்பு அளிப்பதையும் சட்ட நடைமுறை உருவாக்கி, யாரும்பாதிக்கப்படாத வண்ணம் உருவாக்கிக் கொடுக்க அத்திட்டம் பயன்படுவது உறுதி!

கே : தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்படும் தற்போதைய முறைக்கு எதிராய் உச்ச நீதிமன்றம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது, நல்ல தீர்வுக்கான
அடையாளமாகக் கொள்ளலாமா?

ப : இது பற்றி அறிய 25.11.2022 ‘விடுதலை’ எனது அறிக்கையைப் படித்துப் பாருங்கள்.

கே : ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் வைத்துள்ளவற்றை ஒப்புதல் பெற மக்கள் போராட்டம்தான் ஒரே வழியா? உச்சநீதிமன்றம் தலையிட முடியாதா? முடியாதென்றால் மக்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட வேண்டாமா?

ப : மக்கள் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டம் இரண்டும் முக்கியம் இருமுனைத் தாக்குதல் போல’.