அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (299)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் செப்டம்பர் 1-15-2022

தென்மண்டல
தி.க.மகளிர் அணி மாநாடு
கி.வீரமணி

7.3.2000 அன்று நான் லண்டன் சென்றடைந்து, பி.பி.சி.க்கு சிறப்புப் பேட்டி அளித்தேன். பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் பேட்டி அளித்தேன். பின் அங்கிருந்து புறப்பட்டு புதன் விடியற்காலை 8.3.2000 அன்று 2:00 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தேன்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர்க்கு வரவேற்பு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளை சார்பில் 9.3.2000 அன்று இரவு 7:00 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில், செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை நிலையமான “பாலன் இல்லத்தில்’’ மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஆர்.நல்லகண்ணு வரவேற்பு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு, “இந்தியாவும் சீனாவும் கலாச்சார ரீதியாக நட்பு கொண்டுள்ளன. இரண்டு அண்டை நாடுகளும் எவ்வித பிணக்குகளும் இல்லாமல் தொடர்ந்து நட்புடன் நீடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டேன். சீனக் குழுவினர்க்கு தந்தை பெரியார் அவர்களின் ஆங்கில நூல்களை அன்பளிப்பாக வழங்கினேன். இந்நிகழ்வில் கழக உதவிப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், கே.டி.கே.தங்கமணி மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம் அவர்களின் துணைவியாரும் மாநில மகளிரணி அமைப்புச் செயலாளருமான சுயமரியாதைச் சுடரொளி இராசலட்சுமி மணியம் அம்மையாரின் நினைவிடக் கல்வெட்டையும், அவரின் படத்தையும் 11.3.2000 அன்று சனிக்கிழமை காலை 11:00 மணியளவில் திருவாரூர் மல்லிகா திருமண அரங்கத்தில் திறந்து வைத்து, அம்மையாரின் தொண்டுக்கு வீரவணக்கம் செலுத்தி இரங்கலுரையாற்றினேன்.
சோழங்கநல்லூரில் செயல்படும் பெரியார் மருத்துவமனையில், நவீன கருவிகள் வசதி கொண்ட அறுவை சிகிச்சைக் கூடத்துக்கு, “சுயமரியாதைச் சுடரொளி இராசலட்சுமி மணியம் நினைவு மகப்பேறு அறுவைச் சிகிச்சைக் கூடம்’’ என்று பெயர் சூட்டப்படும் என்றும்; வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி வளாகத்தில், அம்மையாரின் பெயரில் பூங்காவும் அமைக்கப்படும் என்றும்; அம்மையார் அவர்கள் மறைந்த நாளில் ஒவ்வோர் ஆண்டும் அவர்களின் நினை-விடத்தில், “இராசலெட்சுமி மணியம் நினைவு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை’’ இளைஞர்களுக்காக நடத்தப்படும் என்றும் அறிவித்தேன்.

அன்று மாலை 6:00 மணியளவில், தஞ்சை _ வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கிற்கு கனடா அரசின் முதல் சர்வதேச விருது கிடைத்தமைக்காக, கல்லூரித் தலைவர் என்கிற முறையில் எனக்கு, வல்லம் _ பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், அனைத்துக் கட்சிகளின் சார்பில் பாராட்டு நிகழ்வு வெகு உற்சாகமாக நடந்தது. முதல் நிகழ்ச்சியாக, கனடா நாட்டில் உள்ள ஒட்டாவா நகரில் நடைபெற்ற விழாவை கணினி மூலம் திரையில் காட்டி வந்திருந்த விருந்தினருக்கு பேராசிரியை உ.பர்வீன் விளக்கிக் கூறினார். இறுதியில் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரை நிகழ்த்தினேன்.

