கருநாடகத்தில் சுயமரியாதை
இயக்கப் பவள விழா! பெரியாரியமே!
கி.வீரமணி
16.5.2000 அன்று சாமியார்களின் மோசடிகளை விளக்கியும் இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருச்சியில் நான் தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்தேன்.
தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளரும், உரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூர் மு.கோவிந்தராஜ் _ புஷ்பம் ஆகியோரின் செல்வன் கோபு.பழனிவேல், தஞ்சை வட்டம் மாரியப்பன் கோவில் டி.அருணாசலம் – தனலெட்சமி ஆகியோரின் செல்வி அ.சாந்தி இருவரின் இணை ஏற்பு விழாவினை 16.5.2000 அன்று மாலை 6.00 மணியளவில் உரத்தநாடு ரெங்கமணி திருமண அரங்கத்தில் நடத்தி வைத்தேன்.
மறுநாள் 17.5.2000 அன்று நன்னிலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் நல்லமாங்குடி சாமிநாதன் _ கனகாம்பரம் ஆகியோரின் செல்வனுமான எஸ்.கிருஷ்ண மூர்த்திக்கும் நன்னிலம் தங்கவேலு _ சரோஜா ஆகியோரின் செல்வி ராதாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழாவினை நன்னிலம் என்.எஸ்.எம். திருமண அரங்கத்தில் நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு 19.5.2000 _ 20.5.2000 ஆகிய இரு நாள்கள் மதுரை அரசரடி புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மய்தானத்தில் வெகு சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. இரண்டாம் நாள் மாநாட்டில் பங்கேற்று, சிறப்புரையாற்றினேன்.
மேட்டூர் ஆர்.எஸ்.சி மகாலிங்கம் _ ம.சரசம்மாள் ஆகியோரின் செல்வி ம.ஆனந்தி, குருவரெட்டியூர் அய்ரத்தல் வெ.வேலுசாமி _ சின்னம்மாள் ஆகியோரின் செல்வன் வே.முருகன் ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த ஏற்பு விழாவை 21.5.2000 அன்று காலை 8:00 மணியளவில் சென்னம்பட்டி சந்தைப்பேட்டை திருமகள் திருமண அரங்கத்தில் நடத்தி வைத்தேன். பின்னர், காலை 10:00 மணியளவில் குருவரெட்டியூர் கடைவீதியில் கழகக் கொடியினை ஏற்றி, கல்வெட்டினைத் திறந்துவைத்தேன்.
சுயமரியாதை இயக்கப் பவள விழாவையொட்டி தந்தை பெரியார் படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம், தந்தை பெரியார் அவர்கள் பொன்மொழிகள் அடங்கிய கல்வெட்டுத் திறப்பு, கழகக் கொடியேற்று விழா, எடைக்கு எடை இரத்த தானம் வழங்கும் விழா, கழக கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் என வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அய்ம்பெரும் விழா கோபி மாவட்டம் கொளப்பலூரில் 21.5.2000 அன்று வெகுசிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன். பொதுக்-கூட்ட மேடையிலேயே சத்தியமங்கலம் ஆசிரியரணி செயலாளர் கு.நவநீதன் _ நாகரெத்தினம் ஆகியோரின் செல்வி ந.திராவிடச்செல்வி, கோபி வட்டம் கொளப்பலூர் கே.எஸ்.முத்துசாமி _ சரசாள் ஆகியோரின் செல்வன் எம்.முருகன் என்கிற பிரபாகரன் மற்றும் கோவை மாவட்டம் தொடதாசனூர் பழனியப்பன் _ ருக்குமணி ஆகியோரின் செல்வனும், கோவை வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ப.சிவக்குமார் _ தேக்கம்பட்டி சீதாராமன் _ சுசீலா ஆகியோரின் செல்வி கீதா என்கிற சி.நாகலட்சுமி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தேன்.
அதையடுத்து சுயமரியாதை இயக்கப் பவள விழாவையொட்டி மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 22.5.2000 அன்று மாலை 4:00 மணியளவில் மேட்டூர், குமரன் நகரில் பெரியார் பெருந்தொண்டர் கோனூர், தி.இராமகிருட்டினன் பகுத்தறிவுப் படிப்பகத்தையும், பின்னர், தேசாய் நகரில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட ‘சுயமரியாதைச் சுடரொளி’ மேட்டூர் டி.கே.ஆர். நினைவுப் படிப்பகத்தினையும் திறந்து வைத்து அங்கு கழகக் கொடியை ஏற்றி வைத்தேன். மாலை 6:00 மணியளவில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும், கழகப் பொதுக்கூட்டமும் வெகு எழுச்சியோடு மிகச் சிறப்பாக நடைபெற்றன.
