சென்னை பெரியார் மய்யம்
வி.பி.சிங் திறப்பு!
கி.வீரமணி
சமூகநீதியினை வேண்டி வலியுறுத்தும் பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உட்பட மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களைக் கொண்ட குழு சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் அவர்கள் தலைமையில் 21.11.2000 அன்று மாலை 4:00 மணியளவில் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களை, சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய கோரிக்கையை வலியுறுத்த சந்தித்தது. அப்போது பெண்களுக்கான 33 சதவிகிதம் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடும் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி திருவெறும்பூரில் ‘பெல்’ நிறுவனம் இயங்கி வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் தினக்கூலியாக 20 ஆண்டுகளாகப் பணியாற்றுபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவெறும்பூரில் மாபெரும் பேரணி, -ஆர்பாட்டம், மற்றும் பொதுக் கூட்டம் 5.12.2000 நடத்தப்பட்டது.
தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., த.மா.கா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் ஒரே மேடையில், ‘ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கு’ என்று முழங்கின.
எனது தலைமையில் நடந்த நிகழ்வில் நிறைவாக தலைமையுரையாற்றி கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
பட்டுக்கோட்டையில் கடந்த 6.12.2000 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு மாவட்ட மாநாட்டில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நா.இராமாமிர்தம் அவர்களுக்குப் பாராட்டு செய்யப்பட்டது-. பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை அருகில் நடைபெற்ற மாநாட்டு மேடையில் இராமாமிர்தம் அவர்களைப் பாராட்டி சால்வை அணிவித்து நினைவுப் பரிசினை அளித்து சிறப்பு செய்தோம். அவர் இயக்கத்துக்கு ஆற்றிய தொண்டுகளைப் பற்றியும் பாராட்டிப் பேசினேன்.
தஞ்சாவூர் கிரேசி ஹால் திருமண மண்டபத்தில் மறைந்த வெங்கடாசலம் _ சீதையம்மாள் ஆகியோரின் மகளும் மாவட்ட தி.க. விவசாய அணி செயலாளர் வெ.நாராயணசாமி அவர்களின் தங்கையுமான வெ.அன்னக்கிளி, சடையார் கோவில் மறைந்த கோபால் – சொர்ணாம்பாள் ஆகியோரின் மகனும் பெரியார் பெருந்தொண்டர் நமச்சிவாயம் அவர்களின் மைத்துனருமான கோ.மணிவண்ணன் ஆகியோரின் வாழ்-விணையர் ஏற்பு விழாவை 6.12.2000 அன்று காலை 10:00 மணிக்கும்
மறுநாள் (7.12.2000 அன்று) மதுரை காமராசர் அறநிலையத்தில் மதுரை கல்வி வள்ளல் பே. தேவசகாயம் – அன்னத்தாயம்மாள் பெயரன் மு. தெய்வராசன் – தமிழரசி ஆகியோரின் செல்வன் தெ. வைக்கம் பெரியார் – ஞா.ஆனந்தலெட்சுமி ஆகியோரின் இணையர் ஏற்பு விழாவையும் தலைமை ஏற்று நடத்தி வைத்து விளக்கவுரையாற்றினேன்.
புகழ் பெற்ற மருத்துவர் சுந்தரவதனம் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னையில் 9.12.2000 அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது.
அந்நிகழ்வில், “டாக்டர் பி.எம்.சுந்தரவதனம் அவர்களுடைய பெயராலே திராவிடர் கழகத்தின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் போட்டு ஓர் அறக்கட்டளையை உருவாக்கு-கிறோம். விருப்பப்-பட்டவர்கள் இதில் தங்கள் பங்களிப்பையும் அளிக்கலாம். இதையே ஒரு ‘கார்பஸ் பண்டு’ மூலதனமாக விரிவாக்கி அதனுடைய வட்டியிலிருந்து வருகின்ற தொகையில் பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் பயிற்சித் தேர்வில் மிகச்சிறப்பாக முன்னணியில் வரக்கூடிய மாணவ- மாணவியர்க்கு ‘டாக்டர் சுந்தரவதனம் தங்கமெடல்’ வழங்கப்படும் என்பதை இங்கு அறிவிக்கின்றோம். இதன் மூலம் டாக்டர் சுந்தரவதனம் அவர்கள் என்றைக்கும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார். நூற்றாண்டு விழா நாயகரின் பெருமை வாழ்க! வளர்க என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.
திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் முதல் மாநில மாநாடு அறிஞர் பெருமக்கள் போற்றும் வண்ணம் வரலாறு படைத்த மாநாடாக நடைபெற்றது. மதுரை தமிழ்நாடு ஓட்டலில் 16.12.2000 அன்று முற்பகல் 11:00 மணி அளவில் தொடங்கியது.
திராவிட கழக மாநில சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் த.வீரசேகரன் தலைமையேற்றார். மதுரை மாவட்ட திராவிட கழக சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் பா.அசோக்- மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்தார். தருமபுரி வழக்குரைஞர் சோழவேந்தன் வழிமொழிந்தார்.
மாநாட்டுத் தலைமை உரைக்குப்பின் மதுரை மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு வழக்குரைஞர் மய்யத்தின் உறுப்பினருமான வழக்குரைஞர் கி. மகேந்திரன் வரவேற்று மாநாட்டு நோக்கத்தைப் பற்றி பேசினார். தொடர்ந்து மாநாட்டினை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு வி. இராமசாமி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்.
மாநாட்டின் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான உரையரங்கத் தலைவராக கழக உதவிப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கு.வெ..கி ஆசான் அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார்.
‘பகுத்தறிவு’ எனும் தலைப்பில் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களும், மக்கள் கண்காணிப்பகத் தலைவர் ஹென்றி டிபேன்- ‘மனித உரிமை’ எனும் தலைப்பிலும், கழக சட்டத்துறையைச் சார்ந்த வழக்குரைஞர் அருள்மொழி ‘மகளிர் விடுதலை’ எனும் தலைப்பிலும், குடந்தை வழக்குரைஞர் கீதாலயன் ‘சமூகநீதி’ எனும் தலைப்பிலும், இந்திய வழக்குரைஞர் சங்கச் செயலாளர் கு.சாமிதுரை ‘குழந்தைத் தொழிலாளர்’ என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். அடுத்து 5:00 மணியளவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆய்வரங்கத் தலைவராக திராவிடர் கழக மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
கழக வழக்குரைஞர் மாநாட்டில் கருத்துரைகளை அகில இந்திய வழக்குரைஞர் சங்க மாநில செயலாளர் என்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் மங்கள எஸ்.ஜவகர்லால், சென்னை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ஆர்.கருப்பன், அகில இந்திய பார்கவுன்சில் உறுப்பினர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியைச் சார்ந்த எஸ்.கே.கார்வேந்தன், அ.தி.மு.க. மாநிலங்களவை குழு துணைத் தலைவர் ஆர்.மார்க்கபந்து ஆகியோர் ஆழமான, நுட்பமான, கருத்துகளை எடுத்து வைத்து உரை நிகழ்த்தினர். நிறைவாக நான் மாநாட்டு நிறைவுரைஆற்றினேன்.
வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்டத்தின்கீழ் கிராமப்புற வேலையில்லாத இளைஞர்களுக்கான சுயவேலை தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கும் 10 நாள்கள் சிறப்பு முகாமின் தொடக்க விழா
20-.12.2000 அன்று காலை 10:00 மணியளவில் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமினைத் தொடங்கிவைத்து, “கல்விப்பணி மட்டுமல்லாது கிராமப்புற வேலையில்லா இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளான மாணவர்களுக்கு தொழில்நுட்ப செயல்முறைப் பயிற்சி அளிப்பதன்மூலம் பல விருதுகள் பெற்ற பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் ‘விசாலப் பார்வையால் விழுங்கு வையத்தை’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரியை நினைவுபடுத்துகின்றது” என்று எனது உரையில் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தேன்.
