கே: தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அதிக முன்னுரிமை அளித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதன் காரணம் என்ன?
– கு.பழநி, புதுவண்ணை
ப: ஊடகங்களை எப்படி “கவனிக்க வேண்டுமோ’’ அப்படி பல முறைகளில் ஏற்பாடுகள் நடந்துள்ளது ஒரு வேளை காரணமாக இருக்கலாம்! பார்ப்பன ஊடகங்களுக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மீது உள்ள உடம்பெரிச்சல். புதிய டி.வி.களையும் தங்கள் வசப்படுத்தியுள்ள புதிய சூழல். எல்லாம் சேர்ந்தாலும் தி.மு.க. கற்கோட்டை ஆட்சியை அரைவேக்காடு அண்ணாமலைகள் அசைத்துப் பார்க்க முடியாது. காகிதப் புலி நிஜப் புலியை ஒன்றும் செய்துவிட முடியாது! ஊளை, மிரட்டல் அவ்வளவுதான்!
கே: புதுக்கோட்டை மாவட்டத்தில மட்டும் 33 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன என்று அம்மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் தெரிவித்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– மன்னை சித்து
ப: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்கள் பக்கம் இன்னமும் அவர்களது முழு கவனம் திரும்பவில்லையே! தமிழ்நாடு அரசும் சமூகநல ஆர்வலர்களும் இதனைத் தடுக்க சிறப்புக் கவனம் _ முயற்சிகள் எடுக்க வேண்டும்.
கே: நீதிமன்ற அவமதிப்பு என்று ஒருவருக்கு 6 மாத சிறைத் தண்டனை அளித்த உயர்நீதிமன்றம், அதை விட மோசமாக நீதிமன்றத்தை இழிவுபடுத்திய பி.ஜே.பி.யில் அகில இந்திய பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கும், நீதிபதிகளைக் கேவலப்படுத்திய ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கும் தண்டனை வழங்காமல் இருப்பது நீதிமன்ற மாண்பாகுமா?
– வே.சிவசுப்பிரமணியன், திருச்சி
ப: மனுதர்மம் ஒரு குலத்துக்கொரு நீதிதானே! அதன்படி நடக்கும் அரசில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?
கே: உலகின் கலங்கரை விளக்கமாய் பெரியார் உலகம் ஒளிரும் அல்லவா?
– த.தருமன், வேலூர்
ப: அதிலென்ன சந்தேகம்? ‘புதியதோர் உலகு செய்வோம்’ என்பதற்கு பெரியார் உலகம் _ பெரியாரின் உலகமாகவே ஒளிருவது உறுதி!
கே: பா.ஜ.க. தலைவர்கள் வீட்டில் வெடிகுண்டுகள் வெடிப்பதும், ஆங்காங்கே திட்டமிட்டு வன்முறைகள் நடத்தப்படுவதும் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி தரும் சதிச் செயல் திட்டங்களாக இருக்குமோ என்கிற சந்தேகம் குறித்து தங்கள் கருத்து என்ன?
– பா.புருஷோத்தன், தாம்பரம்
ப: காவல்துறை ஆய்வு எல்லா கோணத்திலும் நடைபெற வேண்டும்; முந்தைய பல நிகழ்வுகள் _ மாலேகான் குண்டுவெடிப்பில் நடந்த சில சம்பவங்கள் _ உள்பட அப்படி ஆய்வு நடத்த வேண்டும் என்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உண்டே!
கே: கனடா நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சரின் உரை தேர்ந்த, தெளிந்த, இலக்குடைய உரையல்லவா?
– க.பசுபதிநாதன், திண்டுக்கல்
ப: கனடாவில் கூடியிருந்த பன்னாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல, அனைத்து உலகப் பார்வையாளர்கள், கேட்டவர்கள் வெளிநாட்டினர் எல்லோரும் திராவிட மாடல், திராவிட இயக்கச் சாதனை பற்றி தெரிந்துகொள்ள அருமையான கொள்கை விளக்கப் பேருரை என்றுதான் பேசி மகிழ்ந்தனர்.
கே: இராகுல்காந்தி இன்னல் பல ஏற்று நடைப்பயணம் மேற்கொண்டு காங்கிரசையும், பி.ஜே.பிக்கு எதிரான கூட்டணியையும் வலுப்படுத்த முயலும்போது இராஜஸ்தான் நிகழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– மா.வெற்றிவேந்தன், புதுக்கோட்டை
கே: காங்கிரஸ் கட்சியும் கோஷ்டி மனப்பான்மையும் அதன் உடன்பிறந்தே கொல்லும் வியாதிகள் என்ற உண்மை இப்போதும் நிலவுகிறது என்பதையே காட்டுகிறது.