தலையங்கம் : என்று ஒழியும் இந்த மூடத்தன முடைநாற்றம்?

2022 தலையங்கம் ஜுலை 01-15 2022

நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் ஏற்பட்டு கடந்த ஆண்டுகளில், சாமானிய மக்களின் _ விவசாயிகளின் _ தொழிலாளர்களின் _ அரசு ஊழியர்களின் _ இல்லத்தரசிகளின் மகிழ்ச்சிக்கோ, மன நிறைவுக்கோ வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறதா?
குடிமக்கள் மத்தியில் வெறுப்பு அரசியல் _ மத, ஜாதி அடிப்படையில் _ சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் நிம்மதியற்ற ஓர் வாழ்வை ‘நித்திய கண்டம் பூர்ண ஆயுசு’ என்ற பழமொழிக்கு ஒப்ப, நடத்திக் கொண்டிருக்கும் வேதனையான சூழ்நிலைதான் உள்ளது!
இவ்வாட்சியில் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளவர்கள், “உயர்ஜாதிக்காரர்களும்’’ கார்ப்பரேட் பெரும் திமிங்கலங்களான அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா’’ போன்றவர்களுமே என்பதைத்தான் நாளும் வரும் செய்திகள் மக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றன!

இளைஞர்கள் இராணுவத்தில் சேர்ந்து உழைக்க முன்வருபவர்களுக்குக்கூட அப்பணியை தற்காலிக 4 ஆண்டு காலப் பணி என்று குறுக்கியதோடு, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் போல அவர்கள் மதிக்கப்படுகிறார்-களோ என்ற அச்சமும் அவதியும் அவர்களை _ விரக்தியோடு வீதிக்கு வந்து போராடும் விரும்பத்தகாத நிலைக்குத் தள்ளியுள்ளது நாட்டிற்கோ, ஆட்சிக்கோ, ஒருபோதும் பெருமை தருவதாக ஆகாது!
இந்திய அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்துக் கொண்ட ஆட்சித் தலைமை முதல் ஆளும் அடி வரை, அறிவியல் மனப்பான்மைகளைப் பரப்ப வேண்டும் என்று, அது விதித்துள்ள அடிப்படைக் கடமையைச் செய்யா-விட்டாலும்கூடப் பரவாயில்லை; எதிரான நிலை அல்லவா! மூடத்தனத்தின் முடைநாற்றம் எங்கெங்கும் நாளும் வீசிக்கொண்டிருக்கிறது!
கால்பந்து விளையாட்டில் இந்தியா வெற்றிபெற ரூபாய் 16 லட்சம் கொடுத்து ஜோதிடர் நியமனமாம்!
ஜோதிடம் அறிவியலா? (Real Science) அல்லவே! மாறாக,(Pseudo Science) போலி விஞ்ஞானம் அல்லவா?
உலகக் கோப்பையை வெல்ல, இந்திய கால்பந்து சம்மேளனம் கால்பந்து விளையாட்டைப் பிரபலப்படுத்தவும், தொடர் வெற்றியைக் குவிக்கவும் என்ன செய்ய வேண்டும் _ அறிவியல் பார்வையுள்ளவர்-களானால்?

அதில் கெட்டிக்காரர்களாக உள்ள அனுபவக் களஞ்சியங்களைத் தேடிப் பிடித்து அவர்களைக் கொண்டு நம்முடைய இளைஞர்-களை _ மாணவர்களை சிறு பருவத்திலிருந்தே ஊக்கப்படுத்தி, விளையாடப் பயிற்சி கொடுத்து, கோப்பையை வெல்லத் தூண்டிடும் ஆர்வத்தையல்லவா விதைக்க வேண்டும்?
அதற்குப் பதிலாக இப்படி ஜோதிடர்களுக்கு 16 லட்சம் ரூபாய் செலவழிப்பது மகா மகா வெட்கக்கேடு மட்டுமல்ல, உலக நாடுகள் _ மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
ஏற்கனவே உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸில் நமது பிரதமர் பிள்ளையாருக்கு யானைத் தலையை வெட்டி வைத்ததைப் பற்றிப் பேசியதால், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ண வெங்கட்ராமன் தலையில் அடித்துக் கொண்டதுபோல ஒருபேட்டி கொடுத்து, இனி நான் கலந்துகொள்ள மாட்டேன் என்பதுபோல கருத்துப் பதிவு செய்தது நமக்கு _ நம் நாட்டிற்குப் பெருமையா?
ராக்கெட் ஏவுவதற்குக்கூட ஜோதிடம் பார்த்து, நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து ஏவுவது, ஆலோசனை கேட்பது குறித்து ஒரு திரைப்பட நடிகர்கூட இது ஏற்கத்தக்கதல்ல, மூடநம்பிக்கை என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கவில்லையா?
திருப்பதிக்குச் சென்று, வெங்கடாஜலபதிக்கு முன்னால் ராக்கெட்டின் முக்கிய உறுப்புகளின் மாதிரிகளை வைத்து அர்ச்சனை செய்வது என்றால் அதைவிட மகா மகா மூடநம்பிக்கை உண்டா?

படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்ற தந்தை பெரியார் கூற்று எவ்வளவு நியாயமானது பார்த்தீர்களா?
இப்படி ஒரு கீழிறக்க நிலையிலிருந்து என்று நம் நாடும், அரசும், அரசின் நேரடித் தலையாட்டும் அதிகாரிகளும் திருந்துவது என்பது நமது கவலையாக இருக்கிறது!
இது அரசியல் சட்டத்தின் பீடிகையின் (Preamble) மதச்சார்பின்மைத் தத்துவத்திற்கும் அடுத்த 51A(h) பிரிவுக்கும்கூட முரணான _ அரசியல் சட்ட விரோத நடவடிக்கை அல்லவா!
இளைஞர்கள், உண்மையான பகுத்தறிவு உள்ள விஞ்ஞானிகள், கல்வி அறிஞர்கள், விளையாட்டு நிபுணர்கள் கண்டித்து அறிக்கை விட முன்வர வேண்டும்.
இளைஞர்களை இப்படி தன்னம்பிக்கையற்ற மூடநம்பிக்கைவாதிகளாக ஆக்கிடும் அரசின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெற வேண்டியது அவசியம் -_ அவசரம்!
– கி.வீரமணி,
ஆசிரியர்