கலைஞரைப் போற்றுவோம்! : தலைவர்கள் போற்றும் தன்மானக் கலைஞர்

2022 ஜூன் 1-15 2022

கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்!

ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்பு-களை எல்லாம் சமாளித்து, அந்தக் கட்சியை நல்லவண்ணம் உருவாக்கி, அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கி, இன்று மகாவன்மை படைத்த காங்கிரஸை எதிர்த்துத் தோல்வியடையச் செய்த முக்கியஸ்தர்களில் ஒருவராயும் கலைஞர் இருக்கிறார். கலைஞர் நமக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்… ஒரு பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்குப் புது வா

 

ழ்வு தருபவராகிறார் நமது கலைஞர்.
– பெரியார் (1968)

கடின உழைப்பாளி கருணாநிதி. ஒரு நாளைக்கு அவர் எத்தனை மணி நேரம் தூங்குவார் என்பதை யாராவது அவருக்குத் தெரியாமல் பார்த்தால்தான் இந்தத் திறமையை அவர் பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள். என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத் தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. கருணாநிதிக்கு ஈடு கருணாநிதிதான்! அவர் மூலமாக நானும் நாடும் நிறைய எதிர்பார்க்கிறோம். இப்போது செய்திருக்கிற காரியங்களைப் போல் பல மடங்கு அதிகமான அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டியிருக்கிறது.
– அண்ணா (1968)

“எல்லோரையும் அனுசரிச்சுப் போ!’’ இதைத்தான் அடிக்கடி சொல்வார். எனக்கு அவர் வாயால் அதிகம் சொன்னது கட்சியோட வரலாற்றையும், கட்சிக்காரங்க செஞ்சிருக்குற தியாகத்தையும்தான். கட்சிக்குள்ள இருக்குற பிரச்சினைகளைப் பத்தியெல்லாமும் சொல்வார். ‘ஆனா, இதையெல்லாம் தெரிஞ்சுக்கோ, வெளியில விவாதிக்காதே!’ன்னு சொல்வார். கட்சிங்கிறது அவரைப் பொறுத்த அளவுல குடும்பம் மாதிரிதான். சின்ன வயசுலஅண்ணா பிறந்த நாள் கூட்டம் நடத்துறப்போ ஒருமுறை கொஞ்சம் பெரிசா பந்தலைப் போட்டுட்டோம். தெருவுல இருக்குற கிருஷ்ணன் கோயிலை இந்தப் பந்தல் மறைச்சுடுச்சு. அப்போலாம் எங்க தெரு பிராமணர்கள் அதிகம் வசிச்ச தெரு. எங்க குடும்ப டாக்டர் கிருஷ்ணன் _ அவரும் பிராமணர்தான் _ ‘மூணு நாளைக்கு வீட்டிலிருந்தபடி சுவாமியைச் சேவிக்க முடியாம செஞ்சுட்டான் உங்க பிள்ளை!’ன்னு தலைவர்கிட்ட சொல்லிட்டார். அன்னிக்கு சாயுங்காலம் கூட்டத்துல பேசினப்போ, “நேற்று ஸ்டாலின் கனவில் வந்த கிருஷ்ணன், ‘எல்லோரும் வீட்டிலிருந்தே என்னைக் கும்பிடுகிறார்கள், ஒரு மூன்று நாட்களுக்காவது கோயிலுக்கு வந்து கும்பிடச் செய்’ என்று சொல்லித்தான் ஸ்டாலின் இந்த வேலையைச் செய்துவிட்டார்போலும்’’ என்று ஹாஸ்யமாகச் சொல்லிச் சமாளித்த தலைவர், ராத்திரி என்னை அழைத்தார். “நமக்குக் கடவுள் மேல் நம்பிக்கை இருக்குதா, இல்லையாங்கிறது வேறு; கடவுள் நம்பிக்கை உள்ளவங்களோட நம்பிக்கையை மதிக்கிறது வேறு. அறியாமைகூட சில சமயங்கள்ல அலட்சியம் ஆகிடும்னு உணரணும்பா’’ன்னார். இது எனக்கு ஒரு பெரிய பாடமா அமைஞ்சுச்சு.
– முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின்

