கல்வி வளர்ச்சி நாள் : காமராசரின் மாண்புகள் தலைவர்கள் பதிவு

Uncategorized


“இந்தி வந்து குந்திக்கிடும்ன்னேன்…!”
சட்டப் பேரவையில் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகக் குழுவின் தலைவராயிருந்தார். பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக வீற்றிருக்கிறார்.
அப்பொழுது சட்டப் பேரவையிலே காரசாரமாக ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதிலே கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், எனது அருமை நண்பர் கல்யாணசுந்தரம் அவர்கள் ‘ஆங்கிலத்தைக் கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் பாடமொழியாக வைக்கக் கூடாது, அகற்ற வேண்டும்; தமிழ்தான் அரிச்சுவடியிலிருந்து முதுகலைப் பட்டப்படிப்பு வரை இருக்க வேண்டும்’’ என்று பேசுகிறார். அண்ணா முன்வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜர் அண்ணாவிடம், “என்ன தமிழ்… தமிழ்னு பேசுறீங்களே… நான் என்ன தமிழுக்கு விரோதியா…? எனக்குத் தமிழ் பிடிக்காதா…?’’ என்று கேட்டார். அதற்கு அண்ணா, “என்ன சொல்கிறீர்கள்…?’’ என்றார். உடனே பெருந்தலைவர் காமராஜர் அவருடைய உரையாடல் தமிழிலேயே, “அவங்க பேசுறாங்களே… இங்கிலீஷ் அறவே கூடாது… தமிழே எல்லா இடத்திலும் இருக்கணும்னு சொல்றாங்களே…., இங்கிலீஷை சுத்தமா எடுத்துப்புட்டா என்னாகும்னு நினைக்கிறீங்க…? இங்கிலீஷை அறவே அகற்றிட்டா அந்த இடத்திலே இந்தி வந்து குந்திக்கும்னேன்…!’’ என்று சொன்னார்.
பின்னர் சபை கலைந்தபிறகு, வீட்டிற்குத் திரும்பும்போது வழக்கம்போல அண்ணா முன்னிருக்கையிலும், நான் அவருக்குப் பின்னாலும் அமர்ந்து காரில் சென்ற கொண்டிருக்கிறோம். அண்ணா திரும்பிப் பார்த்து என்னிடம், “எவ்வளவு பெரிய மொழிப் பிரச்சினையை ஒரே வார்த்தையிலே காமராஜர் அவருடைய பாஷையிலே சொல்லிட்டார் பார்த்தியா…?’’ என்றார்.
அதாவது ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டால் அந்த இடத்திலே இந்தி வந்து உட்கார்ந்துவிடும் என்கிற பயம் பெருந்தலைவர் காமராஜருக்கு இருந்தது என்றால் அதற்குக் காரணம், இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதுதான். தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்ற அழுத்தமான எண்ணம் கொண்டிருந்த-வர்தான் பெருந்தலைவர் காமராஜர்.
– டாக்டர் கலைஞர்
«««

“இந்தக் காரணமும் அந்தக் காரணம்தான்!”
பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்கு வந்தார். ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் காமராசர் திறந்தார். ஆச்சாரியார் என்னென்ன பிழைகள் செய்தாரோ அவற்றை எல்லாம் இவர் மாற்றினார். மெடிக்கல் காலேஜில் அப்பொழுது கமிட்டி உண்டு. அந்தக் கமிட்டி ஒவ்வொரு மாணவரையும் பார்த்து “இன்டர்வியூ மார்க்’’ போடுவார்கள்.
இன்றைக்கு இருக்கின்ற நுழைவுத் தேர்வுகள் எல்லாம் அன்றைக்குக் கிடையாது. அந்த இன்டர்வியூ கமிட்டியில் பெரிய, பெரிய டாக்டர்கள் எல்லாம் இருந்தார்கள். அதற்கு 150 மார்க் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு மாணவரையும் அந்தக் கமிட்டியினர் விசாரிப்-பார்கள். அந்த மாணவருடைய குடும்பச் சூழல் என்ன? அந்த மாணவருடைய தந்தையார் படித்தவரா… இல்லையா? அல்லது கிராமத்தில் இருந்து வந்திருக்கின்றாரா? இந்தச் செய்திகளையெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கு மார்க் போடுவார்கள்.
இந்த மார்க்தான் ஒடுக்கப்பட்டவர்களை ஓரளவுக்குக் கை தூக்கிவிட்டது. இதை 150லிருந்து 50 ஆக ராஜகோபாலாச்சாரியார் குறைத்துவிட்டார். இதைக் கண்டித்து ‘விடுதலை’யில் நாங்கள் தொடர்ந்து எழுதினோம். நமது கிராமப் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால், நமது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வர வேண்டும் என்றால், ராஜகோபாலாச்சாரியார் குறைத்த இன்டர்வியூ மார்க்கை மீண்டும் 150ஆக உயர்த்த வேண்டும் என்று எழுதினோம்.
காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே உத்தரவு போட்டார். இன்டர்வியூ மார்க் 50 என்றிருந்ததை மீண்டும் 150ஆக ஆக்கினார். உடனே செய்தியாளர்கள் கேட்டார்கள். செய்தியாளர்களாக அன்றைக்கு இருந்தவர்கள் எல்லாம் யார்? ராஜகோபாலாச்சாரியார்தான் ஆட்சியிலே இருக்க வேண்டுமென்று நினைத்த உயர்ஜாதிக்காரர்கள்தான் அப்பொழுது செய்தியாளர்கள். பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் காமராசரைப் பார்த்துக் கேள்வி கேட்டார். “இன்டர்வியூ மார்க் 150 என்று இருந்ததை ராஜாஜி அவர்கள் 50 மார்க்காகக் குறைத்துவிட்டுப் போனார். நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ராஜாஜி குறைத்த 50 மார்க்கை 150 என்று ஆக்கியிருக்கின்றீர்களே… அதற்குக் காரணம் என்னவென்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்டார்கள்.
“ராஜாஜி எந்தக் காரணத்திற்காக 150 மார்க் 50ஆகக் குறைத்தாரோ அதே காரணத்திற்காகத்-தான் 50அய் 150ஆக ஆக்கியிருக்கின்றேன் _ போங்கள்’’ என்று அழகாகப் பதில் சொன்னார்.
‘அவர் அவருடைய ஜாதியினருக்காகச் செய்தார். நான் எங்கள் ஆட்களுக்காகச் செய்தேன்’ என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லோரும் புரிந்து கொள்கின்ற மாதிரி காமராசர் அவர்கள் அவ்வளவு நுணுக்கமாகப் பதில் சொன்னார்.
– தமிழர் தலைவர் கி.வீரமணி
«««


“பறையருக்குப் பரிவட்டம் கட்ட வச்சேன்!”
1954ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சரான-போது தனது அமைச்சரவையில் ஏழு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டார். மிகச் சிறந்த அறிவாளிகளையும், நிருவாகிகளையும் பார்த்துப் பார்த்துப் போட்டார். அதில் எந்தவிதமான பாரபட்சமோ, விருப்பு வெறுப்போ, ஜாதிக் கண்ணோட்டமோ காட்டவில்லை. இவ்வளவு பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் பரமேஸ்வரன் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரனைத் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் காமராஜர். அவரை அமைச்சராக்கியது மட்டுமல்லாமல், அவருக்கு “அறநிலையத் துறையைக் கொடுத்தார். ஒரு ஹரிஜனை மந்திரியாக்கியிருக்கிறாரே காமராஜர். என்ன காரணம்…? என்று பலரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
இதையே காமராஜரிடம் அந்த நாள் தலைவர்கள் சிலர் நேரடியாகக் கேட்டும் விட்டார்-களாம். உடனே காமராஜர், “ஆமான்னேன்… பரமேஸ்வரன் எஸ்.சி.ன்னு தெரிஞ்சிதான் போட்டிருக்கேன்னேன். ஹரிஜனங்களை ஒரு காலத்துல கோவிலுக் குள்ளேயே விடமாட்டேன்னுட்டான். அவுங்களையெல்லாம் கோவிலுக்குள்ளே அழைச்சிட்டுப் போறதுக்காகத்£ன் காந்திஜி ‘ஆலயப் பிரவேசம்’ போராட்டம் நடத்தினார். இப்போ சுதந்திரம் வந்திடுச்சி. நம்ம ஜனங்களை உள்ளே வந்து சாமி கும்பிட வச்சிருக்கானே தவிர, கர்ப்ப கிரகத்துக்குள்ளே போயி சாமிக்குப் பூஜை பண்ண விட்டிருக்கானா…? முதல்லே மனுஷாளைத் தொட்டா தீட்டாயிடும்னு சொன்னான். இப்போ சாமியைத் தொட்டா தீட்டாயிடும்கிறான். கர்ப்ப கிரகத்துக்குள்ளே போற உரிமை அவனுக்கு மட்டுந்தான் இருக்கு… அவன் ஒசந்த ஜாதின்னு சொல்றான். இப்போ நான் என்ன சொல்றேன்னா, ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனை மந்திரியாக்கிப்புட்டா, எந்த நாலாஞ்ஜாதியை நீ உள்ளே விடமாட்டேன்னு சொன்னியோ, அதே நாலாஞ்ஜாதிக்காரனுக்குப் பூரணகும்ப மரியாதை காட்டி, பரிவட்டம் கட்டி உள்ளே அழைச்சிகிட்டுப் போவியா இல்லியா…? பரமேஸ்வரனை மந்திரியாக்கி, ஒரு பறையனுக்குப் பரிவட்டம் கட்டி வக்கிறேன்-னேன்…’’ என்று விளக்கம் கொடுத்தார். காமராஜரின் சமூகநீதி மனோபாவத்தை நினைத்துப் பூரித்தார்கள் அந்தத் தலைவர்கள்.
– ஆர்.நல்லகண்ணு,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர்
«««

“நீங்களே பிரதமரானால் என்ன…?”
ஜவஹர்லால் நேரு இறந்து, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நேரம்; இதில், தலைவர் காமராஜரின் பங்கு மகத்தானது என்பதை நாடறியும்.
நான் மெல்ல அவரிடம் கேட்டேன். “எனக்குள்ளே ஒரு எண்ணமிருக்கு… நீங்க தப்பா நினைக்கலேன்னா அத நான் ஒங்ககிட்டே கேட்கணும்…!’’ என்றேன். தலைவர், “என்ன…?’’ என்றார்.
“யாரோ ஒருத்தர பிரதமராக்குறதுக்கு நீங்க முயற்சி பண்றீங்க… ஒங்க வார்த்தயைக் கேக்குறதுக்கு எல்லாரும் தயாராயிருக்காங்க…! இந்தியப் பிரதமரா வர்றதுக்கு தென்னிந்தியர்கள் யாருக்கும் இதுவரை வாய்ப்பும் வரலே. இந்தச் சந்தர்ப்பத்தப் பயன்படுத்திக்கிட்டு நீங்களே பிரதமரா ஆயிட்டா என்ன…? ஒரு தமிழன் பிரதமரா ஆன பெருமை உங்களாலே எங்களுக்கும் கெடைக்குமே…’’ நான் சொல்லி முடிக்கவில்லை. தலைவர் அடித்த வாய் துடைத்த மாதிரி ஆரம்பித்தார்.
“அட என்னப்பா… உங்கள ரொம்ப விவரமானவர்னு நெனச்சேன்… நீங்க என்னடான்னா… வடக்கே என்ன நடந்து-கிட்டிருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? நேரு செத்த நாள்லேருந்து அவனவனும் தான்தான் பிரதமர்னு முண்டாசு கட்டிக்கிட்டு நிக்கிறான்… மொரார்ஜி, நந்தா, சாஸ்திரி, சவான், அதுல்யகோஷ், இந்திராகாந்தி இப்படி நீண்ட ‘க்யூ’ நிக்கிது. அவங்களோடு நானும் ஒருத்தனா நிக்கணுமா…? நானும் ஆசப்படுறேன்னு தெரிஞ்சாலே போதும். அவன் எல்லாரும் ஒண்ணா சேந்துடுவான்! நான் போட்டிக்கு வெளியில நிக்கிறதாலதான் அவன் என்ன ‘அம்பயரா’ வச்சிருக்கான். நம்ம மரியாதைய நாம காப்பாத்திக்க வேணாமா… எவன் வந்தாலும் நாம சொன்னதக் கேக்கப் போறான். அது போதும்ன்னேன்.’’ என்றார்.

“முப்படைக்கும் தனித்தனி தளபதி!”
தமிழ்நாட்டின் முதலமைச்சராயிருந்த காமராஜர் ஒருமுறை டெல்லியில் பிரதமர்நேருவைச் சந்திக்கப் போகிறார். நேருவோ வழக்கமான உற்சாகத்தோடு காணப்படவில்லை; மனத்தில் ஏதோ சிந்தனை அலைபாயக் கவலையோடு இருந்தாராம். பிரதமரைப் பார்த்துப் பல்வேறு செய்திகளைப் பேசுவதற்காக ஆர்வத்தோடு போன காமராஜர், “என்னடா இவர் இப்படி உட்கார்ந்திருக்-கிறாரே… இவரிடம் எப்படி தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளைக் கேட்டுப் பெறுவது…?’’ என்னும் தயக்கத்தோடு அவரே பிரதமரிடம் ஆரம்பித்திருக்கிறார்.
“எப்பவும் கலகலப்பா இருப்பீங்க… இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு…?’’
நேரு விரக்தியோடு, “நம்ம ராணுவத் தளபதி திம்மையாவுக்கும், ராணுவ மந்திரி கிருஷ்ணமேனனுக்கும் எந்த நாளும் ஒரே தகராறா இருக்கு காமராஜ். திம்மையா கோப்புகளை மந்திரிக்கு அனுப்ப முடியாதுங்-கறார். கிருஷ்ணமேனனோ, திம்மையா தளபதியா இருக்கிறவரை, தான் மந்திரியா வேலை பார்க்க முடியாதுங்கறார். ராணுவ விஷயமா இருக்கிறதாலே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. இந்தச் சிக்கல எப்படித் தீர்க்கறதுன்னே எனக்குப் புரியலே…’’ என்றாராம்.
“இந்த ரெண்டு பேர்ல யார வச்சுக்கணும்… யாரக் கழற்றி விடணும்னு நெனைக்கிறீங்க…? என்று கேட்டார் தலைவர்.
“கிருஷ்ணமேனன் மூத்த அரசியல்வாதி; எனக்கு வாத்தியாராகவே இருந்தவர். அவர நாம விட்டுட முடியாது. திம்மையாவத்தான் ஏதாவது பண்ணியாகணும்…’’ என்றார் நேரு.
கொஞ்சம் கூடத் தயங்காமல், உடனே காமராஜ் சொன்னார், “நீங்க உடனே கேபினட் மீட்டிங்க போட்டு, திம்மையாவுக்கு கேபினட் அந்தஸ்த கொடுங்க. அவர்கூட ரெண்டு கெட்டிக்கார அதிகாரிகள ‘டெபியூட்’ பண்ணி, பணத்தையும் கொடுத்து, ஆறு மாசத்துக்கு வெளிநாடுகள்ல சுத்திட்டுவரச் சொல்லுங்க. உலகம் பூரா புதுசா வந்திருக்கிற ராணுவ தளவாடங்கள் பத்தி அவங்க ‘ஸ்டடி’ பண்ணப் போறாங்கன்னு கேபினட்ல தீர்மானம் போட்டு விட்டுடுங்க. அவுங்க போய் ‘ரவுண்டு’ அடிச்சிட்டு வரட்டும். அதுக்குள்ளே நீங்க இங்கே பண்ண வேண்டிய மாத்தத்தை-யெல்லாம் பண்ணிப் புடலாம்…’’
வியப்போடு கேட்டுக் கொண்டிருந்த நேரு, திம்மையா திரும்பி வந்ததும் அவரை எங்கே ‘அக்காமடேட்’ பண்றது…?’’ என்று கேட்டார்.
பளிச்சென்று அடித்தார் பெருந்தலைவர், “இப்போ திம்மையா இந்தியாவின் மொத்த ராணுவத்துக்கும் தளபதியா இருக்கார். இதுவே ரொம்ப டேஞ்சர். அவர் நினைச்சா ஒரே ராத்திரியிலே பிரைம் மினிஸ்டரையே ‘ஹவுஸ் கஸ்டடியில’ வச்சிப்புடலாம். அவரு திரும்பி வர்ரதுக்குள்ளே மூணு படைகளுக்கும் மூணு தனித்தனி தளபதிய நியமிச்சிடுங்க. அவரு பல்லையும் பிடுங்கிப்புடலாம்; வந்து பாத்துட்டு அவரால ஒண்ணும் முண்டவும் முடியாது. ஏகத் தளபதியா இருந்து நாட்டாமை பண்ணின ஒருத்தர் ஒரே ஒரு படைக்குத் தளபதியா இருக்க சம்மதிக்கவும் மாட்டாரு. வெளியேறத்தான் நெனப்பாரு. அமைதியா ஓய்வு கொடுத்து வீட்லே ஒக்கார வச்சிப்பிடலாம்!’’ என்று தலைவர் பேசப்பேச நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து, மகிழ்ச்சி தாள முடியாமல் காமராஜரைக் கட்டித் தழுவிக்கொண்டு…“Kamaraj… Fantastic Kamaraj…! What a brute common sense!” என்று குதித்தார்.
தலைவர் காமராஜ் சொன்னபடியே வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்த திம்மையா தானே பதவி ஓய்வு பெற்று வெளியேறினார்.
அரசியல் சதுரங்கத்தில் தனது அனுபவ அறிவை வைத்தே காய்களை நகர்த்திக் களம் கண்டார் காமராஜ்.
புத்தகத்தைப் படித்ததைவிட பூமியைப் படித்தவர் அவர்.
– எஸ்.செல்லபாண்டியன்,
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்
«««

“தவறு செய்றவன் யாரா இருந்தா என்ன…?”
ஒருநாள் நாங்கள் முதலமைச்சர் காமராஜரின் வீட்டில் இருந்தோம். அப்போது விருதுநகரிலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி வந்தார். தலைவரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தார். அதுவரை அவரிடம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். “அய்யாவோட சகோதரி மகன்கள் ரெண்டு பேர் விருதுநகரில் இருக்கின்றனர். அதில் ஒருவர் சரியில்லை. சட்டத்துக்குப் புறம்பான தகாத செயல்களில் ஈடுபடுகிறார். நாங்க கேட்டா, ‘காமராஜ் என் தாய்மாமன் தெரியுமா?’ என்று எங்களையே மிரட்டுகிறார். என்ன செய்றதுன்னே தெரியலே. நடவடிக்கை எடுக்கவும் தயக்கமாயிருக்கு. இதைத் தலைவர்கிட்டே சொல்லி, அவர் அபிப்ராயத்தக் கேக்கணும். கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க…!’’ என்றார்.
நான் உள்ளே போய்த் தலைவரிடம் விவரத்தைச் சொன்னேன். தலைவர் அந்த அதிகாரியை உடனே அழைத்துவரச் சொன்னார். அந்தப் போலீஸ் அதிகாரி உள்ளே நுழைந்ததுதான் தாமதம்.
“ஏங்க… நீங்க ஒரு போலீஸ் அதிகாரிதானே…? சட்டம், ஒழுங்கு ஒங்க கையிலதானே இருக்கு…? தப்பு செய்றவன் யாரா இருந்தாலும் பிடிச்சித் தண்டிக்க வேண்டியதுதானே… குற்றவாளியப் பிடிக்கிறதா வேணாமான்னு சீஃப் மினிஸ்டரு-கிட்ட கேக்குகறதுக்காக விருதுநகர்லேருந்து கிளம்பி வந்துருக்கீங்களான்னேன்…?
தவறு செய்றவன் யாராயிருந்தா என்ன? சட்டப்படி நடவடிக்கை எடுங்க…! என்னை மாமா, தாத்தான்னு ஆயிரம் பேர் சொல்வாங்க… ஜாதியைக் கூட சொல்வாங்க. இதையெல்லாம் காதிலே வாங்க வேண்டாம். அப்படிச் செய்யலேன்னா அந்தப் பொறுப்புக்கே நீங்க தகுதியில்லேன்னு அர்த்தம்…!’’ என்று தெளிவுபடுத்தினார் தலைவர்.
பெருமித உணர்ச்சியோடு ‘சல்யூட்’ அடித்தார் அந்த அதிகாரி.
– சூலூர் எஸ்.வி.லெக்ஷ்மணன்
«««

“அண்ணாத்துரை வீட்டுக்குத்தானே போறே…?”
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சம்பந்தம் என்கிற பழம்பெரும் காங்கிரஸ்காரர். அவர் ஒரு தியாகி. சுதந்திரப் போராட்ட வீரர். கருத்து வேறுபாட்டின் காரணமாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்து-விட்டார்.
இவர் தொடக்க காலத்திலிருந்து காமராஜருக்கும் நண்பராயிருந்தவர். காமராஜ் முதலமைச்சராகி, புகழின் உச்சிக்குப் போனபிறகு, அவரை இவர் போய்ப் பார்த்ததேயில்லை. ‘தான் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டதால் காங்கிரஸ்காரரான காமராஜரைப் போய்ப் பார்க்கலாமா… கூடாதா…’ என்னும் தயக்கமும் இதற்குக் காரணம்.
ஒருநாள், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் (கோட்டையில்) சம்பந்தத்துக்கு ஒரு வேலை ஆக வேண்டியிருந்தது. அந்த வேலையை முன்னிட்டு கோட்டைக்கு வந்தவர், மதிய உணவு நேரத்தின்போது வீட்டுக்குத் திரும்பச் செல்வதற்காக வெளியில் வந்தார், ‘சென்னைக்கு வந்த நாம் அப்படியே அண்ணாவையும் பார்த்துவிட்டுப் போகலாமே’ என நினைத்து பேருந்து நிற்கும் நிறுத்தத்திற்கு வந்து நின்றார்.
சற்று நேரத்தில் கோட்டையிலிருந்து முதலமைச்சரின் வாகனம் வெளியில் வந்தது. தியாகி நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தைத் தாண்டிய வேகத்தில், கார் சட்டென நின்றது. இவரை நோக்கிக் கார் பின்னோக்கி வந்தது. காருக்குள்ளிருந்து முதலமைச்சர் காமராஜ் வெளியே தலையை நீட்டி, “என்ன சம்பந்தம்… எப்படியிருக்கே…? சவுக்யமா…? காஞ்சிபுரத்திலிருந்து எப்போ வந்தே…? அண்ணாத்துரையப் பாக்கத்தானே போறே…! வா போகலாம்…!’’ என்றார். ஆச்சரியத்தால் அதிர்ந்து போனார் காஞ்சிபுரம் சம்பந்தம். “நாம் போகுமிடத்தைக்கூட ஊகித்து விட்டாரே மனிதர்…!’’ என்று வியந்தார்.
முதலமைச்சரின் கார் அவரையும் ஏற்றிக் கொண்டு நுங்கம்பாக்கம் அவின்யூ ரோடு நோக்கிப் பறந்தது. வழி நெடுக மிகுந்த பாசத்தோடு அவரது குடும்பத்தினர் நலம் பற்றியும், இப்போதைய அவரது நிலை பற்றியும் விசாரித்தார் காமராஜர். அண்ணாவின் வீட்டு வாசலில் அவரை இறக்கிவிட்டுவிட்டு தனது திருமலைப்பிள்ளை இல்லம் நோக்கிப் பயணமானார் முதலமைச்சர்.
கட்சி மாறிப் போய்விட்டவர் என்னும் கடுகளவு வருத்தமுமின்றி தன்னோடு அவர் உரையாடியதையும், ஒரு முதலமைச்சர் என்கிற எந்தவிதப் பகட்டுமின்றி தனது காரை நிறுத்தி அவரை அண்ணாவின் வீட்டில் கொண்டு-போய்விட்ட பெருந்தலைவரின் செயலையும் சம்பந்தம் அண்ணாவிடம் சொன்னார். அண்ணா சொன்னாராம், “அவர் மிகப் பெரிய மனிதரப்பா…! அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது…!’’ என்று.
– க.ராசாராம், முன்னாள் அமைச்சர்