சிறுகதை

ஏப்ரல் 01-15

விடியல்

மூடிக்கிடந்த அந்த அறைக்குள் முருகேசன் அப்படியொரு காட்சி தருவான் என்பதை பவானி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. முதலில் பேயறைந்தாற்போல துணுக்குற்றவள் பிறகு துடித்தழத் தொடங்கினாள். வாயிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக்கொண்டு,

அய்யோ இதென்ன கன்றாவி! இந்தக் கூத்தையெல்லாம் பார்க்குறதுக்கா என்னை உசுரோட படைச்சிருக்க?…!

பெற்ற வயிறு பற்றிக்கொண்டுதான் எரிந்தது. முருகேசனோ நடக்கக் கூடாதது நடந்துவிட்ட குற்றவுணர்ச்சியில் மூச்சுப் பேச்சில்லாது உறைந்துபோய்க் கிடந்தான். பின்னர், மறைவாய் தனக்குள்ளாகப் பூரித்தும் தன்னை மறந்து சுகித்தும் காணப்பட்ட தன் புதுக்கோலத்தினை இப்போது அந்த ஆளுயரக் கண்ணாடியில் காணச் சகிக்காமல் தன் தலையை எட்டுத்திக்கிலும் பல்வேறு கோணங்களில் ஒடித்து பார்வையை முழுதாக தன் உடம்பு முழுவதும் படரவிட்டான். மேலும், பொத்திப் பொத்தி வைத்திருந்த இரகசியம் காட்சிச் சரக்காகப் போய்விட்டதே என்கிற கவலையும் இனம் புரியாத ஒருவித பயமும் அவனை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.

அவன் ஓர் அழகிய பெண்ணாக அச்சு அசலாய் மாறிப் போயிருந்தான்! மாம்பழ நிற உடம்பில் தன் அம்மாவின் கல்யாணப் பச்சைப் பட்டுப் புடவையுடனும் தலை, கழுத்து, காது, மூக்கு, கை மற்றும் கால்களில் அவளுடைய நகைகளுடனும் காட்சியளித்தான். இலேசாகத் துளிர்த்திருந்த பூனை மயிர் மீசையை முழுவதுமாக மழித்தெடுத்த முகத்தில் இருபுருவங்கள். அதன் மத்தியில் சாந்துப்பொட்டு. சவுரி புனையப்பட்ட கூந்தலில் நான்கு முழ குண்டுமல்லியும் கனகாம்பரமும் சூடப்பட்டு அந்த இடத்தையே கமகமத்துக் கொண்டிருக்க… அப்படிச் சுண்டியிழுக்கப்பட்டதால் வந்த வினைதான் இது!

அப்பா! முருகேசா! இதென்னப்பா புதுக்கோலம்?

எனக்கே என்னான்னு புரியலம்மா. ஆனா இப்படி இருந்தாத்தாம்மா எம் மனசு சந்தோசப்படுது. அதனால…

இதுக்காகவா நான் ஒத்தைப் புள்ளையா பெத்தெடுக்கணும்.

இந்த முறை அவள் தன் தலையிலேயே மாங்குமாங்கென்று அடித்துக் கொண்டாள் கை வலிக்கும்வரை. வயிற்றில் புழுப்பூச்சி இல்லாமல் ஏழுவருட காலம் பட்ட வலியைவிட இஃதொன்றும் அவளுக்குப் பெரிதில்லை. ஆனாலும், அதைவிட ஆயிரம் கருந்தேள் ஒன்றுகூடிக் கொட்டினாற்போல் அவளது மனம் முருகேசனை நினைத்து பெரும் வலியால் துடித்தது. அவனும் அம்மாவைக் கட்டியணைத்து அழுதான். சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. அம்மா! அப்பாகிட்ட மட்டும் இதைச் சொல்லிப்புடாதம்மா! இந்தச் சூழ்நிலையில் கண்ணீரும் கம்பலையுமாக இறைஞ்சி நின்றவனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் ஒருவாறாக தலையை உருட்டித் தானும் அழுதவாறே சமாதானம் செய்வித்தாள் பவானி. ஆனால், அவள் மனம் மட்டும் சாந்தியடையவில்லை. நிவாரணம் தேடி அலைந்தாள்.

