முனைவர் வா.நேரு
உலக அளவில் எழுத்தறிவு நாள் (The World Literacy Day) என்று செப்டம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1965-இல் ஈரான் நாட்டில் உள்ள டெக்ரான் நகரில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது. அங்கு கல்லாமையைப் பற்றிக் கவலை கொண்டு, அதற்கென ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து கல்லாமையை உலக அளவில் நீக்கவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உலக அளவில் பேச வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதை யுனெஸ்கோ நிறுவனத்திற்கு அனுப்பி-யிருக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டு 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் உலக எழுத்தறிவு நாளாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, 1967-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
செப்டம்பர் 8 அன்று ஒவ்வொரு நாட்டிலும் கல்வி கற்றவர்கள் எத்தனை சதவிகிதம் பேர், அதில் ஆண்களில் கல்வி கற்றவர்கள் எத்தனை சதவிகிதம், பெண்களில் எத்தனை சதவிகிதம்? உலகிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற நாடு எது? குறைவான எழுத்தறிவு பெற்ற நாடு எது? போன்ற பல புள்ளி விவரங்கள் வெளியிடப்-படுகின்றன. எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அரசும் மற்ற அரசு சாரா நிறுவனங்களும் பேசும் நாளாக செப்டம்பர் -8 என்பது அமைகின்றது. இந்த ஆண்டு (2022) புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கல்வியறிவு சதவிகிதம் 77.7. இதில் ஆண்களில் கற்றவர்கள் சதவிகிதம் 84.7, பெண்களில் கற்றவர்கள் சதவிகிதம் 70.3, நகரங்களில் கற்றவர்களின் சதவிகிதம் 87.7, கிராமப் புறங்களில் கற்றவர்களின் சதவிகிதம் 73.5, அதிகமாகக் கற்றவர்கள் இருக்கும் மாநிலம் கேரளா(96.2), குறைவாகக் கற்றவர்கள் இருக்கும் மாநிலம் ஆந்திரப்பிரதேசம்(67.35) என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’’
என்றார் திருவள்ளுவர். கல்வி என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதைத் திருவள்ளுவர் ‘கல்வி’ என்னும் அதிகாரத்திலும் ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்திலும் மிகவும் வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம். ஆனால், அதற்குப் பின்னால் இடைப்பட்ட காலத்தில் பார்ப்-பனியத்தால் நம்முடைய கல்வி முடக்கப்-பட்டதும், சென்ற நூறு ஆண்டுகளில் நாம் பெற்ற கல்வியும், வாய்ப்பும், திராவிட இயக்கத்தின் கல்விக்கான முன்னெடுப்பும் நாம் அறிந்ததே. பார்ப்பனரல்லாதவர்களின் கல்வி சதவிகிதம் 1900இ-ல் 1 சதவிகிதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று தமிழ் நாட்டில் கல்வி சதவிகிதம் 87.9. இது எவ்வளவு பெரிய மாற்றம்!
யுனெஸ்கோ நிறுவனம் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று அறிவித்திருக்கிறது. கல்வி வாழ்க்கையை மாற்றுகிறது, உலகில் அமைதியை நிலைநாட்ட, வறுமையை ஒழிக்க, இயற்கையோடு இயைந்த வளர்ச்சியை அடைய கல்வி ஒன்றே வழி என்று யுனெஸ்கோ குறிப்பிடுகிறது. வெறுமனே ஒரு மொழியில் படிக்கவும் எழுதவும் தெரிந்தால் அவர்கள் கற்றவர்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், தந்தை பெரியார் நோக்கில் கற்றவர்கள் யார்? கற்பது எதற்காக என்று நாம் சிந்திக்க வேண்டும்.
“கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புத்தகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறி விடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர்களையும் தமிழ்ச் சங்கத்தில் படித்து வித்துவான் பரீட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில், அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது, அலமாரியில் உள்ள புத்தகங்களைப் போல், இவர்களும் தங்கள் மனத்தில் பல விஷயங்களைப் பதிய வைத்திருக்கும் ‘ஓர் நகரும் அலமாரி’ என்றுதான் சொல்லவேண்டும்.’’ (‘குடிஅரசு’ 27.7.1930) என்று குறிப்பிடுகின்றார்.
தந்தை பெரியாரின் சொல்லாடலைப் பாருங்கள். நகரும் அலமாரி என்று படித்தவரைக் குறிப்பிடுகின்றார். நகரும் அலமாரிகளால் சமூகத்திற்கான பயன் என்ன? என்னும் கேள்வி எழுகிறது. நான் ஒரு மாதத்தில் 100 புத்தகங்கள் படிக்கிறேன் என்று சொல்லும்போது, வெறுமனே ஒருவர் அவராகப் படித்துக் கொண்டிருப்பதனால், சமூகத்திற்கு ஏற்படும் நலன் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர் படிக்கும் படிப்பு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் வரும் புத்தகங்கள் பற்றிய சிந்தனைகள் போல மற்றவர்களுக்கும் பயன்படும்படி ஒருவரின் வாசிப்பு அனுபவம் அமையவேண்டும்.
“கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும் அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்’’ என்றார் தந்தை பெரியார். ஒருவருக்குக் கிடைக்கும் எழுத்தறிவு, அந்த எழுத்தறிவைக் கற்றுக்கொள்-பவருக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஏற்படுத்த வேண்டும். எழுத்தறிவு கிட்டுவதால், அவருக்குத் தன்மான உணர்ச்சி ஏற்பட-வேண்டும்.
ஒருவருக்கு எழுத்தறிவு கிட்டினால், அந்த எழுத்தறிவு மேன்மையான வாழ்க்கைக்கு, தொழில் செய்வதற்குப் பயன்படவேண்டும் என்பதுவும் தந்தை பெரியாரின் கருத்து.
புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ பிரையர் ஒருமுறை சொன்னார், “எழுதப் படிக்க மட்டும் கற்றுக் கொடுப்பது கல்வியல்ல. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக குழந்தைகளை மாற்றுவது கல்வியின் பணியல்ல.
மாறாக, ஒட்டுமொத்த சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், சமூக அநீதியைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதுமே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்!’’ என்றார் எனக் குறிப்பிடுவர்.
கணினியும் இணையமும் எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. எழுத்தறிவும் கணினி அறிவும் முக்கியமானவை. ஆனால், அதையும்-விட பகுத்தறிவும் உலக அறிவும் முக்கிய-மானவை. எழுத்தறிவு என்பது பகுத்தறிவு அடிப்படையில் அமைதல் வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என்னும் கேள்விகளை எழுத்தறிவு பெற்றவர்கள் கேட்கும் வண்ணம் எழுத்தறிவு அமைதல் வேண்டும். “உலக அறிவே முக்கியமானது. உலகத்துடன் பழகியவர்க்குத்-தான் பொது அறிவு வளர முடியும்’’ என்றார் தந்தை பெரியார். உலக அறிவை, பகுத்தறிவை வளர்ப்பது குறித்தும் எழுத்து அறிவு நாளில் நாம் சிந்திக்கும் நாளாக செப்டம்பர் -8 அமையட்டும்!