அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (296)

2022 அய்யாவின் அடிச்சுவட்டில் ஜுலை 16-31 2022

கழகப் பொருளாளர்
கா.மா.குப்புசாமி மறைவு
கி.வீரமணி


புதுவை ஆளுநர் மாளிகையில் சங்கராச்-சாரியாருக்கு வரவேற்பு அளித்ததுபற்றி, 27.6.1999 அன்று சிதம்பரத்தில் செய்தியாளர்-களிடம் எனது கண்டனத்தைத் தெரிவித்தேன். அதில், ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைப்படியே பா.ஜ.க. இயங்குகிறது. ஆர்.எஸ்.எஸ்.-காரர்களையே பி.ஜே.பி. ஆட்சியில் மாநில ஆளுநர்களாக நியமனம் செய்துவருகிறது. அதில் ஒருவர்தான் புதுவை ஆளுநர் ரஜினிராய் அவர்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்ததன் விளைவு -_ மதச்சார்பின்மைக்கு எதிராக சங்கராச்சாரியாருக்கு புதுவை ஆளுநர் மாளிகையில் (ராஜ் நிவாஸ்) வரவேற்பளித்த செயல். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அப்போது கூறினோம்.
பெரியார் திடலில் விடுதலையின் துணை நிருவாகியாக சில ஆண்டுகாலம் பணியாற்றிய வி.ஜெயராமன் அவர்கள் 5.7.1999 அன்று மறைவுற்றார் என்னும் செய்தியை அறிந்து வருந்தினேன். அவரது இல்லத்திற்குச் சென்று உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினேன்.
9.7.1999 அன்று காரைக்குடி ஓட்டல் உதயத்தில் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கே.ஆர்.பாலகிருஷ்ணனுக்கும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த அ.செல்வமேரிக்கும்; 14.7.1999 மன்னை ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளரும் பரவாக்கோட்டை காம.சிகாமணி _ சரோஜா ஆகியோரின் செல்வன் சி.நெடுஞ்செழியனுக்கும், பரவாக்கோட்டை சோ.தனமந்திரி _ தன.ராணி ஆகியோரின் செல்வி கலைச்செல்விக்கும்; கரூர் மாவட்ட பெரியார் பெருந்தொண்டர் ஏ.பி.பாலையா _ குருமணி ஆகியோரின் மகன் ஜி.பா.இராசேந்திரபாபுவுக்கும், காடநாயக்கனூர் பா.பால்சாமி _ லட்சுமி ஆகியோரின் மகள் பா.வனிதாவுக்கும்; அதனைத் தொடர்ந்து திருச்சியில் மாலையில் நடைபெற்ற மதவாத கண்டன மாநாட்டு மேடையில் தந்தை பெரியார் _ மணியம்மை ஆகியோரால் வளர்க்கப்பட்டவரும், வல்லம் பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியின் அலுவலக உதவியாளருமான ஈ.வெ.ரா.ம.-இராசேந்திரனுக்கும், திருவாரூர் வட்டம் சூரனூர் மாரியப்பா _ ஜெகதாம்பாள் ஆகியோரின் மகள் மா.பகுத்தறிவுக்கும் இணையேற்பு ஒப்பந்தம் செய்து வைத்தேன். ஒவ்வொரு விழாவிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பற்றி விளக்கவுரையாற்றினேன்.26.7.1999 அன்று மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் விலை மதிப்பில்லாத உயிர்கள் இழக்கப்பட்டமை குறித்தும், மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், கைதாகி சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் பேரணி நடத்தப்பட்டதில் ஏற்பட்ட கல்லெறி, தடியடி போன்ற காவல்துறையினர் அத்துமீறிய செயலினால் பக்கத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குதித்து தப்பியோட முயன்ற பல அப்பாவிகளும், கட்சியினரும் இறந்துள்ளனர்.
எந்தப் போராட்டமானாலும், வன்முறை வெறியாட்டங்கள் தலைதூக்குவது விரும்பத்தக்க-தல்ல. இறந்த உயிர்கள் _ மனித உயிர்கள். வெறும் நட்ட இழப்பீட்டுத் தொகை, நீதிமன்ற விசாரணை நாடகம் இவைகளால் திரும்பி வராது.