 

தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும் பிடிப்போடும் அயராது உழைத்து வருபவர் கலைஞர். கொள்கைப் பிடிப்பு சார்ந்து அண்ணாவோடும் சரி, என்னோடும் சரி; வாதிடுவதற்கு அவர் எப்போதுமே தயங்கிய-தில்லை. கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் முனைந்து செயலாற்று-வதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் கிடையாது. சிலருக்குப் பதவி கிடைத்தால், நாடு குட்டிச்சுவராகிவிடுகிறது. நமது கலைஞருக்குப் பதவி கிடைத்தாலோ நாடு உயர்கிறது… அண்ணா உயிரோடு இருந்தால் எதையெதை-யெல்லாம் செய்வாரோ, அதையதை-யெல்லாம் கலைஞர் செய்து முடித்துக்-கொண்டிருக்கிறார்.
– எம்.ஜி.ஆர் (1971)

பேராசிரியர் அன்பழகன்

கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. தானாகவே உருவான தலைவர். தந்தை பெரியாரால் கண்டெடுக்கப்பட்ட தலைவர். அண்ணாவால் பாராட்டப்பட்ட தலைவர். சுருக்கமாகச் சொன்னால் அன்பழகனால் ஏற்றுக்-கொள்ளப்பட்ட தலைவர். நாவலர் நெடுஞ்-செழியன் தலைமை இந்த இயக்கத்தைக் காப்பாற்றாது; கலைஞருடைய தலைமைதான் காப்பாற்றும் என்று உணர்ந்து ஏற்றுக்-கொண்டவன் நான். அண்ணாவும் கலைஞரைத்-தான் விரும்பினார். அவரைத் தவிர, வேறு யாரைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடியும்! அண்ணாவே ஏற்றுக்கொண்ட தலைவரை நான் தலைவராக ஏற்றுக்-கொண்டதில் என்ன ஆச்சரியம்!
தி.மு.க. ஆட்சி என்று சொல்லாமல் நம்முடைய ஆட்சி என்றே பெரியார் சொன்னார். “கருணாநிதி ஆட்சியில் 13 அமைச்சர்களில் 13 பேரும் தமிழர்கள். 18 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 16 பேர் தமிழர்கள். அரசியலில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சி-யிலும் நூற்றுக்கு நூறு தமிழர்கள் உள்ளனர்’’ என்று பாராட்டினார் பெரியார். தொட்ட ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை உருவாக்கியவர் கருணாநிதி. தொட்ட துறைகளில் எல்லாம் அதன் எல்லையைத் தொட்டவர். உற்ற நண்பனாகவும் உடனிருந்த நிதியமைச்சராகவும் ஆத்மார்த்தமாகச் சொல்கிறேன். ஏழைகளின் பார்வையில் இருந்து மக்களைப் பார்க்கிற தலைவர்அவர். மின் கட்டணம், பஸ் கட்டணம் ஏற்றுவதற்-கெல்லாம் அவ்வளவு யோசிப்பார். பால் உற்பத்தியாளர்களுக்குப் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்; அதேசமயம், பால் நுகர்வோருக்கு விலையை ஏற்றாமல் இருக்க என்ன வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் யோசிப்பார். மக்கள் மீது சுமையை ஏற்ற கலைஞர் ஒருபோதும் விரும்புவது இல்லை. இது எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம். அப்புறம் எங்கள் இருவருக்குமான ஆதாரச் சுருதி _ தமிழ், தமிழர் நலன். அதுவே எங்களது இணைப்புச் சங்கிலி.
தமிழர் தலைவர் ஆசிரியர்


முக்கால் நூற்றாண்டுகளுக்கு மேலான பொதுவாழ்க்கை. அரை நூற்றாண்டு காலம் கட்சியின் தலைமை; 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழ்நாடு முதலமைச்சர் முதலிய பொறுப்புகள் ஏற்று, அவற்றில் முத்திரைகளைப் பதித்தவர் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள்.
தமிழ்நாட்டின் பொதுவாழ்விலும் திராவிட இயக்க வரலாற்றிலும் நின்று நிலைத்துப் பேசப்படும் பெருமைக்குரிய பெருமகன் தலைவர் கலைஞர் ஆவார்.
தன்னை மிகமிகப் பிற்படுத்தப்பட்டவன் (எத்தனை “மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) என்று சட்டப் பேரவையிலே அறிவித்த மானமிகு கலைஞர் அவர்கள் எவரும் எளிதில் எட்டமுடியாத இமயத்திற்கு உயர்ந்தார் என்றால் அதற்குக் காரணம், யாருடனும் ஒப்பிடமுடியாத அவரின் உழைப்பு! உழைப்பு!! உழைப்பே!!!
தந்தை பெரியார் அவர்களின் சீடராக ‘குடிஅரசு’ இதழில் பணியாற்றி திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக _ பேச்சாளராகப் பரிணமித்து, இலக்கிய உலகின் எழுத்துலக வேந்தராக ஒளிவீசி, ஆட்சித்துறையில் நிகரற்ற நிருவாகத் திறமையுடன், எதிலும் விரைவாகவும் விவேகமாகவும் செயல்படும் பேராற்றலின் முழு வடிவம்தான் நம் கலைஞர் அவர்கள்.

தோழர் நல்லகண்ணு

கலைஞருடைய அரசியல் பண்பாடு, கூட்டணியோ எதிரணியோ எங்கிருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு பாராட்டுவார். அவர் ஆட்சியில் இருந்த காலங்களிலும், இல்லாத காலங்களிலும் முக்கியமான பிரச்சினைகள் பற்றி பலமுறை அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டியுள்ளார். அவர் கூறும் கருத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை என்னைப் போன்றவர்கள் கூறினாலும், செவிமடுத்து முடிவெடுக்கக் கூடியவர். காலையில் சீக்கிரமே எல்லா தினசரிகளையும் படித்துவிடும் பழக்கம் உள்ளவர் என்பதால், அவர் தொடர்பாக ஏதேனும் விமர்சனம் வைத்திருந்தால், படித்த கையோடு தொலைபேசியில் நம்மை அழைத்து விளக்கம் அளிப்பார். நாம் கூறும் கருத்து ஏற்புடையது எனில், உடனே அதை ஏற்றுக்கொள்வார். இது அரிய குணம் என்றே நினைக்கிறேன்.

எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்


என் மீது தனிப்பட்ட வகையிலும் கலைஞர் அவர்களுக்கு அபிமானம் உண்டு. நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுகூட அவ்வளவு மெனக்கெட்டார். அது தனி. விசிக முன்வைக்கும் கோரிக்கைகள் பொதுவாக ஜாதி ஒழிப்பு, தமிழ் _ தமிழர் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்பதால், எப்போதுமே உடனடிக் கவனம் கொடுப்பார். முக்கியமான இரு கோரிக்கைகளைக் குறிப்பிடலாம். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சி மன்றங்களுக்கு 10 ஆண்டு காலம் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருந்தது. ஜாதி வெறியர்களின் எதிர்ப்பே காரணம். மேலவளவு கிராமத்தில் ஜாதி வெறியர்களை மீறி தேர்தலில் நின்று வென்றார்கள் என்ற காரணத்தாலேயே தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன், அவருடன் பயணம் செய்த 6 பேர் என்று மொத்தம் 7 பேர் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அதே காலகட்டத்தில்-தான் இந்தக் கிராமங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் வேட்புமனுவே தாக்கல் செய்ய முடியாத நிலை இருந்தது. கலைஞர் மீண்டும் முதல்வரானபோது இந்தப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டினோம். பெரிய முயற்சி எடுத்து, எதிர்ப்புத் தெரிவித்த ஜாதியவாதிகளை-யெல்லாம் அழைத்துப் பேசி, அவர்களையும் வெறுப்புக்கு உள்ளாக்காமல் நெளிவுசுளிவாக, நிதானமாக அவர்களைக் கையாண்டு அங்கு தேர்தலை நடத்திக் காட்டினார். அதேபோல, அரசு சார்பில் எளியோருக்குக் கட்டிக்-கொடுக்கிற வீடுகள் மிகவும் சிறியவை என்று சுட்டிக்காட்டி, ‘தனியே சமையல் அறை, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை கொண்ட 400 சதுர அடி அளவுக்காவது வீடு அமைய வேண்டும்’ என்று நாங்கள் எங்கள் கட்சி மாநாட்டில் கேட்டபோது, அந்த மாநாட்டி-லேயே அதை நிறைவேற்றுகிற வகையில் புதிய வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தார் கலைஞர். நாங்கள் தீர்மானத்தில் பயன்படுத்திய அதே சொற்றொடரைப் பயன்படுத்தி ஒன்றிய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார். ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, ஏழை மக்கள் மீதான கரிசனம் இதிலெல்லாம் அவருக்குத் தனித்த அக்கறை எப்போதும் உண்டு.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

“நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவை, மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், இன்னொரு அவையான மாநிலங்களவை _ தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக் கையில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்’’ என்று கலைஞர் டெல்லியில் 1970இல் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசியிருந்தார். ‘சங்கர்ஸ் வீக்லி’, ‘கலைஞரின் புதிய முன்மொழிவு’ குறித்து அச்சப்படத் தேவையில்லை.
1971லேயே காங்கிரஸுடனான கூட்டணி மூலம் தேசிய அரசியலில் தி.மு.க. அடியெடுத்து வைத்துவிட்டாலும், 1988 செப்டம்பர் 17 அன்று கலைஞர் முன்னின்று உருவாக்கிய தேசிய முன்னணி, அகில இந்திய அரசியலில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.

மேனாள் மேற்கு வங்க
ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி

பெரியாரிடமிருந்து அண்ணா சுவீகரித்துக் கொண்ட திராவிட இயக்கக் கொள்கைப்படி, மத்திய அரசு என்பது மய்ய அரசுதானே தவிர, உச்ச அரசு அல்ல; அண்ணாவின் கூட்டாட்சிக் கொள்கை என்பது ஒரு தேசியக் கனவு. அண்ணாவின் மரணம் திராவிட இயக்கத்தைத் தாண்டியும் ஒரு பேரிழப்பு. என்றாலும், கருணாநிதியின் அரசியல் அண்ணாவின் அரசியலை அடியொற்றியதாக அமைந்தது. ஏழைகளுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு ஆதரவான, சாமானிய மக்களுக்கு ஆதரவான, ஜாதியத்துக்கும் மதவாதத்துக்கும் எதிரான கொள்கைகளின் வழியே ஆட்சியதிகாரத்தை அணுகுவது அந்த அரசியல்.
தேசிய அரசியல் சதுரங்கத்தால் தவிர்க்கவே முடியாதவராகத் திகழ்ந்த ராஜதந்திரி கருணாநிதி. வாய்ப்பு _ உழைப்பு இரண்டும் சேர்ந்துதான் அவருக்கு மேடையமைத்துக் கொடுத்தன.
ஆட்சியை லட்சியமாகக் கொண்டதல்ல திராவிட இயக்கம். இந்திய அரசியலில் ஒரு கட்சி ஆட்சிக்கு எதிராக திராவிட இயக்கம் கிளர்ந்தெழுந்த ‘1967 உணர்வு’ 50 ஆண்டுகளுக்குப் பின் இன்று இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் சூழலில், திராவிட இயக்கம் மீண்டும் கிளர்ந்தெழ வேண்டி-யிருக்கிறது. வடக்கை மய்யமாகக் கொண்ட ஆட்சிக்கு எதிரான, கூட்டாட்சிக்கு இசைவான அந்த உணர்வு மீண்டும் மய்யத்துக்கு வரவேண்டும். இந்தியாவின் எதிர்கால நன்மைக்காக மதச்சார்பின்மையும் கூட்டாட்சித் தத்துவமும் பாதுகாக்கப்பட, திராவிட இயக்கமும் காங்கிரஸும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
கருணாநிதி இதுநாள் வரை கட்டிக்காத்த திராவிட இயக்கத்தின் மூல உணர்வுகள் மீது எந்த மாசும் படியாமலும், கடல் கொள்ளையர்களால் அவை கைப்பற்றப்படாமலும் திராவிட இயக்கம் அதன் இளைய தலைமுறையால் கரைசேர்க்கப்பட வேண்டும். இயக்கத்தின் நிறுவனர்கள் விரும்பியபடி இந்தியக் கூட்டாட்சி என்ற துறைமுகத்தை அது சென்றடைய வேண்டும்!

