முனைவர் வா.நேரு
“சர்வதேசப் புள்ளி விவரங்களை எதிர்
கொள்ளவோ மறுதலிக்கவோ நம்மிடம் புள்ளி விவரங்கள் இல்லாமை மிகப்பெரிய பலவீனம்.
கொள்ளை நோய்த் தொற்றின்போது லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர் நோக்கி நடந்து சென்றனர். அவர்கள் குறித்த புள்ளி விவரம் அரசிடம் இல்லை. ஊடகங்களில் கேள்வி எழுந்த பிறகாவது நமது தொழிலாளர் நலத்துறை அமைச்சகமோ, புள்ளி விவரத் துறையோ விழித்துக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை.”
இது 5.11.2022 வந்த ‘தினமணி’ தலையங்கத்தில் ஒரு பகுதி. முறையான புள்ளி விவரங்களை அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் எடுக்கவில்லை. இதனால் நம் நாட்டைப் பட்டினியால் வாடும் நாடு என்று பட்டியல் இட்டு விட்டார்கள் என்று ‘தினமணி’ புலம்பி இருக்கிறது. இது உண்மையா?.
முறையான புள்ளி விவரங்களை வெளியிட்-டால், உண்மை தெரிந்துவிடும். தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உண்மையைத் தெரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்து இந்தப் பார்ப்பனிய, பனியா, கார்ப்பரேட் அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்பதற்காகவே ஒன்றிய அரசு புள்ளி விவரங்களை எடுப்பதில்லை. எடுத்தாலும் வெளியிடுவதில்லை. இதைப் பற்றி மிக விரிவாகவே திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 25,2022 அன்று ஓர் அறிக்கை கொடுத்தார்கள்.அந்த அறிக்கையில் “எடுக்கப் போகும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பில், ஜாதியைக் குறிப்பிட்டுக் கணக்கெடுத்தால்தான், சமூகத்தில் இட ஒதுக்கீடு, நாட்டின் வளர்ச்சியில் எது எது மிகவும் வளர்ச்சியடையாத மக்கள் சமூகம் என்பதை அறிந்து, திட்டமிட்டு பரிகாரம் தேட வசதியாக இருக்குமென்பதால், இந்த அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற வேண்டுமென்பதை பெரும்பாலான மக்களின் பிரதிநிதிகள், கட்சிகள், இயக்கங்கள் வற்புறுத்துகின்றன.
பிரதமர் மோடியிடம் நேரில் வற்புறுத்தியும், தேசிய ஜனநாயகக் (என்.டி.ஏ.) கூட்டணிக்குள் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சிகளும், அரசின் முதல்வர்களும் (நிதிஷ்குமார் போன்றவர்கள்) வற்புறுத்தி, பிரதமரை, பீகார் மாநிலத்திலிருந்து ஒரு அனைத்துக் கட்சி குழுவே நேரில் சென்று வற்புறுத்தி கோரிக்கையும் வைத்தது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள், தமிழகம் போன்ற பல மாநிலங்களிலும் இந்தக் கோரிக்கை பரவலாக பல ஆண்டுகளாக வற்புறுத்தி வரப்படுகின்றது.” என்று குறிப்பிட்டார்கள்.இவ்வளவு பேர் வற்புறுத்தியும் ஏன் இந்திய ஒன்றிய அரசு புள்ளி விவரங்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எடுக்க மறுக்கிறது?
2014 பாராளுமன்றத் தேர்தலில் மோடி அவர்களைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பி.ஜே.பி.அவரை பிற்படுத்தப்பட்ட முகமாக மக்கள் முன் நிறுத்தி வெற்றி பெற்றனர்.ஆனால் நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு இன்று வரை இல்லை…. “முறையான புள்ளி விவரம் எடுக்கப்பட்டால்தான் முறையான தீர்வுகளை எடுக்க முடியும்” என்பது தெரிந்த நிருவாகம் ஏன் முறையான புள்ளி விவரங்களை எடுக்க மறுக்கிறது?ஏன் எடுக்க மறுக்கிறது என்பதனை எத்தனை ஒடுக்கப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்?..
இந்தியத் துணைக்கண்டத்தில் ஏழ்மை, வறுமை, இல்லாமை ,பசி, பிணி எல்லாம் ஜாதியோடு பின்னிப் பிணைந்தவை. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறக்கும் பெரும்பான்மையான குழந்தைகள் ஏழ்மையில்தான் பிறக்கின்றனர். ஏழ்மையில் தான் வளர்கின்றனர். ஜாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் வறுமையில் வளரும் குழந்தைகளில் எத்தனை சதவிகிதம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற புள்ளி விவரம் வெளியே வரும். உயர்ஜாதிக் குழந்தைகள் சதவிகிதம் ஏன் இவ்வளவு குறைவு? ஒடுக்கப்பட்டவர்கள் வீட்டுக் குழந்தைகள் சதவிகிதம் ஏன் இவ்வளவு அதிகம் எனக் கேள்வி வரும்… முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குஜராத் வந்தபோது குடிசைகளை சுவர் எழுப்பி மறைத்த இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சார்ந்த குழந்தைகளின் பசியை பட்டினியை மறைக்க விரும்புகிறார்களே தவிர, அதனைத் தீர்க்க வேண்டும்,ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லை.