மறுநாள் 12.3.2000 ஞாயிறன்று அன்று காலை 10:00 மணிக்கு காவேரிப்பட்டணம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.தியாகராசன் _ விஜயகுமாரி ஆகியோரின் செல்வன் தி.அன்புச்செழியன், வடஆர்க்காடு மாவட்டம் தாதனவலசை வீ.கோவிந்தசாமி _ கோ.மாலதி ஆகியோரின் செல்வி வீ.கோ.பொற்கொடி ஆகியோரின் இணை ஏற்பு விழா காவேரிப்பட்டணம் பாலாஜி திருமண அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். இவ்விழாவில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் பங்கேற்று மணமக்களைப் பாராட்டி உரையாற்றினர்.
அடுத்து 11:00 மணியளவில் காவேரிப்-பட்டணம் கொசமேடு இந்திரா நகரில் கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணித் தலைவர் கோ.திராவிடமணி அவர்களால் புதிதாகக் கட்டப்பட்ட ‘தந்தை பெரியார் குடிலை’ திறந்து வைத்தேன். இவ்விழாவில் காவேரிப்பட்டணம் கழகத் தோழர் மாணிக்கம்_காளியம்மாள் ஆகியோரின் ஆண் மகவுக்கு அறிவுமணி என்று பெயர் சூட்டினேன்.

திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ஏ.டி.கோபால் அவர்களுக்குப் பவள விழாவும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு விழாவும் 13.3.2000 அன்று மாலை 4:00 மணியளவில் திருப்பத்தூர் தனம் நாராயணசாமி திருமண அரங்கத்தில் ‘சுயமரியாதைச் சுடரொளி’ மறைந்த ஏ.டி.ஜி.சந்திரா அம்மையார் நினைவரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை-யொட்டி புகைப்படக் கண்காட்சி, பட்டிமன்றம், பாராட்டரங்கம், பவள விழா நாயகர் ஏ.டி.கோபால் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் விழாவில் பங்கேற்று உரையாற்றினர். பவள விழா நாயகர் ஏ.டி.கோபால் தனக்கு அளிக்கப்பட்ட எடைக்கு எடை நாணயத் தொகையான ரூபாய் பதினைந்தாயிரத்தை, தில்லி பெரியார் மய்ய கட்டட நிதி வளர்ச்சிக்காக பலத்த கரவொலிக் கிடையே என்னிடம் வழங்குவதாக அறிவித்தார். நிறைவாக நான் சிறப்புரையாற்றினேன்.

16.3.2000 அன்று தென்மண்டல தி.க. மகளிரணி மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை சென்றடைந்தேன். இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்றேன்.
அன்று காலை 10:00 மணிக்கு மாநாடு தொடங்கியது. முதலில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்தேன். பின், பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசைப்பாட்டு கொள்கை முழக்கமாக ஒலித்தது. மகளிர் அணியினர் ஏராளமாய்க் குழுமியிருந்தனர். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுச் சட்டத்தை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. அப்படி நிறைவேற்றும்போது கண்டிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்க்கான உள் ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2. உடன்கட்டை ஏற்றுதலை நியாயப்-படுத்தும் போக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைதூக்கி வருவது நாட்டை மீண்டும் காட்டுமிராண்டிக் காலத்துக்குத் தள்ளும் முயற்சியாகும். இந்துத்துவா கொள்கையை உடைய பா.ஜ.க. ஆட்சி அங்கு இருந்து வருவதால், இந்தப் போக்கு அங்கு தலையெடுக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அனைத்து முற்போக்குச் சக்திகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

3. விதவைப் பெண்களின் அவல நிலையை வெளிப்படுத்தி, சமுதாயத்தில ஒரு விழிப்-புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் தயாரிக்கப்படும் ‘வாட்டர்’ திரைப்படத்தை உ.பி. மாநிலம் வாரணாசியில் எடுக்கவிடாமல் வன்முறை மூலம் தடை செய்ய வைத்த சங் பரிவார்க் கும்பலின் செயலை இம்மாநாடு கண்டிக்கிறது.
மத்திய அரசின் அனுமதி பெற்று எடுக்கப்பட்ட அந்தப் படப்பிடிப்புக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக இந்துத்துவா கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று சட்டவிரோதமாக, நியாய விரோதமாக ஆணை பிறப்பித்த உத்தரப்பிரதேச ஆட்சியின் செயலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.அதேநேரத்தில், ‘வாட்டர்’ திரைப்படத்தை எடுக்க தங்கள் மாநிலத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த மேற்கு வங்க, மத்தியப் பிரதேச மாநில அரசுகளை இம்மாநாடு பாராட்டுகிறது.

4. இந்துத்துவா என்பது பெண்களின் விடுதலைக்கும், முன்னேற்றத்துக்கும் அடிப்படையில் தடை விதிக்கும் ஒரு பாசிசத் தத்துவமாகும். பெண் விடுதலையை விரும்பும் எவரும் இந்துத்துவாவை எதிர்ப்பதில் முன் வரிசைக்கு வந்து போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

5. குழந்தைகளுக்குப் பெயரிடும்போது ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ உணர்வை ஏற்படுத்தக்-கூடிய தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும், தாய், தந்தை இருவரின் தலைப்-பெழுத்து (INITIAL) சேர்த்தே பதிவு செய்ய வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்-கொள்கிறது.

6. கனடா அரசின் நிதி உதவியோடு கனடா அரசால் நடத்தப்படும் நிறுவனமான CIDA என்னும் கல்வி வளர்ச்சி நிறுவனம் (CANADIAN INTERNATIONAL DEVELOPMENT AGENCY) பெரியார் _ மணியம்மை கல்வி அறப் பணிக் கழகத்தின் சார்பில் தஞ்சை _ வல்லத்தில் 1980 முதல் இயங்கி வரும் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியின் சாதனையைப் பாராட்டி, பன்னாட்டு விருதினை அளித்துச் சிறப்பித்திருப்பது _ பெரியார் கல்வி நிறுவனத்திற்குக் கிடைத்த சிறப்பு என்பதோடு, பெண்களுக்காக நடைபெறும் கல்வி நிறுவனம் என்கிற முறையில், பெண்கள் முன்னேற்றம் என்கின்ற கண்ணோட்டத்தில், போற்றி வரவேற்கத் தகுந்த சாதனை மைல் கல் என்று இம்மகளிர் மாநாடு பாராட்டி மகிழ்கிறது. இந்தச் சாதனைக்குக் காரணமான கல்லூரியின் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களையும் கல்லூரி நிருவாகத்தினரையும் இம்மாநாடு பாராட்டுகிறது.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின் நிறைவாக, நான் மகளிர் உரிமை சார்ந்து தந்தை பெரியாரின் பணிகளை விளக்கி, அதனால் கிடைத்த வெற்றிகள் குறித்து விரிவாகச் சிறப்புரையாற்றினேன்.

மறுநாள், மதுரை பொ.பிச்சை _ முத்துலட்சுமி ஆகியோரின் செல்வன் பி.நாகராசன், மதுரை சி.தா.தெட்சிணாமூர்த்தி _ முத்துலெட்சுமி ஆகியோரின் செல்வி தெ.பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை காலை 10:00 மணியளவில் மதுரை கோட்ஸ் முத்தையா மன்றத்தில் தலைமையேற்று நடத்திவைத்தேன்.
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி நினைவு நூற்றாண்டையொட்டி, தஞ்சை நகரில் தளபதி அழகிரிசாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைக்க, 20.3.2000 அன்று காலை 11:00 மணிக்கு தஞ்சை ஜூபிடர் தியேட்டர் அருகிலிருந்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் பேரணி புறப்பட்டது. இப்பேரணியில் திறந்த ஜீப்பில் நானும், மேனாள் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களும் சென்றோம். ஊர்வலம் சரியாக மதியம் 12:00 மணிக்கு தஞ்சையில் உள்ள ராஜகோரி இடுகாட்டை அடைந்தது. அங்குள்ள பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி நினைவிடத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தினரிடையே மலர் வளையங்கள் வைத்து வீரவணக்கம் செலுத்தினோம்.
பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி நூற்றாண்டு நினைவு விழாவைப் பற்றியும், தன்னலங் கருதாது சமுதாயத்திற்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட கருப்பு மெழுகு வத்தியான பட்டுக்கோட்டை அழகிரியின் பொதுநலத் தொண்டுகளை விளக்கியும் உரையாற்றினேன்.

திராவிடர் கழக அன்றைய உதவிப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் _ வெற்றிச்செல்வி தம்பதியினரின் இளைய மகள் அருள்மதி எம்.எஸ்ஸி., அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் பே.சுப்பையா, அசுவதி ஆகியோரின் மகன் கற்பகவிநாயகம் பி.ஈ., அவர்களுக்கும் இணையேற்பு விழா 25.3.2000 அன்று சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு சென்னை தர்மப்பிரகாஷ் திருமணக் கூடத்தில் எனது தலைமையில் வெகு சிறப்புடன் நடைபெற்றது. மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மணமகளின் தந்தை கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று உரையாற்றினார்.

இம்மணவிழா ஜாதி மறுப்புத் திருமணம், தாலியில்லாத் திருமணம். சனிக்கிழமை மாலை நேரத்தில் நடைபெற்ற திருமணம் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். பண்ருட்டி ச.இராமச்சந்திரன், பேராசிரியர் அ.இறையன், ‘தினமணி’ பத்திரிகை ஆசிரியர் ஆர்.எம்.டி.சம்பந்தம், கழகத் துணைப் பொதுச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி, உரத்தநாடு இரா.குணசேகரன், கழக சட்டத் துறைச் செயலாளர் வழக்குரைஞர் த.வீரசேகரன், கழக மகளிரணிச் செயலாளர் க.பார்வதி, மாநில மகளிரணி அமைப்பாளர் இராமலக்குமி சண்முகநாதன், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் சிறுநீரகத்துறை நிபுணர் டாக்டர் ராஜசேகரன், பிரபல எழுத்தாளர் சின்னக்குத்தூசி தியாகராஜன், திருச்சி மாவட்ட முன்னாள் கலெக்டர் கிருஷ்ணசாமி அய்.ஏ.எஸ்., தமிழர் குடியரசுக் கட்சித் தலைவர் அய்.தீனன், மாநில திராவிடர் கழக தொழிலாளரணி தலைவர் ஆவடி இரா.திருநாவுக்கரசு, மகப்பேறு இயல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் பூ.பழனியப்பன், சென்னை மருத்துவமனை நிகர் நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வி.பி.நாராயணன், ‘சங்கொலி’ ஆசிரியர் க.திருநாவுக்கரசு உள்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை மாவட்ட துணைச் செயலாளர் மன்னார்குடி வைத்தியநாதன், வை.ராஜலட்சுமி ஆகியோரின் செல்வன் வை.கவுதமன், உரத்தநாடு வட்டம் சின்னமாங்குடி நடராசன் _ நீலாவதி ஆகியோரின் செல்வி ந.கலையரசி ஆகியோரின் இணையேற்பு விழாவினை 9.4..2000 அன்று 6:00 மணியளவில் மன்னை என்.எஸ்.டி திருமண அரங்கத்தில் நடத்தி வைத்தேன்.
விருதுநகர் மாவட்ட துணைத் தலைவர் சிவகாசி வானவில் மணி_ வெற்றிச்செல்வி ஆகியோரால் புதிதாகக் கட்டப்பட்ட ‘வானவில்’ இல்லத் திறப்பு விழாவினை 13.4.2000 அன்று மாலை 5:00 மணியளவில் சிவகாசி நகர் சேர்மன் அருணாசலம் தெருவில் நடத்திவைத்து உரையாற்றினேன்.
15.4.2000 அன்று மாலை 6:00 மணியளவில் மன்னார்குடி சாரதி அரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் செயல்வீரர் பி.வெங்கடேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பாராட்டினேன்.

அய்யம்பேட்டையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் துரை.சக்கரவர்த்தி அவர்களின் தாயார் படத்தை 17.4.2000 அன்று திறந்துவைத்து இரங்கலுரையாற்றினேன்.
20.4.2000 அன்று அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பெரியார் திடலுக்கு வருகை தந்தார். நான் அவரை வரவேற்று பெரியார் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.
23.4.2000 அன்று புதுதில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் சார்பில், கல்வித் துறையில் கனடா நாட்டின் சர்வதேச விருது பெற்று சிறந்த சாதனை படைத்த பெரியார் _ மணியம்மை கல்விஅறப்பணிக் கழகத் தலைவர் என்கிற முறையில், ‘பாரத் ஜோதி’ விருது பெங்களூரில் எனக்கு வழங்கப்பட்டது. இதற்கான விழா 23.4.2000 அன்று மாலை 4:00 மணியளவில் பெங்களூர் நகரில் ஹோட்டல் ஏட்ரியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பேராசிரியர் எம்.எச்.ஷெட்டி வரவேற்று உரையாற்றினார் முடிவில் டாக்டர் பூபேந்தர் சிங் நன்றி கூறினார்.

