சிறுகதை : உன்னால் முடியும்!

2022 ஆகஸ்ட் 01-15 2022 சிறுகதை

ஆறு. கலைச் செல்வன்

பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் முதுகலைப் பாடங்களுக்கான தேர்வுகள் தொடங்கிவிட்டன.
முதல்நாள் தேர்வெழுத மாணவ மாணவிகள் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் வந்து குவிந்தனர். அறிவிப்புப் பலகையில் தாங்கள் தேர்வெழுத உட்கார வேண்டிய அறை எண்ணைக் கண்டு பிடித்து அவர்கள் தங்களது அறைகளை நோக்கி விரைந்தனர்.
தேர்வுகள் தொடங்க இன்னும் பத்து மணித்துளிகள் இருந்தது. மதிவேந்தன் சற்று தயங்கியபடியே தேர்வறைக்குள் நுழைந்தார்.
அவர் தேர்வறைக்குள் நுழைந்ததும் அங்கே ஏற்கெனவே உட்கார்ந்திருந்த மாணவ மாணவிகள் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
அறைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்த உதவிப் பேராசிரியப் பெண்-மணியும் யாரோ உயர் அலுவலர் வந்திருப்பதாக நினைத்து மதிவேந்தனுக்கு வணக்கம் தெரிவித்து அவரிடம் ஏதோ பேச முற்பட்டார்.

மதிவேந்தனுக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. தனது வழுக்கை விழுந்த தலையைத் தடவியபடியே தனது அறை நுழைவுச் சீட்டை எடுத்து அவரிடம் காட்டினார் மதிவேந்தன். அறைக் கண்காணிப்பாளர் அவரை வியப்புடன் பார்த்தவாறு அதை வாங்கிப் பார்த்தார். பிறகு அவர் உட்கார வேண்டிய இடத¢தை அவருக்குச் சுட்டிக் காட்டினார். அந்த இடத்தில் அந்த இடத்தில் சென்று உட்கார்ந்தார் மதிவேந்தன்.
அவ்வறையில் இருந்த மாணவிகள் பலரும் அவரைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு வினாத் தாள்கள் வருகையை எதிர்நோக்கியிருந்தனர். அதோடு மட்டு மல்லாமல் அவரை உயர் அலுவலர் என நினைத்து எழுந்து நின்று வணக்கம் தெரிவித்த செயலை எண்ணி சற்று வெட்கமும் அடைந்து மீண்டும் ஒருவரையொருவர் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தும் கொண்டனர்.

ஆம், மதிவேந்தனும் மற்றவர்களைப் போலவே தேர்வு எழுதுவதற்காகத்தான் அங்கு வந்தார். அவர் ஏற்கெனவே அய்ந்து முதுகலைப் பட்டங்களைப் பெற்றிருந்தார். ஆறாவது முதுகலைப் பட்டம் பெற தேர்வு எழுதுவதற்காகத்தான் மதிவேந்தன் வந்திருந்தார். எழுபது வயதான அவர் ஓர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். நிறைய படிக்க வேண்டும் என்கிற ஆவலில் விடாமல் தேர்வுகள் எழுதி வந்தார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியெல்லாம் அவர் சிறிதும் கவலைப்படாமல் தன் பணியில் கவனமாக இருந்தார்.
அய்ந்து நாள்கள் விடாமல் தேர்வு எழுதினார். தேர்வு நேரம் முடியும் வரை எழுதுவார். கடைசி மணி அடித்த பிறகே விடைத்தாளை அறைக் கண்காணிப்பாளரிடம் கொடுப்பார். .
தேர்வின் கடைசி நாளன்று தேர்வு எழுதிவிட்டு வந்த அவரிடம் ஒரு மாணவன் அவர் அருகில் வந்து வணக்கம் தெரிவித்தான். பிறகு அவரிடம் பேசவும் செய்தான்.
‘வணக்கம் அய்யா! என் பெயர் அறிவு நிதி’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
‘வணக்கம் தம்பி, சொல்லுங்க தம்பி’ என்ன கனிவுடன் பேசினார் மதிவேந்தன்.

அய்யா, இந்த வயசிலேயும் படிக்கிறீங்களே! என்ன காரணம்‘னு நான் தெரிஞ்சிக்கலாமா அய்யா!
‘எனது அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் காரணமாக இருக்கலாம் தம்பி. கற்றது கைம்மண் அளவுதானே! கல்லாதது உலகளவு உள்ளதே!’
‘ஏற்கெனவே என்ன படிச்சிருக்க அய்யா?’ ‘ “ஏற்கனவே நான் அய்ந்து முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளேன். இது எனக்கு ஆறாவது முதுகலைப் பட்டம். அதோடு மட்டுமல்லாமல் எம்.எட்., எம்.பில்., பட்டங்களும் பெற்றுள்ளேன். நான் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆயிடுச்சு.’’
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த வேறு சில மாணவ மாணவிகளும் அங்கு வந்து குழுமிவிட்டனர்.
மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான் அறிவுநிதி.