இஸ்ரேலிய அறிஞர் டேவிட் ஷுல்மன்


திராவிடக் கோட்பாட்டின் தொடர்ச்சியான ஆற்றலை கருணாநிதியின் படைப்புகளிலும் செயல்பாடுகளிலும் முழுவதுமாகக் காண முடியும். பகுத்தறிவுக் கோட்பாடும் சமூகச் சீர்திருத்தம் பற்றிய ஆழமான சிந்தனைகளும் பழந்தமிழ் மரபுடன் அவருக்கு இருந்த பிடிப்பும் அவருக்குப் பக்கபலமாக இருந்தன. திராவிட இயக்கத்தின் தலைசிறந்த தலைவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்த இலக்கிய _ அழகியல் உணர்வும், பேச்சு வன்மையும் கருணாநிதியிடம் மிளிர்வதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
தமிழ்த் திராவிடக் கருத்தியல் என்பது புதிதாக வெளிப்பட்ட சுயபிரக்ஞையில் வேரூன்றியது என்பதைக் கருத்தில் கொண்டால், 21ஆம் நூற்றாண்டில் அதன் பிரதானமான பங்களிப்பு என்னவென்பதை நாம் புரிந்து-கொள்ளத் தொடங்குகிறோம் என்று அர்த்தம். பண்பாட்டைப் போலவே, அரசியலும் சிந்தனையில் தொடங்கி சிந்தனையிலேயே முடிவுறுகிறது. தான் செதுக்கிக்கொண்ட சுய_வடிவத்துடனும் தான் மீள்கண்டுபிடிப்பு செய்த தமிழின் தொன்மையுடனும் தமிழ்த் திராவிட இயக்கமானது நவீனத் தமிழ் மனதின் ஒரு குறிப்பிட்ட வடிவமாகக் காட்சியளிக்கிறது. இந்த வடிவமானது தமிழ்க் கலாச்சாரத்தின் செயலூக்கம் மிகுந்த மற்ற பாகங்களைப் போலவே தன்னைப் பிரத்யேகமானதாகக் கருதிக் கொண்டாலும், பண்-பாட்டின் நீடித்து நிலைக்கக்-கூடிய இந்த அம்சங்களைத் தன்னையறியாமலேயே தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதுவே, தமிழ் மக்களின் சிந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதன் ரகசியமாகவும இருக்கிறது!

சமூகவியல் அறிஞர் யோகேந்திர யாதவ்


கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்வை, அண்மைக்-காலத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூகநீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்காட்டும் கண்ணாடி அவருடைய வாழ்க்கை!
தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் நாட்டின் பிற பகுதியில் உள்ள இயக்கங்களுக்கு ஒரு வழிகாட்டி. அரை நூற்றாண்டாகத் தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரம் இரு திராவிடக் கட்சிகளையும் தாண்டிச் செல்லாமல் இருக்க சமூகநீதி இயக்கமே முக்கியமான காரணம். சமூகநீதிக்கான இயக்கத்தை வெற்றிகரமான அரசியல் கட்சியாக மாற்றிய முதல் தலைமுறை அரசியல்வாதிகளில் முக்கியமானவர் கருணாநிதி.
தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு 50%க்கும் அதிகமாக உயர கருணாநிதி முக்கியமான காரணம். சமூகநீதி அரசியலை அரசுத் திட்டங்களாக உருமாற்றியது அவருடைய இன்னொரு முக்கியமான சாதனை. சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுக, அதிமுக இடையில் ஆரோக்கியமான போட்டி எப்போதும் நிலவியது. இனால்தான் சமூக நலத் திட்ட அமலாக்கத்திலும் வளர்ச்சியிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னே நிற்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு திராவிட இயக்கத்தின் நிரந்தரமான பங்களிப்பு என்றால் அது, ‘இந்தி _ இந்து _ இந்துஸ்தான்’ என்ற தேசியவாதத்தை ஏற்க மறுத்து அது உறுதியாக நிற்பதுதான். கருணாநிதியின் ஆட்சியில் மாநிலஅரசு ஒருபோதும் மத்திய அரசுக்குக் கீழான அரசாகச் செயல்பட்டதில்லை. மத்திய _ மாநில உறவு தொடர்பாக அவர் நியமித்த ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்தாலும் கூட்டாட்சியை வலுப்படுத்து-வதற்கான கதவை அது திறந்தது. சுதந்திர தினத்தன்று முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவரும் அவரே! தன்னுடைய ஆட்சியையே விலையாகக் கொடுத்து நெருக்கடி நிலை அமலாக்கத்தைத் துணிவோடு எதிர்த்த முதல்வர் என்று வரலாற்றில் என்றும் கருணாநிதி நினைவுகூரப்படுவார்.

பொருளாதார ஆய்வறிஞர் ஜெ.ஜெயரஞ்சன்

ஏனைய மாநிலங்களைப் போல அல்லாமல், பசியிலிருந்து மக்களை விடுவிப்பதானது சமூக விடுதலையின் ஒரு பகுதி என்பதைத் திராவிடக் கட்சியினர் பரிபூரணமாக உணர்ந்திருந்தார்கள். உண்மையான அக்கறையோடு இந்த விஷயத்தை அணுகினார்கள். 1967இல் ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரசி’ எனும் தேர்தல் வாக்குறுதியோடு மக்களைச் சந்தித்தவர்கள் 2017இல் அந்த ஒரு ரூபாயையும் பெறாமல் குடும்பத்துக்கு 20 கிலோ அரிசியை வழங்குகிறார்கள் என்றால், இந்தச் சாதனைக்குப் பின்னுள்ள அக்கறையை எவர் புறக்கணிக்க முடியும்!
உணவு விடுதலைக்காக திமுக, அதிமுக இரு கட்சிகளும் கடந்த அய்ம்பதாண்டுகளில் ஆற்றியிருக்கும் பணி இந்திய அளவில் மகத்தானது. ஒரு பெரிய ஆய்வுக்குரிய இத்தளத்தில் இரு கட்சிகளும் மேற்கொண்ட நான்கு முக்கியமான நடவடிக்கைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு, 1996இல் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம். ரூ.40 செலவில் ஒரு குடும்பம் தனது உணவுத் தேவையின் பெரும் பகுதியைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம், உணவு சார்ந்த உற்பத்தி உறவுகளையே புரட்டிப் போட்டது. ஆண்டை-களை நம்பித் தொழிலாளர்கள் வயிறு வளர்க்க வேண்டியிருந்த காலம் மலையேறியது. உழைக்கும் மக்களின் புதிய விடுதலையால் அவர்கள் பல்வேறு புதிய பணிகளில் ஈடுபடும் சூழல் உருவானது. தமிழகத்தின் கிராமப்புறப் பொருளாதாரம் மாறியது.

பொறியியல் நிபுணர் அ.வீரப்பன்: நீர்ப்பாசன திட்டம்


நவீன நீர்ப்பாசனத் திட்டங்களை இங்கே மூன்று காலகட்டத்தவையாகப் பிரிக்கலாம். ஆங்கிலேயர் காலம், காங்கிரஸ் காலம், திராவிடக் கட்சிகளின் காலம். ஆங்கிலேயர் காலத்தில் மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு, வெல்லிங்டன், பேச்சிப்பாறை அணைகளைக் கட்டினார்கள். காங்கிரஸ் ஆட்சியில், குறிப்பாக காமராஜர் ஆட்சியில் 15 நீர்ப் பாசனத் திட்டங்கள் -_ முக்கியமான அணைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏனைய எல்லா நீர்ப்பாசனத் திட்டங்களும் திராவிடக் கட்சிகள் குறிப்பாக திமுக ஆட்சியிலேயே நிறைவேற்றப்-பட்டன.
மோர்தானா அணைக்கட்டு, ராஜாதோப்பு அணைக்கட்டு, மிருகந்தா நதி, செண்பகத்-தோப்பு, கெலவரப்பள்ளி, தும்பலஹள்ளி, சூளகிரி _ சின்னாறு, வாணியாறு, பாம்பாறு, ஆண்டியப்பனூர், வரட்டாறு, மணிமுக்தா நதி, கரியகோயில், ஆனை மடுவு, சின்னாறு, நாகாவதி, தொப்பையாறு, குண்டேரிபள்ளம், வறட்டுப்பள்ளம், சித்தமல்லி, பொன்னையாறு, குதிரையாறு, பாலாறு _பொருந்தலாறு, கொடகனாறு, சண்முகாநதி, மருதாநதி, பிளவுக்கல், ஆனைக்குட்டம், சோத்துப்பாறை, இருக்கன்குடி, கருப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கோல்வார்பட்டி, பொய்கையாறு என ஏராளமான அணைக்கட்டுகள் கட்டப்-பட்டு, நீர்ப் பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. இவை தவிர, 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய வாய்க்கால்-களும் கட்டப்பட்டன; சீரமைக்கப்பட்டன.

சண்முகநாதன்

மூணு காலகட்டங்களைச் சொல்லலாம். முதலாவது, நெருக்கடி நிலைக் காலகட்டம். கட்சிக்காரங்களைக் கொத்துக் கொத்தா போலீஸ் சிறைக்கு அள்ளிக்கிட்டுப் போனதும் அவங்களைச் சித்திரவதைக்குள்ளாக்குனதும் கட்சியை முடக்குறதுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அவரை ரொம்பப் பாதிச்சுச்சு. இரண்டாவது, இலங்கைத் தமிழர்கள் விவகாரம். வெவ்வேறு காலகட்டத்துல அது அவரைக் கடுமையாப் பாதிச்சுதுன்னாலும் இறுதிப் போர் நடந்தப்போ தவிச்சுப் போனார். ராஜிநாமா செஞ்சுடலாம்னுகூட அப்போ முடிவெடுத்தார். ‘இல்லை’, இப்போ பதவியிலேயும் கூட்டணியி-லேயும் இருந்து கொடுக்குற அழுத்தத்தைக்கூட வெளியே போய்ட்டா இலங்கைக்குக் கொடுக்க முடியாது; இலங்கைத் தமிழர்களுக்குப் பேசுறதுக்கே ஆள் இல்லாமப் போய்டும்’னு சொல்லி பலர் அதைத் தடுத்தாங்க. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ரெண்டு பேரும் உறுதியா பேசுனதாலதான் நம்பி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். ஆனா, எல்லாம் அவர் கைமீறி நடந்ததையும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையும் பார்த்தப்போ துடிச்சுப் போனார். பிரபாகரன் இறந்த செய்தி வந்த அன்னிக்கெல்லாம் உடைஞ்சுட்டார். மூணாவது, அலைக்கற்றை விவகாரம். அவருக்குத் தெரியாம பல விஷயங்கள் இதுல நடந்துட்டாலும், ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி முறைகேடுன்னு அபாண்டமா சுமத்தப்பட்ட பழியை எல்லோரும் திரும்பத் திரும்பப் பேசிப் பெரிசாக்கி, திமுகவை முடக்குறதுக்கான பெரிய சூழ்ச்சியா இதைக் கையாண்டப்போ கடுமையாப் பாதிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *