ஆய்வுக் கட்டுரை: புத்தம் – பெரியாரியம் – இந்துத்துவம்

2022 கட்டுரைகள் நவம்பர் 1-15 2022

தஞ்சை பெ. மருதவாணன்

[தஞ்சை மருதவாணன் அவர்கள், பகுத்தறிவாளர்; கழகத்தின் அடிநாள் ஆய்வாளர்; ஒளிமுத்து, சீரிய சிந்தனையாளர். அவரது கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி] – (ஆசிரியர்)

பெரியாரியம் என்பது அனாரியம்
பெரியாரியம் என்பது அனாரியம். பகுத்தறிவைத் தீய்க்கும் பழமைக் கோட்டைகளை இடித்துத் தகர்க்க வந்த நிலச்சமன் பொறி (Bull Dozer); திராவிடத்தில் ஊடுருவிய ஆரிய நஞ்சினை அகற்றும் திறன் வாய்ந்த அருமருந்து. இந்துத்துவத்தை நீற்றுவதற்கு வந்துதித்த வெந்தழல். இத்தகு பெரியாரியத்தின் மூலவராம் தந்தை பெரியார் என்பவர் யார்? ஒடுக்கப்பட்ட மாந்த இனத்தைக் கடைத்தேற்ற வந்த தலைசிறந்த மனித உரிமைப் போராளி. பகுத்தறிவுச் சுடரேந்தி அறியாமை இருளில் உறங்கிக் கிடந்த தமிழரையெல்லாம் தட்டியெழுப்பிய தகைமையாளர். தன் கருத்துகளை அச்சம், தயை தாட்சண்யம் ஆகியவற்றுக்கு ஆட்படாமல் வெளியிடும் திண்மை மிகக்கொண்ட உண்மையாளர்.

தனது பேச்சிலும் எழுத்திலும் இருபொருள், குழப்பம், மூடிமறைத்தல் ஆகிய எவையுமின்றி வெளிப்படையாகக் கருத்தறிவிக்கும் வெள்ளை மனங்கொண்ட வெண்தாடி வேந்தர். நூலைப் படித்து அவர் தனது கருத்துகளை உருவாக்கிக்கொள்ளவில்லை. தனது பட்டறிவைக் கொண்டே சிந்தித்து, தனது கருத்துகளை உலகுக்கு வழங்கினார். தான் போதித்தவாறு வாழ்ந்து காட்டினார். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பிறர் சொன்னதை மேற்கோள் காட்டி அவர் ஒரு போதும் தன் கருத்துகளை நிறுவுவதில்லை. என் அனுபவத்தில் அறிந்ததை நான் சொல்லுகிறேன். “அது சரி என்று உன் சிந்தனைக்குப் பட்டால் ஏற்றுக்கொள். இல்லையேல் தள்ளிவிடு’’ என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர் தன் பிரச்சார அணுகுமுறையை வகுத்துக்கொண்டார்.

அவருக்கு எவரும் தலைவரோ வழிகாட்டியோ இல்லை. அவருக்கு ‘அவரேதான் தலைவர். அவர் மண்டைச் சுரப்பில் உதித்த பகுத்தறிவுச் சிந்தனையின் முடிவேதான் அவருக்கு வழிகாட்டி. பகுத்தறிவுச் சிந்தனைகளை நூல்களாக எழுதிக் குவித்து புத்தக நிலைப்பேழைகளை நிரப்பிய பெருமக்கள் உலகில் உண்டு. ஆனால், பகுத்தறிவுக்கொள்கை பரப்புதலை ஓர் இயக்கமாக நடத்தி பட்டிதொட்டிகளிலெல்லாம் சுழன்றுலவி, இலட்சக்கணக்கான மக்களை நேரில் சந்தித்து நடைமுறைப்படுத்தியவர் உலகில் இவர் ஒருவரே என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அன்று.
இவ்வாறு இயக்கமாக நடத்தியது மட்டு-மின்றி அவரே ஓர் இயக்கமாக உந்து ஆற்றலாக உலவினார் என்பது நுணுகி உணரவேண்டிய உண்மை. அளவில் அடங்காத அவரது தொண்டின் பரிமாணத்தை அளந்து காண்பது எப்படி? அதற்கு ஓர் எதிர்மறையான வழி உண்டு. இவர் மட்டும் தோன்றாமல் இருந்திருந்தால் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் நிலை என்னவாகி இருந்திருக்கும்? என்று கற்பனை செய்து மனக்கண்முன் நிறுத்துவதுதான் அது. மூவாயிரம் ஆண்டுகாலமாகப் படிந்துகிடந்த அறியாமைக் கசடுகளை மூவிருபது ஆண்டுப் பொதுவாழ்வில் துடைத்தெறியப் போராடிய முதுபெரும் போராளி அன்றோ அவர்!

புத்தாக்க பவுத்தம் கண்டதில் பெரியாரே முதல்வர்!
இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆரியத்துக்கு எதிர் புரட்சியாகத் தோன்றிய பவுத்தத்தின் மீது காலம் காலமாகப் படிந்து வந்த சனாதன மாசுகளைக் கழுவிக் களைந்து புரட்சிகரமான புத்தாக்க பவுத்தத்தை அறிமுகப்-படுத்தியவர்களுள் முதன்மை வகிப்பவர் தந்தை பெரியார் அவர்களே ஆவார்கள்.

‘பெரியாரின் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்’ என்னும் நூலில் (புதுமலர் பதிப்பகம், ஈரோடு, பக்கங்கள் 54-_55) புதுடில்லிப் பேராசிரியரான ஞான. அலாய்ச்சியஸ் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“புத்தரை நவீன காலத்தில் மீண்டும் ஆக்கியதற்கு அரை நூற்றாண்டுக்கு அதிக கால வரலாறு உண்டு. இதைச் செய்தவர்கள் அயோத்திதாசர், சகோதரன் அய்யப்பன், லட்சுமி நரசு, ஈஸ்வர்தர்த்மெதார்த்தி, போதானந்து, சந்திரிக பிரசாதுஜிகியது, சிங்காரவேலனார், பெரியார், அம்பேத்கர் முதலானோர் ஆவார்கள்.’’ (பக்கம் 54)…. புத்த சமயத்தை மறுபடியும் வகுத்தவர்கள்_ முறைப்படுத்தி யவர்கள் என மேலே குறிப்பிட்ட அனைவரிலும் பெரியார்தான் மிகுந்த புரட்சித்தன்மையராகவும் குற்றங்குறைகளுக்கு இடம் இல்லாதவராகவும் இருக்கிறார். எப்படி-யெனில், அவர்தான் புத்தரின் மய்யமான போதனைகளைச் சுற்றிலும் ஆயிரம் ஆண்டு-காலமாய்ப் பெருகியிருந்த பழைய மரபுகளின் புறப்பெருக்கங்களை ஏறக்குறைய முழுமையாகத் தவிர்த்து மேற்சென்றார். சடங்குகள், புரோகிதச் சூழ்ச்சிகள் ஆகியவற்றின் எல்லா வடிவங்களுக்கு எதிராகவும் அவற்றுக்கு என்ன நியாயம் கற்பிக்கப்பட்டாலும் கூட அவற்றை எதிர்த்து உறுதியாக நின்றார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மிகவும் செறிவேறி விளங்கிய சூழலில் மற்ற மதங்களுக்குப் போட்டியாக நின்ற ஒரு மதம் என பவுத்தத்தைப் பார்க்க ஒரேயடியாக மறுத்துவிட்டார்.’’ (பக்கம்56)

பெரியாரின் பார்வையில் பவுத்தம் ஒரு மதமல்ல; ஏன்?
பவுத்தத்தை ஒரு மதம் என்றே பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை. அதை ஒரு வாழ்வியல் நெறி அல்லது மார்க்கம் என்றே அவர் குறிப்பிட்டார். அதற்கான காரணத்தை அவர் இப்படிக் கூறுகிறார்:
“புத்தர் எப்படி மகானோ ரிஷியோ இல்லையோ, அதைப்போல பவுத்தம் என்பது ஒரு மதமல்ல. பலபேர் பவுத்தம் என்பதைத் தவறாக ஒரு மதம் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு மதம் என்றால் கண்டிப்பாக இதற்கு ஒரு கடவுள் வேண்டும்; மோட்சம், நரகம் வேண்டும்; ஆத்மா பாவபுண்ணியம் அவற்றுக்கு ஏற்றாற் போல தண்டனை இவையெல்லாம் வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும். அவற்றுக்குப் பெண்டாட்டி, பிள்ளைகுட்டி வைப்பாட்டி இவையெல்லாம் வேண்டும்-. இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும்.’’
(சென்னை எழும்பூர் மகாபோதி சங்கத்தில் 15.5.1957 அன்று நடந்த 2501 ஆம் ஆண்டு புத்தர் விழாவில் தலைமை ஏற்றுத் தந்தை பெரியார் ஆற்றிய உரை. ‘விடுதலை’ – 17.5.1957)

அறிவாசானின் அனைத்துமதக் கண்டனம்

மதவெறுப்பாளராகிய பெரியார் இந்துமதத்தை மட்டும் கண்டிக்கிறாரேயன்றி பிற மதங்களைக் கண்டிப்பதில்லை என்னும் கூற்று உண்மையா? இந்த மதம் அந்த மதம் என்றில்லாமல் எந்த மதமும் தன் எதிரியே என்பதைப் பறை சாற்றும் வண்ணம் பெரியார் வெளியிட்ட சர்வமதக் கண்டனம் எனும் சாட்டை அடி இதோ,
“இன்று உலகில் எந்த மதத்திற்கும் உயிர் கிடையாது. எல்லா மதங்களும் செத்துப்போய்விட்டன. செத்த பிணங்களே சடங்கு ரூபமாகவும் நாற்றமெடுத்து, அதனால் மனித சமூகத்திற்குப் பிற்போக்கு என்னும் வியாதியைக் கொடுத்ததுடன் அதைப் பெருக்கிக் கொண்டே வருகிறது. உண்மையில் எந்த மதக்காரனும் அந்தந்த மதக் கட்டளைப்படி நடந்து கொள்ள முடிவதில்லை. உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்பவர்களான சமூகங்களில் எந்த ஒரு மனிதனையாவது மதக்கட்டளைப்படி கண்டிப்பாய் நடக்கிறவனைக் காணமுடிகிறதா? முதலாவதாக வேஷத்திலும் சடங்கிலுமே சரியாக நடந்துகொள்ள முடிவதில்லை. மற்ற மக்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்திலும் வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டிய நிபந்தனைகளிலும் நூற்றுக்கு ஒரு சதவிகிதம் கூட நிர்ணயத்துடன் நடக்கவோ ஆசைப்படவோகூட முடிகின்றவர் காணப்படுவது இல்லை. இந்த நிலையில் உள்ள மக்களே தான் இன்று தங்கள் மதங்களைக் காப்பாற்ற வேண்டும். மதத்துக்கு ஆபத்து வந்துவிட்டது, தவிர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு செத்த பிணத்தை எடுத்துப் போட்டுக் குழிதோண்டிப் புதைக்காமல் நாற்றத்தில் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள். மலத்தில் இருக்கிற புழுக்கள் எப்படி மலத்தின் நாற்றத்தை வெறுக்க முடியாமலும் உடலிலுள்ள மற்ற புழுவை இழிவாய்க் கருத முடியாமலும் இருக்கின்றனவோ அதேபோல் எல்லா மனிதர்களுமே மதப்பிணநாற்றத்தில் புரளுகிறார்கள்.’’
(‘விடுதலை’ – 12.12.2015, பக்கம் 7)
(தொடரும்)