ஆறு. கலைச்செல்வன்.
தங்கள் மகள் வைரமணியை ஆறாம் வகுப்பில் பள்ளியில் சேர்த்து விட்டு வீடு திரும்பினர் மதன், சத்யா இணையர்.
வைரமணி அவர்களுக்கு ஒரே மகள். அய்ந்தாம் வகுப்பு முடித்தபின் உயர்நிலை வகுப்பில் சேர நல்ல பள்ளியாகத் தேர்வு செய்து ஆறாம் வகுப்பில் சேர்த்தனர்.
ஒரே மகள் என்பதால் மிகவும் செல்லமாக வைரமணியை வளர்த்து வந்தனர். அவள் விரும்பியதை யெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். படிப்பிலும் அவள் மிகவும் கெட்டிக்காரியாக விளங்கினாள். சிறுவயதிலேயே அவள் அறிவுக்கூர்மையிலும் சிறந்து விளங்கினாள்.
மதன், சத்யா இருவருமே அரசுப் பணியில் இருந்தனர். மகளை நல்ல முறையில் படிக்கவைத்து மிகப் பெரிய பதவியில் அவள் அமர வேண்டும் என்ற கனவு சத்யாவுக்கு நிறையவே இருந்தது. குறிப்பாக அவள் மருத்துவராக விளங்க வேண்டும் என விரும்பினாள். அதுமட்டுமல்லாமல் அவள் தன்னைப் போலவே தெய்வ பக்தியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் விரும்பினாள். தன் எண்ணத்தை அடிக்கடி மதனிடமும் தெரிவித்துவந்தாள்.
ஆதலால், மதன் தனது இணையர் சத்யாவின் விருப்பத்திற்கு எந்த வித குறுக்கீடும் செய்ய-மாட்டான். ஆனால் அவனுக்கென்று சில எண்ணங்கள் இருந்தன. இருப்பினும் அவன் தனது கருத்தை யாரிடமும் திணிக்க விரும்ப மாட்டான். அவர்களாக உணர வேண்டும் என விட்டுவிடுவான். ஒரு நாள் மதனும் சத்யாவும் வைரமணி பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
“வைரமணிக்கு சின்ன வயசிலேயே பக்தி இலக்கியங்கள் எல்லாம் கொடுத்து படிக்கச் சொல்லப்போறேன். அவள் பக்தி சிரத்தையோட இருக்கிறது நல்லதுன்னு நெனைக்கிறேன்’’ என்றாள் சத்யா.
“உனது எண்ணத்தில் நான் குறுக்கிட மாட்டேன். நீ எந்தப் புத்தகத்தை வேண்டு-மானாலும் கொடுத்து படிக்கச் சொல்லலாம். ஆனால், நான் அவளுக்கு எந்தப் புத்தகத்தையும் கொடுத்து கட்டாயப்படுத்திப் படிக்கச் சொல்ல மாட்டேன். ஆனாலும், அவள் என் புத்தக அலமாரியிலிருந்து எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்க அனுமதிப்பேன். அதுசரி, பக்தி இலக்கியங்கள் என்றாயே! எதையெல்லாம் கொடுத்து படிக்கச் சொல்லப் போறே” என்று கேட்டான் மதன்.
“தேவாரம், திருவாசகம், பகவத்கீதை, கம்பராமாயணம், மகாபாரதம் எல்லாமும் தான்’’ என்றாள் சத்யா.
“பெரிய புராணத்தை விட்டுட்டியே”, என்று நினைவு படுத்தினான் மதன்.
“ஆமாம், ஆமாம். பெரிய புராணத்தையும் கொடுத்து படிக்கச் சொல்லப் போகிறேன்.’’
