அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம், ஆய்வு விசாரணை மய்யத்தின் கனடா கிளை, கனடா மனிதநேயர் மற்றும் டொராண்டோ மனிதநேயர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் சுயமரியாதை மாநாட்டை சிறப்பாகத் கொண்டாடின. கனடா நாட்டு டொராண்டோ நகரில் நடைபெற்ற டொராண்டோ நகரில் உள்ள நூற்றாண்டு கல்லூரி மய்யத்தில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துரையினை ஒளியிழையில் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவரது வாழ்த்துச் செய்தி முதல் நாள் நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சியின் தொடக்க உரையினை தமிழர் தலைவர், சென்னை _ பெரியார் திடலில் இருந்து காணொலி மூலம் வழங்கி சிறப்பித்தார்.
முதல் நாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை கனடா மனிதநேயர் அமைப்பின் மனிதநேயர் மார்ட்டின் பிரித் வரவேற்றுப் பேசினார். அருள்செல்வி பாலகுரு இணைப்புரை வழங்கினார்.
அடுத்து மாநாட்டில் உரையாற்றுபவர்களை அறிமுகம் செய்து, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் உரையாற்றினார்.
தொடக்க உரை முடிந்து தேநீர் இடைவேளைக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சியாக ‘ஜோதிட மடமையினை புறந்தள்ளுவோம்’ எனும் தலைப்பில் ‘நாத்திக நட்புறவு’ ஏட்டின் ஆசிரியர் ஹேமந்த் மேத்தா உரையாற்றினார்.
டொராண்டோ மனிதநேயர் சங்கத்தின் ரிச்சர்ட் டெவுசெட் ‘பிற நாட்டிற்கு வாழ்வாதாரம் தேடி வருவோரின் மனிதநேய விடைகள்’ எனும் தலைப்பில் கனடா நாட்டில் நிலவிடும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
சென்னைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு _ காணொலி வாயிலாக ‘தமிழ்நாட்டின் சமூகநீதி_ நேற்று, இன்று, நாளை எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கனடா மனிதநேயர் அமைப்பினைச் சார்ந்த சிருஷ்டி ஹூக்கு ‘மனிதநேயத்தின் மூலம் மகளிருக்கான உரிமைகளை வென்றெடுப்பது எப்படி’ என உரையாற்றினார்.
சிறீலங்காவில் ‘ஜாதியின் சமூக அரசியல் & சமூகநீதி’ எனும் தலைப்பில் பேராதனை, பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர்
எஸ்.சிவசேகரம் காணொலி மூலம் உரை வழங்கினார்.
நண்பகல் உணவுக்குப் பின்னர் கோவை ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் குழுவினர் கருத்துடன் கூடிய நகைச்சுவை நிகழ்ச்சியினை நடத்தி, பார்வையாளர்களை கலகலப்பாக்கினர். அமெரிக்க நாட்டில் நிலவிடும் ஜாதி மனப்பான்மையினைப் படம் பிடித்துக் காட்டினர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ.அன்புராஜ் ஏற்பாட்டால் ‘பெரியார் உலகம்’ பற்றிய காட்சிப் பதிவு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
மாலை உரை வீச்சாக, கனடா மனிதநேயர் அமைப்பின் மார்ட்டின் பிரித், ‘வாழ்வின் சடங்குகளில் சமூக நீதி’ என்பதுபற்றி உரையாற்றினார்.
அடுத்து, திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், ‘ஜாதி அமைப்பின் தனித்துவ விளக்கம் பற்றியும் _ தந்தை பெரியார் கடைப் பிடித்த சமூகநீதி அணுகுமுறைகள்’ பற்றி உரையாற்றினார்.
பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் நண்பர்கள் ‘மடமையும் உண்மையும்’ விநாடி வினா _ விடை நிகழ்ச்சியினை நடத்தினர்.
தேநீர் இடைவேளைக்குப் பின் துவங்கிய நிகழ்ச்சியில் ‘திருவள்ளுவரும் சமூகநீதியும்’ என்ற உரை வீச்சினை வடக்கு கரோலினா மாநிலத்தின் அமரன் கண்டியார் வழங்கினார்.
அடுத்து, ‘பசிப்பிணிக்கு எதிரான சிறார்’ திட்டத்தின்கீழ் உலகில் பசியால் வாடும் குழந்தைகள் பசியாற்றிட உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கும் பணியில் மாநாட்டில் பங்கேற்றோர் குழுவாக இயங்கினர்.