மேற்கண்ட அறிக்கையிலேயே அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “ஏற்கனவே இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ள மாநிலங்களில் இருந்து உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்குகள் போடப்படும் நிலையில், நீதிமன்றம் கேட்கும் ஒரே கேள்வி, ஆதாரப்-பூர்வமான புள்ளிவிவரங்கள் ஜாதிக்கென்று உள்ளதா? (Quantified Quota – Data) உண்டு என்பதைச் சொல்லி, அவர்களது நியாயங்களைச் சொல்ல, இந்தக் கணக்கெடுப்பு (censes) – ஜாதிவாரியாகப் பதிவு செய்வதன் மூலமே பாதுகாக்க முடியும்.
லாலுபிரசாத் யாதவ், “பறவைகளுக்கும், விலங்குகளுக்கும்கூட கணக்கெடுப்பு நடை-பெறுகின்றன. மனிதர்களான நமக்கு ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்புக் கூடாதா?” என்று கேட்டுள்ளார்.
எஸ்.சி., எஸ்.டி., என்ற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் பற்றி ஜாதி அடிப்படையில் பதிவு செய்கையில், இந்த மறுப்பின் மூலம் வெகுவாகப் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்டோர் தானே? 1980 இல் மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்த இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவான மண்டல் குழுவின் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் அளவாக 52 சதவிகிதம் என்பது பதிவாகியுள்ளது!
இந்த 40 ஆண்டுகாலத்தில் மொத்த மக்கள் தொகைப் பெருக்கம் 130 கோடியாகப் பெருகிய நிலையில், ஓ.பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினரின் மக்கள் தொகை பெருகியதா? சுருங்கியதா? என்பது முக்கியமாகத் தெரிய வேண்டியது அவசியம் அல்லவா?
இட ஒதுக்கீடு இந்த மக்களுக்குக் கிடைக்க இந்தப் புள்ளி விவரங்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் வெளிப்பட்டால், அது அவர்களுக்கு அனுகூலமாகிவிடக் கூடும் என்பதைத் தடுப்பதற்குத் தானே, இப்படி ஜாதிவாரி குறிப்பு எடுக்கப்பட முடியாது என்று மத்திய மோடி அரசு கைவிரிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கையையும் இன்றைய நடப்பையும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த படித்தவர்கள் பலமுறை படிக்க வேண்டும். உணர வேண்டும்; உணர்த்த வேண்டும். ஜாதி என்னும் ஏணிப்படி அமைப்பை பல்லாண்டு காலமாக பாதுகாக்கும் சனாதன சக்திகள் உண்மையை ஒடுக்கப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே சுயஜாதி பெருமை பேசு எனக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இன்றைய கணினி யுகத்தில் புள்ளி விவரங்களைச் சேகரிப்பது மிகக் கடினமான வேலை அல்ல. ஒன்றிய அரசு நினைத்தால், தனது அரசு இயந்திரங்கள் மூலமும், ஏற்கனவே மாநிலங்கள் எடுத்து வைத்துள்ள புள்ளி விவரங்களைப் பெற்றும் மிக விரைவில் புள்ளி விவரங்களைச் சேகரிக்க முடியும். “மனது இருந்தால் மார்க்கம் உண்டு” என்னும் சொலவடை போல இந்த ஒன்றிய அரசுக்கு மனது இல்லை. அதனால் அவர்கள் எந்த விவரங்களும் எடுக்க விரும்பவில்லை.
சென்னை அய்.அய்.டி.யில் கிடைத்த புள்ளி விவரம் எதார்த்த நிலையை உணர்த்துகிறது. துணைப்பேராசிரியர்கள் எஸ்.சி.களுக்கான 30 இடங்களில் 7 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதனைப்போல எஸ்.டி.களில் 15க்கு ஒருவர், ஓ.பி.சி.களில் 53க்கு 18 பேர் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளனர். ஆனால் முற்பட்ட ஜாதிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 98 ஆனால் 98-க்கும் அதிகமான அளவில் அதாவது 170 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதனைப் போலவே இணைப் பேராசிரியர் பதவிகளில் 27-க்கு 4 _ 13-க்கு 1 _ 49க்கு 19. ஆனால், 90க்கு 156. அதைப் போல பேராசிரியர் பதவிகளில் 47-க்கு 5 _ 23-க்கு 1 _ 84க்கு 29.
ஆனால், 154க்கு 273. எவ்வளவு பெரிய அத்துமீறல், சமூக நீதியை அமல்படுத்தாத தன்மை என்பது அய்.அய்.டி.யில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நிலைமையை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் உண்மையை உணரமுடியும், உணர்த்த முடியும், விடிவு காணமுடியும்.
பாதிக்கப்படும் அனைவரையும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களை ஒன்று திரட்ட முடியும், ஒருங்கிணைக்கமுடியும்.
இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்-படுத்தவும், நீதி கிடைக்கவும் .திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி
அவர்களின் வழிகாட்டுதலின்படி பிற்படுத்-தப்பட்ட ஊழியர்கள் சங்கத்தலைவர் கோ.கருணாநிதி அவர்கள் தில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் நீதி மன்றங்களை விட மக்கள் மன்றங்களையே நம்பியவர். அவரது வழியில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களும் பல நிலைகளில் இந்த ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பிரச்சனையை பல தளங்களில் கொண்டு சென்று மக்களுக்கு உணர்த்திக் கொண்டு வருகின்றார்கள். அதை நாமும் சமூக ஊடகங்களின் வாயிலாகக் கொண்டு செல்வோம். கற்பிப்போம். றீ