கே: பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகநீதிக்கு எதிரான செயல்பாடுகள் பற்றி செய்திகள் வருகின்றன. திராவிடர் கழகம் சமூகநீதியை நிலை நாட்டுமா?
– மகிழ், சைதை
ப: அதற்காகத்தானே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திராவிடர் கழகம் போராட்டம் நடத்தி, அதில் பதிவாளர் மாற்றம் எல்லாம் கைமேல் பலன்போல கிடைத்ததே _ அருள்கூர்ந்து ‘விடுதலை’யை நாள்தோறும் படியுங்கள். படித்திருந்தால் இந்தக் கேள்விக்கு பதில் வேறு கேள்வி கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்குமே!
கே: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி சனாதனத் திமிருடன் ஆணவமாகப் பேசியதோடு, எனக்கு எதிராய் என்ன முடியுமோ செய்யுங்கள் என்று சவால் விட்டுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– முகமது, மாதவரம்
ப: தங்கள் கேள்வி சரியானது. ஆணவம் அடியோடு வீழ்த்தப்படும் காலம் விரைந்து நெருங்குகிறது!
கே3. ஒன்றிய நிதியமைச்சர் முன்னிலையில், வங்கி ஊழியர்கள் அனைவரையும் கழிசடைகள் என்று கூறிய குருமூர்த்தியை, ரிசர்வ் வங்கிப் பொறுப்பில் தொடர்ந்து அனுமதிக்கலாமா?
– அருள், திருச்சி
ப: ‘பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை’ என்பதே ஒன்றிய, மாநில அரசுகளில் இன்றுள்ள நிலைபோலும்! வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரியது.
கே: தென் மாவட்டங்களில் வளர்க்கப்படும் ஜாதிவெறிச் செயல்பாடுகளை தொடக்கத்திலேயே தகர்த்து, நல்லிணக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்வீர்களா?
– குமரகுருபரன், வேலூர்
ப: நிச்சயம் அதற்கான தனி ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத் தொடர்பணித் திட்டம் விரைவில் வகுக்கப்படும்.
கே: பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள மாநில உரிமைகளின் அடிப்படையில் ‘நீட்’ விலக்கு பெறலாம் அல்லவா?
– அமுதன், மதுரை
ப: அதை ஓர் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாகக் காட்டலாம்; அதைவிட வலுவான ஆதாரங்கள் கொண்ட ஏ.கே.ராஜன் குழு அறிக்கையே போதுமானது _ அரசியல் சட்ட ரீதியிலும்.
கே: 31 ஆண்டுகள் சிறையில் இருந்த ஒருவர் விடுதலை ஆனநிலையில், காங்கிரஸார் எதிர்ப்பது எப்படிச் சரியாகும்?
– ராம்ராஜ், தருமபுரி
ப: எல்லாம் அரசியல் பார்வை _ சிலருக்கு! நமக்கோ மனிதநேயப் பார்வை! விசாரித்துத் தீர்ப்பு எழுதிய நீதிபதி கே.டி.தாமஸ் அவர்களின் பேட்டியை-யாவது, மன்னிக்கவும் மறக்கவும் விரும்பாத அரசியல்வாதிகள் படிப்பார்-களாக!
கே: அரசின் நிதிநிலை காரணமாக அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்தி, வேலையை எதிர் நோக்கியுள்ள இளைஞர் களை நான்கு ஆண்டுகள் கூடுதலாகக் காத்திருக்க வைப்பது அநீதியல்லவா? ஓய்வுகாலப் பணிப் பயனை தவணை யாகவும் புதிதாய் பணியமர்த்தப் படுவோர்க்கு 4 ஆண்டுகள் தொகுப் பூதியமாகவும் தந்து தீர்வு காணலாம் அல்லவா?
– சிகரம், சென்னை-7
ப: உங்கள் ஆலோசனை தமிழ்நாடு அரசால் அவசியம் பரிசீலித்துச் செயல்பட வேண்டிய நல்ல அரிய யோசனை!
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு _ ‘சிகிச்சை நோயைவிடக் கொடூரமாகக் கூடாது’ என்று. அந்த வகையில் வேலைவாய்ப்புக் கிட்டாத இளைஞர் தொகை பெருகும் நிலையில், ஓய்வு பெற வேண்டியவர்களுக்குப் பதவி நீட்டிப்பு என்பது வெந்த புண்ணில் வேலைச் செருகும் விபரீத சிகிச்சை!
கே: அறநிலையத் துறை அமைச்சர் காட்டும் அதிக ஆர்வம் திராவிட மாடலை திசை மாற்றச் செய்யாமல் இருக்க, கடிவாளம் கட்டாயம் தானே?
– தியாகராஜன், விழுப்புரம்
ப: முதல்வர் செய்ய வேண்டியவற்றை நிச்சயம் செய்வார் _ எதிலும் அதிக ஆர்வம் (over enthusiasm) ஆபத்தானது-தான்!
கே: ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையே இல்லாத நிலை, அடுத்த கல்வி ஆண்டில் அவர்களின் செயல்பாட்டைச் சோர் வடையச் செய்யும் என்பது பற்றி அரசுக்கு உணர்த்துவீர்களா?
– தாமஸ், செஞ்சி
ப: கோடை விடுமுறை ஆசிரியர்களுக்கு அவசியம் தேவை. பள்ளிக்கல்வித் துறை இந்த முடிவை மறு ஆய்வு செய்தால் நல்லது; தேவையானதும்கூட!ஸீ