வாசகர் மடல்!
மார்ச் 16_31 ‘உண்மை’ இதழ் படித்தேன். அஞ்சாநெஞ்சன் அய்யா பட்டுக்கோட்டை அழகிரி (28.3.1949) அவர்களுக்கு எமது வீரவணக்கம்.
இடஒதுக்கீடு பெற ஜாதிப்பிரிவைக் கூறுக! தலையங்கத்தில் ஆசிரியர் அவர்கள், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு அனைவருக்கும் அனைத்தும் வழங்கிட, ஆதாரச் சான்றுகளாக பள்ளிக் கல்விச் சான்று சரியான ஆவணம் எனும் ஆணித்தரமான கருத்து சங்கிகளுக்கு மரண அடியாகும். அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி இடம்பெற்ற தந்தை பெரியார், முதலமைச்சர் தளபதி அவர்கள், எழுதியுள்ள கட்டுரைகள், பெண்ணால் முடியும் போன்றவை தொலைநோக்குச் சிந்தனைகளை படிப்போருக்கு உணர்வு பெருமளவுக்கு உணர்த்துகிறது.
மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய 5 மாநிலத் தேர்தல்; ஆய்வுக் கட்டுரை மிகச் சிறந்த உண்மையை வாசகர்களுக்குத் தருகிறது. இந்திய தேசிய காங்கிரஸ், வடமாநிலங்களில் தமிழ்நாட்டின் கூட்டணியைப் போல கட்டமைத்து பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இவற்றுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வலிமையான ஓர் அணியை உருவாக்கி, வளர்த்து எதிர்வரும் தேர்தலில் களம் காண இப்போதே அடித்தளம் பலமாக அமைக்க வேண்டும். எஸ்.துரைக்-கண்ணு அவர்களின் கவிதை மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.
சிந்தனைக் களம் பகுதியில் தட்டிப் பறிக்கப்படும் தமிழர்களின் வேலைவாய்ப்பு சிறப்பான புள்ளி விவரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பகத்சிங் கட்டுரை, துளசி சிறுகதை, சமூக முற்போக்கு எண்ணங்களை _ சிந்தனைகளைத் தெளிவாக _ உணர்வு-பூர்வமாகப் பிரதிபலிக்கிறது.
அய்யாவின் அடிச்சுவட்டில்… தொடர் 9.7.1998 முதல் 22.8.1998 வரையிலான ஆசிரியர் பங்கேற்ற இயக்க, போராட்ட நிகழ்வுகள், தோழர்களின் இல்ல, நிகழ்வுகள், சிங்கப்பூர் _ மலேசிய நாடுகளில் பங்கேற்று சிறப்பித்த மாநாடு _ பொதுக்கூட்டங்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை வாசகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தோடு வாசிக்கத் தந்துள்ளது.
மரு.இரா.கவுதமன், முனைவர் வா.நேரு ஆகியோரின் கட்டுரைகள் மிகுந்த பயனுள்ள தகவல்களை எமக்கு வழங்கி பயனுறச் செய்கிறது. பகுத்தறிவாளர் சுப.முருகானந்தம் அவர்கள் எழுதியுள்ள “வாழ்வியல் குறள் வெண்பா’’ புதிய சிந்தனைக் கீற்றுகளாக நம்முள் பதியச் செய்கிறது. பல செய்திகள் பகுதிகள் ரத்தினச் சுருக்கமான பயனுள்ள தகவல்களை நமக்குத் தருகிறது. நன்றி! அய்யா நன்றி!
அன்புடன்,
– ஆ.வேல்சாமி, மேற்பனைக்காடு கிழக்கு.
ஏப்ரல் 1-_15 ‘உண்மை’ இதழை வாசித்தேன். அதில் வெளியிடப்பட்ட ‘முகப்புக் கட்டுரை’ இக்காலத்திற்கு அவசியத் தேவையாகும். மத்திய அரசு கல்வியை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மதவாதத்தைப் பரப்புவதைப் பற்றி கட்டுரையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆசிரியரின் தலையங்கத்தில் வளர்ச்சிக்கு மாநில அரசுகள் செய்ய வேண்டியதை கோடிட்டுக் காட்டிச் சொல்லியிருப்பது அருமை. அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகள் ஒவ்வொன்றும் நாட்டில் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. மருத்துவக் கட்டுரை பயனுள்ள தகவல்களைத் தருவதோடு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது முக்கியமானது. சிறுகதை பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவதோடு மக்களுக்குப் புரியும் வகையில் சிறப்பானது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் மக்களுக்குப் பயனுள்ள பல செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவது சிறப்பான பணியாகும். இப்பணியைத் தொடர்ந்து செய்ய ஆசிரியர் அய்யா அவர்களை வாழ்த்துவோம். அவரின் ‘நீட்’ எதிர்ப்பு நெடும் பயணம் வெற்றி பெறத் தோள் கொடுப்போம்.
கழகத் தொண்டன்,
– சுடர் மதி
Leave a Reply