சரவண இராசேந்திரன்
வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலின் சுற்றுச் சுவரில் இந்துக் கடவுளின் உருவம் தெரிகிறது; எனவே, அதை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டில்லியைச் சேர்ந்த சில பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்-கிறார்கள்.
இந்த வழக்கை நீதி மன்றம் முதல் பார்வையிலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஏனென்றால் 1991இல் நிறைவேற்றப்-பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த சட்டம் 15 ஆகஸ்ட் 1947 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருக்கிறதோ அதை, அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தொடர வேண்டும், பாபர் பள்ளிவாசலைத் தவிர என்று கூறுகிறது.
இதை உச்சநீதிமன்றமும் பாபர் பள்ளிவாசல் குறித்த தீர்ப்பில் உறுதிசெய்துள்ளது. இதனடிப்படையில் வாரணாசி மசூதியில் இந்து கடவுள் வழிபாட்டை நடத்தவேண்டும் என்ற வழக்கைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கின்படி நீதிமன்றம் செய்ய வேண்டியது சுற்றுச் சுவரில் இந்துக் கடவுளின் உருவம் உள்ளது என்றால் அவ்வாறு உருவம் தெரிகிறதா என்று பார்க்கச் சொல்ல வேண்டும். ஆனால் நீதி மன்றம் “சுற்றுச் சுவரை ஆய்வு செய்யுங்கள்; அதையும் காணொளியாகப் பதிவு செய்து நீதி மன்றத்தில் அளியுங்கள்’’ என்று ஒரு குழுவை அமைத்து உத்தரவிடுகிறது. அதற்கும் மூன்று நாள்கள் என்று காலவரம்பும் குறிப்பிடுகிறது. மட்டுமல்லாமல் அந்தக் குழுவில் பள்ளிவாசல் சார்பாக யாரும் இல்லை.
உடனடியாக, பள்ளிவாசலின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் ஆய்வை தடை செய்யுமாறு கோரி மனு அளிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றமோ, வழக்கு குறித்த விவரங்கள் எங்களுக்கு தெரியாது, எனவே அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது, ஒரு நாள் கழித்து எடுத்துக் கொள்கிறோம் என்கிறது. ஆய்வுக்குத் தடை விதியுங்கள் என்று கோரினால் வழக்கு குறித்த முழு விவரமும் தெரிய வேண்டியது இல்லை. இது உச்சநீதிமன்றத்தின் நடுநிலையை அய்யுறச் செய்கிறது.
முதல் நாள் ஆய்வுக்கு வரும் போதே சுற்றுச் சுவரை விட்டு விட்டு பள்ளிவாசலுக்கு உள்ளே சென்று ஆய்வு செய்ய முற்படுகிறார்கள். இதற்கு பள்ளிவாசலில் இருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். எனவே, முதல் நாள் ஆய்வு செய்யாமலேயே திரும்பியது ஆய்வுக் குழு. மறுநாள் அதிக காவல் படைகளுடன் சென்று ஆய்வு செய்கிறார்கள். அதில் ஆய்வுக் குழுவாக நீதி மன்றம் தெரிவு செய்திருந்தவர்களில் ஒருவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய மகன் கலந்து கொள்கிறார். இப்படி ஆள் மாறி கலந்து கொள்ள முடியுமா என்பது குறித்து யாரும் நீதிமன்றம் உள்பட கண்டு கொள்ளவில்லை. ஆய்வை காணொளியாகப் பதிவு செய்யச் சொல்லியிருப்பதாலோ என்னவோ ஆய்வாளர்கள் மொபைல் பயன்படுத்த அனுமதி இல்லை என்று உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது நீதி மன்றம்.
ஆனால், ஆள் மாறிக் கலந்து கொண்டவர் என் தந்தைக்கு உடல்நலமில்லை என்று கூறி அங்கிருந்த வேறொருவரின் தொலை பேசியிலிருந்து படங்கள் எடுத்து ஆய்வுக்குழு உறுப்பினரான தன் தந்தைக்கு அனுப்புகிறார். அவர் மறுநாள் அந்தப் படங்களை நீதி மன்றத்தில் காட்டி சிவலிங்கம் போல் தெரிகிறது என்கிறார். இதற்கு பள்ளிவாசல் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் மறுப்பு தெரிவிக்கிறார். அவரின் மறுப்பு புறந்தள்ளப்-பட்டு அந்த இடத்தை யாரும் செல்ல முடியாதபடி சீல் வைத்து மூடுமாறும், 20 பேருக்கு மேல் தொழுகை நடத்த அனுமதி இல்லை என்றும் உத்தரவிடுகிறது நீதிமன்றம்.
நாங்கள் நியமிக்காத ஒருவர் எப்படி ஆய்வுக் குழுவில் கலந்து கொண்டார்? என்பது குறித்தோ மொபைல் ஏன் பயன்படுத்தினீர்கள் என்றோ, வழக்கிற்குத் தொடர்பே இல்லாமல் நாங்கள் நியமித்தவரின் மகன் என்ற போர்வையில் ஒருவர் குழுவோடு சென்றது குறித்து நீதிமன்றம் ஆட்சேபணை தெரிவிக்க-வில்லை.