கலை நிகழ்ச்சிகள்
முதல் நாள் நிகழ்ச்சியின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈழத் தமிழர்கள் அஃகேனம் குழுவினரின் ‘பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நாதஸ்வர _ தவில் கலைஞர்கள் எம்.பி. நாகேந்திரன் _ சூர்யகுமார் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலின் மெட்டுகளை நாதஸ்வரத்தின் மூலம் இசைத்தனர்.
அமெரிக்கா வாழ் பாடகர் சின்மயி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலான ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனும் பாடலையும், இன்னும் சில பாடல்களையும் இசையுடன் பாடி மகிழ்வித்தார். நிறைவாக பரத நாட்டியக் கலைஞர் டில்ஷாவின் நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்துக் கலைஞர்களும் பாராட்டப்-பட்டனர். முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று மாநாட்டு வளாகத்திலேயே இரவு உணவும் வழங்கப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியரின் தொடக்கவுரை
“மனிதநேயர்கள் உலகமெல்லாம் இருக்கிறார்-கள். ஆனால் ஜாதியை ஒழிக்கும் வழிமுறை என்பது பிற நாட்டில் வாழும் மனிதநேயர்களுக்குத் தெரியாது. மனிதரில் ஏழை _ பணக்காரர் என்பது நிரந்தரம் அல்ல; இன்றைய ஏழை, நாளை பணக்காரர் ஆகலாம். இன்றைய பணக்காரர், நாளை பணமற்றவராக மாறலாம். ஆனால் ஜாதி அடிப்படையிலான உயர்வு _ தாழ்வு மாறாதது; நிரந்தரமானது. ஜாதி முறை என்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்ல; மனிதநேயத்திற்கே எதிரானதாகும். ஜாதி என்பது மனிதரை மனிதமற்றவராக மாற்றவல்லது. உயர் ஜாதியினர் மட்டுமே மனிதராக மதிக்கப்படுகின்றனர். பிற ஜாதியினர் _ உழைக்கும் மக்களான மண்ணின் மைந்தர்கள் மனிதராக நடத்தப்படுவதில்லை. ஜாதி என்பது சூப்பர் மனிதனை _ உப மனிதனை _ மனித துவேஷத்தை வலியுறுத்துகிறது.
அண்ணல் அம்பேத்கர் “ஜாதிமுறை என்பது ஒருவரது ‘மன நிலையின் கருத்து’ (Notion of mind). ஜாதி ஒழிப்பிற்கான போர் வீதிகளில் நடைபெறுவதைவிட, மக்களின் மனங்களில் மாற்றம் பெற வேண்டும்” என்றார்.
கல்வி என்பது சமூகநீதித் தேவையாகும். ஜாதியினை ஒழிக்க சமூகநீதி என்பதுதான் ஒரே மருந்து. மனிதன் பொது நலத்திற்கானவன் மட்டுமல்ல; மனிதனை மனிதனாக மாற்றி நடத்திடும் மாபெரும் பணியினை முடிக்க வேண்டிய நிலையில் உள்ளான்.
ஜாதி என்பது அங்கு தொட்டு, இங்கு தொட்டு இன்றைக்கு அமெரிக்கா நாட்டு சிலிகான் பள்ளத்தாக்கு எனக் கூறப்படும் பகுதியில் பணிபுரியும் இந்தியாவிலிருந்து சென்றவர்-களிடமும் நிலவத் தொடங்கியிருக்கிறது.
ஜாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும். சரியான புரிதலே பாதி சிகிச்சையாகும். தந்தை பெரியாரின் சிந்தனை பற்றி அறிஞர் அண்ணா கூறியது; “நூற்றாண்டுகள் பலவற்றை குப்பியில் அடக்கும் செயல்’’ _“Putting Centuries into capsule”.. எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது விடுதலைக்கு நாம் கொடுக்கும் விலையாகும். ஜாதியினை ஒழித்திட தமிழ் இலக்கியம் கூறும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் மனப்பான்மை மக்களிடம் பெருகிட வேண்டும். அத்தகைய மனிதநேயப் பெருக்கத்திற்கு இந்த பன்னாட்டு மாநாட்டு முடிவுகள் கொண்டு செல்லப்பட வேண்டும். மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ இவ்வாறு தமிழர் தலைவர் தமது தொடக்கவுரையின் போது கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உரை
‘பெரியார் உலகமயம் _ உலகம் பெரியார்மயம்’ _ என்ற உன்னதக் குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், கடந்த 17ஆம் நாள்தான் ‘பெரியார் உலகம்’ என்ற மாபெரும் முன்னெடுப்பைச் செய்தார். அதற்கான அடிக்கல் நாட்டும் மகத்தான வாய்ப்பை எனக்கு வழங்கினார்.
ஒரு வாரத்துக்குள் கனடாவில் இவ்வளவு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார்.
பன்னாட்டு பெரியார் அமைப்பின் முதல் மாநாடு 2017ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்தது. இரண்டாவது மாநாடு வாசிங்டனில் நடந்தது.
இந்த மாநாட்டில்தான் ஆசிரியர் அவர்-களுக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’’ அமெரிக்க மனிதநேய சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. மூன்றாவது மாநாடு கனடாவில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
பெரியார் பன்னாட்டு அமைப்பை உருவாக்கி பெரியாரை உலகமயமாக்கி வரும் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
தொழில் முயற்சியாக அமெரிக்கா சென்ற அவர், இன்று பெரியாரை உலகம் முழுக்கக் கொண்டு செல்லும் கடமையைச் செய்து வருகிறார்.
உலகம் முழுவதும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய வளைகுடா நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் என உலகின் பல நாடுகள் கொண்டாடி இருக்கின்றன.
இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்தால் உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று அறிவித்த ஒரே நாடு, கனடா!
அத்தகைய நாட்டில், இந்த மாநாடு நடப்பது மிகமிகப் பொருத்தமானது!
தமிழர்கள் அதிகளவில் வாழும் அயல்-நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது.
தைப்பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்வித்தவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள்.
பல்வேறு இன, மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உருவாகி வருவதாக அவர் சொல்லி இருந்தார்.
தமிழ் மரபுத் திங்கள் _ மசோதா கனடா நாடாளுமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழுக்கும், தமிழர்க்கும் பெருமை சேர்க்கும் கனடா!
தமிழுக்கும், தமிழர்க்கும் இத்தகைய பெருமையைச் சேர்த்த கனடா நாட்டின் பிரதமர் அவர்களையும், இதற்குக் காரணமான கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் _ கனடா தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
கனடாவில் உள்ள டொராண்டோவில் நடைபெறும் இந்த மாநாட்டில் காணொலி மூலமாகக் கலந்துகொண்டு உரையாற்றுவதில் ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் _ இன்னொரு பக்கம் எனக்கு வருத்தமும் இருக்கிறது.
கனடாவுக்கு வந்து உங்களை எல்லாம் நேரில் சந்திக்க முடியவில்லை என்பதும் _ நேரடியாகப் பேசமுடியவில்லை என்பதும் _ பல்வேறு அறிஞர் பெருமக்களின் உரைகளைக் கேட்க முடியவில்லை என்பதும்தான் என்னுடைய வருத்தத்துக்கு காரணம்.
பல்வேறு அரசுப் பணிகளின் காரணமாக _மக்கள் பணியின் காரணமாக என்னால் வெளிநாட்டுப் பயணத்தை திட்டமிட முடியாத சூழ்நிலையில் இருப்பதை நீங்கள் அனைவரும் உணர்வீர்கள் என நான் நினைக்கிறேன்.
தூரங்களால் நாம் பிரிந்திருந்தாலும், தமிழ் உணர்வால் _ சுயமரியாதை உணர்வால் _ சமத்துவ உணர்வால் _ சமூகநீதி உணர்வால் _மனிதநேய உணர்வால் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதன் அடையாளமாக, காணொலி வாயிலாக உங்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.
நம்மை ஒளி இணைத்துக் கொண்டு இருக்கிறது என்பதைவிட, நம்மைப் பெரியாரின் ஒளி இணைத்துக் கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
எந்த மண்ணிலிருந்து நான் பேசுகிறேன் தெரியுமா?
இந்த மாநாடு மனிதநேய _ சமூகநீதி மாநாடாக கூட்டப்பட்டுள்ளது.
மனிதநேயத்தின் அடிப்படையே சமூகநீதிதான்!
சமூகநீதிக் கருத்தியலே மனிதநேயத்தின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மனிதநேய _ சமூகநீதி மாநாட்டில், சமூகநீதி மண்ணில் இருந்தபடியே நான் கலந்து கொள்கிறேன்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ _ என்று சொன்ன திருவள்ளுவரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி னேன்’ என்று உயிர்க்குரலாக ஒலித்த வள்ளலாரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.
‘சமூகநீதியே சமநீதி’ என்று முழங்கிய தந்தை பெரியாரின் மண்ணில் இருந்து பேசுகிறேன்.
அனைத்து வகுப்புக்கும் அனைத்து வாய்ப்பு களும் என்று 100 ஆண்டுகளுக்கு முன் சட்டம் போட்ட நீதிக்கட்சி ஆட்சி அமைத்த மண்ணில் இருந்து பேசுகிறேன்.
இவற்றின் நீட்சியாக ‘திராவிட மாடல்’ ஆட்சி நடந்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் இருந்து நான் பேசுகிறேன். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ _ என்று போற்றப்படுபவர் வான்புகழ் வள்ளுவர்.
திருவள்ளுவரும், தந்தை பெரியாரும் உலகச் சிந்தனையாளர்கள்
தமிழ்நாட்டில் பிறந்து _ தமிழில் திருக்குறளைத் தீட்டி இருந்தாலும் _ அவரின் குறள்கள் _ இன்று உலகில் 125_க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது.
அதேபோல், தமிழ்நாட்டில் பிறந்து _ தமிழில் எழுதியும் பேசியும் பரப்புரை செய்தாலும் இன்றைய நாள் உலகச் சிந்தனையாளராகப் போற்றப்படுகிறார் தந்தை பெரியார் அவர்கள்.
அவரது நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பில் உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட திட்டம் தீட்டப்பட்டுள்ளன.
உலகளாவிய சமூகநீதியைப் பேசியவர்கள் தான் திருவள்ளுவரும் _ தந்தை பெரியாரும்.
இதனை இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த _ பல்வேறு மொழிகள் பேசும் சிந்தனையாளர்களாகிய நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
பெரியார் உலகமயமாகிறார் – வாழ்ந்த காலத்திலேயே உலகமயமாகிவிட்டார்!
திருவள்ளுவரின் குறளையும் _ தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் _ உலகளாவிய அளவில் கொண்டு செல்வதன் மூலமாக மனிதநேய உலகத்தை _ சமூகநீதி உலகத்தை _ சமநீதி உலகத்தை _ சமத்துவ உலகத்தை நாம் உருவாக்க முடியும்.
பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன்.
பெரியார் அவர்கள், தான் வாழ்ந்த காலத்திலேயே உலகமயமாகி விட்டார் என்றும் சொல்லலாம்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ரஷ்யா, ஆப்பிரிக்கா, கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து, எகிப்து, பர்மா _ போன்ற பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தவர் அவர். அங்கெல்லாம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசியவர்.
அப்போதே, தனக்கான ஆதரவு வட்டத்தை அந்த நாடுகளில் உருவாக்கியவர்தான், தந்தை பெரியார்!
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எழுதினாரே!
அதைப் போலவே அவர் வாழ்ந்த காலத்திலேயே பெரியாரின் பேராற்றலை உலகம் உணர்ந்துவிட்டது.
அதேபோல், உலகத்தை உணர்ந்தவராக _ எதிர்கால உலகம் எப்படி அமையும் என்பதைக் கணிக்கக் கூடிய தொலைநோக்குச் சிந்தனையாளராக பெரியார் அவர்கள் இருந்தார்.1943 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் ‘இனி வரும் உலகம்’ என்ற புத்தகம் வெளியானது.
1943 ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கோடு ‘‘இனிவரும் உலகம்’’பற்றிக் கணித்தவர் தந்தை பெரியார்!
தந்தை பெரியார் அவர்கள் ஒரு திருமண வீட்டில் பேசிய உரையை _ அவருடன் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கேட்டு _ இவை அனைத்தும் மிகப்பெரிய சிந்தனைகளாக இருக்கிறதே என்று எண்ணி _ பேரறிஞர் அண்ணாவே நிருபராக மாறி _ எழுதிய புத்தகம்தான் அது.
தான் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலத்தில் வந்த பெரும்பாலான நூல்களைப் படித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அத்தகைய ஆங்கில நூல்களில்கூட இல்லாத கருத்துகளை பெரியார் அவர்கள் பேசி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் பேரறிஞர் அண்ணா.
வருங்காலத்தில்
* எங்கும் ஆகாய விமானம் இருக்கும்.
* கம்பி இல்லாத் தந்திச் சாதனம் _ ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
* ரேடியோ _ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும்.
* உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் இருக்கும்.
* ஆளுக்கு ஆள் எங்கே இருந்தாலும் உருவத்தைக் காட்டிப் பேசிக் கொள்ளலாம்.
* ஒரு இடத்தில் இருந்தபடியே பல இடங்களில் உள்ள மக்களுக்கு கல்வி கற்றுத்தரலாம்.
* சிறுகுப்பிகளில் அடக்கக் கூடிய உணவுகள் வந்துவிடும்.
* மனிதனின் வாழ்நாள் அதிகமாகும்.
* குழந்தைகள் பிறப்புக்கு ஆண் _ பெண் இனச்சேர்க்கை அவசியம் இருக்காது.
* மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு விடும்.
* மோட்டார் கார்களின் எடை குறையும்.
* பெட்ரோலுக்கு பதில் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
* அனைத்து அறிவியல் சாதனங்களும் மக்களுக்கு எளிதில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும்.
_ இப்படி எத்தனையோ அரிய கருத்துகளை 1943 ஆம் ஆண்டு சொன்னார் தந்தை பெரியார்.
