சுயமரியாதைச் சுடரொளி: சாஸ்திரங்களைத் தோலுரித்த சாமி கைவல்யம்!

2022 ஆகஸ்ட் 16-31 2022 மற்றவர்கள்

வை.கலையரசன்

தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கி வைதிகத்தின் தூண்களாக விளங்கிய புராண இதிகாசங்களைத் தோலுரித்து அறிவுத் தீயைக் கொளுத்தினார். புராண இதிகாசங்-களில் அதுவரை புனிதமாக, திருவிளை-யாடலாக, கன்னத்தில் போட்டுக் கொண்டு கேட்கப்பட்ட கதைகள் விமர்சனங்களுக்கு உள்ளாயின. அதே கதைகள் அயோக்கியத்தனம், ஆபாசம், மோசடி என்று பேசப்பட்டன.
இத்தகைய பணியில் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய அய்யாவின் அறிவுப்படைக்கு முன் நின்றவர்களில் ஒருவர் சாமி கைவல்யம். சாமி கைவல்யம் 22.8.1877 அன்று கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பொன்னுசாமி. இவருடைய முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள். இவர் கள்ளிக்கோட்டை, பாலக்காடு, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் படித்துவிட்டு, பள்ளியில் இருந்து விலகி கடைசியாக கோவைப் பகுதிக்குச் சென்றார். பின்னர் இந்தியா முழுவதும் சாமியாராக சுற்றித் திரிந்தார். ஒருமுறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. ‘கைவல்யம்’ என்னும் வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் ‘கைவல்யம்’ என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.
அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும் நாடு பூராவும் சுற்றித் திரிவார்.
1903ஆம் ஆண்டு தந்தை பெரியாருடன் ஏற்பட்ட முதல் சந்திப்பு தர்க்கம் காரணமாக அதிருப்தியாய் போய் விட்டது. ஆனாலும், இருவருக்கும் ஜாதி, மத சாஸ்திரங்களில் இருந்த கருத்து ஒற்றுமையால் இருவருக்கும் நட்பு மலர்ந்தது.

ஒரு முறை ஏனம்பள்ளி ஜமீன்தார் வீட்டுக் கல்யாணத்திற்கு தந்தை பெரியாருடன் சென்றிருந்தபோது அங்கு நடந்ததை தந்தை பெரியார் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்:
“ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக்கும்போது, சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது. அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப்பானைப் பார்த்து. “என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் தொட்டு எடுத்து விட்டாய்’’ என்று கோபமாகப் பேசினான். உடனே, கைவல்ய சுவாமியார் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் எழுந்து எச்சில் கையாலேயே அந்தப் பார்ப்பனனை ஓர் அறை செவுளில் அறைந்து, “யாரடா சூத்திரன்?’’ என்று கேட்டார். அப்போது ஒரு சிறு கலகமாகிப் பிறகு, அந்தப் பார்ப்பனன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இந்த மாதிரி இன்னும் பல சம்பவங்களில் நாங்கள் கலந்திருந்ததுண்டு.

மற்றும், சுவாமியாரவர்கள் எப்போது பார்த்தாலும் தேர்த் திருவிழா, கோயில் செலவு, விக்கிரக பூசை, சமுதாய வாழ்க்கையில் உள்ள பல சடங்குகள் ஆகிய இவையே இந்த நாட்டுக்குப் பெரும் க்ஷயரோகம் போன்ற வியாதி என்று சதா சொல்லி வருவார். பார்ப்பனியச் சடங்குகளின் புரட்டுகளைச் சிறிதும் தாட்சண்யமில்லாமல் எப்பேர்ப் பட்டவர்களுடனும் தர்க்கரீதியாய் எடுத்துச் சொல்லிக் கண்டித்து வருவார். இவ்வளவு செய்தும் இவருக்குப் பொதுமக்களிடம் மதிப்பும், பக்தியும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவர் தனக்கென்று இடுப்பு வேஷ்டியைத் தவிர, சாப்பாட்டைத் தவிர, வேறு ஒரு சாதனத்தையும் விரும்பியதுமில்லை; வைத்துக் கொண்டிருந்ததுமில்லை. ஆதலால், அவரைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்ல முடியாமற் போயிற்று’’ என்கிறார்.

‘குடிஅரசு’ ஏட்டில் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.
கைவல்யம் வருகிறார் என்றால், சாமியார்கள் ஆட்டம் கண்டு போய்விடுவார்-களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்துவிடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற்றலுக்குச் சொந்தக்காரர் அவர்!ஸீ