பெற்றோரிடம், உடன் படித்த நண்பர்களிடம், சமூகத்திடம் பலவித துன்பங்களுக்கு ஆளாகி, காலாவதியாகி வாழும் மனிதப் பிறவியோவென்று மனதிற்குள்ளாக மருவி கையறுநிலையில் கண்ணீர் வடித்தபோதும் அவனுக்கு இப்போது வலிப்பதுபோல் இதயம் அப்போது வலித்திருக்கவில்லை. உச்சி வெயில் பாலை மணலில் துடித்துத் துவளும் இளம் தூண்டில் புழுவாய் முருகேசன் இப்போது நித்யாவாக.

காதலிப்பதில் பெருந்துயரம் என்னவென்றால் திடீரென தன் உயிரினும் மேலான காதலைக் கைவிடுவதுதான்! தொட்டுவிடும் தொலைவிலிருந்த தொடுவானம் நித்யாவிற்கு இனி எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு வெகுதூரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையும் சூனியமாகிப் போனது.  அவளது பக்கத்தில் அமர்ந்து மென்மையாக அவளுடைய புறங்கையின் மீது தன் உள்ளங்கையைப் பிடித்திருந்தவன் அவளது மேலான பதிலை எதிர்நோக்கியவாறு மறுகையில் அங்கு பரவியிருந்த பொடிமணலை அரித்து காற்றில் வெறுமனே தூற்றிக் கொண்டிருந்தான் ஒரு பாரமும் அற்றவனாக.

எல்லாம் தெரிந்துதானே கைப்பிடிப்பேன்னு சொன்னே?

கண்கள் அந்த ஆழ்கடலின் மேற்பரப்பில் எதையோ தேடியபடியிருக்க வார்த்தைகள் மட்டும் தெளிவாக  பிசிறில்லாதபடி. அதே வேளையில் எல்லா வகை நவீன வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அந்த மாநகரத்துப்  பாலின மாற்று அறுவைச் சிகிச்சையினை, தனியார் மருத்துவமனையில் ஒன்றரை இலட்சம் வரை செலவழித்தும் நான்கு மணி நேர அவஸ்தைக்குப் பின்னும் இதுநாள் வரை தன் அகத்தால் உருவகித்து வாழ்ந்திருந்த பெண்மையின் பேருருவை புறத்தில் எள் முனையளவும் பிசகில்லாமல் முன்னைவிட கூடுதலாகக் கண்ணுறும் போது சுயமோகம் கொண்டு பரவசமடைந்தாலும் ஏற்கெனவே இருந்த குரலை மட்டும் முற்றிலும் மாற்ற முடியாதது மருத்துவ சாதனையின் ஒரு குறையாகவே நித்யாவுக்குத் தோன்றியது.

என்னால குழந்தை பெத்துத் தர முடியாதுங்கிற ஒரே காரணத்துக்காகத் தானே என்னை ஒரேடியா கைகழுவுற, இல்ல?

அ… அப்படியில்ல.

வேறெப்படி?

அவளது பார்வையில் தீப்பொறி பறப்பதைக் கண்டு அவனால் மேற்கொண்டு வேறெதுவும் சொல்ல இயலவில்லை. குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்து போனான்.

உன்னைக் கோடியில் ஒருத்தன்னு நெனச்சுருந்தேன். நீ பத்தோடு பதினொன்னுன்னு  ரொம்பச் சுலபமா நிரூபிச்சுட்டே. என்னை விடு.  ஆனா, எல்லாப் பெண்ணையும் புள்ளைப் பெத்துத் தர மெஷின்னு மட்டும் நெனச்சுப்புடாத!… என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இனி நீ என்ன செய்யப் போறதா உத்தேசம்?

தீர்க்கமான பேச்சிற்குப் பின் அவனை ஏறிட்டாள் நித்யா. அவனோ அவள் முன் ஒரு தூசுவாகக் கிடந்தான். அம்மா சொந்தத்துலேயே… நொண்டியடித்தான் பேச தைரியமில்லாமல். அவளையாவது ஒரு உசுருள்ள மனுஷியா நினை. அது போதும் எனக்கு.

கண்ணீர் முட்டியது அவளுக்கு. இதயப் புத்தகத்து இடுக்கில் மறைத்து வைத்திருந்த மயிலிறகு கடைசிவரை குட்டி போடாமலேயே மட்கிப் போனதை நினைத்ததும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நடுக் கடலுக்குள் முங்கி ஓவென அலற வேண்டும் போலிருந்தது நித்யாவிற்கு. அவன் இப்போது அவளுக்குத் துளிக்கூடத் தேவைப்படவில்லை. வந்து ரொம்ப நேரமாச்சு நித்யா, போலாமா? மெல்லிய குரலில் தயக்கமாய்க் கேட்டான்.