திருவாருர் மாவட்டம் கொட்டாரக்குடியில் 20.12.2000 அன்று திராவிடர் கழக மகளிரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு வரலாற்றில் இடம் பெறக் கூடிய ஒரு திருப்பமான மாநாடாக அமைந்தது.
கழகத் தோழர்கள், தோழியர்கள், கழக விவசாய குடும்பங்கள் அத்துணை பேரும் கட்டுப்பாடாக அய்யா எஸ்.எஸ்.மணியம் அவர்கள் முயற்சியில் அருமை நண்பர் பொன்னுசாமி, தமிழ்செல்வன், இரத்தினசாமி, அய்யாசாமி இன்னும் பல தோழர்கள் அரிய முயற்சி எடுத்து இம்மாநாட்டை நடத்தினர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான இளம் பெண்கள் வீராங்கனைகளாக நமது பெரியார் சமூகக் காப்பணியிலே பயிற்சி பெற்று இந்த மாநாட்டு நிகழ்ச்சியிலே பங்கேற்றனர். அந்த வீராங்கனைகள் எனக்கு அணிவகுப்பு மரியாதையைக் கொடுத்தார்கள்.
நீங்கள் துணிச்சலோடு, தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். எனவே, நமது அமைப்பிலுள்ள பொறுப்பாளர்கள் உங்களுக்கு வழிகாட்ட வருவார்கள்.
நீங்கள் சுயமரியாதையோடு சொந்தக்காலில் நிற்கக்கூடிய ஒரு வாய்ப்பை நமது விவசாயக் குடும்பத்தில் உள்ளோர் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகளை நன்றாகப் படிக்க வையுங்கள். ஓய்வு நேரத்தை வீணாக்காமல் பயனுள்ள வகையிலே பயன்படுத்த முன்வாருங்கள்.
உங்களுக்கு ஓய்வு என்பது வாழ்நாள் முழுக்க ஏராளமாக இருக்கின்றது. அந்த ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஓய்வு நேரத்தில் தொழில் கற்றுக்கொள்ள முன்வாருங்கள்.
ஆண்களுக்கு என்னென்ன கூலி உண்டோ அந்த அளவுக்குப் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று சொல்லுகின்ற ஓர் இயக்கம். இந்த இயக்கம் வளர வேண்டும். நமது இயக்கத்தில் ஏராளமானவர்களைச் சேர்க்க வேண்டும். இந்த இயக்கத்தை எந்த அளவுக்கு நீங்கள் பலமாக்குகின்றீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய வாழ்வும் வளமாகும் என்று பல நல்ல விளக்கங்கள் தந்து உரையாற்றினேன்.
29.12.2000 அன்று ஜாதி ஒழிப்பு _ தீண்டாமை ஒழிப்புப் போராட்டம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் பேர் மறியல். தஞ்சையில் எனது தலைமையில் ஆயிரம் பெண்கள் உட்பட 3000 பேர் கைது செய்யப்பட்டோம்.
தஞ்சாவூரில் எனது தலைமையில் தஞ்சை கீழவாசல் காமராசர் சிலையிலிருந்து தெற்கு வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன் மறியல் செய்ய தோழர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஊர்வலம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழகத் தோழர்களையும் தோழியர்களையும் காவல்துறையினர் கைது செய்து வி.எஸ்.திருமண மண்டபத்திற்குக் கொண்டு போய் வைத்தனர்.
கடலூர் மாவட்ட தி.க. செயலாளர் இரா.ரமணனின் சகோதரர் இரா.கருத்திருமன் _- லதா ஆகியோர் இணையேற்பு விழாவினை 31.12.2000 ஞாயிறு மாலை இராகு காலத்தில் கடலூரில் மாவட்ட தி.க. தலைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நான் நடத்தி வைத்தேன். மணமகன் மணவிலக்குப் பெற்றவர். இத்திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் நினைவு நாளை-யொட்டி புதுடில்லி 2.1.2001 அன்று மாலை 4:30 மணிக்கு பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய சமூகநீதி மய்யத்தின் தலைவர் சந்திரஜித் தலைமை ஏற்றார். பெரியார் மய்ய செயல் இயக்குநர் டி.பி.யாதவ் முன்னிலையில் சிறப்புரையாற்றினேன்.
