தகவல்கள்

ஏப்ரல் 16-31,2022

முட்டை கெடாமல் இருக்கிறதா?

அறியும் வழி!

முட்டை கெடாமல் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டால், நல்ல முட்டை மூழ்கிவிடும். பழைய கெட்டுப் போன முட்டை மிதக்கும். நாள்கள் ஆக ஆக முட்டையின் ஓட்டில் இருக்கக் கூடிய pores எனப்படும் நுண்துளைகள் பெரிதாகும். அதன்மூலம் காற்று உள்ளேபோய் எடை குறைந்துவிடும்.


 

மணமகன் தேவை

வயது 34  B.Tech.,
TCS நிறுவனத்தில் பணிபுரியும்

6 வயது பெண் குழந்தை உள்ள

விதவைப் பெண்ணுக்கு ஜாதி மத மறுப்புக் கொள்கையில் வாழ்வியலாக கொண்ட முற்போக்குக் குடும்பப் பின்னணி உள்ள

நிரந்தர வேலையில் உள்ள பொருத்தமான

மணமகன் தேவை.


 

= இந்தியாவில் காணப்படும் பெரிய நண்டுக்கு ‘கோகனட் கிராப்’ என்று பெயர். கிராமப்புறங்களில் இதனை தேங்காய் நண்டு என அழைப்பர். இதன் எடை 4 கிலோ ஆகும்.

= சுத்தமான தங்கம் என்பது 24 காரட். அதனுடைய எண் 1000. எண் 958 என்று இருந்தால் 23 காரட். எண் 585 இருந்தால் அது 14 காரட்டைக் குறிக்கும்.


 

சுண்டைக்காய்

சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். அதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியன நிறைந்துள்ளன. லேசான கசப்புச்சுவை கொண்டது. சமைத்துச் சாப்பிட்டால், சோர்வு, சுவாசக் கோளாறு நீங்கும். வயிற்றுக்கோளாறு அகலும். வயிற்றுப்புண் ஆறும்.

சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி இவை யாவும் மருத்துவக் குணமுடையவை. ரத்தக் கசிவைத் தடுக்கும். கணையம், கல்லீரல் நோய்களுக்குச் சிறந்த மாமருந்து.

காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு; மலைக்காடுகளில் காணப்படும் மலைச் சுண்டைக்காய் வற்றல் செய்ய உதவுகிறது. நாட்டுச் சுண்டையை உண்பதால் மலச்சிக்கல் நீங்கி, செரிமானக் கோளாறுகள் தீரும்.

முற்றிய சுண்டைக்காயை மோரில் போட்டு வற்றலாக்கி, குழம்பு செய்தும், எண்ணெய்யில் வறுத்தும் உண்ணலாம். பொடியாக்கிச் சோற்றுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம் ஆகியவை நீங்கும்.

சுண்டைக்காயை நறுக்கி பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், மல்லி இலை,. கறிவேப்பிலை சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் இருமல், மூலச்சூடு போன்றவை நீங்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும்.


 

முட்டையை வேகவைக்காமல்

சாப்பிடலாமா?

1% முதல் 2% வரை முட்டைகளில் salmonella எனப்படும் கிருமிகள் இயற்கையாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால் சமைக்காமல் சாப்பிட்டால் வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, சமைத்துச் சாப்பிடுவது எல்லா வகைகளிலும் சிறப்பு. சிலர் உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் 10-20 முட்டைகளை பச்சையாகக் குடிக்கிறார்கள். இதுவும் நல்லதல்ல. வெள்ளைக் கருவில் இருக்கும் avidin என்ற வேதிப்பொருள், பயோட்டின் என்ற வைட்டமினின் செயல்திறனைக் குறைத்துவிடும். பயோட்டின் சத்துக் குறைபாடு வந்தால் சருமப் பிரச்சினைகள், முடி கொட்டுதல் போன்ற

பாதிப்புகள் வர வாய்ப்புண்டு.


 

102 வயது சாம்பியன்!

தாய்லாந்து முழுவதும் 102 வயதான சவாங் ஜான்ப்ராமைப் பற்றித்தான் ஹாட் டாக்.

அண்மையில் அங்கே 100 முதல் 105 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டிகள் நடந்தன. 100 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதல் உள்பட அனைத்து போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார் சவாங்.

குறிப்பாக 100 மீட்டர் தூரத்தை 27.08 நொடிகளில் எட்டியுள்ளார். 2009ஆம் வருடம் 100 மீட்டர் தூரத்தை எட்டி உலக சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார் உசேன் போல்ட். எடுத்துக்கொண்ட நேரம் 9.58 நொடி ஒப்பிட்டு பார்த்ததில் 102 வயதில் இது பெரிய சாதனை. தினமும் 70 வயது மகளுடன் நடைப்பயிற்சி செய்வது, மனதை நேர்மறையான எண்ணங்களுடன் வைத்துக்கொள்வது, தோட்டத்தில் கீழே விழுந்திருக்கும் இலைகளைக் கூட்டிப் பெருக்குவதுதான் சவாங்கின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணம்.

தவிர, வாரம் இரண்டு முறை ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்ற தடகளப் பயிற்சிகளை மேற்கொள்கிறார் சவாங்.