நீ போலாம் என்று இறுதி விடை கொடுத்தாள். நீ?… இனம் புரியாத தவிப்புடன் மின்னல்கீற்றாய்ப் பளிச்சிட்டது அவனது கேள்வி. என்னைப் பத்தி இனிமே கவலைப்பட நீ யாரு-? என்றதும் அவன் அங்கிருந்து நடையைக் கட்டத் தொடங்கினான்.

இப்போது நித்யா அவன் போன திசைக்கு எதிர்த்திசையில் அனிச்சையாக நடக்க முற்பட்டாள். கால்களில் இருந்த வலிமை அவளது இதயத்தில் இல்லாமற் போனது பெரிய வியப்புதான். மனித வாசம் துளியுமில்லாத பகுதிக்குச் செல்லவே அவளுக்கு ஆசை. அதற்காகவே நடந்தாள்…. நடந்து கொண்டிருந்தாள்.

நிர்க்கதியாய் நிற்கும் நித்யாவிற்கு வாழ்க்கையை வாழவேண்டுமென்கிற ஆசையை மனதிற்குள் விதைத்தவன்தான் இந்த சிவக்குமார். முதன்முதலாக அவளது மனதைப் பார்த்ததோடு மட்டுமல்லாது பையப்பைய அவள் இதயம் தொட்டவன். அவனது பேச்சில் எப்போதும் முற்போக்கு வாசனை வீசும்.

அதுவே அவன் மீதான நெருக்கத்திற்கு அவளுக்கு அடிகோலியது என்றுதான் சொல்லவேண்டும். அவளை புல் பூண்டாகக்கூட நினைக்காத சமூகத்தில் அவன் அவளை மனுஷியாக மதிக்கத் தொடங்கினான். நடுத்தரக் குடும்பம். மூன்று தங்கைகளைக் கரை சேர்க்க வேண்டிய தலையாய பொறுப்பு வேறு.

பிஞ்சு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்தவன். சொந்தமாக வியாபாரம் செய்து வருபவன். தன் தாய்மீது மட்டும் அலாதிப்பிரியம் கொண்டிருந்தான்.

ஒரு நாள் திரைப்படம் முடிந்த நள்ளிரவின்போது நித்யா மீது குடிகாரன் ஒருவன் காக்கிச்சட்டையில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைக் கட்டவிழ்த்துக் கொண்டிருந்ததைச் சகிக்கமாட்டாது, துணிந்து தட்டிக்கேட்டு மீட்டு வந்து தன் குடும்பத்தில் ஓர் ஆளாக அவளைப் பராமரித்து வந்தவன்தான் இவன். அவனைச் சூழ்ந்திருந்த உற்றாரும் உறவினர்களும் அவன் காதுபடப் பேசியதைப் புறந்தள்ளி ஒதுக்கியவனா இப்படி சலவைக்குப் போட்டு வந்தவனாக மாறிப்போனான். அவளால் சுத்தமாக அதை நம்பமுடியவில்லை. ஆனால், அதுதான் உண்மை என்பதை மட்டும் அவளால் உணராமலிருக்க முடியவில்லை.

அவனுக்குள் குழந்தை ஆசையைத் தூண்டிவிட்டு எங்களது பரிசுத்தமான காதலுக்குப் பாவி மனிதர்கள் பாடை கட்டி விட்டார்களே!…

நித்யா மிகவும் களைத்துப் போயிருந்தாள். ஆகாயம் நன்றாக இருட்டிக்கிடந்தது. அப்படியே தொப்பென்று அந்தக் கடற்கரை மணல் திட்டில் உட்கார்ந்திருக்கப் பிரியப்பட்டாள். நித்யாவை இனம் புரியாத பயம் ஒன்று மெல்ல கவ்வ ஆரம்பித்தது. மலங்க மலங்க முழித்தாள். பின் இரைந்து கொண்டிருக்கும் கடலையே உற்று நோக்கினாள்.

அது கரம் நீட்டி வாவென அழைப்பதுபோல் உணர்த்தியதும் அவள் தன் எண்ணத்தை இரும்பாக்கிக் கொண்டு தன் வாழ்க்கைப் பயணத்தைத் துரித கதியில் முடித்துக் கொள்ள வேகவேகமாக அம்மணல் திட்டில் கைகளை ஊன்றி எழுந்த சமயத்தில்-

வீல் என்று ஒரு சத்தம் காதைப் பிளக்க, நித்யா அச்சத்தம் வந்த திசையைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தாள். இப்போது உள்ளுக்குள் உருண்டோடியது ஓர் இனம் புரியாத பீதி. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டாள். ஒரே இருட்டு. கடல் மட்டும் நிலா வெளிச்சம் பட்டு பாதரசம் போல பளபளத்துக் கொண்டிருந்தது.

