1954இல் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் 30 ஆண்டுகளுக்குப் பின் காமராசர் ஆதரவு _ காங்கிரஸ் ஆதரவு எனும் மாற்றம் ஒன்று நிகழ்ந்ததும், அந்த மாற்றம் 1967 வரை தொடர்ந்ததையும் காணலாம்.
இந்த மாற்றம் என்று குறிப்பிடுவது _ தந்தை பெரியாரின், தலைவர் காமராசர் ஆதரவு நிலை. அதன் விளைவால் காங்கிரசு ஆதரவாளராகப் பரப்புரை நிகழ்த்தினார். இது ஒரு பெரிய மாற்றம்தான். 1925இல் காங்கிரசை ஒழிப்பேன் என்று புறப்பட்ட பெரியார், 30 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் _ காமராசர் ஆதரவு நிலை மேற்கொண்டார்.
அப்போதுகூட நான் காமராசரைத் தான் ஆதரித்தேன். காங்கிரசையல்ல என்று பலமுறை கூறியிருக்கிறார் தந்தை பெரியார்.
கவர்னர் பிரகாசா, காமராசரை அமைச்-சரவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். காமராசரின் அமைச்சரவையில் ஏழு பேர் அமைச்சர்களாக இருப்பர்; பின் ஓரிருவர் சேர்க்கப்படுவர் எனவும் தகவல் வெளியாயிற்று. தமிழ்நாட்டு காங்கிரசுக்கு வேறு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை காமராசரே அப்பதவி-யில் இருந்து வருவார் எனவும் செய்தி வெளியாயிற்று.
காமராசர் தமிழ்நாடு முதல்வராக (13.4.1954 அன்று பதவியேற்றார்). அதே மாதிரி காமராசர் தந்தை பெரியார் அவர்களின் உள்ளம் என்ன என்பதைப் புரிந்து தமிழ்நாட்டின் நலன் கருதியே ஆட்சி செய்தார்.
ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படையினர் நாகையிலிருந்து 300 கிலோ மீட்டர் கால்நடையாகவே சென்னை வந்து, படையினர் சார்பாக ஏ.ஆறுமுகம், டி.வி.டேவிஸ், க.ராஜாராம், எம்.கே.டி.சுப்பிரமணியன், டி.எம்.சண்முகம் ஆகியோர் 13.5.1954 மாலை 5:00 மணிக்கு முதலமைச்சர் காமராசரை அவருடைய அறையில் சந்தித்தனர்.
அவர்களை முதலமைச்சர் காமராசர் அன்போடு வரவேற்றார். அப்படையினர் புதிய கல்வித் திட்டத்தை உடனடியாக நீக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திக் கூறி படை வந்ததன் கருத்தைச் சொல்லிக் குறிப்பொன்றை அளித்தனர். முதலமைச்சர் பெற்றுக் கொண்டு “இரண்டொரு நாளில் நீங்கள் மகிழ்ச்சி அடையத்தக்க சேதி பெறுவீர்கள்’’ என்று கூறினார்.
ஆச்சாரியாரால் கொண்டு வரப்பட்ட புதிய கல்வித் திட்டத்தைக் கைவிட்டு விடுவதெனக் காமராசர் அரசு முடிவு செய்தது. குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்த ராஜாஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அதே சி.சுப்பிரமணியத்தைக் கொண்டே ஒழித்தார் என்பது முக்கியமான செய்தி!
18.5.1954 அன்று காலை 8:30 மணிக்கு சென்னை சட்டசபைக் கூட்டம் சட்டசபைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளை தலைமையில் கூடியபோது இந்த நல்ல முடிவை அதிகாரபூர்வமாகக் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.
தந்தை பெரியார் மே 22, 23 ஆகிய இரு நாள்கள் (சனி, ஞாயிறு) சிதம்பரத்தில் கலந்துகொண்ட மாநாடுகள் வெற்றி விழா மாநாடுகள் என்றே கூறலாம். ஆச்சாரியார் ஆட்சியையும், புதிய வர்ணாசிரமத் திட்டத்தையும் ஒழித்துக் கட்டிய தனிப் பெருந்தலைவர் தந்தை பெரியார் தம் உரையில்,
காமராசரை “பச்சைத் தமிழர்’’ என முதன்-முதலாக அழைத்தது அந்த மாநாட்டில்-தான். “தமிழ்நாட்டில் ஒரு பச்சைத் தமிழனுடைய மந்திரி சபை ஏற்பட்டிருப்பது நமக்கு ஓரு பெருமை. அடுத்து காமராசர் அமைச்சரவை பார்ப்பானே இல்லாத அமைச்சரவை என்று சுட்டிக்காட்டினார். (ஆர்.வெங்கட்ராமன் பின்னர் சேர்க்கப்பட்டார்) “என்னைப் பொருத்த வரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாகவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்’’ என இம்மாநாட்டில் விளக்கம் அளித்தார்.