பெரியார் பெருந்தொண்டர் கல்வி வள்ளல் மதுரை பே.தேவசகாயம் _- அன்னத்தாயம்மாள் இராமநாயக்கன் பட்டி வி. முத்துசாமி – சேர்மதியம்மாள் ஆகியோரின் பேத்தியும், மு.இராஜகோபால் – தமிழ்மணி ஆகியோரின் செல்வி இரா.அன்புமணி, திருமங்கலம் இர.சந்திரசேகரன் _- மல்லிகா ஆகியோரின் செல்வன் ச.நந்தகுமார் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை 24.5.2000 அன்று காலை 9 மணியளவில் மதுரை மாநகராட்சி மடிட்சியா அரங்கத்தில் நடத்தி வைத்தேன். மணவிழாவை முன்னிட்டு பெரியார் மய்ய கட்டடநிதிக்கு ரூபாய் 25000 வழங்குவதாக தே.எடிசன் ராஜா அறிவித்தார்.
சென்னை அம்பத்தூர் துரை முத்துக்கிருட்டிணன் -_ ருக்மணி ஆகியோரின் செல்வன் மு.தங்கராசு சென்னை அண்ணாநகர் மா.மாசிலமணி மா.மீனாட்சி ஆகியோரின் செல்வி மா.மஞ்சுளா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை 4.6.2000 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை மைலாப்பூர் ஓட்டல் நியூ உட்லண்ஸ் அரங்கத்தில் நடத்தி வைத்தேன்.
7.6.2000 அன்று சாமியார் சாமியாரிணி மோசடிகளை விளக்கி பான்பாரக் வகைகளை தடை செய்யக்கோரி தமிழ்நாடெங்கும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னையில் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினேன்.
ஆக்கூர் என்கே. கோவிந்தசாமி – தங்கம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், ஆலங்குடி கோ.சுகுமார் _- சீதாலட்சுமி ஆகியோரின் செல்வி சு.சுமதிக்கும் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்.ரெங்கராசன் _- அனுசூயா ஆகியோரின் செல்வன் ரெ.இளங்கோவனுக்கும் இணையேற்பு ஒப்பந்த விழாவினை 8.6.2000 காலை 10.00 மணியளவில் ஆலங்குடி வடகாடு இராகவேந்திர திருமண அரங்கத்தில் நடத்தி வைத்தேன்.
பிற்பகல் 2 மணியளவில் புத்தூர் பெரியார் மாளிகையில் சுயமரியாதைச் சுடரொளி உறையூர் இராமச்சந்திரன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினேன்.
பெருஞ்சேரி வடுவூர் அருகில் இளைஞரணித் தோழர் அறிவழகன் தலைமையில் தில்லை ராசா முன்னிலையில் கடவுள் மறுப்பு கல்வெட்டினை 11.6.2000 அன்று திறந்து வைத்து கழகக் கொடியேற்றினேன்.
அடுத்து நெஞ்சேரியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமகள் சுந்தரம், ஜெகதீசன் திருநாவுக்கரசு, ராதாசிங் ஆகியோரின் முயற்சியால் வெகு சிறப்பாக அமைக்கப்பட்ட கல்வெட்டினைத் திறந்து வைத்து கழகக் கொடியேற்றினேன். மாலை 6.00 மணியளவில் பெருஞ்சேரி இயக்கப் பற்றாளர் எஸ்,.மூர்த்தி அவர்களால் சிறப்பாகக் கட்டப்பட்ட ‘தாயகம்‘ இல்லத்தைத் திறந்து வைத்தேன்.
அடுத்து பெருஞ்சேரி எஸ்.மூர்த்தி _ அமுதவல்லி ஆகியோரின் செல்வி பாரதி பெருஞ்சேரி உல்லாசம் அவர்களின் செல்வன் வெற்றிவேலு ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் மா.கருணாநிதி அவர்களின் சகோதரரும் தஞ்சாவூர் சுந்தரம் நகர் இரா.மாரியப்பன் _- அம்சவள்ளி ஆகியோரின் செல்வன் மா.அண்ணாதுரைக்கும் அய்யம்பேட்டை டி.எம்.ராமராஜ் _- ராகினி ஆகியோரின் செல்வி நிர்மலாவிற்கும் வாழ்க்கை ஒப்பந்த ஏற்பு விழாவினை 12.6.2000 அன்று தஞ்சாவூர் இராமசாமி திருமண அரங்கத்தில் நடத்தி வைத்தேன்.
திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி பிச்சையா _- தனலட்சுமி ஆகியோரின் செல்வன் பி.இரமேசு திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் சோ.பொன்னுசாமி _- மல்லிகா ஆகியோரின் செல்வி பொன்.கயல்வழி ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த ஏற்பு விழாவினை 16.6.2000 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி ரோசன் மகாலில் நடத்தி வைத்தேன். இவ்விழாவில் கழக உதவிப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பேராசிரியர் ப.சுப்ரமணியன், எஸ்.டி.இராசேந்திரன், குடவாசல் கல்யாணி, போட்டோ மு.பாலு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்று பிற்பகல் 2 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் சுயமரியாதை இயக்க பவளவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதைச் சுடரொளி உறையூர் இராமச்சந்திரன் படத்திறப்பு திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள டி.டி.வீராப்பா அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்று சுயமரியாதைச் சுடரொளி உறையூர் இராமச்சந்திரன் படத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினேன்.
டி.டி.வீரப்பா அரங்கத்தில் சுயமரியாதை இயக்கக் குடும்ப விருந்து நடைபெற்றது. என்னுடன் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த தோழர்கள், தோழியர்கள், பெரியார் பிஞ்சுகள் அனைவரும் அசைவ உணவருந்தினர். புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் உள்ள பூங்காவிற்கு பெரியார் பெருந்தொண்டர் உறையூர் இராமச்சந்திரன் நினைவுப் பூங்கா என பெயர் சூட்டப்படும் என அறிவித்தேன்.
பெங்களூர் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் 18.6.2000 அன்று சுயமரியாதை இயக்கப் பவள விழா கருநாடக மாநில திராவிடர் கழகத்தினரால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 31 முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பெரியார் உருவம் பொறித்த நினைவுச் சின்னத்தை அளித்து, சால்வை அணிவித்து அவர்களின் தொண்டினைப் பாராட்டினேன். இதில் மற்றொரு சிறப்பு நிகழ்வாக திருமணமாகி 60 ஆண்டுகள் நிறைவு விழா மணவிழாவுக்கு மணிவிழாவாக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு அண்ணாமலை _ நாகம்மாள் ஆகியோருக்கு அதே இடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 18.6.2000 அன்று மாலை 5:00 மணியளவில் பெங்களூர் பாலபுரி ஓய்வு விடுதியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கடவுள் மறுப்பு கூறி, கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி கழக உதவிப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் துவக்க உரையாற்றினார். கருநாடக மாநில அமைப்பாளர் வி.சி.கிருட்டினன், துணைத் தலைவர் ரெங்கநாதன், மாநகராட்சி அமைப்புச் செயலாளர் பாண்டியன், செயலாளர் டி.பி.மனோகரன், ம.நி.குழு உறுப்பினர் இராம.கோவிந்தன், துணைத் தலைவர் பாஷ்யம், முனுசாமி, இளைஞரணித் தலைவர் நெடுஞ்செழியன், சொர்ணா ரங்கநாதன், மாநிலத் தலைவர் சானகிராமன், செயராமன், அசோகன் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து உரையாற்றினர்.
நிறைவாக நான் எனது உரையில், “சுயமரியாதைக்காரர் என்று சொன்னால், குடும்பம் முழுவதும் கொள்கைரீதியாக இருக்க வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரையும் இயக்க நிகழ்ச்சிகளுக்கு தவறாது அழைத்து வர வேண்டும். பெரியார் அறிவியல் கண்காட்சி – புத்தகக் காட்சி போன்றவை நடத்திட வேண்டும். எனவே, தோழர்கள் புதிய உற்சாகத்தோடு திட்டமிட்டுச் செயல்படவேண்டும். அனைத்து மொழிகளிலும் தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் தயார் செய்யப்படுகின்றன. தந்தை பெரியார் கொள்கையைப் பரப்புவதுதான் நமது கடமை.
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.’’
என்னும் குறளுக்கு ஏற்ப மானம் பாராத தொண்டினை நாம் ஆற்றிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டேன்.
திராவிடர் கழக மகளிரணியினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மகளிரணி மாநாடுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டு, முதல் மாநாடு தென் மாவட்ட மகளிரணி சார்பில் மதுரை மாநகரில் வெகு சிறப்பாக நடைபெற்று புதிய வரலாறு படைத்தது. இரண்டாவது மாநாடு சேலம் மாவட்டம் ஆத்தூரில் 20.6.2000 அன்று அண்ணா கலையரங்கத்தில் காலை 9:00மணி முதல் இரவு 9:00 மணி வரை வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக, காலை 9:00 மணியளவில் ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா? _ தந்திரமா? நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு தலைமையேற்று மாநில மகளிரணிச் செயலாளர் க.பார்வதி தலைமையுரையாற்றினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சரியாக மாலை 4:00 மணியளவில் நிகழ்ச்சிகள் தொடங்கின.