அந்த சீதளக் காற்றில் அவளது ஊடல் மேலும் நடுங்கியது. ஆனாலும் பயத்தில் அவளுக்கு உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு நாதியுமில்லை. முகமெங்கிலும் கலவர ரேகைகள். ஆங் ஊங் கென முனகல் மட்டும் அங்கிருந்து விடாது ஒலிக்க, அதை உற்றுக் கேட்டவள் இது மனித சத்தம்தான் என்பதை, தன் பகுத்தறிவைக் கொண்டு ஒரு வழியாக யூகித்துத் தைரியமுடன் அவ்விடத்தை நெருங்கினாள்.

அங்கே நிறைமாதக் கர்ப்பிணி ஒருத்தி பிள்ளை ஒன்றைத் தானாகவே பெற்றெடுத்து ஒரு சலனமுமின்றி மயங்கிச் சரிந்து கிடந்தாள். அவளுடைய காலிடுக்கில் ஓர் அழகிய பெண் குழந்தை உடம்பு முழுதையும் நெளித்து ஙா ஙா வென்று கத்திக்கொண்டிருந்தது. நித்யாவிற்கு அந்த விநாடியில் என்ன செய்வதென்று ஒன்றும் விளங்கவில்லை.

பிறகு ஒருவாறு தன்னைச் சுதாரித்துக் கொண்டவளாக முதலில் தன் கூரிய நகத்தால் சமயோசிதமாக அக்குழந்தையின் தொப்புள் கொடியை மிகவும் சிரமப்பட்டு நறுக்கி முடிச்சிட்டதும்தான் அவளுக்கு நிம்மதி பிறந்தது. பின்னர், அக்குழந்தையை ஈன்றவள் யாரென்பதை அவளுக்கு வெகு அருகில் சென்று கவனித்தவள் அதிர்ந்து போனாள்.

அய்யோ!

அவளது மெல்லிய கத்தலுக்குக் காரணம் அந்தத்தாய் ஜன்னி கண்டு இறந்து விட்டிருந்தாள். நித்யா செய்வதறியாது சற்று நேரம் குழம்பிப் போனாள். பின் இவளை எங்கேயோ அடிக்கடிப் பார்த்திருக்கிறோமே என்று மூளையைப் போட்டுக் குடைந்து கொண்டவளுக்கு ஒருவாறு விடை கிடைத்தது.

அட நம்ம கிறுக்கச்சி!

இலேசாகப் புடைத்த வயிற்றோடு ஒரு வெள்ளிக்கிழமையன்று தேரடி முக்கில் அவ்விடம் போவோர் வருவோரையெல்லாம் கையில் கிடைத்ததைக் கொண்டு ஏதேதோ வாய்க்கு வந்தபடி கொச்சை வார்த்தையில் திட்டி ஓங்கியோங்கி அடித்தவாறு இருந்தவளைக் கண்டு பதறி அருகிலிருந்த வீடொன்றிலிருந்து பழைய புடவை ஒன்றை ஓடோடி வாங்கி வந்து அவள்  போர்த்திய அதே கிறுக்கச்சிதான்! பாவம், எந்த மனித மிருகம் அவளை இப்படிச் சீரழித்ததோ?

நித்யாவிற்கு அச்சிசு கைகால்களை உதைத்து வீறிட்டுக் கத்தியபடி பதிலளித்தது. அப்பச்சிளம் குழந்தையை ஒரு பூக்குவியலை அள்ளுவதுபோல் மெல்ல அள்ளியெடுத்துத் தோளில் அணைத்தபடி கூப்பிடும் கடலை நோக்கி புதுத்தெம்புடன் இருளைக் கிழித்தபடி விரையத் தொடங்கினாள்.

பிறகு, கடல் தண்ணீரில் அதனை மெதுவாகப் பட்டும் படாமலும் கழுவியெடுத்து தன் துப்பட்டாவினல் ஒற்றித் துடைத்தபடி கரையேறியவள் புது மனுஷியாக மறு அவதாரம் தரித்து தூரத்தே தெரிந்த கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தினூடாக ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

– ம. கணேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *