முனைவர் வா.நேரு
வானிலுள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், கோள்கள் பற்றி பலப்பல மூடக்கதைகளை, கருத்துகளை மதவாதிகள் பரப்பினர். அதிலிருந்து ஜோதிடம் என்ற மூடநம்பிக்கை முளைத்தது. ஆனால், மதவாதிகளுக்கு முதன்முதலில் அதிர்ச்சி கொடுத்த அறிவியல் அறிஞர் கலிலியோ.
கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி உலகத்தின் பார்வையை மாற்றி வானத்தை, விண்ணை ஆராய்வதற்கான அடித்தளத்தைக் கொடுத்தது. கலிலியோ காலம் தொடங்கி இன்றுவரை அறிவியல் ஆயிரக்கணக்கான தொலைநோக்கிகளை வடிவமைத்துக்கொண்டே இருக்கின்றனர். ‘கடவுள் செத்துப்போனார்’ என்று சொல்லும் அளவிற்கு கடவுள் பற்றிய கருத்துகளைப் போட்டு அடித்து நொறுக்கியதில் இந்தத் தொலை நோக்கிகளின் பங்கு இருக்கிறது.
சூரிய ஒளியிலேயே கண்ணுக்குத் தெரிகிற கதிர்களும், கண்ணுக்குத் தெரியாத புறஊதாக் கதிர்களும் அகச்சிவப்புக் கதிர்களும் இணைந்தே பூமிக்கு வருகின்றன. வருகின்ற வழியில் இருக்கும் ஓசோன் மண்டலம்தான் இந்தக் கதிர்களின் பாதிப்பில் இருந்து பூமியில் இருக்கும் மனிதர்களையும், விலங்குகளையும், மற்ற உயிர்களையும் காப்பாற்றுகிறது.
இந்தத் தொலைநோக்கியையும் அகச்சிவப்புக் கதிர்களையும் இணைத்து அறிவியல், உலகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம். 2021 டிசம்பர் 25-ஆம் தேதி அன்று பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்தத் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, வானில் நிலை நிறுத்தப்-பட்டது.
வானில் என்றால் 15 லட்சம் கிலோ மீட்டருக்கு மேலே இருக்கும் இடத்தில் இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இமயமலையின் உயரத்தில் இருந்து, உயரத்தில் இருக்கும் பொருள்களைப் படம் எடுப்பதுபோல, 15 இலட்சம் கி.மீ.க்கு மேல் அமர்ந்துகொண்டு இந்தத் தொலைநோக்கி, அங்கிருந்து இந்தப் பிரபஞ்சத்தின் புகைப்படங்களை எடுத்து உலகுக்கு அனுப்பி உள்ளது. இந்தப் பதினைந்து இலட்சம் கி.மீ.க்கு மேல் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை நிறுத்துவது என்பது எளிதான வேலை அல்ல. அமெரிக்கா, கனடா, அய்ரோப்பாவைச் சார்ந்த அறிவியல் அறிஞர்களின் 30 ஆண்டுகால, பெரும் செலவிலான உழைப்பு இதில் அடங்கி யிருக்கிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்குவதற்கு ஏறத்தாழ 79,000 கோடி ரூபாய் செலவானதாகக் குறிப்பிடுகிறார்கள். நாசாவின் தலைமை நிருவாகியாக இருந்தவர்-களில் ஒருவர் பெயர்தான் ஜேம்ஸ் வெப். அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியால் 1961இ-ல் நாசாவின் தலைமை நிருவாகியாக நியமிக்கப்பட்டவர். மனித குலத்தின் முதல் பாய்ச்சலான நிலவில் மனிதன் காலடி வைப்பதற்கு அடிப்படையான கட்டமைப்பையும், கருத்தினையும் உருவாக்கியவர் இந்த ஜேம்ஸ் வெப். அதனால் இந்தத் தொலை நோக்கி, ஜேம்ஸ் வெப் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த உலகம் கடவுளால் உண்டாக்கப் படவில்லை என்பதனை நிருபிக்கும் ஒரு கருவியாக இந்த ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை நாம் பார்க்கலாம். இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதனையும் ஒளி எப்படித் தோன்றியது என்பதையும் கண்டு பிடிப்பதற்கான முயற்சிக்கு இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பயன்பட ஆரம்பித்திருக்கிறது.
7 மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஜேம்ஸ்வெப் தொலைநோக்கிதான் அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி எடுத்த ஒளிப் படங்களை பூமிக்கு_-நாசா விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் ஜூலை-12ஆம் நாள் முதல் படத்தை வெளியிட்டிருக்கிறார். அது சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிய உதவும் படமாகும். இந்தப் புகைப்படத்தின் மூலம் நமது பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதைக் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.
ஜோபைடன் அவர்கள் முதல் படத்தை வெளியிட அடுத்த 5 படங்களை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.
நமது சூரியமண்டலத்திற்கு அப்பால் உள்ள சில நட்சத்திர மண்டலங்களை மிகத் துல்லியமாக ஜேம்ஸ்வெப் படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஏராளமான நட்சத்திர திரள்கள் ஒளிர்கின்றன இப்படத்தின் முன்னும் பின்னும்.
நமது சூரிய மண்டலத்திற்குள் உள்ள புதன், வெள்ளி, சனி போன்ற கோள்களை நாம் அறிவோம். நம் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள, நிறைய வாயுக்கள் நிறைந்த ஒரு கோளை படம் எடுத்து ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ளது. இது மிகப் பெரிய கண்டு-பிடிப்பு என அறிவியல் அறிஞர்கள் உவகை அடைந்து உற்சாக நடனமாடுகின்றனர்.
விண்மீன் இறந்தால் என்ன நிகழும்? தூசிகள், இரசாயனங்கள் கொண்ட புகை மூட்டத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு விண்மீன் படத்தை இந்த ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ளது. இது இறந்துபோன பின்பும் ஒளியை மட்டும் அனுப்பும் செயலற்றுப்போன ஒரு விண்மீன் என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடு கின்றனர். ஏறத்தாழ 1000 தனித்தனிப் படங்களை இணைத்து, மலைகளும் மேடுகளும் இருப்பதைப் போன்ற ஒரு படத்தை இந்த ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ளது.
“ஆரம்பத்தில் அருள் நிறைந்த ஆண்டவன், விண்ணையும் மண்ணையும் படைத்தபொழுது, பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருளில் மூழ்கி இருப்பதைக் கடவுள் பார்த்தார். ஒலி எழுப்பி ஒளி தோன்றுக என்றார். உடனே ஒளி தோன்றியது. ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். ஒளிக்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
கடவுள் நீர்த்திரைகளுக்கு இடையில் வானம் தோன்றுக, அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும் என்றார். அது நிறைவேறியது. வானத்தை உருவாக்கி வானத்திற்கு கீழுள்ள நீரையும், வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது’’ என்று பைபிள் கடவுள் முதலில் மண்ணுலகையும் பின்பு விண்ணுலகையும் படைத்த கதையைச் சொல்லும்.
ஆனால், அறிவியல் முதலில் விண்ணுலகமும் அதிலிருந்து வெடித்துச் சிதறி தோன்றியதுதான் மண்ணுலகம் என்பதை தனது ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துக்கொண்டிருக்கிறது.
“மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்குத் துக்கமும் கவலையுமில்லாமல் இருப்பதற்கும், ‘சர்வ சக்தியுள்ள கடவுள்’ ஒருவர் இருக்கின்றார் என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்தாக வேண்டும்.
‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’ என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி, அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்கு-வதைவிட, உலகில் ஜீவகாருண்யத் தன்மை வேறில்லை என்று சொல்லுவேன்’’ என்றார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போன்ற ஓர் அறிவுத் தெளிவை உண்டாக்கு-வதற்கான ஒளிப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணிலிருந்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும் அவற்றில் இருக்கும் கோள்களையும் கண்டு-பிடிப்பதற்கான மனித குலத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலை அறிவியல் நிகழ்த்தி இருக்கிறது. இதற்கு அடித்தளம் அமைத்த ஜேம்ஸ்வெப் அவர்களை நாமும் நினைவில் கொள்வோம் _ ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தரும் அறிவியல் அற்புத ஒளிப் படங்களை அறிந்து கொள்வதன் மூலமாக, அதைப் பற்றிய செய்திகளைப் படிப்பதன் மூலமாக.
சில நூற்றாண்டுகளுக்கு முன் தொலை நோக்கிகளை வைத்து இந்த சூரியமண்டலத்தில் இருக்கும் கோள்களைக் கண்டுபிடித்தனர் _ அறிவியல் அறிஞர்கள். இன்றைக்கு கணினியும், இணையமும் இன்னும் பல தொழில் நுட்பங்களும் இணைந்து உருவாக்கி இருக்கும் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி, இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும் பல நட்சத்திரக் கூட்டங்கள் பற்றியும் நிறைய தகவல்களைத் தர இருக்கிறது. சூரிய மண்டலத்தையே தாண்டி வேறு நட்சத்திர மண்டலங்களில் இருக்கும் கோள்களில் மனிதர்கள் எதிர்காலத்தில் குடியேறலாமா? என்னும் நோக்கிலும் ஆராய்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அறிவுத் தெளிவை உண்டாக்கும் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை வரவேற்-போம். அறிவியல் அறிஞர்களைப் பாராட்டி, வாழ்த்துவோம்.