இவ்விழாவில், தில்லி பெரியார் மய்ய கட்டட நிதிக்கும், பெரியார் பெருந்தகையாளர் நிதிக்கும் ஏராளமான தோழியர்கள், தோழர்கள் நிதியினை என்னிடம் உற்சாகத்தோடு அளித்தனர்.
மாநாட்டில் முத்தாய்ப்பாக என்னை நடுவராகக் கொண்டு, “பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக இருப்பது “சமுதாயச் சூழலே! பொருளாதாரச் சிக்கலே!’’ என்ற தலைப்பில் பரபரப்பான பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அந்தூர், வீ.பச்சமுத்து _ பாப்பாத்தி ஆகியோரின் செல்வன் ப.ஆனந்தன், பெரம்பலூர் மாவட்ட குன்னம் வட்டம் கீழப் பெரம்பலூர் சொ.பெரியசாமி _ செல்லம் ஆகியோரின் செல்வி கவிதா ஆகியோர்தம் இணை ஏற்பு விழாவை 20.6.2000 அன்று காலை 10:00 மணியளவில் அந்தூரில் மணமகன் இல்லத்தில் வெகுசிறப்பாக நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். இன இழிவு நீங்கவும், மூடநம்பிக்கை ஒழியவும் சில கருத்துகளை எடுத்துக் கூறினேன்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் த.வானவில் _ சந்திரா ஆகியோரின் மகள்கள் வி.விடிவெள்ளி, வி.அறிவுமணி ஆகியோர் திருச்சி _ நாகம்மை ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த பிறகு ஆசிரியை பணி கிடைத்ததை முன்னிட்டு புதுடில்லி _ பெரியார் மய்யம் கட்டட நிதிக்கு தங்களது முதல் மாத ஊதியத் தொகையிலிருந்து தலா ஒவ்வொருவரும் ரூபாய் அய்ந்தாயிரம் என இருவரும் சேர்ந்து ரூபாய் பத்தாயிரத்தை 20.6.2000 அன்று ஆத்தூரில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டிற்குச் சென்றிருந்த என்னிடம் நன்கொடையாக நேரில் வழங்கினர். இது புதுடில்லி பெரியார் மய்யக் கட்டட நிதியில் சேர்க்கப்பட்டது.
புதுடில்லியில், சுயமரியாதை இயக்கப் பவள விழாவையொட்டி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமான பெரியார் அறக்கட்டளை அமைத்துவரும் 5 அடுக்கு கட்டடத்தில் (ஒவ்வொரு தளமும் 5,300 ச.அடி கொண்டது; Basement Floor அடித்தளம் உள்ளது) பெரியார் கம்ப்யூட்டர் காலேஜ் துவக்க விழா 22.6.2000 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமை விருந்தினராக அமைச்சர் டாக்டர் யோகானந்த சாஸ்திரி அவர்கள் கலந்துகொண்டார்.
பேராசிரியர் நல்.இராமச்சந்திரனின் அறிமுக உரைக்குப் பின்னர், பெரியார்
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனச் செயலாளர் ஆகிய நான், வந்திருந்த தலைமை விருந்தினர் உள்பட அனைவரையும் வரவேற்று சுருக்கமாக ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.
இந்த விழா மூலம் இக்கல்லூரியை இப்பகுதி மக்களிடம் ஒப்படைக்கிறோம். அவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். கணினிக் கல்வி அறிவு இனி இன்றியமையாதது. தந்தை பெரியார் கிராமங்களை மாற்றிட வேண்டும் என்றார். இது பணம் சம்பாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. இதன்மூலம் கிராமப் பகுதி மக்களுக்குத் தொண்டு செய்யவும், பெரியார் லட்சியங்களை இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்துவதும்தான் இதன் நோக்கம் என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.
கம்ப்யூட்டர் கல்லூரியைத் திறந்துவைத்த அமைச்சர் இந்தி (அவரது தாய்மொழி)யில் உரையாற்றினார். அதற்கடுத்து வடஅமெரிக்க திராவிடர் கழக அமைப்பாளரும், அமெரிக்காவில், சிகாகோ நகரில் வாழும் டாக்டருமான சோம.இளங்கோவன் அவர்கள் ஆங்கிலத்தில் அரியதோர் உரையாற்றினார்.
காவி மயமாகும் கல்விக் கொள்கையைக் கண்டித்து திண்டுக்கல்லில் கழக மாணவரணி மண்டல மாநாடு 27.6.2000 அன்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேருரையாற்றினேன்.
மறுநாள் 28.6.200 அன்று மாலை 6:00 மணிக்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழக மாணவரணி சார்பில் கல்வித்துறையை காவிமயமாக்கும் தேசிய ஜனநாயக முன்னணி பா.ஜ.க ஆட்சியைக் கண்டித்து அதனால் ஏற்படும் பேராபத்தை மக்கள் மத்தியில் விளக்குவதற்காக மாவட்ட மாணவரணி மாநாடு, கும்பகோணம் மகாமகம் குளம் மேல்கரையில் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்றது. மாநாட்டினையொட்டி இனமான ஏடான ‘விடுதலை8 நாளிதழுக்கு ரூபாய் 60,000 என்னிடம் அளித்தனர். பெரியார் பெருந்தொண்டர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார். ‘காவி மயமாகும் கல்வி’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இறுதியில் நான் விளக்கவுரையாற்றினேன்.
1.7.2000 காலை 8:00 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து சாலை வழியாக மலேசியா வந்தடைந்தேன்.
மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூர்பாருவில், ஜோகூருக்கு வந்தனர். ஜோகூரில் உள்ள பிரபல தொழிலதிபரும் ம.இ.கா.வின் மத்திய செயலவையின் உறுப்பினரும் ஜோகூர் கவுன்சிலருமான மாண்புமிகு டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் அவர்களுடன் மலேசியாவின் பிரபல தொழில் நிறுவனங்களில் ஒன்றான சின்னய்யா அண்ட் சன்ஸ் கம்பெனி பெண் ஊழியர் ஒருவரது பிறந்த நாளையொட்டி அளிக்கப்பட்ட காலைச் சிற்றுண்டி விருந்தில் கலந்து கொண்டேன்.
பிறகு டத்தோ பாலகிருஷ்ணன் அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவரது துணைவியார், தாயார், காரைக்குடி பெரியவர் சேதுராமன் ஆகியோருடன் உரையாடி முற்பகல் 11:30 மணிக்கு சாலை வழியே புறப்பட்டு, டத்தோ அவர்களுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்குப் பிற்பகல் 2:30 மணிக்கு ஓட்டல் வென்ஒர்த் அடைந்தோம். எங்களை மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் மானமிகு ரெ.சு.முத்தய்யா அவர்களும், கழகத் தோழர்களும் வரவேற்றனர். மாலை 4:30 மணிக்கு பத்தாங்பெர்சுந்தையில் நடைபெறவிருந்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கந்தசாமி இல்ல மணவிழாவிற்கு அனைவரும் சென்றோம்.
சரியாக மாலை 5:30 மணிக்கு பத்தாங்பெர்சுந்தை ஈஜோக், சீனப்பள்ளி திருமண மண்டபத்தில், மலேசிய திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு திராவிடமணி மு.நல்லதம்பி D.P.N., P.J.K. அவர்களும், மணமகளது பெற்றோர்களும் வரவேற்றனர்.
திருவாளர் மு.கு.கந்தசாமி, பாசியம் ஆகியோரது செல்வன் ரவிக்கும், சுங்கை லாயாஸ், ரெம்பாங் ஊரைச் சேர்ந்த திருமிகு பாலாசந்தா _ சாந்தி ஆகியோரின் செல்வி பா.அனிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் மானமிகு ரெ.சு.முத்தய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மணமகனது தந்தை, பெரியார் பெருந்தகையாளர் மானமிகு மு.கு.கந்தசாமி அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். அதன்பின் வாழ்க்கை ஒப்பந்தத்தினை நடத்தி வைக்குமுன், சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவம், வரலாறு பற்றி எளிமையாகவும், சுருக்கமாகவும் உரையாற்றிவிட்டு, திருமண இணையேற்பு ஒப்பந்தத்தை, உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தேன். தாலிக்குப் பதில் ரவி, அனிதா எனப் பெயர் பொறித்த சங்கிலியை மணமகன் ரவி அனிதாவுக்கு அணிவித்தார்.
மணவிழாவில் மலேசிய திராவிடர் கழகத்தின் முக்கியப் பிரமுகர்கள், வணிகப் பெருமக்கள், அரசியல் பிரமுகர்களான டத்தோ பாலகிருஷ்ணன், டத்தோ பெரியசாமி, டத்தோ சிவலிங்கம் ஆகியோரும், அதிகாரிகளான சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியத் தமிழர்கள், மலாய்த் தமிழர்கள் ஆகிய பலரும் பெரும் அளவில் கலந்துகொண்டனர்.
(நினைவுகள் நீளும்…)