வி.சி.வில்வம்
“வாழ்க்கை இன்னவென்று புரிந்து கொள்வதற்குள் பாதி வாழ்க்கை கழிந்து விடுகிறது!’’ என்பது ஒரு பிரான்ஸ் பொன்மொழி!
இளைஞர் பருவம் தாண்டிய ஒரு மனிதருக்குப் பொருளாதாரம் பிரச்சினையாக இருக்கிறது, மாணவர்களுக்கு கல்விப் பிரச்சினை, அதை முடித்தவர்களுக்குவேலை வாய்ப்பு பிரச்சினை, திருமணம் ஆனவர்களுக்குக் குடும்பம் மற்றும் உறவுகள் பிரச்சினை! ஆக பிரச்சினைகள் என்பது அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!
கொரோனா காலத்தில் ஒரு காணொலிக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது! நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். பங்கேற்ற 30 பேரும் 15 வயதிற்கு உட்பட்டவர்கள்! புதிதாகச் சிந்திக்கத் தொடங்கியவர்கள்! எதையும் ஏன்? எதற்கு? எனக் கேட்கப் பழகியவர்கள். வித்தியாசமாக இருக்கிறார்களே என அவர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்வை அந்த நண்பர் நடத்தினார்.
இந்த இளம் வயதில் குடும்பப் பின்புலம் எதுவும் இல்லாமல், இவ்வளவு சிந்திக்கிறார்கள் என்றால், அதற்குப் பெயர் தான் தமிழ்நாடு! காரணம், தமிழர்களே சிந்தியுங்கள்; தமிழர் -களே கல்வி கற்றுக் கொள்ளுங்கள்; தமிழர் களே நல்ல வேலைக்குச் சென்று விடுங்கள்; தமிழர்களே சுயமரியாதை வாழ்வை அனு பவியுங்கள் என ஒருவர் இயக்கம் கட்டி 60 ஆண்டுகள் புரட்சி செய்தார் என்றால் அதுதான் தமிழ் மண்! அதன் விளைச்சல் தான் இந்தக் குழந்தைகள்!
இவர்களுடன் பேசும்போது சில செய்தி-களைப் பகிர்ந்து கொண்டோம்! மனிதர்களுக்கு ஆறறிவு, அந்த ஆறாம் அறிவுதான் “பகுத்தறிவு” என்று அறிவியல் கூறுகிறது! ஆனால், இவ்வுலகில் ஆறாம் அறிவைப் பயன்படுத்தாத மனிதர்கள் கணிசமாகவே உள்ளனர்! இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்!
தமிழ்நாட்டில் தந்தை பெரியார், “பகுத்தறிவு எவ்வளவு முக்கியம்“ என்பதை தம் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்துவிட்டு போனார்! பெரியார் என்பவர் ஓர் அறிஞர், ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர்; அதிலும் உளவியல் மருத்துவர், மாமனிதர், போராளி என எத்தனையோ அடைமொழிகளையும் சேர்க்கலாம்! அத்தனைக்கும் காரணம் அந்தப் “பகுத்தறிவு!’’
பெரியார் வலியுறுத்திய பகுத்தறிவைக் கொண்டு, ஜாதி என்பது கொடுமையானது என்கிற முடிவுக்கு வரலாம்; மதம் பொய் என்பதை உணரலாம்; கடவுளே இல்லை என்பதையும் அறியலாம்!
அதேபோல நம்முடன் பயிலும் மாணவர்-களிடம் பிரச்சினைகள் ஏற்பட்டால் எப்படிச் சரி செய்யலாம்? எப்படி விட்டுக் கொடுக்கலாம்? மனம் விட்டுப் பேசுவது எப்படி? எனச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம்! ஒன்றைப் பகுத்து அறிந்து, சிந்தித்து, பின்னர் நடைமுறைப்படுத்துவது! ஒரு செயலை சிறப்பாகச் செய்வதற்கான அடிப்படை.
இதற்குப் பெரிதும் உதவுவது பகுத்தறிவு! வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை பகுத்தறிவின் மூலம் சரி செய்யலாம்! ஆரோக்கியமான உறவுகளை மீட்டெடுக்கலாம்!
பெரியார் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டு ஜாதி, மதம், கடவுள் குறித்து மட்டுமா பேசினார்? பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சமதர்மம், கல்வி, பெண்ணுரிமை, வாழ்க்கை ஒப்பந்தம், தொழிலாளர் நலன், தமிழ் வளர்ச்சி, கிராம முன்னேற்றம், பொது நலம், சுயநலம், மனித வாழ்க்கை, கலை, இசை, நாடகம், தமிழக நன்மைகள், அயல்நாட்டு வாழ்க்கை முறை, எதிர்கால உலகம் எனப் பெரியார் எல்லாவற்றையும் பேசினார்.
பேசியதோடு மட்டுமின்றி அதற்கான கொள்கை வடிவமைப்பு, செயல் திட்டம், போராட்டம் எனத் தம் வாழ்நாள் முழுக்க உழைத்து அதில் வெற்றியும் பெற்று, அந்த வெற்றியின் மூலம் இன்று நம்மையும் வாழச் செய்து எதிர்காலத்தையும் விழிப்படையச் செய்துள்ளார்.
எனவே, வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் பகுத்தறிவின் மூலம் ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேள்வி கேட்டு, சிந்தித்து, வாழ்க்கையை அழகாக்கிக் கொள்வோம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!