இந்துக்களை இழிவுபடுத்துவது ஆ.இராசாவா? இந்துமத சாஸ்திரங்களா?

2022 அக்டோபர் 01-15 2022 மற்றவர்கள்

சிகரம்

ஆ.இராசா சொன்னது என்ன?
“இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபசாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபசாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்கச் சொன்னால்தான், அது சனாதனத்தை முறியடிக்கிறது அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திமுகவும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.” இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தில் 4-ஆவது வர்ணமாகிய சூத்திரர்கள் மனு ஸ்மிருதியில் இழிவுபடுத்தப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பி பேசினார்.
சட்டப்படியும் சான்றாவணங்களின்படியும் ஆ.இராசா ஓர் இந்து. தன்னை இழிவு-படுத்தும் சாஸ்திரங்களை அவர் வெறுக்கிறார், கண்டிக்கிறார், எதிர்க்கிறார். ஒவ்வொரு இந்துவும், தான் இந்து என்பதால் அடையும் இழிவை உணர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்.
இந்து மதம் இந்துவாக இருக்கிற பார்ப்பனர்-களை உயர்வாக, வணங்கத் தக்கவர்களாக, அதிகாரம் உடையவர்களாக, புனிதமானவர்களாக, உரிமை உடையவர்-களாகக் கூறி, இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை தீட்டு உடையவர்களாக, இழிமக்களாக, உரிமை யற்றவர்களாக, விபசாரியின் பிள்ளைகளாக, பார்ப்பனர்களின் அடிமைகளாகக் கூறுகிறது.

இதை பார்ப்பனர்கள் அல்லாத இந்துக்கள் ஏற்கலாமா? இந்து மதத்தில் இருக்கலாமா? இந்து மத சாஸ்திரங்களைக் கொளுத்த வேண்டாமா? மானம், சூடு, சொரணை உள்ள இந்துக்கள் இதை ஏற்றுக்கொண்டு இந்துக்களாக இருக்க முடியுமா? என்று கேட்கிறார். மானமுள்ள இந்து யாராயினும் ஆ.இராசா கேட்பது போலத்தானே கேட்பான்!
அப்படியென்றால் ஆ.இராசாவை எதிர்ப்பவர்கள் மானமுள்ளவர்களாக எப்படி இருக்க முடியும்? அவர்கள் பார்ப்பனக் கைக்கூலியாகத் தானே இருக்க முடியும்?
கோமாண்டூர் இளையவல்லி இராமனுஜாச்சாரியாரால் சமஸ்கிருதத்தால் இருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்-பட்ட மனுதர்மத்தின் 1919ஆம் ஆண்டு பதிப்பிலிருந்து சிலவற்றை கீழே தருகிறேன். அவற்றைப் படித்துவிட்டு அதன்பின் சொல்லுங்கள் _ ஆ.இராசா கூறியது சரியா அல்லது தப்பா என்று.
சூத்திரனுக்கு மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாய் ஏற்படுத்தினார். இதனால் அவனுக்கு தான முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.

(அத்தியாயம் 1, சுலோகம் 91)
பிராமணனுக்கு மங்களத்தையும் க்ஷத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது.
(அத்தி.2, சுலோ.31)
பிராமணனுக்குக் சர்ம்மவென்பதையும் க்ஷத்திரியனுக்கு வர்ம்ம என்பதையும் வைசியனுக்கு பூதியென்பதையும் சூத்திரனுக்குத் தாசனென்பதையும் தொடர்ப் பேராக இடவேண்டியது.
(அத்தி.2, சுலோ.32)
பத்து வயதுள்ள பிராமணனையும் நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது. அதில் பிராமணன் தகப்பன் மரியாதையும், க்ஷத்திரியன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது.
(அத்தி.2, சுலோ.135)
எவன் சிரார்த்தஞ் செய்து மிகுந்த அன்னம் (சோறு) முதலியவற்றை சூத்திரனுக்கப் போடுகிறானோ அந்த மூடன் காலசூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.
(அத்தி.3, சுலோ.249)
பிராமணன் முதலானோர் இறந்தால் அந்தச் சாதியார் இருக்கும்போது சூத்திரனைக் கொண்டு அப்பிணத்தை எடுக்கச் சொல்லக் கூடாது. அப்படி யெடுத்து தகநஞ் செய்தால் இறந்தவனுக்கு புண்ணியலோகம் வரமாட்டாது.
(அத்தி.5, சுலோ.104)
பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும் (பொறுப்பிலும்) யௌவநத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதே யல்லது ஸ்திரீகள் (பெண்கள்) தன் சொந்த பொறுப்பில் ஒருபோதும் இருக்கக் கூடாது.
(அத்தி.5, சுலோ.148)
கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனா யிருந்தாலும் நற்குணமில்லாதவனா யிருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனை தெய்வத்தைப்போற் பூசிக்க வேண்டியது.
(அத்தி.5, சுலோ.154)
பிராமணன் சம்பளங்கொடுத்தேனுங் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணனுக்கு வேலை செய்யவே பிரமனால் படைக்கப் பட்டிருக்கின்றானல்லவா.
(அத்தி.8, சுலோ.413)
யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள்மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என சூத்திரர்கள் (தொழிலாளிகள்) எழு வகைப்படுவர்.
(அத்தி.8, சுலோ.415)
மனையாள், பிள்ளை, வேலைக்காரன் இவர்களுக்கு பொருளில் சுவாதீநமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவைகள் அவர்களின் எஜமாநனையே சாரும். அதாவது யஜமாநனுத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக் கூடாது.
(அத்தி.8, சுலோ.416)
மாதர் இளமைப் பருவத்தில் பிதாவினாலும் யௌவனத்திற் கணவனாலும், மூப்பில் மைந்தனாலும், காக்கத்தக்கவராகையால் எக்காலமும் மாதர் (பெண்கள்) சுவாதீநமுடைய-வரல்லர். (சுதந்திரமாக வாழ முடியாது.)
(அத்தி.9, சுலோ.3)
மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமநமும், நண்பின்மையும், இயற்கையா-கவுடையவராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்-கின்றார்கள்.
(அத்தி.9, சுலோ.15)
மாதர்கள் பெரும்பாலும், விபசாரதோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்த்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்-கின்றன. அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபசாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தத்தைக் கேளுங்கள்.
(அத்தி.9, சுலோ.19)
பீஜம் (ஆண் குறி) யோநி (பெண் குறி) இவ்விரண்டையும் யோசிக்குமிடத்தில் பீஜமுயர்ந்திருக்கின்றது. அதேனெனில் எல்லா ஜெந்துக்களும் பீஜத்தினடையாளத்துடன் பிறக்கின்றனவல்லவா.
(அத்தி.9, சுலோ.35)
கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும் நோயாளியாக விருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கிவைக்க வேண்டியது.
(அத்தி.9, சுலோ.78)
முப்பது வயதுள்ள வரன் (ஆண்) அழகான பன்னிரண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்தினாலு வயதுள்ள வரன் எட்டு வயதுள்ள பெண்ணையும் விவாகஞ் செய்து கொள்ளலாம்.
(அத்தி.9, சுலோ.94)
பிராமணன் தன்னால் விவாகஞ் செய்யப்-பட்ட சூத்திர மனையாளிடத்தில் காமத்தினால் உண்டு பண்ணின பிள்ளையானவன் செய்கிற சிரார்த்த காரியங்கள் பரலோகத்துக்கு உபயோக மாகாததால் உயிரோடிருந்தாலும் பிணத்தோடு சரியாகச் சொல்லப்படுகிறான். ஆதலால் அவனை பாரசவ புத்திரனென்று சொல்லுகிறார்கள். இவன் தான் முன்பு சௌத்திரனென்று சொல்லப்பட்டவன்.
(அத்தி.9, சுலோ.178)
சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள் அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில் இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா.
(அத்தி.10, சுலோ.84)
பிராமணன் தொழிலைச் செய்தாலும், சூத்திரன் பிராமண சாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண சாதித் தொழிலில் அதிகாரமில்லை யல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாகமாட்டான். ஏனென்றால், அவன் ஹீநத் (இழிவான) தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
(அத்தி.10, சுலோ.73)
தாழ்ந்த ஜாதியான் பொருளாசையால் தனக்கு மேலான ஜாதியான் றொழிலைச் செய்தால் அவன் பொருண்முழுமையும் அரசன் எடுத்துக்கொண்டு அவனையும் உடனே ஊரைவிட்டோட்டுக.
(அத்தி.10, சுலோ.96)
இப்படி சூத்திரர்களையும், பெண்களையும் இழிவுபடுத்துகிறது இந்து மதம். இப்படிப்பட்ட இந்து மதத்தை ஏற்கலாமா? இப்படிக் கூறும் மனுசாஸ்திரம் போன்றவற்றைக் கொளுத்த வேண்டாமா? என்று கேட்கிறார் ஆ.இராசா. இந்துக்களில் 90% மக்களை இழிவுபடுத்தும் இந்து சாஸ்திரங்களை, இந்து மதத்தை எதிர்ப்பதற்கு பதில், அவற்றை எடுத்துக்கூறி மானமும், அறிவும், விழிப்பும் ஊட்டிய ஆ.இராசாவை எதிர்ப்பது அயோக்கியத்தனம் அல்லவா! தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்துக்களே சிந்திப்பீர்! ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை, சூழ்ச்சியை முறியடிப்பீர்!