இப்போது சவாங்கின் நடைப்பயிற்சி முதல் ஓட்டப்பந்தயம் வரையிலான அனைத்து வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

 


 

பூமியில் ஒரு சூரியன்

செயற்கைச் சூரியன் என்றழைக்கப்படும் டோகாமாக்  சீன அணு உலை 70மில்லியன் செல்சியஸ் டிகிரி வெப்பத்தில் 1056  நொடிகள் இயங்கி சாதனை புரிந்துள்ளது. இந்த வெப்ப நிலையில் சூரியனில் டிட்டீரியம் எனும் அணு சேர்க்கை ஏற்பட்டு அளவிறந்த ஆற்றல் உண்டாகின்றது. இதைப்போன்றே கடலிலிருந்து டிட்டீரியம் அணுக்களைப் பயன்படுத்தி பூமியிலும் மாசற்ற ஆற்றல் உண்டாக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.


 

இந்தியாவும் மகிழ்ச்சியும்!

ஆண்டுதோறும் அய்.நா. ஆதரவுடன் தனியார் அமைப்பொன்று உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. கிட்டத்தட்ட 146 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ள இந்த அட்டவணையில் ஃபின்லாந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது – அதுவும் அய்ந்தாம் முறையாக.

நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு அலகுகளை எடுத்துக் கொண்டு அந்நாட்டு மக்களிடம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு மதிப்பெண்கள் இடப்பட்டு வரிசைப் படுத்தப்படும். இதில் வழக்கம்போல அய்ரோப்பிய நாடுகளே முதன்மை இடத்தைப் பெற்றுள்ளன. கோவிட் தொற்றுக்குப் பின் பல்வேறு நாடுகளின் இடங்கள் தலைகீழாக மாறியுள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கைக்கெல்லாம் கீழே 136ஆம் இடத்தில் இருக்கிறது இந்தியா!


 

அய்ன்ஸ்டீன்

அய்ன்ஸ்டீன் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி என்றாலும் அவர் யூதர் வகுப்பில் பிறந்ததால் ஹிட்லரின் வெறுப்புக்கு ஆளானவர்.

ஜெர்மனியை விட்டு அமெரிக்க குடிமகன் ஆனார்.

2008 மே 15 அன்று லண்டனில் மேஃபேர் எனும் இடத்தில் புளும்ஸ்பரி ஏலக் கடையில் விஞ்ஞானி அய்ன்ஸ்டின் ஜெர்மனி மொழியில்  எழுதிய, எரிக்குட்கிண்ட் எனும் மெய்யறி வாளருக்கு 1954 ஜனவரி 3ஆம் தேதியிட்ட கடிதங்கள் இரண்டு லட்சம் பவுண்டுக்கு விற்கப்பட்டன.

“இந்தக் கடிதத்தை ரிச்சர்டு டாகின்ஸ் ஏலம் எடுக்க முனைந்தார், முடியவில்லை; 1,70,000 பவுண்டுக்கு ஏலம் போது.’’ என்ற தகவலை ‘தி இந்து’ ஏடு வெளியிட்டு இருந்தது.

அதில் அவர் கடவுளைப் பற்றி, “என்னைப் பொறுத்தவரையில் கடவுள் எனும் சொல் மனிதரின் நலிவின் வெளிப்பாடு என்றும், விளைவு என்றும் கருதுகிறேன்.

மத நம்பிக்கைகள் சிறு பிள்ளைகளின் மூடநம்பிக்கைகள்; மனித இனத்தின் பலவீனத்தால் உருவானது. இவ்வளவு தெளிவான நாத்திகரை கடவுள் என்னும் குப்பிக்குள் முடக்கப் பார்க்கும் மூடர்களை என்னவென்று சொல்வது.

நினைவு நாள்: ஏப்ரல் 18 (1955)


 

சார்லஸ் டார்வின்

பரிணாமக் கோட்பாடுகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சார்லஸ் டார்வின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். தன் வாழ்நாளின் பெரும்பகுதியை உயிர்களின் தோற்றம் பற்றிய ஆய்விற்காகவே செலவிட்ட மாபெரும் அறிஞர் ஆவார். ஆசியா, அய்ரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று உலகின் அனைத்து கண்டங்களுக்கும் எச்.எம்.எஸ். பீகிள் எனும் கப்பலின் மூலம் தமது ஆய்வை மேற்கொண்டு உலகில் உள்ள உயிர்கள் படைக்கப்பட்டதல்ல, பரிணாமத்தின் நீட்சியே என்று உணர்த்தி மதவாதிகளின் மண்டையில் அடித்தவர்.

அவரது பரிணாமம் குறித்த கருத்துகள் 1859இல் ‘Orgin of Species’ நூலாக வெளிவந்தவுடன் கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்திவந்த மதவாதிகள் கொதித்தெழுந்தனர். டார்வினையும் அவரது கோட்பாடுகளையும் ஏளனம் செய்தனர். 1871இல் மனிதனின் பாரம்பரியம் (The Descent of Man) என்ற நூலில் குரங்கிலிருந்து அடைந்த பரிணாம நீட்சியே இன்றைய மனித இனம்’ என்றவுடன், டார்வின் எந்தக் குரங்குக்கு பிறந்தார் என ஏளனம் செய்தனர்.

ஆனால், இன்று மரபியல் நுண்ணுயிர் தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கு அவரது கோட்பாடுகளே அடித்தளமாக விளங்குகின்றன. “கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்பதற்கேற்ப பகுத்தறிவாளரான சார்லஸ் டார்வினின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் மிகச் சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

நினைவு நாள்: ஏப்ரல் 19 (1882)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *