Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வரலாறு : வ.உ.சி.யும் ராஜகோபாலாச்சாரியும்

“தியாகம் என்பது, பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும், எவ்விதமான அவமானங்களையும் லட்சியம் செய்யாமல், பல இன்னல்களை ஏற்று தொண்டாற்றுவதும் ஆகும்’’ (‘விடுதலை’ 12.1.1966) _ என்று தியாகம் என்பதற்குத் தெளிவான சூத்திரத்தைச் சொல்லியுள்ளார், தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார். இந்த இலக்கணச் சூத்திரத்தைப் பொருத்திப் பார்த்தால், அது 5.9.1872 அன்று பிறந்தாள் காணும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு மிகவும் பொருந்தும்.

வெள்ளையனை எதிர்த்து, சுதேசிக் கப்பல் ஓடவிட்டு, இரட்டை ஆயுள் தண்டனை ஏற்றவர்; சிறையில் செக்கிழுத்தவர். 1908இல் கோவை சிறைக்கு அவர் எப்படி இழுத்துச் செல்லப்பட்டார்? கை, கால்களைச் சங்கிலியால் பிணைத்திருந்தார்கள். என்ன கொடுமையடா! சட்டம் படித்த சான்றாண்மை மிக்க தலைவருக்கு இந்தக் கதி!

அதே நேரத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் ஆகஸ்ட் கிளர்ச்சி போராட்டத்தில் அண்டர்கிரவுண்ட் ஆகி, கட்சியைவிட்டே வெளியேறிய சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) காந்தியாரின் சம்பந்தி ஆகி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆன நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். படிப்பில் என்ன குறைச்சலா! வழக்கறிஞர்; பல அரிய ஆய்வு நூல்களைத் தந்தவர்; தலைசிறந்த மேடைப் பேச்சாளர் _ எழுத்தாளர் _ தியாகத்தின் சிகரம் _ அத்தகையவரின் வாழ்வு வறுமைத் தீயில் பொசுங்கிப் போனதன் காரணமென்ன?

ஆச்சாரியார் _ “பிராமணாள்’’; வ.உ.சி. _ “சூத்திரன்’’ என்பதைத் தவிர, இந்த இரு பேர்களுக்கும் உள்ள இடைவெளி என்ன? ஆச்சாரியார், தாம் செய்த தியாகத்துக்காக (?) அவர் கோரியது என்ன தெரியுமா?
‘குங்குமம்’ (7.4.2000) இதழின் 67ஆம் பக்கத்தில் இதோ ஒரு செய்தி:
1973_74ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்து கோப்புகளைக் கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது: “ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான், நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுதும் தனக்கு வர வேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால், கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும், எனவே அரசு, கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்திட வேண்டும்’’ எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.

அதே நேரத்தில் வ.உ.சி. அவர்கள், தன்மகனுக்கு ஒரு வேலைவாய்ப்பு வேண்டி தந்தை பெரியார் அவர்களின் பரிந்துரை கேட்டுக் கடிதம் எழுதிய நிலைதான். காங்கிரசுக்காக சகல தியாகங்களும் செய்த வ.உ.சி. இறுதிக் காலத்தில் காங்கிரசில் இல்லை; தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத்திற்கு ஆதரவு காட்டினார்; சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டார்.

மாவட்ட துணை ஆட்சியராக இருந்த ஆஷ்துரைக்கு மிகவும் நெருக்கமானவர் ரங்கசாமி அய்யங்கார். அவருக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்தார் ஒரு தொழிலாளி. அய்யங்கார் வ.உ.சி.யைப் பற்றி அவதூறாகப் பேச, அவ்வளவு தான் அந்தத் தோழர் பாதி சவரம் செய்த நிலையிலேயே அவரை அப்படியே விட்டுவிட்டு கோபாவேசத்தோடு வெளியேறினார். அந்த அளவுக்குத் தொழிலாளர்கள் மத்தியில் மதிப்புப் பெற்றிருந்தவர் வ.உ.சி.!
வ.உ.சி.யின் பிறந்த நாளான 5.9.1872 அன்று அவர்தம் உண்மையான தியாகத்தைப் போற்றுவோமாக!