“ரொம்ப நல்லது சத்யா, என்னோட புத்தக _ அலமாரியில் திருக்குறள், பெரியார் பொன் மொழிகள், ஆரியமாயை, கம்பரசம், கீதையின் மறுபக்கம் போன்ற, புத்தகங்கள் எல்லாம் இருக்கு. ஆனால், அதையெல்லாம் படிக்கச் சொல்லி அவளைக் கட்டாயப்படுத்த மாட்டேன். அவளாக விரும்பிப் படிக்க நெனைச்சா படிக்கலாம். அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்.’’
அவர்கள் பேச்சு மேலும் தொடர்ந்தது. மதன் மீண்டும் பேசினான்.
“பெண்கள் படிப்பதே சில ஆண்டு-களாகத்தான். இதெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது.’’
எல்லாம் ஆண்டவன் செயல்தானே!
அதெல்லாம் இல்லை சத்யா . நம் நாட்டின் முதல் பெண் ஆசிரியை யார் தெரியுமா?’
“சரஸ்வதி தானே! கல்விக்கு அதிபதி அவள் தானே?”
“அதுதான் இல்லை சத்யா. முதல் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே. அவர்தான் பெண்களுக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கும் கல்வி அளித்தவர்.’’
“அது யாருங்க?’’
“சாவித்திரிபாய் பூலே மராட்டிய மாநிலத்தில் நைகான் என்னும் சிறிய கிராமத்தில் 1831ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் நாள் பிறந்தார். இவர் தனது கணவர் ஜோதிராவ் பூலே உடன் இணைந்து பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார்.’’
“கல்விக்காக என்னமோ அவர் செய்ததாகச் சொன்னீர்களே’’
“ஆமாம். அவர் ஆசிரியர் பயிற்சியை முடித்து 1848ஆம் ஆண்டு புனேவில் வெறும் ஒன்பது மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆனால், ஆதிக்க ஜாதியினர் அவர் பெண்களுக்குக் கல்வியளிப்பதை விரும்பவில்லை. அவர் மீது சேற்றையும் சாணத்தையும் வீசினாங்க. இருந்தாலும் அவர் கல்விப் பணியைத் தொடர்ந்தார்.’’
“எதிர்ப்புக்கு இடையிலும் அவர் பாடம் சொல்லிக் கொடுத்தாரா?’’
“ஆமாம். பள்ளி செல்லும் போது கூடவே மாற்றுப் புடவையும் எடுத்துச் செல்வாராம். சேறு, சாணி அடித்த புடவையை பள்ளி சென்றபின் மாற்றிக் கொள்வாராம். பிறகு வெளியே வரும் போது மீண்டும் சாணி அடித்த புடவையைக் கட்டிக் கொள்வாராம். காரணம், மீண்டும் சாணி அடிக்க மாட்டார்களா என்று நினைப்பாராம்.’’
“ரொம்பவும் துணிச்சல்காரப் பெண்ணாய் இருந்திருப்பார் போல’’
“ஆமாம் சத்யா . சிறுமியாக இருந்த போதே துணிச்சலாகத்தான் இருந்தாராம். ஒருமுறை அவரது தோழி மரத்தில் ஏறி அதன் கிளையில் உட்கார்த்திருந்த போது பாம்பு ஒன்று மரத்தில் ஏறி அவள் அருகில் சென்றதாம். அவள் அலறி நடுங்கியபோது சாவித்திரிபாய் துணிச்சலாக மரத்தில் ஏறி பாம்பைப் பிடித்து வேறு இடத்தில் விட்டாராம்’’
“உண்மையில் துணிச்சல்காரப் பெண்தான்’’
“ஆமாம் சத்யா. சொல்லப்போனால் ஆசிரியர்கள் கொண்டாட வேண்டிய நாள் ஜனவரி மூன்றாம் நாளைத்தான்’’
“நீங்க சொல்றது எல்லாம் உண்மைதாங்க. ஆனா, நம்ம வைரமணியை நல்ல பக்தியுள்ள பெண்ணாத்தான் வளர்க்க விரும்புகிறேன்’’
“நான் எதுக்கும் குறுக்க நிக்க மாட்டேன் சத்யா. நீ எதுவும் அவ மீது திணிக்கக் கூடாது. நானும் அவ மேல எந்தக் கருத்தையும் திணிக்க மாட்டேன். நல்லது எது, கெட்டது எது என்பதை அவளே பகுத்தறிஞ்சு தெரிஞ்சிகிடட்டும்’’ என்று தீர்வு கூறினேன்.
ஆண்டுகள் கடந்தன . வைரமணி பள்ளிப்-படிப்பை முடித்து விட்டாள். கல்லூரியில் சேர வேண்டும்.
சத்யா அவளை மருத்துவம் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாள். ஆனால், மதன் எதுவும் சொல்லவில்லை. அவளுக்கு என்ன படிப்பு பிடிக்குமோ அதைத் தேர்வு செய்து கொள்ளட்டும் என்று கூறிவிட்டான்.
“ஏங்க, வைரமணி என்ன படிக்கணும்னு நாம முடிவு பண்ணனும். அவ டாக்டராக வேணும் என்கிற ஆசை உங்களுக்கு இல்லையா?’’
“சத்யா, அவ என்ன படிக்கணும்னு அவளே முடிவு பண்ணட்டும். நம்மிடம் யோசனை கேட்டா நாம் கண்டிப்பா நம்ம கருத்தைச் சொல்வோம். அவளுக்கு எதில் ஆர்வமோ அதை அவள் செய்யட்டும். அதற்கான முயற்சியை அவளே எடுக்கட்டும். நாமாக எதையும் செய்ய அவளை வற்புறுத்தக்கூடாது’’ என்று முடிவாகக் கூறிவிட்டான் மதன்.
ஆனாலும் சத்யா கேட்கவில்லை. வைரமணியின் ஜாதகத்தைப் பார்த்து அவள் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம் என மதனிடம் கூறினாள். கடந்த ஆண்டும் ஜாதகம் பார்த்தாள். அப்போது வைரமணி மருத்துவம் படிப்பாள் என ஜோசியக்காரன் சொல்லியிருந்தான்.
“சத்யா, அவளோட படிப்பை முடிவு செய்யறதுக்கும் ஜாதகத்துக்கும் என்ன சம்பந்தம்? என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது வைரமணிதான். நாம் நமது ஆசையை–/நம்பிக்கையை அவள் மீது திணிக்கக்கூடாது. பேப்பர்ல வர்ர செய்தியெல்லாம் படிச்சியா? பெற்றோர் ஆசையால் மருத்துவம் படிக்க முடியாமல் போன பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்களே! இதையெல்லாம் நீ எண்ணிப் பார்க்க வேண்டும்” என்றான் மதன்.
அப்போது வைரமணியும் அங்கு வந்தாள். “வைரமணி, உன் ஜாதகத்தை மீண்டும் பார்த்து நீ என்ன படிக்கணும்னு முடிவு செய்யப் போறேன். என் ஆசையை அப்பாவிடம் சொன்னேன். ஆனா அவர் கேட்கல. அதனாலதான் ஜாதகம் பார்க்கப் போறேன்” என்று வைரமணியிடம் சொன்னாள் சத்யா.
“ஜோசியக்காரன் என் படிப்பை முடிவு செய்யறதா? அதெல்லாம் கூடாது அம்மா”, என்றாள் வைரமணி.
“எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருக்கு. நீ பொறந்தவுடனே ஜாதகம் எழுதினோம். கிரகப் பலன்படி தான் எல்லாமும் நடக்கும். நாளைக்கே ஜாதகம் பார்க்கணும். போன வருஷம் ஜாதகம் பார்த்தப்போ நீ மருத்துவம் படிப்பாய் என உன் ஜாதகம் சொல்லிச்சு. அதோட இல்லாம எல்லா கோயில்களுக்கும் போய் அர்ச்சனை பண்ணனும்” என்று ஆவேசத்துடன் கூறினாள் சத்யா.
“அம்மா, அதெல்லாம் தேவையில்லாத வீண்வேலை, நான் என்ன படிக்கவேணும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். நீங்க யோசனை சொல்லணும். அதுக்கு நான் நிச்சயமா மதிப்பளிப்பேன். ஆனா ஜோசியம், ஜாதகம், சாமி இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்’’, என்றாள் வைரமணி.
வைரமணி பேசியதைக் கேட்டதும் மிகவும் வியப்படைந்தாள் சத்யா. இதுவரை இப்படி அவள் பேசியதே இல்லையே என எண்ணினாள்.
“ஏன் நம்ப மாட்டேன் என்கிறாய் வைரமணி’’ என்று சற்று சோர்வுடன் கேட்டாள் சத்யா.
“அம்மா, நான் நீ வாங்கி வைச்ச புத்தகங்களையும் படிச்சேன். அப்பா வாங்கி வைச்சிருந்த புத்தகங்களையும் படிச்சேன். உன் புத்தகங்கள் பக்தியைப் போதிச்சுது. அப்பா புத்தகங்கள் அறிவைப் போதிச்சுது. இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தேன். எனக்கு நல்ல தெளிவும் கிடைச்சுது. இனிமேல் என் கொள்கையில் உறுதியா இருப்பேன்.” என்று பதில் கூறினாள் வைரமணி.
“என்னடி உன் கொள்கை? என் பேச்சை நீ கேட்கவே மாட்டியா?’’, சற்று கோபத்துடன் கேட்டாள் சத்யா.
“கேட்க வேண்டியதைக் கண்டிப்பா கேட்பேன் அம்மா. கவலைப்படாதே. அடிக்கடி பேப்பர்ல செய்தி வருதே. நீ படிக்கலையா?’’
“என்னடி செய்தி?’’
“மருத்துவம் போன்ற குறிப்பிட்ட படிப்பை படிக்கச் சொல்லி யாரையும் கட்டாயப் படுத்தக் கூடாது. நாட்டில் எவ்வளவோ நல்ல படிப்புகள் இருக்கு. ஏழைப் பிள்ளைங்க மருத்துவம் படிக்கக் கூடாதுன்னு ஆதிக்க சக்திகள் கங்கணம் கட்டிகிட்டு வேலை செய்யறாங்க. அதை நாம் முறியடிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனா நெறைய பிள்ளைங்க தற்கொலை பண்ணிக்கிது பாரம்மா! இதெல்லாம் ஏன் நடக்குது? பிள்ளைங்க படிப்பை அவங்களே தீர்மானிக்க முடியாமல் போனதால்தானே? அப்பா எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தாங்க. அதனால்தான் நான் மன உறுதியோடு இருக்கேன். மருத்துவம் படிக்க முயலுவேன். ஆனா அதுவே வாழ்க்கை என இருக்க மாட்டேன். பகுத்தறிவுவாதிகள் உள்ள குடும்பத்தில் தற்கொலைகள் நடக்காது அம்மா. குடும்பத்தில் முக்கியமாக பெண்கள் பகுத்தறிவு பெற வேணும். நான் நிறையப் படிப்பேன். அதிகபட்சம் படிப்பேன். நீயும் அப்பாவும் என்னைப் பாராட்டும்படி படிப்பேன். போதுமா அம்மா’’ என்று நீண்ட நேரம் பேசி முடித்தாள் வைரமணி.
மேலும் சத்யாவைப் பார்த்து ஒரு வேண்டுகோளையும் வைத்தாள்.
“அம்மா, அப்பா வைத்துள்ள புத்தகங்களை யெல்லாம் எடுத்துப் படி. நீ மட்டுமல்ல, எல்லாப் பெண்களும் படிக்க வேண்டும். பகுத்தறிவு பெறவேண்டும்!’’ என்றாள்.
மகள் சொல்லிய வார்த்தைகள் சத்தியாவின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன. அவளின் சிந்தனை அதை ஒட்டிச் சுழன்றது.ஸீ