இரத்தச் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உணவுக்குப் பின் நடக்க வேண்டும்

2022 அக்டோபர் 16-30 2022 மருத்துவம்

உணவு உண்டபின் இரண்டுநிமிட பொதுவான நடை உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் “ஸ்போர்ட்ஸ் மெடிசின்’’ (sports medicine) என்கிற பத்திரிகையில் வெளிவந்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின்படி உணவுக்குப்பின் மெதுவான நடை இரத்தச் சர்க்கரையின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் தாக்க கூறுகிறது. தற்போது இந்திய நாட்டில் 77 மில்லியன் (ஏழு கோடியே எழுபது இலட்சம்) சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இது 2045 ஆண்டில் 134 மில்லியனாக (13 கோடியே 40 லட்சமாக) அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ள நிலையில் நாம் விழிப்புணர்வு பெற்று இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தல் நலம். சென்னையில் உள்ள நீரிழிவு நோய் நிபுணர் (Diabetologist) டாக்டர் வி. மோகன் அவர்கள் கூறுவதாவது: அயர்லாந்திலுள்ள லிமெரிக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி உணவுக்குப்பின் எந்த (நகர்வும் உடல் அசைவும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் உணவு உண்ணும் போதெல்லாம் உங்கள் சர்க்கரை அளவு உயர்கிறது. உணவுக்குப்பின் உயரும் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. மாவுச்சத்து அதிகமுள்ள பொருளைக் குறைத்தல்.
2. மருந்துகளை (earlier) விரைந்து எடுத்துக்கொள்ளுதல்
3. உணவுக்குப்பின் நடத்தல்.
இரண்டாவது வகை நீரிழிவு (Type two) நோயுள்ளவர்கள் அய்ந்து நிமிடம் வரை நடப்பார்களானால் மிக நல்ல பலன்களை அடைய முடியும்.
நீங்கள் நடக்கும்போது உங்கள் கால்களில் உள்ள தசைகள் கெண்டைத்தசை (Calf muscle) தூண்டப்படுவதால் அது இரத்தத்தை கீழ்ப்பகுதியிலிருந்து இதயத்துக்குச் செலுத்துகிறது. உணவுக்குப்பின் நடப்பதால் இரத்த ஓட்டம் வேகப்படுத்தப்படுவதால் சர்க்கரைச் சத்து செல்களாலும் திசுக்களாலும் உறிஞ்சப்படுவது அதிகரிக்கிறது.
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நன்மையே என்றாலும், இரவு உணவுக்குப்பின் சிறிது நடப்பது சர்க்கரை அளவை முறைப்படுத்துவதில் நல்ல பலனைத் தரும் என்று டாக்டர் மோகன் கூறுகிறார் இரவு சாப்பிட்டவுடன் உடனடியாகத் தூங்குவதால் சர்க்கரை அளவு உயர்ந்து உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதோடு, கல்லீரலில் கொழுப்பு சேர்வது அதிகரித்து ஈரல் வீக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறார். எனவே, உணவுக்குப்பின் சிறிது நடப்பதன் மூலம் நமது சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்போமே.