மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்
சினைப்பையில் உள்ள சினைமுட்டை, ஊக்கிநீர் தூண்டுதலால் பக்குவமடைந்து, சினைப் பையிலிருந்து வெளியேறும். வெளியேறும் முட்டை, கருமுட்டைக் குழாய் வழியே, கருப்பையை அடையும். சினைப்பையில் உற்பத்தியாகும் ஊக்கி நீர் கருமுட்டை, கருப்பையில் தாங்கும் வகையில் கருப்பை சுவர்களில் மாற்றங்களை உண்டாக்கும். இம்மாற்றங்கள் கருப்பை உட்சுவர்களில் (Endometricen) ஏற்படும். இந்த சினை முட்டை, ஆண் அணுவோடு இணைந்துதான் கரு உண்டாகும். ஒருவேளை கருத்தரித்தல் நிகழாவிட்டால் உட்சுவர் புறணி (lining) சிதைவடைந்து, மாதவிலக்காக -_ உதிரப் போக்காக வெளிப்படும். ஆண் அணுவோடு (Sperm) இணையும் நிலை சினை முட்டைக்கு ஏற்பட்டால் கருத்தரித்தல் (Fertilisation) நிகழும். கரு வளர்ச்சியடைந்து குழந்தையாக உருவாகும். ஆண் அணுவோடு இணைந்த கருமுட்டை கருப்பையின் உட்சுவரில் ஒட்டிக்கொண்டு குழந்தையாக வளர்ச்சியடையும். இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்களாக பெண்கள் பருவமடைவர். மார்புகள் வளர்ச்சியடையும். பெண்கள் உடல் வளர்ச்சி, அவர்களின் வனப்பை மேலும் அதிகமாக்கும். இரண்டாம் நிலை பாலியல் மாற்றங்கள் நிகழ ஊக்கி நீர்களே காரணமாகின்றன.
இனப்பெருக்க இயங்கியல்: (Physiology of Reproduction):
பெண்களின் இனப்பெருக்க இயங்கியலை முதலில் நோக்குவோம். பெண்களின் இனப்பெருக்கத் தகுதியைப் பெறும் பருவத்தையே ‘பருவமடைதல்’ (Menarche) என்கிறோம். பருவமடைதல் என்பது முதல் மாத விலக்கம் (Menarche) ஏற்படும் நிலைப்பாடு ஆகும். ஊக்கி நீர் சுரப்புகளால் இந்த நிகழ்வு நிகழ்கிறது. முதல் மாத விலக்கம் நிகழ்விற்கு முன் ஊக்கி நீர்கள் (Hormones) சுரப்பால் மார்பக வளர்ச்சி, அக்குள், அடிவயிறு (Auxillary, Pubic) பகுதிகளில் முடி வளர்தல் போன்றவை ஏற்படும். சினைப்பையில் சினைமுட்டைப் பைகளில் (Follicles) சினை முட்டைகள் உற்பத்தியாகும். 28 நாள்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு சினை முட்டை மட்டுமே பக்குவமடைந்து, சினை முட்டைப் பையை உடைத்துக்கொண்டு வெளியேறி, கருமுட்டைக் குழாயில் வந்தடையும். இதை “கரு முட்டை வெளிப்பாடு’’ (Ovulation) என்கிறோம். கருக்குழாயை அடைந்த சினைமுட்டை, ஆண் அணுவோடு கரு முட்டைக் குழாயில் இணைந்தால் (பக்குவமான சினை முட்டை) கருவாக உருவாகும். கருமுட்டை வெளிப்பாடு நிகழ்ந்து, இரண்டு, மூன்று நாள்களில் இந்நிகழ்வு நடைபெற வேண்டும். இந்நிகழ்வு நடைபெறாவிட்டால் சினை முட்டை உலர்ந்து, இரண்டு வாரங்களில் பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். சினை முட்டை பக்குவமடைந்து, கருமுட்டைக் குழாய்க்கு வரும்பொழுது, கருப்பையின் உட்சுவர் புறணி கருவைத் தாங்கும் வண்ணம் பருமனாக மாறும். கருத்தரிக்காத நிலை ஏற்பட்டால் கருப்பையின் உட்சுவர் புறணி சிதைவடைந்து, இரத்தக் கசிவு உண்டாகும். புறணிக்கு வரும் தந்துகிகள் (Endometrial lining Capillaries) உடைவதால் இந்த இரத்தப்போக்கு ஏற்படும். கருத்தரிக்காத உலர்ந்த சினை முட்டையும், இந்த இரத்தப் போக்கோடு வெளியேறும். கருப்பையின் உட்சுவர் புறணி மீண்டும் பழைய நிலைக்கே மாறுபாடு அடையும். இந்த நிகழ்வு (இரத்தப் போக்கு) மூன்று முதல் அய்ந்து நாள்களுக்கு இருக்கும். இதையே ‘மாத விலக்கம்’’ (Menstruation) என்கிறோம்.
“மாத விலக்குச் சுழற்சி’’ (Menstrual Cycle) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. “சினைப்பை சுழற்சி’’ (Ovariau Cycle) என்றும், “கருப்பை சுழற்சி’’ (Uterine Cycle) என்றும் இரண்டு பிரிவாக இவை அறியப்படும். கருப்பை சுழற்சி, “ஈஸ்ட்ரஜன்’’ (Estrogen) என்ற ஊக்கி நீரால் தூண்டப்படும். ஈஸ்ட்ரஜன் தூண்டுதலால், கருப்பை உட்சுவர் புறணி விரிவடையும். சினை முட்டைப் பை (Follicle) வளர்ச்சி அடையும். ஒவ்வொரு 28 நாள்களிலும், பக்குவமடைந்த ஒரு சினைமுட்டை (Ovum) சினை முட்டைப் பையைக் கிழித்துக்கொண்டு சினைப் பைகளிலிருந்து, கருமுட்டைக் குழாய்க்குச் செல்லும். இவ்வாறு “கருமுட்டை வெளிப்பாடு’’ (Ovulation) நிகழ்கையில், கருப்பை உட்சுவர் புறணி (Endometrial lining) உள்ள சுரப்பிகள் சுரப்பால் உட்சுவர் பருக்கும். இது “சுரக்கும் கட்டம்’’ (Secretory Phase) என்று அழைக்கப்படுகிறது. இதையே “சினைப்பை சுழற்சி’’ என்கிறோம். “புரோஜெஸ்ட்ரான்’’ (Progesterone) என்ற ஊக்கி நீர் இந்தக் கட்டத்தில் சுரக்கும். இப்படி பருத்து வளர்ச்சியடையும், கருப்பையின் உட்சுவர் புறணி, கரு உண்டானால் அதைத் தாங்கும் வலிமையைப் பெறும். கருவுறுதல் நிகழ்ந்தால், ஊக்கி நீர் செயல்பாடு அதிகரிக்கும். புரோஜெஸ்ட்ரான் ஊக்கி நீர், சினைமுட்டை வெளிப்பாட்டுக்குப் (Ovulation) பின், சினை முட்டைப் பையால் உற்பத்தி செய்யப்படும். கருத்தரித்தல் நிகழ்ந்து, கருமுட்டைக் குழாயிலிருந்து கரு வெளியேறி கருப்பையை அடையும். கருப்பையின் உட்சுவரில் கரு ஒட்டிக் கொள்ளும். கருப்பையின் உட்சுவரில் கரு ஒட்டிக் கொண்டதும், HCG என்ற ஊக்கி நீர் கருவால் (Embryo) உருவாக்கப்படுகிறது. இதுவே சிதைவடைந்த சினை முட்டைப் பையிலிருந்து, புரோஜெஸ்ட்ரான் உற்பத்திக்கு உதவுகிறது. பிறகு புரோஜெஸ்ட்ரான் ஊக்கி நீர், நஞ்சுக் கொடியால் (Placenta) உற்பத்தி செய்யப்படுகிறது. புரோஜெஸ்ட்ரான் தான் கருப்பைச் சுவருக்கு கருவைச் சுமக்கும் வலிமையை வழங்குகிறது. கருவுறுதல் நிகழாவிட்டால், சிதைவடைந்த சினை முட்டைப்பை, புரோஜெஸ்ட்ரான் சுரப்பதை நிறுத்திவிடும். அதனால் கருப்பை உட்சுவர் புறணி, உடைந்து, இரத்தப் போக்காக பிறப்புறுப்பின் வழியே வெளிப்படும். மாத விலக்கம் நிகழ்வு, கருவுறுதல் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தும். சினை முட்டை வெளிப்பாட்டின் (Ovulation) பொழுது கருப்பை வாய் (Cervix) மெலிவடையும். உடல் சூடு சற்று அதிகரிக்கும். (99.40குதி).
மாதவிலக்கம் முடிவுறுதல் (இறுதி மாத விலக்கம்) (Menopause)
பெண்களின் மாதவிலக்கம் வயது முதிர்ச்சியின் விளைவாக (சுமார் 50 வயதில்) நின்றுவிடும். சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜன் சுரப்பு முழுமையாக நின்றுவிடுவதால் இது நிகழ்கிறது. மாத விலக்கம் இறுதியாக நின்று விட்டால், பெண்ணால் கருத்தரிக்க முடியாது. இயற்கையாக உற்பத்தியாகும் இந்த சுரப்புகள் நின்றுவிடுதலால், உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். நெஞ்சு படப்படப்பு(Palpitation), உடல் சூடாதல் (Hot Flashes), இரவு நேரங்களில் திடீரென வியர்த்தல் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்புதல் போன்றவை நிகழும். பெண்கள் பலர் இந்த நிலையில் மனத்தளவிலும் பாதிக்கப்-படுவர். (Psycological disturbances) மனத்தளர்ச்சி நோய்கள், நீரிழிவு நோய், தன்னுடல் தாக்கு நோய்கள்(Thyroid diseases, Diabetes Mallitus, Auto-Imune diseases) போன்றவற்றால் சிறிய வயதில் மாத விலக்கம் நின்றுவிடும். சினைமுட்டைப் பை ஊக்கிநீர் (Follicular stimulating Hormone – FSH), லுயிட்னைசிங் ஊக்கி நீர் (Luteinizing Hormone – LH) அளவீடுகள், சிறிய வயதில் ஏற்படும் மாதவிலக்க நிற்றலை வெளிப்படுத்தும்.
மாதவிலக்க முன் நிகழ்வு:(Premenstrual Syndrome-PMS)
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கத்திற்கு முன்பு சில அறிகுறிகள் உண்டாகும். மாதவிலக்கத்திற்கு, ஏழு நாள்களுக்கு முன் இவ்வறிகுறிகள் தோன்றும். மாதவிலக்கம் முடியும்வரை அறிகுறிகள் தொடரும். உடலியல், மனவியல் முறைகளிலும் இப்பாதிப்புகள் உண்டாகும். முகப்பரு, வயிறு உப்பசம், களைப்பு, முதுகு வலி, மார்பு வலி, அடிவயிற்றில் கடுமையான வலி, தலைவலி, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, மனத் தளர்ச்சி, எரிச்சல், கவனக்குறைவு போன்ற அறிகுறிகளில் ஒன்றோ அல்லது, பல அறிகுறிகளோ பெண்களுக்குத் தோன்றலாம்.
(தொடரும்…)