மனிதநேயக் கொள்கைகள் தென்புலத்தில் பரப்புவதோடு மட்டுமேயல்லாமல் வட புலத்திலும் சிறப்பாகச் சென்றடையவே இந்த புதுடில்லி பெரியார் மய்யம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று அப்போது விளக்கினேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் அகில இந்திய செயலாளர் து.ராஜா, தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் 5.1.2001 காலை 9:00 மணிக்கு பெரியார் திடலுக்கு வந்தனர். அவர்களுக்கு நான் சிவப்பு வண்ணத்தில் சால்வைகள் அணிவித்து அன்புடன் வரவேற்றேன்.
பெரியார் புத்தக விற்பனை நிலையம், பெரியார் நூலகம் _ ஆய்வகம், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், கணினி மய்யம், பெரியார் மருத்துவமனை ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்து வியந்து பாராட்டினர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் 19.1.2001 வெள்ளி மாலை 6:00 மணிக்கு குனியமுத்தூர் சதாசிவம் _ அம்மணியம்மாள் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஒரு வட்டார மாநாடு போன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
பொறியாளர் சோ.ஞானசுந்தரம் அவர்கள் எழுதிய ‘நிழலாடும் நினைவுகள்’ நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 23.1.2001 அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு அந்நூலைப் பற்றி மதிப்புரையாற்றினேன்.
சென்னை, பெரியார் மய்யம், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் திறப்பு விழா 28.1.2001 அன்று சென்னை பெரியார் திடலில் வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்றது. விழாவையொட்டி பெரியார் திடலிலும், வெளிப்புறத்திலும் கழகக் கொடிகள்!
புதிய கட்டடம் மிக்க பொலிவாக, கம்பீரமாகக் காட்சி அளித்தது. காலை முதலே கழகக் குடும்பத்தினரும், பொதுமக்களும் கட்டடத்தை வந்து பார்த்த வண்ணமாகவே இருந்தனர்.
மும்பையிலிருந்து விமானத்தின்மூலம் 9:10 மணிக்கு சென்னை வந்த சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களை கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் வரவேற்றனர். கழகப் பொருளாளர் வி.பி.சிங் அவர்களுக்குச் சால்வை அணிவித்தார். மாநில மகளிரணிச் செயலாளர் க.பார்வதி சால்வை அணிவித்தார்.
சமூகநீதிக் கட்சியின் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், மதச்சார்பற்ற ஜனதா தலைவர் ஜி.ஏ.வடிவேலு ஆகியோரும் சால்வை அணிவித்தனர். கழக மகளிரணியினரும், தோழர்களும் பெரும் அளவில் திரண்டு கழகக் கொடி அசைத்து வரவேற்றனர். கருநாடக மாநிலக் கழகத் தோழர்களும் திரண்டிருந்தனர். அனைவருக்கும் தனித்தனியே கை கொடுத்து தன் அன்பினை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் வெளிப்படுத்தினார்.
காலை 11:00 மணியளவில் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களும் தலைவர்களும் பெரியார் திடலுக்கு வந்தனர். அவர்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் பூங்கொத்து அளித்து வரவேற்றேன்.
பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வி.பி.சிங் அவர்களும் தலைவர்களும் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியபின், புதிய கட்டடத்தின் முகப்பிற்கு வந்தனர். தலைவர்கள் புடைசூழ திறப்பு விழாவுக்கான கல்வெட்டினை மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் திறந்து வைத்து, அதன் பின்னர் ரிப்பனைக் கத்தரித்து மய்யத்தையும், மன்றத்தையும் திறந்து வைத்தார்.
“தந்தை பெரியார் வாழ்க’’ என்று மக்கள் உணர்ச்சி முழக்கமிட்டனர். தலைவர்கள் அனைவரும் மேடைக்கு வந்தனர். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை வரவேற்புரையாற்றினார். தலைவர்-களுக்கும், கட்டடத்தைச் சிறப்பாக உருவாக்கிய பொறியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.
முதலில் நான் அறிமுக உரையாற்றினேன். சென்னை -_ பெரியார் திடலில் 28.1.2001 அன்று நடைபெற்ற பெரியார் மய்யம், எம்.ஆர்.ராதா மன்றத் திறப்பு விழா நாள், இந்த இயக்கத்தினுடைய வரலாற்றில் இது ஒரு முக்கிய நாள். இந்த மன்றத்திற்கு 1962ஆம் ஆண்டிலே அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களாலே அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு 1963ஆம் ஆண்டிலே அன்றைய சபாநாயகர் (எஸ்.செல்லபாண்டியன்) அவர்களாலே திறந்து வைக்கப்பட்டது இம்மன்றம்.
இந்த மன்றம் இன்றைக்குப் புதுப்பிக்கப்-பட்டிருக்-கின்றது. சென்னை _ வேப்பேரி என்பது நகரின் மய்யமான இடம். இந்த மன்றத்தைப் பொறுத்த வரையில் இதிலே எவ்வளவு பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை மட்டும் சுருக்கமாகச் சொல்லுகின்றேன். இதிலே அடித்தளம் உள்ளது. 7,800 சதுரஅடி கொண்டது. உணவகப் பகுதி 7,800 சதுர அடி கொண்டது. கீழே திருமணங்கள் நடைபெற்றால் ஒரு பகுதியில் 400 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து உணவு உட்கொள்ளலாம். இப்படிப்பட்ட வசதியை அடித்தளத்தில் செய்திருக்கின்றோம். திருமணங்களுக்கு இந்த மண்டபம் பயன்படும். மாநாடுகளுக்கு இந்த மண்டபம் பயன்படும்.
எல்.சி.டி. புரொஜெக்டர் என்ற நவீன வசதியை இங்கே அமைத்திருக்கின்றோம். நவீன வசதியுடன் எம்.ஆர்.ராதா மன்றம் 14 ஆயிரம் சதுர அடி கொண்டது.
பால்கனி பகுதி மேலே இருக்கிறது. அதிலே 250 பேர் அமரக்கூடிய வசதியான இருக்கைகள் கொண்ட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 5,500 சதுரஅடியாகும். அதேபோல இதற்கெல்லாம் தனியாக இயங்கக் கூடிய அலுவலகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதி 930 சதுர அடி கொண்டது.
அதோடு இந்த மன்றத்திற்குப் பின்னாலே நவீன சமையலறை அமைக்கப்பட்டிருக்கின்றது. நவீன சமையலறைக் கருவிகள் பொருத்தப்பட்ட சமையல் கூடமாகப் பின்னாலே அமைக்கப்-பட்டிருக்கின்றது. சென்னையிலே திருமணம் நடத்தக்கூடியவர்களுக்கு ஒரு வசதிக் குறைவு இருக்கிறது. சில திருமண மண்டபங்களிலே காய்கறி சமையலுக்கு மாத்திரம்தான் அனுமதி உண்டு. புலால் வகை சமையலுக்கு அங்கு அனுமதி கிடையாது. கறி, பிரியாணி செய்யக் கூடியவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லக்-கூடிய திருமண மண்டபங்கள் உண்டு. புலால் உணவு சமைப்பவர்களுக்கு மண்டபம் இல்லை என்று கொடுக்க மறுக்கிறார்கள்.
பெரியார் திடலில் உள்ள இம் மண்டபத்தில் சைவ, அசைவ உணவு இவை இரண்டிற்கும் வாய்ப்புண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு பக்கம் தனியாக சைவ உணவு தயாரிக்கும் இடம் இருக்கிறது. இன்னொரு பக்கம் அசைவ உணவுக் கூடம் என்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது இது 3000 சதுர அடி கொண்டது.
இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மண்டபத்தை சிறப்பாக அமைத்து இரவு, பகல் என்று பாராமல் உழைத்த தோழர்கள் இங்கே பாராட்டப்பட்டார்கள். இதிலே எங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய மண்டபம் மாற்றப்பட்டிருக்கிறது. காலத்தை ஒட்டி இதிலே வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அய்யா மூப்பனார் அவர்கள் மற்றும் இங்கு வந்திருக்கின்ற தலைவர்கள் எல்லாம் நாங்கள் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்கின்ற காரணத்தால் இந்த மன்றத் திறப்பு விழா என்று சொன்னாலும், இது மக்களுக்கு அர்ப்பணிப்பு விழா என்ற அளவிலே இந்த நிகழ்ச்சி இன்றைக்கு மகிழ்ச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. இது மக்களுடைய சொத்து என்பதைத் தெளிவாக உணர்ந்தவர்கள் நாங்கள். இதைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள்.
ஆனால், இந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்தது பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியினுடைய பேராசிரியர்கள் என்பதைப் பெருமையோடு சொல்லுகின்றோம்.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லுகின்றோம். நகரத்திலேயே ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இவ்வளவு குறைவான வாடகை உள்ள நடுத்தரமான மன்றம் வேறு இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த வாடகை இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பெருமைக்கு என்ன காரணம் என்று சொன்னால் இது ஒரு கூட்டுக் குழு மனப்பான்மையோடு சிறப்பாக எல்லோரும் பங்களித்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்த நேரத்திலே நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களே! நீங்கள் என்றும் எங்களுடன் இருக்கக்கூடியவர்கள். உங்களிடமிருந்து வஞ்சகர்கள் பதவியைப் பறித்துக்கொள்ளலாம். பதவி இல்லாததையே நீங்கள் ஒரு மகிழ்வாக எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். எதைப் பெறுவதாக இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல விலையைக் கொடுத்தாக வேண்டும். மண்டல் அறிக்கையை அமல்படுத்தி நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கின்ற நற்காரியத்தைச் செய்திருக்கின்றீர்கள். ஒரு நல்ல விலையைக் கொடுத்திருக்கின்றீர்கள்.
மக்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டார்கள். மக்களுடைய இதயங்களில் உங்களுடைய சமூகநீதிச் சாதனையால் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்களுடைய செயல் சரித்திரப் பொன்னேட்டில் பொறிக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயரை முழங்கிய முதல் இந்தியப் பிரதமர் நீங்கள் என்ற பெருமை என்றைக்கும் அழிக்க முடியாத, எல்லோர் மனதிலும் இடம் பெறக்கூடிய ஒன்றாகும். பெரியார் பெயரை உச்சரித்த பின்தான் மண்டல் கமிஷனை அமல்படுத்தினீர்கள்.
பெரியார் ஒருபோதும் நாடாளு மன்றத்திற்குள் நுழைந்ததில்லை. நீங்கள் பெரியாரை நாடாளுமன்றத்திற்குள் அழைத்துச் சென்றிருக்கின்றீர்கள். நாடாளுமன்றக் குறிப்பில் பெரியார் இருக்கிறார். உங்களை இந்த விழாவிற்கு அழைத்தது மிகுந்த பொருத்தமான ஒன்று என்பதை இந்த நேரத்திலே எல்லோர் சார்பாகவும் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்ந்து சமூகநீதிக் கட்சித் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், பிரபல திரைப்பட இயக்குநர் வேலு.பிரபாகரன், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஜி.ஏ.வடிவேலு, நடிகவேள் ராதா அவர்களின் மகன் எம்.ஆர்.ராதாரவி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய நிருவாகக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஆர்.நல்லகண்ணு, மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக, மேனாள் பிரதமர் வி.பி.சிங் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவரது ஆங்கில உரையைத் தமிழாக்கித் தந்தார்.
(நினைவுகள் நீளும்…)