1893ஆம் ஆண்டே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காக “பறையன்” என்னும் பெயரில் ஒருவர் பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார் என்று எண்ணும்போது “யார் அந்த மாமனிதர்?” என்று கேட்கத்தான் தோன்றும். அந்த மாமனிதர் வேறு யாரும் அல்லர்; – அவர்தான் இரட்டைமலை ஆர்.சீனிவாசன் அவர்கள்.
அவருடைய பிறந்த நாள் 7.-7.-1859.
1891-ஆம் ஆண்டில் ஆதிதிராவிட மகாஜன சபையைத் தொடங்கினார். லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித்தொகுதி தேவை என்பதை வலியுறுத்தினார். காந்தியாரின் கருத்துக்கு எதிர்க்கருத்தையும் அங்கு எடுத்து வைத்தார்.
சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தபோது, பானகல் அரசர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானம் வரலாற்றுத் திருப்பம் வாய்ந்ததாகும். அத்தீர்மானம் ஆணையாகவும் பிறப்பிக்கப்பட்டது.
அந்த அரசு ஆணை இதோ:
எந்தப் பொதுச்சாலையிலோ, தெருவிலோ அல்லது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாக இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும், எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவையாய் இருந்தாலும் அல்லது பொதுவர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும் சென்னை அரசாங்கம் ஒப்புக்கொண்டு, அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள இலாகாக்களுக்கும் அனுப்பியது.
கையொப்பம்:
பி.எல்.மூர்.
அரசாங்கச் செயலாளர்
இந்தச் சாதனைச் சரித்திரம் படைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களையும், நீதிக்கட்சி அரசையும் நினைப்பதும், போற்றுவதும் _ நாம் நன்றியுணர்வு என்னும் பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை வெளிப்படுத்துவதாகும்.