காணொளிப் பதிவு செய்து நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றுதான் உத்தரவு. ஆனால், காணொளிப்பதிவு எதையுமே நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்காதபோது, தாங்கள் அனுமதிக்காத _ மொபைல் போன் புகைப்படத்தை மட்டுமே பார்த்து இடத்தை சீல் வைக்குமாறு உத்தரவிட்டது ஏன்? பள்ளிவாசலின் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர் அது சிவலிங்கம் இல்லை. தண்ணீர்த் தொட்டியின் நீரூற்றுக் கல் என்று கூறியதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் அது சிவலிங்கம்தான் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என எந்த விளக்கமும் நீதிமன்றம் கொடுக்கவில்லை. இது நீதிமன்றத்தின் மாண்பாகுமா?
இந்து மதம் என்ற வேதமதத்தின் வேதங்கள் எதிலும் கடவுள் உருவங்களோ, கோவில் கட்டி வழிபடும் முறையோ இல்லை.
இந்தியாவில் இருக்கும் பழமையான எந்தக் கோவிலும் பார்ப்பனிய மதத்துக்கு சொந்த-மானதல்ல. அத்தனையும் சமண பவுத்த மத கோவில்களைக் கைப்பற்றியும் இடித்தும் உருவாக்கப்பட்டவைகளே. கோவில்களில் வணங்கப்படும் கடவுளர்களில் எதுவும் ஹிந்துமதம் எனப்படும் சனாதன மதக் கடவுள்கள் அல்ல.
இங்குள்ள பண்டைய ஆசீவக மதங்களான சமணமும் பவுத்தமும் இந்துக் கோயில்களின் மீது உரிமை கோரினால் இந்த நீதிமன்றங்கள் இப்படி தீர்ப்புகள் வழங்குமா?
சுற்றுச் சுவரில் உருவம் தெரிகிறது, பக்கச் சுவரில் படம் தெரிகிறது என்று இந்துக் கோவில்களுக்கு எதிராக யாரேனும் கிளம்பி வந்தால், ஞானவாபி பள்ளிவாசலுக்கு வழங்கியது போன்று விரைந்து ஆணைகள் வழங்குமா?
பாபர் மசூதி சிக்கல்
1948இல் இரண்டு சாமியார்களால், ஒரு இராமர் பொம்மை திருட்டுத்தனமாக உள்ளே வைக்கப்பட்டதிலிருந்து தொடங்கின இச்சிக்கல்கள். தாஜ்மஹால் எங்கள் பாட்டன் சொத்து என்று ஒரு பாஜக பிரமுகர் கிளம்பி இருக்கிறார். பாபர் இடித்தார்,அவுரங்கசீப் இடித்தார் என்று இங்கே ஆயிரம் கதைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதற்கும் சான்றுகள் இல்லை. அவுரங்கசீப் இடித்தார் என்று கூறிக் கொண்டு இப்போது எதையும் உரிமை கொண்டாட முடியுமா?
அது மன்னர்கள் காலம், முடியரசு. அவர்கள் எது செய்கிறார்களோ அது தான் அங்கே சட்டம். ஒரு வாதத்துக்காக கோவிலை இடித்தார் என்று கொண்டாலும் அது சட்டப்படி செய்யப்பட்டது என்று தான் பொருள். அன்று சட்டப்படி செய்த ஒன்றை இன்று தவறு என்று சொல்ல முடியுமா? அது மன்னர் காலம், அதன் பிறகு காலனிய காலம் ஒன்று கடந்து தற்போது முதலாளித்துவ ஜனநாயக காலம் நடந்து கொண்டிருக்கிறது. அன்று இடித்தார்கள், எனவே இன்று நாங்கள் உரிமை கோருகிறோம் என்பது எந்தச் சட்டத்தின் அடிப்படையில் சரி?
பாஜகவின் தேர்தல் வெற்றியானது பாபர் மசூதி சிக்கலோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. பார்ப்பன மத அரசியல், கற்பனையாக உருவாக்கப்பட்ட ஹிந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமியர்களை எதிரியாக நிறுத்தி உருவாக்கப்பட்டது.
தங்களின் தேர்தல் வெற்றிக்காகவும், தங்கள் நிருவாகத் தோல்விகளை மறைப்பதற்காகவும் ஹிந்து அமைப்புகள் இதை தெளிவாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.
பாபர் மசூதி தீர்ப்புக்குப் பிறகு வாரணாசி, மதுரா, பிருந்தாவன், ஆக்ரா, பரிதாபாத் இன்னபிற வட இந்திய இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், இதன் மூலம் நாட்டின் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் கவலையடைந்தனர். இதோ அந்தக் கவலை உண்மையானதுதான் என்பது போல் ஹிந்துத்துவ அமைப்பினர் புறப்பட்டுவிட்டனர். மதச்சார்பின்மை என்ற சொல்லுக்கு இவர்கள் கூறும் பொருளே வேறாக உள்ளது. ஆட்சி மாற்றமே இந்த மதவாத நச்சுச் செயல்-பாட்டுக்கான மருந்தாக உள்ளது. அதைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.