நாம் இன்று பயன்படுத்தும்
* செல்போன், வீடியோ கால், வீடியோ கான்பரன்ஸ், எப்.எம். வசதிகள், பேக்ஸ், உணவு கேப்சூல்கள், பேட்டரி கார்கள் ஆகியவை பற்றி அன்றே சொல்லி விட்டார் அய்யா.
Test tube baby பற்றியும் அன்றே சொல்லி விட்டார்.
குடும்பக் கட்டுப்பாடு என்பது அனைவரும் பின்பற்றும் நடைமுறை ஆகிவிட்டது.
அதேபோல் ‘மேல் நாடும் _ கீழ்நாடும்’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் 1941ஆம் ஆண்டு பேசினார்.
இந்தியாவின் வடமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்த பெரியார், ஹரித்துவாரில் ஒரு சங்கத்தில் இப்படி ஒரு தலைப்பில் பேசி இருக்கிறார்.
அதாவது, அய்ரோப்பிய நாடுகளும் இந்தியாவும் எப்படி இருக்கிறது என்று பேசினார்.
உலகத்தின் அனைத்து விஷயங்களையும் இந்தியாவின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பேசி இருப்பார்.
உலக நாடுகளின் பண்பாட்டை இந்தியாவில் விதைத்தவர் பெரியார்!
உலகம் முழுக்க நான்கைந்து ஆண்டுகள் அலைந்தவர்களால்தான் அப்படி பேச முடியும்.
அப்படி. உலக நாடுகளின் பண்பாட்டை இந்தியாவில் விதைக்க விரும்பிய உலகத் தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
சாக்ரடீஸ், இங்கர்சால், மார்க்ஸ், லெனின், பெட்ரண்ட் ரசல், ஆகியோர் உலகப் புகழ்பெற்ற தத்துவ மேதைகள்.
இவர்கள் எழுத்துகளை 80 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மொழிபெயர்த்து புத்தகங்களாக வெளியிட்டவர் தந்தை பெரியார்.
அத்தகைய பெரியார், மனிதநேயத்தையும் _ சமூகநீதியையும்தான் வலியுறுத்தினார்.
தன்னைப் போல வலியுறுத்திய உலகத் தலைவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்தார்.
நாங்கள் நடத்தும் ‘‘திராவிட மாடல்’’ அரசின் சீலங்கள்!
அத்தகைய, தந்தை பெரியாரின் பெருந்-தொண்டர்களான பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில்தான் நான் எனது தலைமையிலான ஆட்சியை நடத்தி வருகிறேன்.
இதற்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர்சூட்டி இருக்கிறேன்.
எனது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மய்யக் கொள்கை என்பது மனிதநேயமும் சமூகநீதியும்தான்.
* அனைத்து இடங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறோம்.
* வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவர்க்கும் சமவிகிதத்தில் தரப்பட்டு வருகிறது.
* அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
* பெரியார் பிறந்தநாள் ‘சமூகநீதி நாளாக’ அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
* அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் ‘சமத்துவ நாளாக’ அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது.
* அயோத்திதாச பண்டிதருக்கு நினைவு மண்டபம் கட்ட இருக்கிறோம்.
* பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக இலவச போக்குவரத்து பயண வசதி தரப்பட்டுள்ளது.
* தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* வேலைவாய்ப்பை அடைய தாய்மொழி அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
* இல்லம் தேடிக் கல்வி செல்கிறது.
* மக்களைத் தேடி மருத்துவம் செல்கிறது.
* உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது.
* அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* அனைத்து இளைஞர்களையும் மாணவ, மாணவியரையும் தகுதியுள்ளவர்களாக ஆக்க ‘நான் முதல்வன் திட்டம்’ அமலில் உள்ளது.
* அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
* சமூகநீதிக் கண்காணிப்பு குழுவை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நிறுவி இருக்கிறோம்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தை நீதியரசர் சிவக்குமார் தலைமையில் உருவாக்கி இருக்கிறோம்.
_ இப்படி எண்ணற்ற ‘திராவிட மாடல்’ திட்டங்களைத் தீட்டி தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம்.
கடந்த அய்ம்பதாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டு உரிமைகள், இருமொழிக் கொள்கை, தமிழ்மொழி மேம்பாடு, தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மைக்குத் தரப்பட்ட முக்கியத்துவம், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கம், மாநில உரிமைகளுக்காக போராடுதல் ஆகியவற்றின் மூலமாக தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
தி.மு.க. நிற்கும் அடித்தளம்!
அதனை மேலும் உச்சத்துக்குக் கொண்டுவரவே ‘திராவிட மாடல்’ கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்-பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி
ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய அய்ந்தும் ஒரு சேர வளர வேண்டும்.
அதுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காணவிரும்பிய வளர்ச்சி.
அதுதான் ‘‘திராவிட மாடல் வளர்ச்சி’’ என திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறேன்.
இத்தகைய திராவிடவியல் கொள்கையானது இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பரவவேண்டும் என்றும் சொல்லி வருகிறேன்.
இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும் அரசுகள், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அறிவதில் ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் துடிப்புடன் இருக்கின்றன.
தந்தை பெரியாரின் கோட்பாடுகள்!
இத்தகைய சூழலில் ‘திராவிட மாடல்’ தத்துவமானது உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக கனடாவில் இம்மாநாடு நடத்தப்படுவதாகவே நான் நினைக்கிறேன்.
‘‘ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் திராவிடர்கள்தான்!” என்று சொன்னார் தந்தை பெரியார்.
மனிதனுக்குள் ரத்த பேதமும் இல்லை! ஆண் பெண்ணுக்கு மத்தியில் பால் பேதமும் இல்லை! என்று சொன்னவர் தந்தை பெரியார்.
ஒரு மனிதன் சக மனிதனை, மனிதனாக நடத்துவதே மனிதநேயம்!
அனைத்து மனிதர்க்கும் நீதி வழங்குவதே சமூகநீதி!
தந்தை பெரியார் வலியுறுத்திய
* சமூக நீதி – social justice
* மானுடப்பற்று – Humanism
* சுயமரியாதை – self-respect
* பகுத்தறிவு – rationality
* சமத்துவம் equality ஆகிய அய்ந்தும் உலகளாவிய கருத்தியல்கள்.
இவை, நாடு, மொழி, இனம், எல்லைகள் கடந்தவை!
பெரியார் உலகமயமாக வேண்டும் என்ற ஆசிரியர் வீரமணி அவர்களின் நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
மாநாட்டை முன்னெடுக்கும் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!
இதனை முன்னெடுக்கும் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி, டாக்டர் சோம.இளங்கோவன், முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர், இலக்குவன் தமிழ், அருள்செல்வி வீரமணி, வீ.குமரேசன், வீ.அன்புராஜ் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்நிகழ்வில், நான் பங்கெடுத்து உரையாற்ற வாய்ப்பை வழங்கிய கேரி ஆனந்த சங்கரி மற்றும் அவரது குழுவினருக்கும் _ கனடா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் _ டாண்டன் மற்றும் கனடியன் தமிழ் காங்கிரசைச் சேர்ந்த சிவன் இளங்கோ _கனடா மனிதநேய அமைப்புக்கும், நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1932ஆம் ஆண்டு இலங்கையில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் _ “நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்குங்கள்!
அவற்றின் மீது தேசம், மதம், ஜாதி என்கிற பாகுபாடு இல்லாத _ மனித சமூகம் _ சம உரிமை _ சமநிலை என்ற கட்டடத்தைக் கட்டுங்கள்!
அனைத்து உலக மக்களுடனும் பிரிவினைக்கு இடமில்லாமல் ஒன்று சேருங்கள்! அப்போது, நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!’’ என்று சொன்னார்.
அதையே நானும் இன்று சொல்கிறேன்.
‘மானுட சமுத்திரம் நான் எனக் கூவு’ என்றார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.
மனித நேயமும் _ சமூகநீதியும் மட்டுமே மானுட சமுத்திரத்தை ஒன்றாக்கும்.
நன்றி, வணக்கம்!’’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
இரண்டாம் நாள்:
சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் 25.9.2022 அன்று காலை (கனடா நேரப்படி) 9 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடந்தேறின.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொருளாளர் அருள்செல்வி வீரமணி உரையாற்றினார். முதல் நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம. இளங்கோவன் சுருக்கமாக எடுத்துரைத்தார். தொடக்க உரையாளரின் அறிமுகத்தினை பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் வழங்கினார்.
தமிழர் தலைவரின் முதன்மை உரை
இரண்டாம் நாளான நிறைவு நாள் நிகழ்ச்சிகளின் முதன்மை உரையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்கள். தமிழர் தலைவரின் உரைச்சுருக்கம்:
‘மனிதநேயம்’ தத்துவமாக உலகெங்கிலும் பரப்பப்பட வேண்டும். மனிதகுல இன்னல்-களுக்கு தீர்வு மனிதநேயத்தை பேணிக் கடைப்பிடித்திட வேண்டும். உலகில் மனிதரின் பண்பாடு நாடுகளிடையே மாறுபட்டு நிலவுகிறது. அந்த நாட்டு மக்களின் பிரச்சினை-களும் பலவாறாக உள்ளன. மனிதருக்கு இன்னல்தரும் ஆதிக்க அடக்கு முறையாளர்களும் பலவாறாக உள்ளனர். அந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயல்களும் பர தரப்பட்டவையாக உள்ளன. அவை அனைத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு ஒற்றுமை தேவைப்படுகிறது. அனைவருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும். அதற்கு அடிப்படை மனிதநேயம் காக்கப்பட வேண்டும்; மனிதநேய அணுகுமுறை கடைப்-பிடிக்கப்பட வேண்டும்.
மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியார் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தை தோற்று-வித்தார். மனித சுயமரியாதை உணரப்பட்டு, அதனைக் கடைப்பிடித்தால் சமூக அநீதிகள் களையப்பட்டு விடும்; சமூக அநீதி ஒழிக்கப்பட்டு விடும். இதன் அடிப்படையில்தான் தந்தை பெரியார் ஒரு மனிதநேயப் போராளியாக சமூகப் பணியாற்றினார்.
மனித சுயமரியாதை மறுக்கப்படும் வகையில் சில மனிதருக்கு பொதுப் பாதையில் நடக்கும் உரிமை மறுக்கப்பட்டது. கேரளா – வைக்கத்தில் இந்தக் கொடுமையை எதிர்த்து காங்கிரசில் தலைவராக இருந்த பெரியார், காந்தியாரிடம் கேட்டார்; “நாய், பன்றிகள் பாதையில் நடக்கலாம்; மனிதர்கள் நடக்கக் கூடாதா?” என உரிமைக் குரல் எழுப்பினார். இருப்பினும் காந்தியார் பெரியாரை காங்கிரசுக்காரராக வைக்கத்திற்குச் சென்று போராட அனுமதிக்கவில்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு போராடி சிறைவாசம் சென்று அனைத்து மக்களுக்கும் பொதுப் பாதையில் நடந்து செல்லும் உரிமையினை பெரியார் பெற்றுத் தந்தார். தலைமை வழிபாட்டையும், அதிகாரப் பதவியையும் என்றுமே பெரியார் விரும்பியதுமில்லை; நாடிச் சென்றதுமில்லை.
ஜாதிக் கட்டமைப்பை வெளிநாட்டவர் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஜாதி முறையை ஒழித்து சமத்துவத்திற்குப் போராடியவர் தந்தை பெரியார். நமது உரிமைகளுக்காக நாமும் போராட முன்வர வேண்டும்; வெற்றி பெற வேண்டும். சமூகநீதிப் பயணத் திட்டத்தைஉருவாக்கி செயல்படுத்த வேண்டும். இது ஆயுதப் போராட்டமல்ல; களத்தில் சந்திக்க வேண்டிய போர் அல்ல இது; மனித மனங்களில் நடைபெற வேண்டிய போர்; கருத்துப் பரப்பலின் மூலம்தான் உண்மையான மாற்றத்தினை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும்.
இந்தியாவில் – தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தால் திராவிட மாடல் – மக்களுக்கு உரிமையுடன் பலன் பெறும் ஆட்சி முறைகள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதிக்கான போராட்டம் என்பது எதிர்நீச்சல் போன்றது. அவதிப்படுபவர் நிலையிலிருந்து சமூக அநீதி உணரப்பட வேண்டும். வன்முறை அற்ற அணுகுமுறையின் மூலம் சமூகநீதி கிடைக்கப் பெற வேண்டும். உலகம் கருவியால் வென்றெடுக்கப்படக் கூடாது; கருத்தால் வெல்லப்பட வேண்டும்.
சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து அய்ந்தாம் தலை முறையாக வெற்றிகரமாக மக்கள் பணி ஆற்றி வருகிறது.
அவதிப்படுவது வெளியே கேட்காமல் இருக்கும் மனிதர்களை தேடிப் பிடித்து உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நாம் பல வகையிலும் கடமை ஆற்றிட வேண்டும்.
அரசியலும், சமூகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு மனிதநேயராக ஆட்சி செய்து வருகிறார். சுயமரியாதை இயக்கம், மக்கள் கருத்தை திரட்டி, ஆட்சியாளர் ஆவன செய்திடும் நிலையினை உருவாக்கி வருகிறது.
இந்த நிலையில், சுயமரியாதை இயக்கப் பணிகளை நேரில் பார்த்திட மனிதநேய அமைப்பின் தலைவர்களை வருக வருக என அழைக்கிறேன்.
இந்த அணுகுமுறை உலகெங்கும் பரவிட வேண்டும். நாடுகள் பலவகையாக இருந்தாலும் மனிதநேயம் நம்மை இணைத்து செயல்படுத்திடும் – வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்! மனிதநேயம் காத்திட வழி அமைப்போம்.!இவ்வாறு தமிழர் தலைவர் தமது முதன்மை உரையில் குறிப்பிட்டார்.
தேநீர் இடைவெளிக்குப் பின்னர் உரை வீச்சுகள் தொடங்கின.
தாமஸ் ஹிடோஷி புரூக்ஸ்மா எனும் அமெரிக்க – சியாட்டல் வாழ் _ மதுரையில் தமிழ் கற்ற அறிஞர் ‘திருக்குறளும் சமூகநீதியும்’ என்ற தலைப்பில் உரை ஆற்றினர். அனைவருக்கும் பொது என்னும் கருத்து திருக்குறளில் உள்ளது குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
அடுத்து, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் சங்க கால இலக்கியங்களில் சமூகநீதி, பாலியல் நீதி நிலவியதை இலக்கியக் குறிப்புகளுடன் விளக்கி, தமிழர் வரலாற்றின் உயரிய நிலையினை குறித்து ஓர் ஆய்வுரையினை வழங்கினார்.
கனடா நாட்டு ஆய்வு விசாரணை அமைப்பினைச் சார்ந்த லெஸ்லி ரோசன் பிளட் மகளிரிடமும், குழந்தைகளிடமும் பேணப்பட வேண்டிய மனிதநேயம் பற்றி உரையாற்றினார்.
அடுத்து டொராண்டோ பல்கலைக் கழக பேராசிரியர் மறைதிரு. சந்திரகாந்தன், கனடா நாட்டில் குடியேறியவர்களின் (ஈழத் தமிழர்களின்) இன்னல்களுக்கான தீர்வு, பற்றி உரையாற்றினார்.
மனிதநேயத்தின் வழி தட்பவெப்ப நிலை மாற்றத்தினை மட்டுப்படுத்துவதுபற்றி பேராசிரியர் அரசு செல்லையா உரையாற்றினார்.
சிறீலங்காவில் “மனிதநேயமும் சமூகநீதியும்” எனும் தலைப்பில் சிறீகதிர்காமநாதன் அரிய பல செய்திகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டின் திராவிட சிந்தனையாளர் மய்யத்தின் புகழ் காந்தி, இன்றைய இளைஞர்-களை மதச்சார்பின்மை கருத்தின்பால் ஈர்த்திடும் வழிமுறைகள் பற்றி உரையாற்றினார். திராவிட சிந்தனைகள், வரலாறு, பாடக் குறிப்புகளில் இடம் பெறுவதன் அவசியத்தையும், வேண்டாத பாடக் குறிப்புகளை நீக்கிட வேண்டுவது குறித்தும் பேசினார்.
பிற்பகல் அமர்வுகள்
நண்பகல் உணவிற்குப் பின் முதல் நிகழ்வாக ‘திராவிட இளைஞர்களின் நகைச்சுவை’ எனும் அமர்வில் இளங்கதிர் இளமாறன் மற்றும் நிகில் முனியப்பன் நிகழ்ச்சியினை வழங்கினர். தந்தை பெரியார் பற்றிய குறிப்புகளை இயல்பான நகைச்சுவை இழையுடன் வழங்கினர்.
அடுத்து இன்றைய ‘இளைஞர்கள் சமூகநீதி- பெரியார் ஓர் உத்வேகம்” எனும் தலைப்பின் திராவிடர் கழக மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.
தேநீர் இடைவேளைக்குப்பின் அவைகள் இரண்டாக நடைபெற்றன.
கனடா நாடாளுமன்ற உறுப்பினரும், மாநாடு நடைபெற ஆவன செய்திட்ட ஈழத் தமிழருமான கேரி ஆனந்த சங்கரி மாநாட்டிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றினார். வருங்காலத்திலும் மனிதநேயர் சமூகநீதிக்கான பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிடுவதாகவும் உறுதியளித்தார்.
ஆங்கிலத்தில் மாணவர் கலந்துரையாடலை, கனடா -ஆய்வு விசாரணை மய்யம், மனிதநேயர்களான டொராண்டோ மனிதநேய சங்கத்தினர் நடத்தினர்.
தமிழில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற பெரும்பாலானவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற பேராளர்கள் பேசினர். தங்களது பெரியார் இயக்க தொடர்பு, ஏற்பட்ட விதம் பற்றியும் வருங்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் பற்றியும் ஒவ்வொருவரும் சுருக்கமாகப் பேசினர்.
இறுதியாக நிகழ்ச்சியினை தொகுத்து, நிறைவுரையினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் ஆற்றினார்.
சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேயர் மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்வுகளும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றன.