முனைவர் கடவூர் மணிமாறன்
இந்தியைத் திணிக்கத் துடிக்கின்றார் – மக்களை
ஏய்த்தே நாளும் நடிக்கின்றார்!
மந்தியை மானெனப் புகழ்கின்றார் பிறர்
மனத்தை வருத்தி இகழ்கின்றார்!
ஆங்கிலம் அகற்றிட விழைகின்றார் – இந்தியை
அந்த இடத்தில் நுழைக்கின்றார்!
தீங்கின் உருவாய்த் திகழ்கின்றார் – அறிவுத்
தெளிவை இழந்தே மகிழ்கின்றார்!
அரசியல் அமைப்புச் சட்டத்தின் – பல
ஆணி வேரைப் பிடுங்குகிறார்;
கரவை நெஞ்சில் சுமப்போரால் – மக்கள்
கண்ணீர் சிந்தி நடுங்குகிறார்!
உலகின் மூத்த முதன்மொழியாம் – நந்தம்
உயர்தமிழ் மொழிக்கே பழிசேர்ப்பார்;
நிலவை விண்மீன் எனப் பகர்வார் – இவர்
நேர்மை உலகோர் நன்கறிவார்!
நேருவின் உறுதி மொழியறியார் – மக்கள்
நெஞ்சில் நஞ்சைச் சேர்க்கின்றார்!
பாரே போற்றும் பைந்தமிழ்க்கு – வீண்
பழிகள் இழைத்திட ஆர்க்கின்றார்!
எதற்கும் உதவா இந்தியிலே – நல்
இலக்கிய இலக்கணம் ஏதுமில்லை!
மதவெறி மிக்கோர் மொழிவெறியால் – நாட்டின்
மாண்பை இழக்கவும் துணிந்தாரே!
உரிமை யாவும் ஒவ்வொன்றாய் – இற்றை
ஒன்றிய அரசோ பறிக்கிறது;
நரிகள் நாட்டை மேய்ந்திடவே – நாட்டு
நலனோ காற்றில் பறக்கிறது!
அயல்மொழி ஒன்றை ஆர்வமுடன் – கற்க
அனைவரும் விரும்பிப் பயன் பெறலாம்!
அயல்மொழித் திணிப்போ, விரும்பாத – ஓர்
ஆணவ உச்சம்! மறுப்போர்யார்?ஸீ