பெண்ணால் முடியும்!: தடகளப் போட்டியில் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை!

ஏப்ரல் 16-31,2022

சென்னை நேரு விளையாட்டரங்கில் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் கலந்துகொண்டு, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிச் சென்று, இலக்கை 14:6 நொடிகளில் கடந்து, தங்கப் பதக்கத்தினை வென்றார் நந்தினி கொங்கன். சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. மனிதவள நிருவாகம் இறுதியாண்டு படிக்கும் இவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் வெள்ளி வென்று, தடகள விளையாட்டுகளில் வெற்றி மங்கையாக உலா வருகிறார். அவரது வெற்றிப் பயணத்தைப் பற்றிக் கூறுகையில், “எங்கள் பள்ளியிலும் எப்போது விளையாட்டு தினம் வந்தாலும் அதற்கான போட்டியில் கண்டிப்பாக நான் பங்கு பெறுவது வழக்கம். பங்கு பெறுவது மட்டுமில்லாமல், பரிசும் கண்டிப்பாக வென்றுவிடுவேன். ஆனால் எங்களின் பள்ளியில் நான் படிக்கும் போது 14, 16 வயதுக்கு உட்பட்டோருக்கென 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவில்லை. அதற்காக போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வந்தேன். இதில் தேசிய அளவில் பங்கு பெற்று பரிசும் பெற்றிருக்கிறேன்.

அந்தச் சமயத்தில் தான் என்னுடைய கோச் நாகராஜ் மற்றும் பி.டி. மாஸ்டர் காளிதாசன் இருவரும், என்னை 100 மீட்டர் தடை தாண்டுதல் (Hurdles) போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னாங்க. எனக்கும் அதில் ஆர்வம் இருந்ததால் மேலும் என்னை ஊக்கப்படுத்தினர். அதனால் பத்தாம் வகுப்பில் படிக்கும் போதிலிருந்தே தடை தாண்டுதல் போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தேன்.

போட்டி நெருங்கும் சமயங்களில் பயிற்சிகளில் கொஞ்சம் மாறுபடும். ஸ்டார்ட்டிங் ப்ளாக்சில் இருந்து புறப்பட்டு பர்ஸ்ட் ஹர்டில்சை தாண்டுதல், ஜிம்மில் வெயிட் அதிகமாக சேர்த்து குறைவான ரெப்டேஷன் செய்தல், டெக்னிக் வொர்க்-அவுட்டில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வேன்.

நான் போட்டியில் ஜெயிச்சதைவிட, அதிகமா தோல்வியைச் சந்தித்து இருக்கேன். அதற்காக நான் துவண்டுவிடவில்லை. கண்டிப்பாக என்னாலும் முடியும் என்ற வைராக்கியத்தோடு அடுத்தடுத்த போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறுவேன். பத்தாவது படிக்கும்போது ராஞ்சியில் நடந்த ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். ஜனவரி மாதம் என்பதால் பயங்கர குளிர் இருந்தது. நான் இவ்வளவு குளிர் இருக்கும்ன்னு எதிர்பார்க்கல. அது பற்றித் தெரியாமல், சாதாரண உடைகளை எடுத்துப் போயிருந்தேன். 18 நாள்கள் தனியா இருந்தேன். சாப்பாடு பிடிக்கல. ஹோம் சிக் வந்துவிட்டது.

ஆனாலும் மன உறுதியை இழக்காமல் போட்டியில் கலந்து கொண்டேன். முதலாவதாக வந்தேன். அரை இறுதிப் போட்டியில் 10ஆவது ஹர்டில்சைத் தாண்டும்போது கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று கை தட்டினார்கள். கீழே விழுந்ததால் கை தட்டுகிறார்கள் என நினைச்சேன். இருந்தாலும் காயத்தைப் பொருட்படுத்தாமல் எழுந்து ஓடி, ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றேன். அதில் 15:1 செகண்டில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றேன்.

இதுவரைக்கும் மாநில தேசியப் போட்டிகள், சீனியர் நேஷனல்ஸ் எனப் பல போட்டிகளில் கலந்து கொண்டு, 15 மெடல்கள் வென்றுள்ளேன். தேசியப் போட்டிகளில் மட்டும் 3 தங்கம், 7 வெள்ளி, வெண்கலம் ஒன்று வென்றுள்ளேன். என்னுடைய இந்த வெற்றிக்கு அப்பா கொங்கன், அம்மா காந்திமதி, கோச் நாகராஜ் சார், கல்லூரி நிருவாகத்தினர் என எல்லோரும் முக்கிய காரணம். அடுத்து இரண்டு விதமான இலக்குகளைச் சாதிக்க வேண்டுமென நினைத்துள்ளேன். முதலாவது 13:50 செகண்டுகளில் ஓடி, ஆசிய விளையாட்டுக்கும், 13:8 செகண்டுகளில் ஓடி காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற வேண்டும். அடுத்து 2024ஆ-ம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற வேண்டும்’’ என்றார் நந்தினி _ நம்பிக்கையுடனும் விடாமுயற்சி-யுடனும்.ஸீ

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *