பெண்ணால் முடியும்!

2022 நவம்பர் 1-15 2022 பெண்ணால் முடியும்

மலேசியாவில் தங்கம் வென்ற இலக்கியா!
மூட்டை தூக்கும் தொழிலாளி மகள்!
இலக்கியா ஒரு தமிழ்ப்பெண். இவள் குடும்பம் மிகவும் வசதி குறைந்த குடும்பம். இவருடைய தந்தை சென்னை கோயம்பேடு மார்க்கட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இல்லாமை இலக்கியாவின் முயற்சியை முடக்கிவிடவில்லை. அவர் மிகவும் முயன்று கராத்தே பயிற்சி பெற்றார். முயற்சி திருவினையாக்கும், என்பதற்கொப்ப இவர் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கராத்தே போட்டியில் கனடா வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். வறுமையை வென்று திறமையில் தேர்ந்து தங்கம் வென்றுள்ள தமிழ்ப்பெண்ணைப் பாராட்டுவோமே! நம் பாராட்டும் அவருக்கு உந்து சக்தியாக அமையுமன்றோ?

இளம் விஞ்ஞானி அர்ச்சனா!

புவிக்குக் கேடு பிளாஸ்டிக் பொருள்கள். பலவிதங்களில் சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் பொருள்கள் பாதிப்பதால் அரசு ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது என்றாலும் அதை முழுமையாக அமல்படுத்திவிட்டது என்றும், அந்த வகை பிளாஸ்டிக் தற்போது அறவே புழக்கத்தில் இல்லை எனவும் கூறிட இயலாது. இந்நிலையில் ஓர் இளம் விஞ்ஞானி, பாப்பா நாடு அரசுப் பள்ளி மாணவச் செல்வம் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தி மாநில அளவில் முதற்பரிசு பெற்றுள்ளார். ஆம், அவர்தான் அர்ச்சனா. அவருடைய கண்டுபிடிப்போ மண்ணுக்கும், மனிதனுக்கும் எந்தக் கேட்டையும் ஏற்படுத்தாத ஒருவகை ‘பயோ பிளாஸ்டிக்’. அதுவும் இருபத்தெட்டே நாள்களில் மக்கி உரமாகிவிடக்கூடிய பொருளாகும். அரசுப் பள்ளியின் அருஞ்செல்வம் இன்றைய இளம் விஞ்ஞானி நாளைய தலைவிஞ்ஞானி அர்ச்சனாவைப் பாராட்டி வாழ்த்துவோமே! மேலும் விஞ்ஞான வியப்புகளை அம்மாணவி கண்டுபிடித்து தமிழகத்துக்குத் தர ஊக்குவிப்போம். உந்துசக்தியாவோம்.