சிந்தனைக் களம் : கருநாடகா மேகேதாட்டுவில் அணை கட்டமுடியுமா?

ஏப்ரல் 16-31,2022

சு.பழநிராசன்

ஒருங்கிணைப்பாளர், சமவெளி விவசாயிகள் இயக்கம்

அண்மையில் கருநாடக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை  கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக கருநாடக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு 2007 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், அதனை சில மாற்றங்களோடு ஏற்றுக்கொண்ட 2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் அவமதிக்கும் அடாவடித் தனமாகும். இந்த அறிவிப்பைக் கண்டித்தும், ஒன்றிய அரசு மேகேதாட்டுவில் அணைகட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்பிற்குரியது. இதன் மீதான விவாதத்தில் பங்கு கொண்ட   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும், கருநாடகாவின் இந்த சட்ட விரோத அணைகட்டும் முயற்சியை நிச்சயம் முறியடிப்போம் என்று உறுதியாகவும் அழுத்தமாகவும் அறவித்ததையும் தமிழ்நாடு விவசாயிகள் மகிழ்வோடு வரவேற்-கிறார்கள். ஆனாலும் கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நாங்கள் இந்த அணையைக் கட்டியே தீருவோம் என்று தொடர்ந்து அடாவடியாகப் பேசிவருகிறார். ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தமிழ்நாடு சம்மதம் இன்றி இது சாத்தியமில்லை என்று கூறுவதற்குப் பதிலாக இரு மாநிலங்களும் இதைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று மழுப்புகிறார். ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் பா.ஜ.க. இருந்தாலும், காங்கிரஸ் இருந்தாலும் அவர்கள் கருநாடக அரசியல் ஆதாயத்திற்காக காவிரிச் சிக்கலில் எப்பொழுதும் அந்த மாநிலத்திற்குச் சாதகமாகவே இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் சட்டமும் நீதியும் தமிழ்நாட்டிற்குச் சாதகமாக இருப்பதால் மேகேதாட்டுவில் கருநாடகா அணையைக் கட்ட முடியாது, முடியவே முடியாது என்பதே உண்மை. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

5.-2.-2007இல் வெளியான காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின் பிரிவு பதினொன்றின் படி (ஙீமி) “எந்த மேற்பாசனப் பகுதி மாநிலமும், கீழ்ப்பாசனப் பகுதி மாநிலங்களுக்கு, அட்டவணைப்படுத்தப்பட்ட கால இடை வெளியில் அனுப்பவேண்டிய நீரின் அளவைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. இருப்பினும் தொடர்புடைய மாநிலங்கள் தங்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்திக்-கொண்டு, ஒழுங்காற்று ஆணையத்தின் சம்மதத்-தோடு நீரை அனுப்பும் நடைமுறையில் மாற்றம் எதுவும் செய்து கொள்ளலாம்’’ இந்த விதியின்படி, தமிழ்நாட்டின் சம்மதம் இன்றியும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இசைவு இல்லாமலும், கருநாடகா எந்த ஒரு சிறு நடவடிக்கையையும்கூட காவிரி ஆற்றில் மேற்கொள்ள முடியாது.

இந்த விதியையும் உள்ளடக்கிய காவிரி நடுவர் மன்ற ஆணையை உச்சநீதிமன்றத்தின் 16.2.-2018 தீர்ப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. அது செய்த ஒரே முக்கிய மாற்றம் தமிழ்நாட்டிற்குக் கருநாடகா ஒவ்வொரு நீர் ஆண்டும் தரவேண்டிய நீரை 192 டிஎம்சி.யிலிருந்து 177.25 டிஎம்சி.யாக அநியாயமாகக் குறைத்ததுதான். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து 18.-5.-2018 அன்று உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது. அதனடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டன.

இந்தப் பின்னணியில்தான் கருநாடகா மேகேதாட்டுவில் ரூ.9000 கோடி செலவில், சுமார் 5200 ஹெக்டேர் நிலப்பரப்பில், 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட, 400 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனோடு, ஒரு பெரும் அணையைக் கட்டும் முயற்சியில் இறங்கி, அதற்காக அண்மையில் ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த 67 டிஎம்சி.யில் பெங்களூரு குடிநீர்த் தேவை வெறும் 4.75 டிஎம்சி மட்டுமே. எனவே, அணைகட்டுவதன் நோக்கம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கீழும், கபினி அணைக்குக் கீழும் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து காவிரியில் கலக்கும் மழைநீர் முழுவதையும் தமிழ்நாட்டிற்குச் செல்லாமல் தடுத்து கருநாடகாவின் புதிய விளைநிலங்களுக்கு மடை மாற்றம் செய்வதே. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீரையும் கணக்கில் கொண்டால்தான் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள 177.25 டிஎம்சி நீரே கிடைக்கும். வெள்ளக்கால உபரி நீரைத் தேக்கும் அளவிற்கு தற்பொழுது தமிழ்நாட்டு ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு, 2018க்குப் பிறகு கடலில் கலக்கும் நீர் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்திற்காக கருநாடகா 2018இல் அடிப்படை சாத்தியக்கூறு அறிக்கையை ஒன்றிய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஒன்றிய நீர் ஆணையம் அதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கையைச் (DPR) சமர்ப்பிக்குமாறு கருநாடகாவை அறிவுறுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்போதைய அஇஅதிமுக அரசு 2018இல் உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்பட இரண்டு வழக்குகளைத் தொடுத்தது. அணைக்கு எதிரான தமிழ்நாட்டின் கருத்தைப் பதிவு செய்துகொண்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நோட்டிஸ் அனுப்பிய உச்சநீதி-மன்றம், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்கவில்லை. கருநாடகா ஜனவரி 2019இல் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து ஒன்றிய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அது அந்த அறிக்கையை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு இதர மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பி வைத்துள்ளது.

இந்த விரிவான திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பி இந்த அணைத்திட்டத்தை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் 27.-8.-2021 அன்று தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவன்றி, கருநாடகா திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்த உடனே, தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இந்தத் திட்டத்தினால் சுமார் 5000 ஹெக்டேர் வனவிலங்கு சரணாலயக் காடுகள் நீரில் மூழ்கி அழிந்தும், யானைகள் வழித்தடம் அடைக்கப்-பட்டும், பல கிராமங்கள் நீரில் மூழ்கியும் சுற்றுச் சூழலுக்குப் பெருத்தப் பாதிப்பு ஏற்படும் என்று கருதி, தானே முன்வந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஆராய ஒரு கமிட்டியை நியமித்தது. இதை எதிர்த்து கருநாடக அரசு டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்விற்கு முறையீடு செய்தது. அந்த டெல்லி முதன்மை அமர்வு, திட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருப்பதைக் காரணம் காட்டி அதன் மண்டலத் தீர்ப்பாயத்தின் முடிவை நிராகரித்து சுற்றுச்சூழல் ஆய்வுக் குழு அமைக்க வேண்டியதில்லை என்று தீர்ப்பளித்தது. டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்-தின் இந்த முடிவை எதிர்த்தும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் 11.-8.-2021 அன்று முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

எனவே, மேகேதாட்டு அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் பல வழக்குகள் உச்சநீதி-மன்றத்தில் நிலுவையில் உள்ளன. கருநாடகாவின் விரிவான திட்ட அறிக்கையின் மீது இதர மாநிலங்களின் கருத்தை அறிய, அந்த அறிக்கையை ஒன்றிய நீர் ஆணையம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி சுமார் மூன்று ஆண்டுகளாகிவிட்டன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதன் பல கூட்டங்களில் இந்த அறிக்கையை விவாதப் பொருளாக எடுத்துக்-கொள்வதற்கே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து கருநாடகாவின் முயற்சியைத் தொடர்ந்து முறியடித்து வருகிறது. கேரளாவும், புதுச்சேரியும்-கூட திட்ட அறிக்கையை விவாதிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கருநாடகாவின் முயற்சியைத் தடுத்துவருகின்றன. 2022 பிப்ரவரி 7 அன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் இந்த அணைத் திட்டத்தை சுற்றுச்சூழல் வல்லுநர் குழுவிற்கு அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு, ஒன்றிய நீர் ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆகியவற்றின் ஒப்புதல்கள் தேவை என்று கூறியிருக்கிறார்.

சுருக்கமாக, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மீறி, அதன் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தமிழ்நாடு அரசின் வழக்குகளையும் மீறி, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களின் ‘வீட்டோ’-வையும் மீறி, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்தையும் மீறி, கருநாடகா மேகேதாட்டுவில் அணைகட்ட முடியாது. முடியவே முடியாது. கபிணி, ஹேமாவதி, ஹெரங்கி போன்ற காவிரியின் கிளை ஆறுகளில் கருநாடகா அணைகள் கட்டிய 1970களில் இதுபோன்ற காவிரி நடுவர் மன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் அந்தத் தீர்ப்புகளைச் செயல்படுத்தும் கட்டாயத்தில் ஓர் ஆணையமும் இருக்கவில்லை. ஆனால், இப்போது அப்படிச் செய்ய இயலாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *