கேள்வி : எந்த ஒரு அரசும் நிலையாக இருக்க வேண்டும் என்பதாலேயோ, இருந்து விடுவதாலேயோ, மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமானால், அந்த அரசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?
– அ. விசயபாண்டியன், விருதுநகர்
பதில் : தந்தை பெரியார் அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே குறிப்பிட்டர்; நிலையான அரசைவிட நீதியான அரசே முக்கியம் என்றர்; நிலையாக இருக்கவேண்டும் என்றால் லிபியாவில் கடாபிகூட நிலையான ஆட்சி நடத்தினார்; அது நீதியான ஆட்சியாக அமையாததால்தானே எதிர்ப்பு, மக்கள் புரட்சி எல்லாம் ஏற்பட்டன.
கேள்வி : இஸ்லாமிய நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து புரட்சி நிகழ்கிறதே? – கே.ஆர்.ரவீந்திரன், சென்னை – 1
பதில் : மேற்காட்டிய பதிலிலேயே இதற்கு விடை அமைந்துள்ளதே!
கேள்வி : கலைஞர் அரசின் நலத்திட்டங்களின் பலன்களை அனுபவித்துக் கொண்டே, அதை எப்படியாவது ஒழித்துவிட சில தமிழர்களும், துடிக்கிறார்களே அது ஏன்? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : இராமாயண கால முதற்கொண்டு விபீடணர்களும், சுக்ரீவர்களும், அனுமார்களும் இருந்திருக்கின்றார்களே. அதன் தொடர்ச்சிதான் இது. அப்பாவி மக்கள் ஏமாறுவதும் இதில் சேருகின்றது.
கேள்வி : குடிகாரன் என்று விமர்சித்த ஜெயுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்தது எதைக் காட்டுகிறது? – க. உமாபதி, சங்கரன்கோவில்
பதில் : புரட்சிக் கவிஞர் பாடியதுபோல, இங்கு யாருக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை என்பதுதான் பதில். ஆசை வெட்கம் அறியாதே!
கேள்வி : என்னதான் நல்லாட்சி நடத்தினாலும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினாலும் சில பத்திரிகைகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும் அவாள் பக்கம் சாய்வதேன்? – பா. முத்துச்சாமி, ஈரோடு
பதில் : அவாளுக்கு சூத்திர, பஞ்சம, சமூகநீதி ஆட்சி நடந்தால் அதைச் சகிக்கமுடியுமா? சமூகப் புரட்சி கண்டு மருட்சி. தங்கள் ஆதிக்க வேர் அறுபடுமோ என்ற அச்சம்தானே காரணம்.
கேள்வி : தமிழக மக்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது என்ன நினைக்க வேண்டும்? – அ. கணேசன், அம்பத்தூர்.
பதில் : நல்லாட்சியாக நடந்த கலைஞர் ஆட்சி தொடர வேண்டாமா என்ற நன்றி உணர்வுடன் உள்ளே சென்று வாக்களிக்கவேண்டும்.
கேள்வி : அய்யோ பாவம் வை.கோ என்று சொல்லத் தெரிந்த தினமலர் (தலைப்புச் செய்தி 15.3.2011) அய்யோ பாவம் வை.கோ.விற்கு அவமானம் என்று சொல்லவில்லையே ஏன்? – முசிறி மலர்மன்னன்
பதில் : அய்யோ பாவம், பூணூல் மலர் ஏடு!
கேள்வி : தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் வரம்பு மீறியதாகத் தெரிகிறதே? – வ. சேர்மத்தாய், ஏரல்
பதில் : ஆம். ஏதோ சர்வாதிகார ஆட்சியில் நடைபெறும் சட்டத்தைப் போன்ற கேலிக்கூத்தாக்கும் கெடுபிடிகள் – தவிர்க்கப்பட வேண்டியவை. மனித உரிமை அமைப்புகள் ஏனோ வேடிக்கை பார்க்கின்றன.
கேள்வி : மதிப்பவர்களை உதறிவிட்டு, தன்னை மிதிப்பவர்களையே சிலர் நாடிச் செல்வது ஏன்? – த. இசக்கி, நாகர்கோவில்
பதில் : உதைத்த காலுக்கு முத்தமிடுவது சிலரது மாற்றப்பட முடியாத சுபாவம் ஆகும்!
கேள்வி : காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சில தமிழ் அமைப்பினர் பிரச்சாரம் செய்கிறார்களே. இந்த அணுகுமுறை சரியா?
– ஆறு. பழனிச்சாமி, கோவை
பதில் : அதன் விளைவு மிக மோசமானதொரு ஆட்சி – ஜெ.யின் கடந்தகால ஆட்சி. பொடாவில் வை.கோ போன்றவரை சிறைவாசம் கொடுத்தது உட்பட ஒன்று மீண்டும் துளிர்க்கவே உதவி செய்யும். ஊழல் வழக்கில் சிக்கியுள்ளவர்கள் ஊழல் பற்றிப் பேசமுடியுமா?