பழனி முருகன் கோயில் தமிழர்களிடமிருந்து பார்ப்பனர்கள் கைக்கு மாறியது எப்படி?
பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண உருவச் சிலை சித்தர் போகர் என்பவரால் செய்யப்பட்டது. அவருடைய மரபில் வந்த புலிப்பாணி மற்றும் இதர தமிழ் ஜாதிகளைச் சார்ந்தோர் அக்கோயிலில் பூசை செய்து வந்தனர். முக்கியமாக அவர்கள் சைவ பண்டார இனத்தவர்களாக இருந்தனர்.
15ஆம் நூற்றாண்டு காலத்தில் திருமலை நாயக்கருடைய தளவாய் ராமப்பா அய்யன் மற்றும் நாயக்கர் படைப்பிரிவு வடுகப் பள்ளர்கள் பழனிக்கு வந்தனர். ராமப்பா அய்யன் ஒரு பார்ப்பனன், புலிப்பாணி பாத்திர உடையாரிடமிருந்து தீர்த்தப் பிரசாதம் வாங்கக் கூடாது என்று நினைத்தான். அதனால் அவனும் பாளையக்காரருக்கு வேலை பார்க்கும் வடுகப் பள்ளர்களும் சேர்ந்து கோயில் பூசை உரிமையைப் புலிப்பாணியிடமிருந்து பிடுங்கி, சாலிவாகன சகாப்தம் 1366, கலியுக சகாப்தம் 4578க்கு மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 16ஆம் தேதி திங்கள் கிழமையன்று அய்ந்து பார்ப்பனர்களுக்குக் கொடுத்தனர்.
1. கொடுமுடி சரஸ்வதி அய்யன்
2. மருதூர் தம்பா அய்யன்
3. நாட்டாரய்யன் கோயில் சுப்பய்யன்
4. கரூர் முத்தய்யன்
5. கடம்பர் கோயில் அகிலாண்டய்யன்
ஆகிய அய்ந்து பார்ப்பனர்களையும் வரவைத்து கொடுமுடி சரஸ்வதி அய்யனைக் குருக்களாகவும், மற்ற நால்வரையும் பூசைப் பரிசாரக நம்பிகளாகவும் நியமித்தான்.
ஆசை காட்டலும் அச்சுறுத்தலும்:
முருகனுக்கு அபிஷேகமாகி நம்பிமார்களுக்கு வரப்பட்ட நிர்மாலய சொர்ண புஷ்பங்களில் கால் பங்கைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும், சில்லறைப் பூஜை உரிமைகளும் புலிப்பாணி பாத்திர உடையாருக்குத் தரப்பட்டன. மற்ற பண்டாரங்கள் இருபத்து நான்கு பேருக்கும் சில்லறைப் பணிவிடை வேலைகள் செய்யும் உரிமைகள் தரப்பட்டன.
புலிப்பாணி பாத்திர உடையார் முன்னிலையில் நம்பிமார்கள், பண்டாரங்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களிடமிருந்து இந்த உடன்பாட்டை ஒப்புக் கொள்வதாக கட்டாய உறுதிமொழிகள் பெறப்பட்டன. இந்த உடன்பாட்டுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் காசியில் கங்கைக் கரையில் கோடி சிவலிங்கங்களைப் பிரதிஷ்டைய பண்ணியதற்குரிய பூஜாபலன்களைப் பெறுவார்கள் என்று ஆசை காட்டப்பட்டது. இந்த உடன்பாட்டுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்குரிய தண்டனையை அனுபவிப்பார்கள் என்று அச்சுறுத்தப்பட்டது.
அன்று தமிழிலேயே அர்ச்சனை
பார்ப்பனப் பூசாரிகளை நேர்மையற்ற முறையில் ராமப்பய்யன் என்ற பார்ப்பனத் தளவாய் நியமிக்கும் வரையிலும் நவபாஷாணத்தாலான முருகன் உருவச் சிலையைச் செய்த போகர் என்பவரின் வாரிசுகள்தாம் பழனி கோயிலில் பூசை செய்து வந்தனர். இவர்கள் தமிழ் மொழியில்தான் பூசை செய்து வந்தனர். தமிழ் மொழியில் பூசை செய்து வந்த கடைசிப் பூசாரி புலிப்பாணி பாத்திர உடையார் என்பவர் ஆவார்.
கொடுமுடி சரஸ்வதி அய்யன் என்பவன்தான் முதன்முதலில் சமஸ்கிருத மொழியில் பூசை செய்த பார்ப்பனப் பூசாரி ஆவான். ராமப்பய்யன் என்ற பார்ப்பானுக்குத் திருமலை நாயக்கர் அதிகாரம் நிறைந்த தளவாய் பதவியைக் கொடுத்திருந்ததால் அந்தப் பார்ப்பன வெறியன் தன்னுடைய பார்ப்பன இனத்திற்கு தன் அதிகாரத்தைக் கொண்டு செய்யக் கூடியவற்றையெல்லாம் நேர்மையற்ற முறையில் செய்தான்.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திய கதையாக ஆயிற்று. இது போலவேதான் தமிழ்நாட்டுப் பெருங் கோயில்கள் அனைத்திலும் பார்ப்பன ஆதிக்கம் புகுந்தது; சமஸ்கிருதம் நுழைந்தது. நம்மவரால் (பார்ப்பனர் அல்லாத தமிழர்களால்) கட்டப்பட்ட கோயில்களில் நம்மவரால் செய்யப்பட்ட கடவுள் சிலைகளுக்கு நம்மவரால்தான் பூசை செய்யப்பட வேண்டும். நம் மொழியான தமிழ் மொழியில் தான் அர்ச்சனை செய்யப்பட வேண்டும்.
சான்று: இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாக அமைந்த செப்புப் பட்டயத்தின் நகல் பழனி முருகன் கோயிலில் வெளியிட்டுள்ள, “பழனித் தல வரலாறும் திருக்கோயில் வழிபாடும்’’ என்ற புத்தகத்தின் 1964ஆம் ஆண்டுப் பதிப்பில் 73, 74, 75ஆம் பக்கங்களில் இருக்கிறது.
நாயக்கர்களுக்கு வேலை பார்த்த வடுகப் பள்ளர்களுக்கு நிலங்கள் கொடுத்தவர் திருமலை நாயக்கர். அந்த நன்றிக்காக 400 ஆண்டுகளாக நாயக்கர் கட்டிய மதுரை தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் இழுத்து நாயக்கர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
(தகவல்: திருவாரூர் கிருட்டினமூர்த்தி)