– முனைவர் கடவூர் மணிமாறன்
சட்டத்தின் நல்லாட்சி நடக்க வில்லை
‘சனாதன தருமத்தின்’ ஆட்சி இங்கே
திட்டமிட்டு நடக்கிறது! நாட்டு மக்கள்
திகைக்கின்றார்! ஆளுநரின் சொற்கள் யாவும்
கட்டவிழ்க்கும் வன்முறையை! விலங்குக் கூட்டம்
கண்டபடி உளறுவதை நிறுத்தல் வேண்டும்!
நட்டநடுத் தெருவினிலே ஆடை யில்லா
நங்கையினை அழகியென் நவில்வா ருண்டோ?
வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் எங்கும்;
வெறுப்புணர்வில் புழுங்குகிறார் இளைஞர் எல்லாம்;
பாலைவனம் போல்நாட்டை ஆக்கு தற்கே
பகலிரவாய்ச் சிந்திக்கும் பதர்கள் நாட்டைச்
சோலையென ஆக்குவதாய் ஏய்த்து வென்றார்
சூழ்ச்சியிலே வென்றோர்கள் போக்கால் மக்கள்
ஆலையிலே சிக்குண்ட கரும்பாய் ஆனார்;
ஆணவமும் அதிகாரச் செருக்கும் வீழும்!
நஞ்சனையார் நாட்டுநலன் மறந்தே போனார்
நம்பியுள்ள மக்களையும் மூடர் ஆக்கி
வஞ்சகத்தை விதைக்கின்றார்; ஏற்றுக் கொள்ளா
வரிகளையும் விதிக்கின்றார் வரம்பு மீறி;
அஞ்சாமல் மக்கள்தம் எதிர்ப்பைக் கண்டும்
‘அனல்பாதை’ தனில்இளைஞர் நடப்பதற்கே
நெஞ்சினிலே ஈரமிலார் துணிந்தார்! வாழ்வில்
நேர்மையினை மிதிப்போரின் ஆட்டம் என்னே!
மடமையிலே ஊறியவர்; எந்த நாளும்
மந்திரத்தால் தந்திரத்தால் பிழைக்கும் கூட்டம்
கடமைநெறி அரிச்சுவடி அறியார்; என்றும்
களங்கத்தை மடிசுமப்பார்! ஏவல் நாயாய்த்
தடம்புரண்டு செல்வர்க்கே அடிமை ஆனார்
தனியார்க்கே எல்லாமும் தாரை வார்த்தார்
விடியலுக்கு வழிகாண வெகுண்டு நிற்போம்!
வெற்றியெலாம் விரைவினிலே காண்போம் நாமே!