வரலாறு படைத்த வைரநெஞ்சம்!
கி.வீரமணி
கவிஞர்கள் என்றால் அவர்கள் கடவுளைப் பற்றித்தான் பாடிட வேண்டும்; தெய்வீகத்தைத்-தான் துதித்திட வேண்டும்; பழமையைத்தான் பாய்ச்சிட வேண்டும் என்ற இருட்டில் சிக்கி தடுமாறிக் கிடந்த தமிழுலகத்தில் பகுத்தறிவு ஒளிபாய்ச்சி, புதுமையை வரவேற்று பழமையைச் சாகடித்து, தனித்ததோர் பாதை வகுத்து, சமுதாயப் புரட்சிக்கு விதைகளைத் தூவி, கருத்துப் புரட்சிக்குக் காரணமாக இருந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வாராது வந்த மாமணியாவார்.
பகுத்தறிவு வால் நட்சத்திரம்
காளி நாக்கிலே எழுதியவுடன் கவி பாடத் தொடங்கியோர், கடவுள் அடியெடுத்துக் கொடுக்க கவி பாடி அதனைத் தொகுத்து முடித்தவர் என்றெல்லாம் கதைகள் அளந்த நாட்டில், மக்களின் சிந்தனைக் கூட்டுக்கு இரும்புப் பூட்டு போட்டுப் பூட்டிவைத்து, அவர்களை கடவுள், மத, ஜாதிப் புரட்டுகளில் மெய்மறக்கச் செய்யும் வண்ணம் பாடி, ‘ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்’, ‘கங்கையார் சடைக் கரத்தார்க்கு அன்பராகில்’ புண்ணியம் எய்துவர் என்று, பழமைக்கு ஆணி அடித்தே பழக்கப்பட்ட புலவர்கள் உலகில், தனித்ததோர் பகுத்தறிவு வால் நட்சத்திரமாக புரட்சிக்கவிஞர் வந்தார்.
தனக்கென ஒரு புதுப் பரம்பரை
எவருக்கும் அஞ்சாத சிங்கமாய், பாடினார்; எழுதினார்; சமுதாய இழிவுகளைச் சாடினார். இவர் மனம் புண்படுமே; அவர் தயவு நமக்குக் கிட்டாதே என்று கிஞ்சித்தும் எண்ணாமல் எழுதினார்! காலத்தை வென்றவராக அறிவின் -திருத்தூதராக அவர் தமிழ் இலக்கியத்தில் தனித்ததோர் புதுமை சகாப்தத்தைப் படைத்தார்; தனக்கென ஒரு பரம்பரையை (பாரதிதாசன் பரம்பரையை) உருவாக்கினார்!
குவிக்கும் கவிதைக்குயிலான அவர் பழமையைச் சுட்டெரிக்கும் அனல் பிழம்பாகப் பேனாவைப் பயன்படுத்தினார்!
இருட்டறையில் உள்ள உலகம்
‘நாயும் வயிற்றை வளர்க்கும் வாய்ச்-சோற்றைப் பெரிதென்று நாடலாமோ,
ஏ பாடகர்காள்’’ என்று கேட்டு தன்மான உணர்வூட்டினார். “மாடுகளும் வழக்கத்தால் செக்கைச் சுற்றும் மடையர்களும் இயற்றிடுவர் கடவுட் பாடல்’’ என்ற தாக்கு பக்தி போதை ஏறிய புலவர் உலகத்தினை ஓர் உலுக்கு உலுக்கியது!
“இருட்டறையில் உள்ளதடா உலகம், ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!’’ என்று மக்களை நோக்கிக் கேட்டார்; இன்னமும் ஜாதி இருக்கிற தென்பானை விட்டு வைத்திருக்கிறீர்களே! உங்களுக்கு வெட்க-மில்லையா? என்று ஓங்கி அறைந்து சொன்னார்!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பான அவரது கவிதைகள் விசை ஒடிந்த தேகத்தில் வன்மை சேர்த்தன; வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டின!!
தந்தை பெரியார்தம் ஆயுதச்சாலை
நெஞ்சில் நினைப்பதைச் செயலில் நாட்டுதல் நீசமன்று; மறக்குல மாட்சியாம் என்று கூறிய அவர், தந்தை பெரியார்தம் சமுதாயப் புரட்சிக் கருத்துகளைக் கவிதைகளாக வார்த்தெடுத்து, கருத்துப் போருக்கு வற்றாத ஆயுதங்களைத் தரும் தொழிற்சாலையானார் அவர்!
பணம், புகழ், பெருமை என்பதை எண்ணினால் அவரும் ஆரியக் கூலியாம், கம்பனைப்போல, ஆழ்வாராகி மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசும் இந்நாட்டில், முதற் பாவலாராகி இருப்பார். ஆனால், அவரோ அதை விரும்பாது சமுதாயத்தின் விடுதலையை விரும்பி, அதற்கெனக் கிடைத்த ஏச்சு, பேச்சு, கல்லடி, சொல்லடி, செருப்பு வீச்சு இவற்றை ஏற்றும், எள் மூக்கு அளவுகூட அவர் கொண்ட கொள்கையினின்றும் சிறிதும் நழுவவோ அழுவவோ இல்லை.
நேரில் கண்ட வரலாறு
பல்லாண்டுகட்கு முன் புதுவையில் நடைபெற்ற நமது இயக்க மாநாட்டின் வெளியே “வாத்தியார்’’ (இப்படித்தான் கவிஞரை புதுவையில் அழைப்பார்கள்) நடந்து செல்லுகிறார்கள், வைதீகர்களும் கதர்சட்டை அகிம்சா வீரர்களும், ‘பாரதிதாசன் ஒழிக’ எனக் கூச்சலை ஓங்கி முழங்கி செருப்புகளை எடுத்து வீசினார்கள். அஞ்சாது அயராது அவரோ அயலவர் எதிர்ப்புக்கு அணையா விளக்கென அமைதியாகச் சென்று கொண்டுள்ளார்! இது சிறுவனாக இருந்த நிலையில் நான் நேரில் கண்ட இயக்க வரலாற்றில் மறக்க முடியாத காட்சியாகும்!
கூனன் நிமிர்வான்; குருடன் விழி பெறுவான்
அதே கவிஞருக்கு அம்மாநில அரசு _ தி.மு.கழக அரசு _ பெருமை செய்து, அவர் பெயரால் கல்லூரி நிறுவி, நினைவுச் சின்னமாக அவர் வீட்டை வாங்கி, அவருக்கு அஞ்சல் தலை வெளியிட டெல்லி அரசினை வற்புறுத்தும் நிலை 25 ஆண்டுகட்குப்பின் _ இன்று உருவாகியுள்ளது! இதை அவர் அன்று எதிர்பார்த்திருப்பாரா?
சுயமரியாதை கொள்தோழா! – நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!’’
என்று அடியெடுத்து,
“உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் – நீ
உலகினில் மக்கள் எல்லாம் சமம் என்பாய்!
துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் – என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!’’
என்று புதிய அறம்பாடிய அஞ்சாநெஞ்சன் அல்லவா அவர்!
“உழைக்காத வஞ்சகர் தம்மை – மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றா?
விழித்திருக்கும் போதிலேயே நாட்டில்
விளையாடும் திருடரைச் சாமி என்கின்றார்
அழியாத மூடத்தனத்தை ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் – இவர்
முதலெழுத்தோதினும் மதியிருட்டாகும்’’
என்று வெட்டு ஒன்று, துண்டு இரண்டெனப் பாடியது புரட்சி இல்லை என்றால் வேறு எது புரட்சி? அவரது கவிதை வரிகளைப் படித்தால் கூனன் நிமிருவான்; அறிவுக் குருடன் விழி பெறுவான். அத்தகையவரே புரட்சிக் கவிஞராக இருக்க முடியும்!
தன்பெண்டு தன் பிள்ளை சோறு, வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டான்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம்
தொன்னை உள்ளம்! ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்!
-_ மனிதர்களில் இப்படி வகை பிரித்துக் காட்டி, பொதுநல உணர்வுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடியவர் புரட்சிக்கவிஞர் இல்லையானால் வேறு எவர்தாம் புரட்சிக்கவிஞர்?
பாரதியைத் தூக்கிச் சாப்பிட்டவர்
அன்பின் காரணமாக அவர் பாரதிக்குத் தாசனே ஒழிய, தகுதியில், எழுத்து ஆற்றலில் பாரதியைத் தூக்கிச் சாப்பிட்டவர் ஆவார்!
“ஆயிரம் உண்டு சாதி – ஆனால்
அன்னியர்புகல் என்ன நீதி?’’
என்றுதான் வெண்டைக்காய்த்தனம் வெளி-யாகக் கேட்டார் பாரதி! பரட்சிக்கவிஞரோ படரும் சாதி நோய்க்குப் படை மருந்தெனக் கிளம்பி, சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே _ அவனை இன்னமும் விட்டு வைக்கலாமா?’’ என்ற புரட்சி எரிமலையைக் கக்கினார்!
‘தனி ஒருவனுக்கு உணவு இல்லையென்றால்
ஜகத்தினை அழித்திடு வோம்!’
என்றுதான் பாரதி பாடினார்! புரட்சிக்-கவிஞரோ, சீரிய பகுத்தறிவுவாதியான படியால் அறிவியல் நோக்குடன் காரண காரியக் கண்ணோட்டத்துடன்.
“கூழுக்கு ஒருவன் குந்தி அழுதிட ஆளும்
கோலை முறித்திடுவோம்’’
என்று எங்கே, எதில் கைவைக்க வேண்டுமோ அங்கே அதைச் சுட்டிக்காட்டினார்!
தாலாட்டிலும் வீரம்
குழந்தைகட்குத் தாலாட்டுப் பாடுகையில் கூட, புதுமைக் கருத்துகளை புரட்சிக் கருத்துகளைப் பாடி நீடு துயில் நீக்க வந்த நிலாவானார் அவர்!
“வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப்பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்ட வந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு
‘எல்லாம் அவன் செயலே’
என்று பிறர்பொருளை
வெல்லம் போல் அள்ளி
விழுங்கும் மனிதருக்கும்
காப்பார் கடவுள் உமைக் கட்டையில்
நீர்போகு மட்டும்,
வேர்ப்பீர், உழைப்பீர்
என உரைக்கும் வீணருக்கும்
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்ட வந்த
தேனின் பெருக்கே, என்செந் தமிழே கண்ணுறங்கு!
என்று பாடிய அவர், பெண் குழந்தையை நோக்கிப் பாடுகையிலும்,
எல்லாம் கடவுள் செயல் என்று தொடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமை செயவந்தவளே,
வாயில் இட்டுத் தொப்பைவளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயில் என்று காசு தரும் கொள்கை தவிர்ப்பவளே
சாணிக்குப் பொட்டிட்டு சாமி என்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்து நீ கண்ணுறங்கு!
என்று பாடினார். பிஞ்சு உள்ளத்தில் கடவுள் நஞ்சைப் புகுத்திய பழமை மாற்றப்பட்டு புதுமைக்குரல் கேட்டது!
புதிய சமுதாயம் அமைக்கப் பாடியவர்
அது மட்டுமல்ல, பொருள் பெறுவதற்காக எவரையும் போற்றிப் புகழ்ந்து கவிபாடிப் பெருமை சேர்ப்பதே புலவர்கள் இயல்பு என்றிருந்த அக்கால உலகிருட்டைத் தலைகீழாக்கி, ‘எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்’ என்று சூளுரைத்த கவிஞர் கொள்கையுள்ளத்தை எவராவது எளிதில் மறக்க முடியுமா?
எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி
நடக்கட்டும் இந்த வையகம்
கல்லார்க்கும் கல்வி நல்கா கசடர்க்கும் தூக்குமரம்
அங்கே உண்டாம்!
என்று பாடியதோடு,
ஏற்றத்தாழ்வு பேதப்பெரும் பள்ளங்கள் நிறைந்த காடாக விளங்கும் இந்தச் சமூகத்தில் பல்லாண்டுகளுக்கு முன்னரே,
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
‘இதுஎனதே’ன் னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
‘ஒருபொருள் தனி’ எனும் மனிதரைச் சிரிப்போம்
என்று பாடியது புதிய சமுதாயம் உருவாவதற்காகப் பாடிய ‘புதுமைப் புலவர்’ அவர் என்பதைக் காட்டும்!
அவரது புரட்சி வரிகளை, புதுமைக் கருத்துகளை, புகழ் மணக்கும் நெறிகளை ஏடெல்லாம் எழுதினாலும் அடங்காது; அடங்கவே அடங்காது.
பார்ப்பன விளம்பரம் இல்லை
பிறப்பினால் பாரதி பார்ப்பனரானதினால் ‘மகாகவி’ தேசியக் கவி ஆனார்; அவருக்குத் தரப்படும் விளம்பரங்கள் அவருக்கு எடுக்கப்படும் விழாக்கள் இவருக்கில்லை. ஏனெனில், ஜாதியின் ஆணிவேரை அரித்தன இவரது எழுத்துகள். பார்ப்பனப் புரட்டினை உடைத்தன இவரது பாக்கள். பகுத்தறிவுத் தேனைக் குழைத்தன, ஊட்டின. என்றாலும் மக்கள் கவிஞராக, சமுதாயம் வாழ்வதற்கு தான் பெற்ற புலமையினைப் பொதுமைப்படுத்திய அவர் சமுதாயச் சிற்பியாக என்றென்றும் காட்சி அளிப்பார்!
புரட்சிக்கவிஞரை இருட்டடிக்கவோ, திரித்துக் கூறவோ, எவராலும் முடியாது! வரலாற்றில் பொன்னேட்டை இணைத்த அவரது புகழ் ஓங்குக! வருக அவர் காண விரும்பிய ஜாதியற்ற சமுதாயம்!
( ‘விடுதலை’ – 21.4.1970)