பெரியார் பேசுகிறார்மாரியம்மன் திருவிழா

2022 பெரியார் பேசுகிறார் ஜுலை 16-31 2022

தந்தை பெரியார்

கோடை காலங்களில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் திருவிழா என்று ஒன்று நடந்து வருகிறது. இந்த மாரியம்மன் கடவுள் கிராம தேவதை என்று பெயர் இருந்தாலும், அது ஆரியக் கதைப்படி ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி மாரி ஆகிவிட்டாள் என்பதாகும். இந்த மாரி இல்லாத கிராமமே கிடையாது. ஆகவே, இவள் கிராம தேவதை ஆகி கிராம மக்கள் எல்லோருக்கும் கடவுள் ஆகிவிட்டாள்.
இந்த ரேணுகை என்னும் மாரியம்மனின் சரித்திரம் மிகவும் இழிவாகக் கருதத்தக்கதாகும்.

இந்த ரேணுகை எனும் மாரி ஜமதக்கினி முனிவரின் மனைவி. அவள் ஒரு அந்நிய புருஷன் மீது இச்சைப்பட்டு, அதாவது, அவள் நீராடக் கங்கைக்குச் சென்றபோது எதிர்ப்பட்ட சித்ரசேனனைக் கண்டு மோகித்துக் கற்புக் கெட்டாள். அதனை அறிந்த அவளது கணவன் ஜமதக்கினி அவளைக் கொன்றுவிடும் படியாகத் தனது மகன் பரசுராமனிடம் கட்டளை யிட்டார். பரசுராமன், ரேணுகையை யார் தடுத்தும் கேளாமல் கொன்று விட்டான். கொன்றுவிட்டு வந்து, தாயைக் கொன்று விட்டோமே என்று துக்கப்பட்டுக் கொண்டு இருக்கும்போது தகப்பன் ஜமதக்கினி அதை அறிந்து, மகனுக்காக மாரியை பிழைப்பிக்கச் செய்து இசைந்து, மந்திர நீர் தந்து எழுப்பி வரும்படி மகனை அனுப்பினான்.
தாயைப் பிழைப்பிக்கச் சென்ற பரசுராமன் கொலைக் களத்துக்குச் சென்று, தாயின் தலையை எடுத்து முண்டத்துடன் ஒட்டவைக்கையில், கொலைக் களத்தில் பல முண்டங்கள் வெட்டப்பட்டு இருந்ததால் அடையாளம் சரிவரத் தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு முண்டமாகக் கிடந்த உடலை எடுத்து தலையுடன் ஒட்டவைத்து, அழைத்து வந்து தகப்பனிடம் விட்டான். கணவன் அவளைப் பார்த்து, நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்குச் சென்று நீ அங்கேயே போய் அங்கு வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டு இரு எனக் கூறி அனுப்பினான். அது முதல் மாரி கிராமங்களில் வசிக்கத் தொடங்கினாள். கிராமவாசிகள் இந்த விஷயம் அறிந்து, தலையை மாத்திரம் வணங்கிப் பயன் அடைய முன் வந்து, தங்கள் ஊர்களில் மாரிக்குக் கோயில் கட்டி, மாரியின் தலையை வைத்து வணங்கி வருகின்றார்கள். இது ஒரு புராணம்.
சிவபுராணத்தில், மாரியானவள் கார்த்தவீரியனை மோகித்துச் சாபமடைந்தாள் என்று காணப்படுகிறது.

மற்றொரு புராணத்தில், –
அவள் கணவன் ஜமதக்கினி கொல்லப்-பட்டதால் அவள் அவனுடன் உடன்கட்டை ஏறினாள். இதை இந்திரன் ஒப்புக் கொள்ளாமல் மழை பெய்யச் செய்ததும், அவளது உடல் அரைவேக்காட்டுடன் நின்று விட்டது. அதனால் அவள் எழுந்து பக்கத்தில் உள்ள பஞ்சமத் தெருவில் நிர்வாணத்தோடு வேப்பிலையால் மானத்தை மறைத்துக் கொண்டு ஓடினாள்.
அதைக் கண்ட பஞ்சமர்கள், பச்சை மாவும், பழமும், இளநீரும் கொடுத்து உபசரித்தார்கள்; ஒரு வண்ணாத்தி சேலை கொடுத்து ஆதரித்தாள். இந்த அய்தீகம்தான் இன்று மாரியம்மன் பூசையாக நடத்தப்படுகின்றது. பூசை உருவம், உணவு முதலியவை எப்படி இருந்தாலும் இந்த மாரியம்மன் மீது இரண்டு விபசாரக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன.
(1) சித்திரசேனனை மோகித்துக் கற்பு இழந்தது.
(2) கார்த்தவீரியனை மோகித்துக் கற்பு இழந்தது.
இரண்டிலும் அவளது கணவன் ஜமதக்கினியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவள் தண்டிக்கப்பட்டு இருக்கிறாள். இதற்குப் புராண ஆதாரங்கள் இருக்கின்றன.
நமது கடவுள் நம்பிக்கையிலும், கடவுளை வணங்குவதிலும் நமக்குள் எவ்வளவு மடமை இருந்தாலும், நாம் வணங்கும் கடவுள்களை இவ்வளவு மோசமான, நாணயம், ஒழுக்கம், நாகரிகம் என்பவை இல்லாமல் இவை யாவும் காட்டுமிராண்டித்தனமாக இருப்பது பற்றிக் கவலைப்பட வேண்டாமா? என்றுதான் கவலைப்படுகின்றேன்.
(‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து…)

«««

பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்!
உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் -_ பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஓர் அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. இந்த அறிவை மனிதன் மனிதனிடம் நடந்து கொள்ளும் அன்புக்கும், உதவிக்கும் பயன்-படுத்தாமல், இன்னொருவனுக்குக் கேடு செய்வதிலும், திருடுவதிலும், வஞ்சிப்பதிலும் செலுத்தக் கூடாது என்றுதான் சொல்லு-கிறோம். ஏன், மேலும் மேலும் வற்புறுத்து-கிறோம் என்றால் மனிதன் இந்தக் கேவலமான நிலைமையிலிருந்து மீண்டு, மனித சமுதாயத்திலே மனிதனாக மனிதனுக்கு மனிதன் தோழனாக வாழவேண்டுமென்றே ஆசைப்படு-கிறதனால்தான். ஆகையால் நாங்கள் சொல்வது எல்லாம் பழைய மூடப் பழக்க வழக்கங்களை-யெல்லாம் விட்டொழியுங்கள். தங்கள் தங்கள் புத்தியைக் கொண்டு, அறிவைக் கொண்டு சுதந்திரமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டு-மென்று கூறுகிறோம். எந்தக் கடவுளாலும், எந்த சாஸ்திரத்தினாலும், எந்த மதத்தினாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கமும், நேர்மையும் தானாக வந்துவிடாது. நான் அவற்றைக் குறை கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையிலேயே அவற்றை எல்லாம் நம் சமுதாயத்திற்கோ, நம் மக்களுக்கோ உகந்ததில்லை. அவ்வளவும் புரட்டும், பித்தலாட்டங்களும் நிறைந்திருக்-கின்றன. அதைப் பின்பற்றக் கூடியவர்கள் எப்படி ஒழுங்காக வாழ முடியும்?
இதைப்போல்தான் இன்றைய அரசாங்கமும் இருக்கிறது. சும்மா சொல்லவில்லை. எனக்கு வயது 72 என்னுடைய 60 வருட அனுபவத்தைக் கொண்டு தான் சொல்லுகிறேன். ஆகவே, இன்றைய நிலைமையில் எந்த மனிதனும் யோக்கியமாக நடந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எந்த ஸ்தானத்திலும், எந்தப் பதவியிலும் எவன் இருந்தாலும் லஞ்சம் வாங்கித்தான் தீரவேண்டுமென்ற மனப்பான்மை பரவி விட்டது.

இன்றைய நிலையில் நான் கூட ஒரு பதவியில் இருந்தால் வாங்கித்தான் ஆக வேண்டும். என் வரைக்கும் 100, 1,000 கணக்குக்கு ஆசையிருக்காது. காரணம்? இது எனக்கு மட்டமானது. ஆனால், லட்சக்கணக்கில் ரூபாய் வருமானால் நானும் ஒரு கை பார்க்கத்தான் செய்வேன். ஏன்? இதுதான் இன்றைய தின மக்கள் இயற்கை நிலைமை, மூடக் கொள்கை. ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், சர்க்காருக்காக, பாவ புண்ணியத்துக்காக நடந்து கொள்ள வேண்டும், சமுதாயத்திற்காக நடந்து கொள்ள வேண்டுமென்பதும் இனிமேல் முடியாத காரியம். நாம், இன்னொருவனுக்கு மோசம் செய்தால் அவனுடைய வயிறு எரிகிற மாதிரிதான் நமக்கும் இன்னொருவன் மோசம் செய்தால் வயிறு எரியும் என்று நினைக்க வேண்டும். ஆகவே, நாளுக்கு நாள் திருந்தி ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டுமானால் நாம் நல்ல காரியங்கள் செய்யாவிட்டாலும், கெட்ட காரியங்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்ற தன்மை ஏற்படத்தக்க காரியங்கள் கண்டுபிடித்து அதற்கேற்ற காரியம் செய்ய வேண்டும். அதுதான் இனி மனிதத் தொண்டாக மாற வேண்டும். ஆகவே, இனியும் மக்கள் தொட்டதற்கெல்லாம் சட்டம் மீறுவதோ, இல்லாமல் அதிகாரிகளையும் சர்க்காரையும் எதற்கும் மீறும் உணர்ச்சி இல்லாமல், வரவேண்டுமென்று சொல்லு-கிறேன். எதற்கும் பயந்து அல்ல! இதுதான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் அமைதிக்கும், நல்லாட்சிக்கும் பயனளிப்பதாகும்.
(24.8.1951 அன்று கள்ளக்குறிச்சி அருகே கிராமம் என்னும் ஊரில் வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் போர் தோழர்களுக்கு பாராட்டுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

‘விடுதலை’ 31.8.1951