26,27.04.2000 ஆகிய இரு தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழகம் தத்துவத் துறை சார்பில், ‘சமயமும்_பகுத்தறிவும், பிரம்ம ஞானமும் _ பகுத்தறிவும்’ என்ற தலைப்புகளில் ஆய்வுச் சொற்பொழிவு ஆற்றினேன்.
தேசிய முன்னேற்ற முன்னணி (NDF) நடத்திய இடஒதுக்கீட்டுப் பேரணியின் நிறைவு நாளன்று உரையாற்றுவதற்காக, விமானம் மூலம் 5.5.2000 காலை 11:00 மணியளவில் திருவனந்தபுரம் சென்று சேர்ந்தேன். விமான நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்ட தி.-க. தலைவர் சங்கரநாராயணன், ழிஞிதி பிரதிநிதிகள் தோழர்கள் அப்துல்லா, ஷாபுல்லா, மகிம், கழக உதவிப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், முருகேசன், திருச்சி பி.எஸ்.மணியம் மற்றும் பெரியார் சமூகக் காப்பு தலைமைப் பயிற்றுநர் நாத்திகன் மற்றும் பலர் வரவேற்று ஓட்டல் ஃபோர்ட்வியூவுக்கு அழைத்துச் சென்றார்கள். மாலை 5:30 மணியளவில் பேரணி நடைபெற்றது. பேரணியில் முதலில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீருடையில் அணிவகுத்து வந்தது சிறப்புக்குரியதாக இருந்தது. பேரணியில் 10,000க்கும் மேற்பட்டோர் அணிவகுத்து, இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஒலி முழக்கங்களை விண்அதிர எழுப்பினார்கள்.
பின்னர், நான் விழாவைத் தொடங்கி வைத்து சரியாக இரவு 8:15 மணிக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து பேச ஆரம்பித்து, 8:45 மணிக்கு முடித்தேன். எனது உரையில், “இந்த மலையாள மண்ணில் உள்ள வைக்கத்தில்தான் ஆடு, மாடு, பன்றிகள் போகக் கூடிய வீதிகளில் மனிதன் போக முடியாத நிலையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள்தான் போராடி வெற்றி கண்டார்கள்’’ என்று குறிப்பிட்டதும் அனைவரும் கையொலித்துப் பெருமைப்-படுத்தினர்.

சுயமரியாதை இயக்கப் பவள விழாவை யொட்டி ஜாதி மதமற்ற சமுதாயம் படைக்க, மூட நம்பிக்கைகளை முற்றாக ஒழிக்க, மனித நேயம் மண்ணில் தழைக்க, உலகத் தலைவர் தந்தை பெரியாரின் தத்துவத்தை தரணி யெங்கும் பறைசாற்றும் தமிழர் தலைவர் தலைமை யேற்று வீறுநடை போடும் ‘பெரியார் சமூகக் காப்பணியின் இராணுவ அணிவகுப்பு’ 29.-4.-2000 அன்று மாலை 4 மணியளவில் உரத்தநாடு தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து வெகு எழுச்சியுடன் நகரின் பல்வேறு பகுதிகளை கடந்து அண்ணா சிலை அருகே முடிவடைந்தது. நான் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட தனி மேடையில் பெரியார் சமூகக் காப்பணியின் முழுச் சீருடை அணிந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டேன்.
இப்பெரியார் சமூகக் காப்பணி இராணு அணி வகுப்பில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் கே.வி. அழகிரிசாமி அணி, புரட்சிக்கவிஞர் அணி, அன்னை மணி யம்மையார் அணி, அன்னை நாகம்மையார் அணி, ‘சுயமரியாதைச் சுடரொளி கா.மா. குப்புசாமி அணி, சுயமரியாதைச் சுடரொளி’ மன்னை ஆர்.பி. சாரங்கன் அணி என பல் வேறு அணியாக வீரர்கள் வீறுநடை போட்டு வந்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய முன்னேற்ற முன்னணி சார்பில் (ழிஞிதி) 5.5.2000 அன்று நடைபெற்ற இடஒதுக்கீட்டுப் பேரணி முடிவில் நானும் முன்னணித் தலைவர் இ.எம்.அப்துல்ரகுமான், ஷாபுபுல்லா போன்றோரும் கலந்துகொண்டோம். இறுதியில் இடஒதுக்கீடு குறித்தும், கிரிமிலேயர் குறித்தும் உரையாற்றினோம்.
தமிழ்நாடு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடுவதைக் கண்டித்து 6.5.2000 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்நிலை இனி தொடராமலிருக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினேன். கச்சத்தீவு வழக்கை விரைவுபடுத்துவோம் என்றும், தமிழ்நாடு மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு தேவை எனவும் உரையாற்றினேன்.
பூதலூர் பெரியார் பெருந்தொண்டர் புலவர் ரெ.வைத்தியநாதன் அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கப் பிரமுகர் வழக்குரைஞர் ஆர்.வி.சித்தார்த்தன் ஆகியோரால் கட்டப்பட்ட ‘யசோதை வைத்தியநாதன் குடில்’ 7.5.2000 அன்று காலை 10:00 மணியளவில் திறந்து வைத்து உரையாற்றினேன். இந்நிகழ்வில் பெரியார் படத்தை ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் கா.ஜெகவீரபாண்டியனும் மேனாள் முதல்வர் எம்.ஜி.ஆர். படத்தினை அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் க.சங்கரதாஸும், புரட்சியாளர் எம்.ஆறுமுகசாமி படத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரனும் திறந்துவைத்தனர்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரும் போராட்டம் 10.5.2000 அன்று காலை தமிழ்நாடெங்கும் 28 கோயில்கள் முன் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். திருவாரூரில் நான் பங்கேற்று, அறப்போராட்டத்தில், 5000 பேர் கலந்துகொண்டு ஒலி முழக்கம் செய்தனர். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து காலை 9:00 மணியளவில் நாகை மாவட்ட மகளிரணித் தலைவர் சுப்புலெக்குமிபதி தலைமையில் எனது முன்னிலையில் மாபெரும் பேரணி வெகு எழுச்சியோடு தொடங்கியது. இப்பேரணி பழைய பேருந்து நிலையம், கடைவீதி, பானகல் சாலை, தெற்கு வீதி வழியாக அறப்போராட்டம் நடைபெறுகின்ற திருவாரூர் தியாகராசர் கோவிலைச் சென்றடைந்தது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கக் கோரி வேண்டுகோள் அறப்போராட்டத்திற்கு தலைமையேற்று, மாவட்ட மகளிரணித் தலைவர் சுப்புலெக்குமிபதி தலைமையுரை-யாற்றினார். முன்னிலையேற்று திருவாரூர் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.மணியம் உரையாற்றினார். இறுதியில், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கக் கோரி வேண்டுகோள் அறப்போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி நிறைவுரையாற்றினேன். முடிவில், நகர கழகத் தலைவர் மோகன் நன்றி கூறினார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டி சென்னை மயிலை கபாலீசுவரர் கோயில் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் அறப்போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தை ஒட்டி மாலை 7:30 மணி முதற்கொண்டே திராவிடர் கழகத் தோழர்கள், கழக மகளிரணியினர் சாரை, சாரையாக சென்னை கபாலீசுவரர் கோயில் குளத்தின் முன்பு கூடினர்.
சரியாக 8:15 மணிக்கு மயிலை லஸ் முனையிலிருந்து இராமகிருஷ்ணா சாலை வடக்கு மாடத் தெரு, தெற்கு மாடத் தெரு, கிழக்கு மாடத் தெரு வழியாக திராவிடர் கழகத் தோழர்கள், கழகக் கொடிகளை கம்பீரமாகக் கைகளில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட தேரடித் தெருவில் குழுமினர். அங்கு நடைபெற்ற அறப்போராட்ட விளக்கக் கூட்டத்தின் நோக்கங்களைப் பற்றி கழக உதவிப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை நிகழ்த்தினார்.
(நினைவுகள் நீளும்…)