சாதனை புரிய வயதோ, வலிகளோ தடையில்லை என்பதை மீண்டும் மீண்டும் பெண்கள் நிரூபித்து புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் லட்சியத்தில் உள்ள உறுதிக்கு ஏற்ப சாதனைகளை எளிதில் படைத்து விடுகின்றனர். அதுபோன்ற சாதனைப் பெண் சங்கீதா. அவர் கடந்து வந்த பாதை பற்றிக் கூறுகையில்,
“நான் திருச்சி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கு 40 வயது ஆகிறது. எனது கணவர் அய்யப்பன் தற்காப்புக் கலை பயிற்சியாளர். கராத்தே பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வருகிறார். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சென்னைக்கு வந்தபோது எல்லாமே புதிதாக இருந்தது. கணவரின் தூண்டுதல் காரணமாக 2013ஆம் ஆண்டு கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆர்வத்தோடும், முயற்சியோடும் கற்றுக் கொண்டதால் 2016இல் பிளாக் பெல்ட் வாங்கினேன். தற்போது கணவருடன் சேர்ந்து கராத்தே பயிற்சிப் பள்ளியை நிருவாகித்து வருகிறேன்.
தாழ்வு மனப்பான்மை, பயம், சோம்பல் போன்ற எதிர்மறைக் குணங்களில் இருந்து வெளிவர, நம்மை நாமே தயார் செய்து கொள்வதற்கு கராத்தே உதவும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூகத்தில் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். பெண்கள் மனதாலும், உடலாலும் பலமானவர்கள். அவர்களின் வலிமையை தற்காப்புக் கலைகள் மெருகூட்டும். பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்வது நல்லது.
2019ஆம் ஆண்டு 24 மணி நேரம் தொடர்ந்து கராத்தே டெமாண்ஸ்ட்ரேஷன் செய்து உலகச் சாதனை செய்திருக்கிறேன். 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம், 11 கற்களை (ஒவ்வொரு கல்லும் 100 கிலோ எடை) என் மேல் வைத்து சுத்தியால் உடைத்தனர். இந்த உலகச் சாதனைகள் அனைத்தும் ‘சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்’டில் இடம் பெற்றுள்ளன. உலக அளவில் இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையைச் செய்ய வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு. இந்தச் சாதனையின் மூலம் என் கனவு நிறைவேறி-யுள்ளது. இதுவரை இம்மாதிரியான சாதனை-களை ஆண்கள் மட்டும் செய்ய முடியும் என்று கூறிவந்தார்கள். அந்தக் கூற்றை முறியடிக்கும் வகையில் என் சாதனை அமைந்தது. எனது இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவர்கள். அத்தகைய உடல்-நிலையைக் கொண்டிருந்தாலும், மன தைரியத்தோடு இந்தச் சாதனையை நிகழ்த்தினேன். இந்த உலகச் சாதனையை படைத்த முதல் பெண் நான்தான் என்பது என்னை மேலும் மகிழ்ச்சிகொள்ளச் செய்தது.
என் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், என்னுடைய சாதனை சாத்தியமாகி இருக்காது. என் கணவரின் வழிகாட்டுதலும், குழந்தைகளின் ஊக்கமும்தான் என்னை தொடர்ந்து சாதனை புரிய வைக்கிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கராத்தே பயிற்சி அளித்ததற்காக, 2017ஆம் ஆண்டு லயன்ஸ் கிளப் மூலமாக ‘எங்கள் பெஸ்ட் மாஸ்டர் ஆப் இன்ஸ்பெக்டர்’ என்ற விருதை வழங்கினார்கள். அந்த விருதை வாங்கியது பெருமையாக இருந்தது. தவிர, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைப் பெற்றிருக்-கிறேன்’’ என்கிறார் சங்கீதா. சாதனை படைக்க மன உறுதியும் விடா முயற்சியும் இருந்தால் இவரைப் போல பலரும் சாதிக்கலாம்.
தகவல் : சந்தோஷ்