முனைவர் கடவூர் மணிமாறன்
தேன்தமிழில் பிள்ளைகட்குப் பெயர்கள் வைப்போம்;
திராவிடர்நாம் என்பதிலே பெருமை கொள்வோம்;
வான்போலும் பரந்தமனம் வாய்த்த நாமோ
வைக்கத்தின் போர்மறவர் அய்யா நோக்கில்
ஏன்? எதற்காம்? எப்படியென் றெல்லாம் கேட்டே
ஏற்புடைய அறிவார்ந்த வீரர் ஆனோம்!
கூன்விழுந்த பூணூலார் நடிப்பை ஏய்ப்பைக்
கூர்மதியால் என்றென்றும் எதிர்ப்போம் நாமே!
நம்கையால் நம்கண்ணைக் குருடாய் ஆக்கும்
நயவஞ்சர் கைக்கூலி பலரும் ஆனார்;
தம்சிறப்பை உயர்மான மரபை எல்லாம்
தாமெண்ண மறுக்கின்ற தடியர் ஆகிக்
கும்மிருட்டில் தவிப்போராய் ஆனார்; எந்தக்
கொள்கையுமே இல்லாராய்த் தடுமாற் றத்தால்
நம்மவரின் மாண்பினையே தடுக்க எண்ணும்
நரிக்கூட்டம் வாலறுந்து நடுங்கச் செய்வோம்!
பகுத்தறிவை மறந்தவனோ மாந்தன் அல்லன்;
பதராவான்; மக்களுளே பதடி ஆவான்;
நகும்படியோர் இழிசெயலைக் கண்டும் நாணான்!
நற்குமுக நல்லறத்தை என்றே காப்பான்?
வகுத்துரைத்த மனுதர்மத் தொன்மக் குப்பை
வரவேற்போன் திராவிடனா? தமிழன் தானா?
இகழ்ச்சியினைப் புகழ்ச்சியென எண்ணு கின்ற
எட்டப்பர் குடிலரினை எதிர்த்து நிற்போம்!
ஒன்றுக்கும் உதவாத மதத்தின் பித்தர்
ஒவ்வொன்றாய் உரிமைகளைப் பறிக்கக் கண்டும்
நன்றியிலாப் பிறவியென இருத்தல், என்றும்
நம்மைநாம் மூடரென ஏற்ப தொக்கும்!
முன்வினையை, கணியத்தை ஊழை எல்லாம்
முன்மொழிந்து பிதற்றுகிற மூடர் கூட்டம்
என்றென்றும் நமைவெல்லப் போவ தில்லை!
இனமான முரசறைவோம்; எழுவோம்! வெல்வோம்!