இதுபற்றி நீதி விசாரணைக்கு உத்தர-விட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், உயர்நீதிமன்ற (ஷிவீttவீஸீரீ யிuபீரீமீ) நீதிபதி ஒருவர் இருப்பது அவசியம். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் எவ்வளவு சுதந்திரமாகச் செயல்-படுவார்கள் என்பது நாடறிந்ததேயாகும்.
போராட்டம் நடத்துகிறோம் என்று கட்சிகள் முன்வருவதைவிட, அதை பொறுப்-போடு நடத்துவது மிகவும் முக்கியம். இறந்த உயிர்களுக்கு அப்போராட்டம் நடத்திய கட்சிகளும்கூட பொறுப்பேற்க வேண்டி-யவையே! வெறும் காவல்துறை மட்டுமல்ல காரணம் என்பதை எல்லோரும் நினைவிற் கொள்ளுவது அவசியம். மனிதநேயத்துடன் பார்க்க வேண்டிய தொழிலாளர் பிரச்சினையைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டாம் என அறிக்கை வெளியிட்டேன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூரில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவை 28.7.1999 அன்று தலைமை-யேற்று நடத்திவைத்தேன். கழகத் தோழர்கள், பொதுமக்களின் கையொலிக்கு இடையே சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினேன். அவ்வுரையில், “முடியனூர் என்பது ஒரு சாதாரண ஊர் அல்ல. இங்கிருந்துதான் பல மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள் வெளிஉலகிற்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் தந்தை பெரியாரின் தொண்டால் நடை-பெற்றவை. கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை அவர்களை வழங்கிய ஊர் இந்த ஊர். அவரது திருமணத்திற்குப் பிறகு ஏறத்தாழ 41 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார் சிலை திறப்பு விழாவிற்காக இங்கு வந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் கிராமம் ஜாதி, மத, கட்சி, பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும். அதற்கு பெரியார் கொள்கைகள் பரவ வேண்டும்’’ என, பல்வேறு கருத்துகளை விளக்கிக் கூறினேன். டில்லி பெரியார் மய்யத்திற்கு ஏராளமான பொதுமக்களும், கழகத்தினரும் நன்கொடை அளித்தனர்.
“தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் _ இரு நூற்றாண்டு வரலாறு’’ எனும் தலைப்பில் “தோழர் அருணன் எழுதிய காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகமான நூல் வெளியீட்டு விழா மதுரை திருப்பரங்குன்றத்தில் 7.8.1999 அன்று நடைபெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் த.மு.எ.ச. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் செந்தில் வரவேற்று உரையாற்றினார். த.மு.எ.ச. மாவட்டத் துணைத் தலைவர் எழில் தலைமையேற்று உரை-யாற்றினார். அவ்விழாவில் கலந்துகொண்டு ஆய்வுரை ஆற்றுகையில், “இந்த நூல் வரலாற்றுப் பெருமைமிக்க நூல். இதன் மூலம் புரட்சிகரமான எழுத்தாளர் தோழர் அருணன் அரிய சாதனையைச் செய்து முடித்திருக்கிறார். பல மறைக்கப்பட்ட செய்திகளை வெளிக்-கொண்டு வந்துள்ள இந்நூல் ஒரு கருத்துப் பெட்டகமாகும். தோழர் அருணன் என்னுடைய நூலுக்கே மறுப்பு நூல் எழுதினார். எனது நூலை மறுத்தார் என்பதற்காக அவரது பெருமையைக் குறைத்து மதிப்பவர்களல்ல நாங்கள். பெரியார் தொண்டனுக்கு கருத்தைக் கருத்தால் சந்திக்கின்ற துணிவு இருக்கின்றது. அந்தத் துணிவு எங்கள் இருவரிடமும் இருக்கிறது. இந்த விழா ஒரு திருப்புமுனையான விழா என்று உரையாற்றினேன்.


பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மானமிகு மயிலை நா.கிருஷ்ணன் அவர்களின் மருமகனும் திண்டுக்கல் ‘கோமதி லாட்ஜ்’ உரிமையாளருமான திரு.எஸ்.செல்வம் அவர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் 9.8.1999 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டு சிகிச்சை பலனின்றிக் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். நானும் என் வாழ்விணையரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினர்க்கும், குறிப்பாக திருமதி சாந்தி செல்வம் அவர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தோம்.
திருத்தணி நகர திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் ப.இராமுவுக்கும், திருத்தணி கொ.மணி-_ம.சாந்தி ஆகியோரின் மகள் ம.அனிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை 9.8.1999 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன்.
18.8.1999 அன்று காலை கடலூர் கூத்தப்பாக்கம் பட்சி ஆர்.கோபாலன் திருமண அரங்கத்தில், மறைந்த என்னுடைய அண்ணன் பெரியவர் கி.தண்டபாணி _ ஞானசவுந்தரி ஆகியோரின் மகன் த.பெரியார் செல்வத்திற்கும், திட்டக்குடி வி.கே.தங்கராசு _ மணிமொழி ஆகியோரின் மகள் த.பரமேசுவரிக்கும் இணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தேன். மணவிழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சிப் பொறுப்பாளர்களும், அமைப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துகொண்டனர். நிறைவில் திட்டக்குடி ஏகநாதன் நன்றி கூறினார்.

அதனைத் தொடர்ந்து மாலை தஞ்சை வல்லம் படுகையில் கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் இரா.நாராயணன் _ மங்களம் ஆகியோரின் மகன் தி.அழகரசனுக்கும், புதுவை கி.பட்டாபிராமன் _ வசந்தா ஆகியோரின் மகள் ப.பத்மபிரியாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்து உரையாற்றினேன்.
மறுநாள் 19.8.1999 அன்று குறிஞ்சிப்பாடியில் மூன்று ஜோடி மணமக்களுக்கு ஜாதி மறுப்பு இணை ஏற்பு நிகழ்வை தலைமையேற்று நடத்திவைத்தேன். பண்ருட்டி வட்டம் வேகாக்கொல்லை தி.மு.க. கிளைச் செயலாளர் த.நாராயணசாமி _ கனகம் ஆகியோரின் மகன் நா.தட்சிணாமூர்த்திக்கும், பண்ருட்டி வட்டம் புதுப்பாளையம் மறைந்த ரெங்கநாதன் _ அரசாயி ஆகியோரின் மகள் ரெ.செல்விக்கும்;
த.நாராயணசாமியின் இளைய மகன் நா.பஞ்சமூர்த்திக்கும் காட்டுமன்னார்குடி பூ.அரங்கநாதன் _ இலட்சுமியின் மகள் அர.அன்னைமணிக்கும்; பூ.அரங்கநாதனின் மகன் அர.வீரமணிக்கும் சா.பூராசாமி _ இலட்சுமியின் மகள் பூ.ஜெயந்திக்கும் ஒரே மேடையில் இணை ஏற்பு ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். விழாவில் உரை-யாற்றுகையில், “உலகத்தில் மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களின் அறிவு வளர்ந்தால்தான் சமுதாயம் வளரும். ஜாதி ஒழிப்புக்காக நாங்கள் கடுமையான பிரச்சாரம் செய்து அதனை ஒழிக்கின்ற வேளையில் தேர்தல் வரும்போது, திடீர் என ஜாதிய உணர்வுகள் வருகின்றன. இவை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு இதுபோன்ற மணவிழாவே அத்தாட்சி என்பதனை விளக்கி உரையாற்றினேன்.


மதுரையில் 20.8.1999 அன்று காலையில், மணமக்கள் சடகோபன் _ சித்ரா ஆகியோருக்கு வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்து, உரையாற்றினேன். அதனைத் தொடர்ந்து, மாலையில் திருப்பாலையைச் சார்ந்த கழக இளைஞரணித் தோழர் வீ.சுப்பிரமணி _ சு.சொக்காயி அம்மாள் ஆகியோரின் செல்வன் சு-.முத்துக்குமாருக்கும், பழங்காநத்தம் செ.மணி _ம.முத்துலெட்சுமி ஆகியோரின் செல்வி ம.சின்னப்பொன்னுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “எப்போதும் திருப்பாலை கிராமத்தை நான் மறப்பதில்லை. நல்ல கொள்கைப் பற்றுள்ள பகுதியாக நாங்கள் திருப்பாலையைப் பார்க்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் மறைந்துவிட்ட பின்னரும் எந்த மாநகரத்திலே கருப்புச் சட்டை மாநாட்டுப் பந்தல் கொளுத்தப்பட்டதோ, எந்த மாநாட்டிலே அண்ணா அவர்கள், ‘மரண சாசனம்’ என்ற தலையங்கத்தை ‘திராவிட நாடு’ ஏட்டிலே எழுதினார்களோ, அந்த நகரத்திலே ஒரு கொள்கை விழாவாக இந்த மணவிழா நடைபெறுவது தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்’’ என உரையாற்றினேன்.
மறுநாள் 21.8.1999 அன்று புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணித் தலைவரும் புதுகை மாவட்டத் தலைவர் இரா.புட்பநாதன் _ இன்னாசி அம்மாள் ஆகியோரின் செல்வனுமான பு.ஆர்ம்ஸ்ட்ராங்குக்கும், திருமயம் திரவியம்_அருள்மேரி ஆகியோரின் செல்வி தி.சாந்திக்கும்; 22.8.1999 அன்று தஞ்சை மாவட்டம் சூழியக்கோட்டை மறைந்த தியாகராஜன் _ வேதவல்லி ஆகியோரின் மகன் தி.அன்பழகனுக்கும், தஞ்சை சி.மணி _ மா.இராசலெட்சுமி ஆகியோரின் மகள் மா.சிங்காரகஸ்தூரிபாய்க்கும் இணை ஏற்பு விழாக்களை தலைமையேற்று நடத்திவைத்து உரையாற்றினேன்.

பெரியார் பெருந்தொண்டர் பூண்டி இரா.கோபால்சாமி அவர்களின் பவளவிழா 23.8.1999 அன்று அம்மன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் எழுச்சியோடு நடை-பெற்றது. வழக்குரைஞர் சி.அமர்சிங் வரவேற்று உரையாற்றினார். விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில், “பூண்டி கோபால்சாமி அவர்கள் 75 ஆண்டுகளாக எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்துவரும் இலட்சியத் தொண்டர். அவருக்கும் பணம் மேல் ஆசை இருந்திருந்தால், பதவி மேல் ஆசை இருந்திருந்தால் ஏராளமாகக் கிடைத்திருக்கும். எதற்கும் சஞ்சலப்படாமல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வீரராகவே வாழ்கிறார். நான் அவரை ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவேன். நான் சிறுவயதிலே பொதுக்கூட்டங்களுக்குச் செல்லும்போது என்னை தன் முதுகிலே ஏற்றிப் பேச வைத்தவர். நான் ஒருவர் முதுகிலே ஏறி சவாரி செய்துள்ளேன் என்று சொன்னால், அது அவருடைய முதுகில் மட்டும்தான். அன்று முதல் நானும் கொள்கை மாறவில்லை; அவரும் கொள்கை மாறவில்லை’’ என அவருடனான பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக் கூறினேன்.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் 28.8.1999 அன்று மாரடைப்பால் மறைவுற்றார் என்னும் துயரச் செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். மறைந்த தி.மு.க. தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் அவர்களின் மகன் அன்பில் பொய்யாமொழி திருச்சி(2) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். தி.மு.க. மாநில இளைஞரணியின் இணைச் செயலாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். நம்மிடம் எப்போதும் அவருடைய தந்தையாரைப் போலவே அன்போடும், மரியாதையுடனும் பழகிய பண்பாளர். எவரிடமும் சிரித்துப் பேசிடும் இயல்பினர். பொதுவாழ்க்கையில் தன் தந்தையின் வாரிசாக இருந்து அதில் வெற்றி கண்டவர். கழகத்தின் சுற்றுப் பயணத்திலிருந்த நிலையில், அவரது மறைவு திராவிட இயக்கங்களுக்கே பெரும் இழப்பாகும் என்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், கழகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டேன்.