‘ரொம்பவும் மகிழ்ச்சி அய்யா. அறிவை மேலும் வளர்த்துக்கிறதுக்காக படிக்கிறதா சொன்னீங்க. ஆனாலும், அதுக்குமேலேயும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்’னு நெனைக்கிறேன். அது என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா அய்யா’
இவ்வாறு அறிவு நிதி கேட்டதும் சற்றே யோசித்தார் மதிவேந்தன். பிறகு அருகில் இருந்த ஒரு பலகையில் உட்கார்ந்தார். அறிவு நிதியையும் உட்காரச் சொன்னார். அறிவு நிதியுடன் மற்ற மாணவர்களும் சுற்றிலும் உட்கார்ந்தனர். பிறகு பேசத் தொடங்கினார் மதிவேந்தன்.
‘தம்பி அறிவுநிதி, நீ சொல்றதும் உன்மைதான். சுமார் அய்ம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வருது’
‘என்ன நிகழ்ச்சி அய்யா அது?’ ஆவலுடன் கேட்டான் அறிவுநிதி. மற்ற மாணவர்களும் அவர் சொல்லப் போகும் நிகழ்ச்சியைக் கேட்க ஆவல் கொண்டனர்.
‘ஒரு நாள் ஒரு ஜோசியக்காரன் என் கிராமத்துக்கு வந்தான். அவனிடம் நானும் என் நண்பன் பாலனும் அவனிடம் விளையாட்டாக ஜோசியம் பார்த்தோம். அவன் என் கையை நீட்டச் சொல்லி ரேகைகளைப் பார்த்து பலன் சொல்ல ஆரம்பித்தான்’.

இவ்வாறு சொல்லிவிட்டு, மீண்டும் சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்த அவர் பழைய நிகழ்ச்சிகளை மனதிற்குள் கொண்டு வந்து பேச்சைத் தொடர்ந்தார்.
‘அப்போது அந்த ஜோசியக்காரன் நான் மேற்படிப்பு படிக்க மாட்டேன், முதுகலைப் பட்டம் பெற மாட்டேன் என்று சொன்னான். இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் நிறையப் படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்த தருணத்தில் இந்த ஜோசியக்காரன் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டானே என நினைத்து மிகவும் வருந்தினேன்.’

அனைவரும் அவர் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டனர். அடுத்து அவர் சொல்வதைக் கேட்க ஆர்வம் காட்டினர்.
‘அடுத்து அவன், என் நண்பன் பாலனுக்கு ஜோசியம் பார்த்தான். அவனது கை ரேகையைப் பார்த்து அவன் உயர் கல்வி பயில்வான், முதுகலைப் பட்டம் பெறுவான், ஆனால், அவனுக்கு வேலை கிடைக்காது என்று கூறி விட்டான். இதைக் கேட்ட என் நண்பனும் மிகுந்த மன உளைச்சலில் ஆழ்ந்தான். நான் எனது படிப்பையே விட்டு விடலாமா என்று கூட யோசித்தேன்’
‘அப்புறம் என்னாச்சு அய்யா?’ ஆர்வத்துடன் கேட்டான் அறிவுநிதி.

‘பிறகு நான் தொடர்ந்து படித்தேன். அந்த ஜோசியக்காரன் சொன்னது என் பெற்றோர்க்கும் தெரிய வந்தது. இதனால் அவர்களும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என் படிப்பில் ஆர்வம் காட்டினர். நான் முதுகலைப்பட்டமும் பெற்றேன். அரசுப் பதவிக்கும் சென்றேன். என் நண்பன் பாலனுக்கும் அரசுப்பதவி கிடைத்தது. இருவருமே இப்போது ஓய்வூதியம் வாங்கிக்கிட்டு இருக்கோம்.’
மதிவேந்தன் பேசி முடித்ததும் அறிவு நிதியின் முகத்தில் தன்னம்பிக்கையின் ரேகைகள் படர்ந்தன.

‘அய்யா உங்கள் பேச்சைக் கேட்டபின் எனக்கு நல்ல தெளிவு கிடைச்சிருக்கு. உங்களுக்குச் சொன்னது போலவே எனக்கும் ஒரு ஜோசியக்காரன் வேலை கிடைக்காது, படிப்பு வராது என்று சொன்னான். இப்போது கூட முதல் நாள் தேர்வு எழுதிய பின் மறுநாள் தேர்வு எழுத வரவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், உங்களைப் பார்த்த பின்தான் மறுநாளும் தேர்வு எழுத வந்து பிறகு அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்தேன். உங்கள் வாழ்க்கை எனக்கு ஒரு பாடமாக இருக்கிறது அய்யா.’
அறிவுநிதி சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் மதிவேந்தன்.

‘அய்யா, நீங்கள் ஆறாவது முதுகலைப் பட்டம் பெற உள்ளீர்கள். இதற்கெல்லாம் காரணம் அந்த ஜோசியக்காரன்தானா?’ எனக் கேட்டான் அறிவுநிதி.
‘அப்படியெல்லாம் இல்லை தம்பி! அவன் சொன்னது பொய் என்பதை ரொம்ப வருடங்களுக்கு முன்பே நான் நிரூபித்து-விட்டேன், இருப்பினும் எப்போதாவது அந்த ஜோசியக்காரன் சொன்னதை நினைத்துக் கொள்வேன்.
இளைஞர் சமுதாயம் ஜோசியம், மதம் போன்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கி அழிந்துவிடக் கூடாது என்பதுதான் எனது முக்கியமான அறிவுரை. நீங்கள் விளையாட்டுக்குக் கூட ஜோசியம் பார்க்கக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

தப்பாக ஜோதிடன் சொல்வதைக் கேட்டு மன உளைச்சல் கொள்வதும், மனந்தளர்ந்து முயற்சி செய்யாது விடுவதும் போன்ற பாதிப்புகள் அதனால் வரும்! தன்னம்பிக்கையுடன் முயன்றால் எதையும் சாதிக்கலாம். ‘உழைப்பின் வாரா உறுதிகள் இல்லை’ என்பதை நினைவில் கொள்ளுங்கள்’.
மதிவேந்தன் பேசியதைக் கூர்ந்து கேட்டவர்கள், தன்னம்பிக்கையுடன் அடுத்த தேர்வுக்குப் படிக்கச் சென்றனர்.