அறிவார்ந்த ஆட்சி நடத்தியவர் அறிஞர் அண்ணா!

2022 செப்டம்பர் 1-15-2022 மற்றவர்கள்

தந்தை பெரியார்

இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக் காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்குச் சாதிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன் பலன் அந்த அளவுக்கு ஏற்படவில்லையே! இனிமேல்தான் ஏற்பட வேண்டும் _ ஏற்படும் என்று ஆசைப்படுகிறேன். என் முயற்சி எதுவும் வீண் போகவில்லை. தரவேண்டிய அளவுக்குப் பலன் தரவில்லையே தவிர, வேறு ஒன்றுமில்லை. எனது அருமைத் தோழர்கள் என்னைப் பின்பற்ற முயற்சிக்-கிறார்கள். அவர்கள் அதில் வெற்றியும் அடையக்கூடும் என்று நாம் நம்புகிறோம்.

அண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்தவராவார். இந்நாட்டில் நமக்குச் சரித்திரம் தெரிய எவன் எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன், வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன் வேறு எவன் எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும், அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவருமே சாதித்ததில்லை. இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை. ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால், அது சாமானிய காரியமல்ல; பிரம்மாண்டமான சாதனையாகும்! நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும். அண்ணா செய்த காரியம் இதற்கு முன்னால் ஆண்டவர்கள் பலரும் செய்ததற்கு மாறான காரியத்தை அல்லவா அண்ணா செய்தார்கள்!
சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள். அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள்தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால், இல்லையே!
அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்-தானே அவர்கள் செய்தார்கள்! மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப்பட்டது! மூவேந்தர்-கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்-கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள். பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாகக் கொண்டு இருந்தனர்.

பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலி-யாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்-தான் ஆட்சி பயன்பட்டதே தவிர, மனுஷன் மனுஷனாக வாழுகிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஓர் ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்-தாலும் ஒழித்திருப்பார்களே! முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்-கள் என்றாலும், அவர்களும், பழைய ராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், சம்பிரதாயம் -இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக்-காரன் சில மாற்றங்களைச் செய்ய ஆரம்பத்தில் முன்வந்தான் என்றாலும், மாற்றவிடாமல் மிரட்டி, சரிப்படுத்திக் கொண்டார்கள். அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம்தானே இவற்றில் துணிந்து கை வைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறிவாளர் ஆட்சியாக உள்ளது.

அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை, சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப்பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தைச் சின்னா பின்னப்படுத்தி அமைப்பு ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவை முன் வரவில்லையே! இந்த நிலையில் இருந்த ஆட்சியை திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையை புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்கினார். என்னைப் போன்றவர்கள்கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஓர் ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே! அண்ணா ஒருவர்தான் இதைச் சாதித்தார். கடவுள், மதம், ஜாதி இவை-களை ஒழித்து அந்தக் கொள்கையின் பேரால் ஓர் ஆட்சியை- _ பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.

தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால், அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்? தி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழியவேண்டும்; மதம் ஒழிய வேண்டும்; காங்கிரஸ் ஒழிய வேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் என்பது-தானே அதன் கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல்லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண்டாக்கிக் காட்டிவிட்டாரே! அண்ணா அவர்கள் மத்தியில் காலமானார் என்றாலும் இன்னமும் அந்தக் கொள்கையைக் கொண்ட ஆட்சிதானே நிலையாக இருந்து அதற்கான காரியத்தைச் செய்கிறது? பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன் என்று! அதற்குப் பொருள் என்ன?

கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்க-வில்லை – அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பதுதானே! ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என் பதைத்தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திருமணங்-களைச் செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார். இது எதைக் காட்டுகிறது? கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை. ஓர் ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே! இதன் தத்துவம் என்ன? கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், பார்ப்பான் எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே!
கல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்ட் எம்.பி. கேட்கிறார், “எங்களால் முடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது’’ என்று. இம்மாதிரி இந்தியாவில் உள்ள பலரும் ஆச்சரியப்படும்படி அல்லவா அண்ணா அவர்கள் காரியங்களைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்! அண்ணா ஜெயித்தவுடன் நான் இது பார்ப்பான் ஆட்சியாகத்தான் இருக்கும் முன்னேற்றக் கழக ஆட்சியாக இருக்காது. பார்ப்பான் காலடியில் உள்ள ஆட்சியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், எழுதினேன்.

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பார்ப்-பனரும் வெகுபாடுபட்டார்கள். பார்ப்பனத் தலைவர் ராஜாஜி அவர்களும் அதற்கு ரொம்ப பாடுபட்டார். தி.மு.க. ராமசாமியிடம் இருந்த கட்சி என்றாலும், பெருங்காயம் இருந்த டப்பா, ஆனால், இப்போது காலி டப்பா, நான் வழித்து எறிந்து விட்டேன் என்று கூறினார். அண்ணா இவற்றை ஏதும் மறுக்கவே இல்லை. இந்த இரண்டையும் பார்த்த நான் இதற்காகவே எதிர்த்தேன். அண்ணா வெற்றி பெற்றவுடன் என்னை வந்து பார்த்தார். எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றார். நானும் ஆகட்டும் என்றேன். பார்ப்பனரும் ராஜாஜியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை சபாநாயகர் தேர்தல் முதற்கொண்டே காட்ட ஆரம்பித்தனர்.
ஆனாலும், அண்ணா அவர்கள் அவரது கொள்கைகளை அமல்படுத்தும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். அதன் காரணமாக மக்கள் ஆதரவும் அதற்குப் பெருக ஆரம்பித்ததுடன், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது. மற்ற ஆட்சிகளைப் பார்க்கிறோமே _ மரியாதை கெட்டு, மானம்-கெட்டு, ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்வது, கட்சி விட்டு கட்சி மாறுவது, கொலை, கொள்ளை சர்வசாதாரணம் என்றும் தானே ஆட்சிகள் எல்லாம் நடைபெறுகிறது? மற்ற ஆட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது எவருக்கும் சுலபமாக விளங்கும்.
1.11.1970 அன்று பம்பாயில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து… (‘விடுதலை’- 12.11.1970)