29.8.1999 அன்று சென்னை துரைசாமி_ தேவேந்திரி ஆகியோரின் மகன் துரை.விசயகுமாருக்கும், புளியந்தோப்பு ந.சந்திரசேகரன் _ உஷா ஆகியோரின் மகள் ச.பானுவுக்கும் இணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்து, சிறப்புரையாற்றினேன்.
புதுக்கோட்டை மேலப்பட்டியில் எனது வாகன ஓட்டுநரும், விராலிமலை வட்டம் மேலப்பட்டி சி.சுப்பையா _ கமலம் ஆகியோரின் மகனுமான சு.நல்லுச்சாமிக்கும், மாத்தூர் வட்டம் ராசிபுரம் ப.சுப்பிரமணியன் _ பாப்பையம்மாள் ஆகியோரின் மகள் தேவிக்கும் இணை ஏற்பு நிகழ்வை 30.8.1999 அன்று தலைமையேற்று நடத்திவைத்தேன். விழாவில் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனர் பேரா.ப.சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றார். அவ்விழாவில் உரையாற்றுகையில், “மணமகன் நல்லுச்சாமி கட்டுப்பாடான இளைஞர், வாகன ஓட்டுநர்கள் என்பவர்கள் உடலுழைப்பு, மூளை உழைப்பு என்று இரண்டையும் கவனித்து தெளிவான முடிவு எடுக்கக் கூடியவர்கள். இந்த மணவிழா ஜாதி, மதம் பாராத எங்கள் குடும்ப விழா. பெண்களின் உரிமைக்காக உழைத்தவர் ஒருவர் உண்டென்றால் அவர் தந்தை பெரியார்தான்’’ என பல்வேறு கருத்துகளை விளக்கிக் கூறி உரையாற்றினேன்.
திராவிடர் கழக மாநிலப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் 16.9.1999 அன்று மறைவுற்றார் என்னும் செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன்.

“சிறு வயது முதற்கொண்டே இயக்க ஈடுபாடு கொண்டவர். கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தார்; எனினும் அவரது அயராத உழைப்பு, அஞ்சாது செய்த பணி அவர் மேலும் வாழ்வார் என்ற நம்பிக்கையைத் தந்தது நம் எல்லோருக்கும்.
தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் பழையகோட்டை இளைய பட்டக்காரர் மானமிகு ந.அர்ச்சுனன் அவர்கள்தான் முதல் பொருளாளர் திராவிடர் கழகத்திற்கு.
கழகம் பிரிந்த பின்பு பொருளாளர் பதவியை அய்யா அவர்கள் நிரப்பவில்லை. அய்யா அவர்கள் மறைவுக்குப்பின் 1974இ-ல் அன்னை மணியம்மையார் அவர்கள், மானமிகு கா.மா.குப்புசாமி அவர்களை கழகத்தின் இரண்டாவது பொருளாளராக நியமித்தார்கள். அம்மா காலத்தில் அவர் பொருளாள-ரானாலும், பெரியார் காலத்தில் அவரது பெரு நம்பிக்கைக்கு உரியவரானார்!

நம் அறிவு ஆசானை _ தந்தை பெரியார் அவர்களை 1957இ-ல் தஞ்சையில் வெள்ளிப் பணத்தால் எடை போட்ட நிகழ்ச்சிக்கு மூல காரணமாக அமைந்தவர்.
அய்யாவை வெள்ளிப் பணத்தால் எடை போட்டு, கழகம் வளரக் காரணமானவர். அய்யாவுக்குப் பின்னர் கழகம் அயர்ந்து விடவில்லை; அம்மாவுக்குப் பிறகு தேய்ந்து விடவில்லை; வளர்பிறையாகத்தான் ஓங்கி வளர்ந்துள்ளது என்று வையத்திற்குக் காட்டிட விரும்பினார். கழகக் குடும்பத்தவரின் முழு ஒத்துழைப்புடன் என்னை புதுக்கோட்டையில் வெள்ளிக் கட்டிகளால் எடை போடும் விழாவை நடத்தி, அதன் மூலம் பெரியார் நகர்வு புத்தகச் சந்தை மற்றும் கிராமப்புற பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு வழிவகை செய்தார்.
அதற்குப் பிறகு கழகத்திற்கு ஒரு பெரு வைப்பு நிதியாக அமைய வேண்டும் என்ற திட்டத்தினைச் செயல்படுத்த, எடைக்கு எடை தங்கம் என்ற ஒரு பிரமிக்கத்தக்க அறிவிப்பை அறிவித்து, வியப்புக் கடலில் அனைவரையும் தள்ளி, விந்தைமிகு சாதனை செய்து சரித்திரம் படைத்தார்! நடக்குமா? என்ற கேள்வியைக் கேட்ட பலருக்கும் மத்தியில் ‘நடந்தே தீரும்’ என்று கூறி, பன்னாட்டுப் பகுத்தறிவாளர்களை தஞ்சைத் தரணிக்கு அழைத்து, தங்கம் வழங்கும் விழாவை நடத்திட்ட தங்கம் இன்று இமை மூடிக் கொண்டதே!
தஞ்சையில் பெரியார் கல்வி நிறுவனங்கள் பூத்துக் குலுங்குகின்றன என்றால் அதற்கு முதல் காரணம் _ நமது மூத்த பெரியார் பெருந்தொண்டரான பொருளாளர் அய்யா அவர்களே!
இவை எல்லாவற்றிற்கும் மேலாக கட்டுப்-பாடு காத்து, கடமை தவறாது, கழகத்தின் லட்சியச் சுடராக அவர் என்றும் சுடர்விட்டு ஒளி தந்தார்; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தினைக் கட்டிக் காத்ததில் அவரது பங்கு சிறப்பானது.

கழகம் தனது வலிமையான தளபதிகளில் மூத்தவரை இழந்து முழுச் சோகக் கடலில் தத்தளிக்கிறது!
தஞ்சையின் கல்வி நிறுவனங்கள் அவரது நிரந்தர நினைவுச் சின்னங்களாகும்!
நெருக்கடி காலத்தில் நாங்கள் சிறையில்; அம்மாவோ தனிமையில்; அப்போது பொருளாளர் ஆற்றிய பணிகளோ வரலாற்றில்!
அவரை இழந்த நாம், எவரைப் பெற்றும் எளிதில் ஈடுசெய்ய முடியாத அளவுக்குத் தூய தொண்டால் உயர்ந்த அவரை, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வழியனுப்புகிறோம்; எங்கள் விழியாக இருந்தவர்; இன்று நெறியாக மாறிவிட்டார்!
அவரை இழந்த துயரத்தால் தாக்குண்டுள்ள அவரது அன்புத் துணைவியார் அம்மா திருமதி ஞானம்பாள் அவர்களுக்கும், அவரது செல்வர்களுக்கும், குடும்பத்தவருக்கும் இயக்கச் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
பெரியார்தம் இராணுவ தளபதிக்கு எங்கள் வீர வணக்கம் வீர வணக்கம்!’’- என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.
(நினைவுகள் நீளும்…)