முகப்புக் கட்டுரை : ஆங்கிலத்திற்கு மாற்றா இந்தி? அமித்ஷா பேச்சுக்கு எதிராய் ஆர்த்தெழும் மாநிலங்கள்!

ஏப்ரல் 16-31,2022

மஞ்சை வசந்தன்

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பும் அதற்கு எதிரான போராட்டமும் தொடங்கியது _ இந்தியைப் பாடத்திட்டத்தில் கட்டாய மாக்கியதை எதிர்த்துத்-தான்.

1938ஆ-ம் ஆண்டு இராஜகோபாலாச்சாரி தலைமையிலான சென்னை மாகாண அரசாங்கம் இந்திக் கல்வியை நுழைத்தபோது அதற்கு எதிராகத் தமிழறிஞர்-களும் தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தாரும் நடத்திய போராட்டம்தான் முதல் மொழிப் போர்.

இந்த மொழிப் போராட்டத்தின் உச்சத்தில்-தான் 1939 செப்டம்பர் 11ஆ-ம் நாள் தந்தை பெரியாரும் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும் “தமிழ்நாடு தமிழருக்கே!’’ என்று முழங்கினர். மொழிப் போராட்டம் என்பது வெறும் பாட மொழி தொடர்பானது மட்டுமல்ல; அது இனம் தொடர்பானது, தமிழ் மொழிக் காப்பு தொடர்பானது.

இரண்டாம் மொழிப் போர் என்பது, 1965ஆ-ம் ஆண்டில் தமிழக மாணவர்-களும் -_ மக்களும் இந்தியை ஆட்சிமொழி ஆக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து, ஆவேசத்துடன் போர்க்களம் கண்டதைக் குறிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆ-ம் பகுதியில் உறுப்பு 343 இந்தியை இந்தியாவின் அலுவல் மொழி ஆக்குகிறது. அலுவல் மொழி ஆவதாலேயே இந்தி எளிதில் ஆட்சி மொழியாகவும் ஆகிவிடும். அதனால், இச்சட்டப் பிரிவை எரிக்கும் போராட்டத்தை திமுக நடத்தியது, மாணவர் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். போராட்டம் நடைபெற்ற அய்ம்பது நாளும் அரசின் கொடிய அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் மாண்ட பொழுது, “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’’ என்றுதான் முழங்கினர். ஆக, உயிரினும் மேலாக தமிழ்மொழியைத் தமிழர்கள் மதிக்கின்றனர்.

மொழியின் அதிகாரம் என்பது வெறும் மொழியின் அதிகாரம் மட்டுமன்று. மொழி ஒடுக்குமுறை என்பது வெறும் மொழி ஒடுக்குமுறை மட்டுமன்று, அது ஓர் இனத்தின் மீதான தேசிய ஒடுக்குமுறை ஆகும். எனவே, இந்தியை அரியணை ஏற்றுவதற்கு எதிரான போராட்டம் என்பது இந்தியப் பேரரசின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், புறநிலையில் தமிழ்த் தேசிய இறைமை மீட்புக்கான போராட்டமும் ஆகும்.

உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்-களிலும் ஆங்கிலம் மட்டும்தான் ஆட்சிமொழி என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. இனி ஆங்கிலத்தோடு இன்னும் இரு மொழிகளைச் சேர்த்து உயர் நீதித்துறையில் மும்மொழிக் கொள்கை கடைப்-பிடிக்கப்படுமா? கல்வி மொழியையே எடுத்துக் கொண்டால், இந்தியத் தொழில் நுட்பக் கழகம் (அய்அய்டி), இந்திய மேலாண்மைக் கழகம் (அய்அய்எம்). அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) போன்ற கல்விக் கழகங்-களில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழி என்ற நிலை ஒழிக்கப்பட்டு மூன்று பயிற்றுமொழிகள் அறிமுகம் செய்யப்படுமா? தொடக்கக் கல்வியில் தாய்மொழிக் கல்வி, அதுவும் இயன்ற அளவுக்கு என்பதுதான் புதிய தேசியக் கல்விக் கொள்கை  2020.

ஆக, எப்படிப் பார்த்தாலும் மும்மொழிக் கொள்கை என்பது ஒரு மோசடியே.

தந்தை பெரியார் 1938ஆ-ம் ஆண்டிலேயே மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி சிறைத் தண்டனை பெற்று, பெல்லாரி, கோயம்புத்தூர் சிறைச்சாலைகளில் பெரும் துன்பங்களை அனுபவித்தார். அதே காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணா மற்றும் ஏராளமானவர்கள் சிறை சென்றனர். 1938-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி தனது பிறந்த நாளன்று, 14 வயதிலேயே கலைஞர் கருணாநிதி தமிழ்க்கொடி ஏந்தி மாணவர் படையுடன் திருவாரூர் வீதிகளில் “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே! வாருங்கள் எல்லோரும் நாட்டினரே!’’ என்று முழக்கமிட்டார். 1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்றிவிடும் முயற்சி நடந்தபோது, எழுந்த போராட்டத்தால் அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இந்தியாவில் அலுவல் மொழியாக நீடிக்கும் என்று உறுதியளித்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான்,  தமிழ்நாட்டில் 1967இ-ல் தி.மு.க. ஆட்சி அமைய வழிவகுத்தது. நேருவின் உறுதிமொழி காங்கிரஸ் ஆட்சிக் காலம் வரை காப்பாற்றப்பட்ட நிலையில், 2014க்குப் பின் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது முதல் அந்த உறுதிமொழி கேள்விக் குறியாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இப்போது திடீரென பல்வேறு மொழிகளை பேசும் மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது பெரிய எதிர்ப்பை நாடு முழுவதும் உருவாக்கியுள்ளது. மேலும் அவர், இந்தியை அலுவல் மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற அலுவல் மொழி நடைமுறைப்படுத்தும் குழுவின் (Official Language Implimentation Committee) 37ஆவது கூட்டத்தில்தான் அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளார்.

பல்வேறு மாநில மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளும்போது ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதும், ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவிகித நிகழ்ச்சி நிரல்கள் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுவதும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நிய நாட்டு மொழியான ஆங்கிலம், இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக  தொடர்ந்து நீடிக்கலாமா? இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும், தீர்ப்புகளும் தொடர்ந்து ஆங்கிலத்தில் செய்யப்படலாமா? இந்திய மாநில அரசுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களும், மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசாங்கத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பும் ஆங்கில மொழியில் நிகழலாமா? என்பது ஹிந்தி ஆதரவாளர்களின் வாதம்.

அதாவது, ஆங்கிலம் ஆங்கிலேயர்கள் எனப்படும் பிரிட்டிஷ்காரர்களின் மொழி. அவர்கள் நம்மை ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆட்சியிலிருந்து நாம் போராடி விடுதலை பெற்றோம். அதனால் அவர்கள் மொழியை நாம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்பது அவர்கள் வாதம். சரி, அப்படி ஆங்கிலம் கூடாதென்றால் எதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டால், அதிக மக்கள் பேசும் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பார்கள். இது பகுத்தறிவுக்குப் பொருந்தாத, நடைமுறை சாத்தியமற்ற, வெற்று உணர்ச்சி கோஷம்.

இது நடைபெறாது என்று தெரிந்தபிறகும் அமித்ஷா இவ்வாறு பேசியிருக்கிறார்.

இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழி, உச்ச நீதிமன்ற

த்தின் வழக்காடு மொழி, ஒன்றிய அரசாங்கம் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான தொடர்பு மொழி, பல்கலைக்கழக உயர்கல்வி, ஆய்வுக்கல்வி மொழி ஆகியவை இனி எல்லா காலங்களிலும் ஆங்கிலம்தான் என்று நாம் திட்டவட்டமாக முடிவு செய்வதுதான் நமது தேசத்தின் எதிர்காலத்துக்கு நல்லது. முந்நூறு ஆண்டுகளாக இந்தியர்களால் பயிலப்பட்டு, சிறப்பாகப் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழியும் இன்று இந்திய மொழிகளில் ஒன்று என்றாகிவிட்டது. பல கோடி மக்கள் அலுவலகத்திலும், இல்லத்திலும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

ஒரு மருத்துவருக்கு சிகிச்சை சார்ந்து சிக்கல், அய்யம் எழும்போது, அவர் உலகிலுள்ள பிற நாடுகளில் அந்தப் பிரச்சினையை எப்படி அணுகினார்கள் எனத் தெரிந்துகொள்ள நினைக்கிறார். அவரால் உடனடியாக ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரை-களை, நூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்ய முடியும், படிக்க முடியும். அமெரிக்காவில் என்ன நடந்தது என்று ஒரு கட்டுரை கிடைக்கும்; ஜப்பானில் என்ன நடந்தது என்று ஒரு புத்தகமே கிடைக்கும். எல்லாம் ஆங்கிலத்தில். உலகின் தொடர்பு மொழியாக, அறிவு சேகர மொழியாக ஆங்கிலம் உள்ளது. பெரியாரைக் குறித்து ஆங்கிலத்தில் நூல் எழுதினால் அதை வங்காளியும் படிப்பார், ஜப்பானியரும் படிப்பார்; மலையாளியும் படிப்பார், அமெரிக்கரும் படிப்பார்; பஞ்சாபியும் படிப்பார், ஜெர்மானியரும் படிப்பார். அதாவது இந்திய அரசியல் வரலாறு என்ற அறிவுத் துறையில் ஆர்வமுள்ளவர் எங்கிருந்தாலும் படிப்பார்கள்.

இத்தகைய உலகளாவிய அறிவுச்சூழல் மட்டுமின்றி, இந்திய ஒன்றிய அரசின் முக்கிய பணியான அயலுறவு, வர்த்தகம் போன்ற-வற்றிற்கு ஆங்கிலம்தானே உதவும்? அயல்-நாட்டினருடன் வர்த்தக பேரம் பேசுவதும் ஆங்கிலத்தில்தானே செய்ய வேண்டும்? ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தி என்பது வெற்றுப் பெருமிதம்தானே தவிர, நடைமுறைப் பயன் எதுவும் இல்லை.

ஆங்கிலம் மேட்டுக்குடியினர் மொழி, எளிய மக்கள், ஏழைகள் பயில்வது கடினம் என்பதெல்லாம் பழைய கருத்துகள். கடந்த முப்பதாண்டுகளில் பெருமளவு பல தரப்பட்ட சமூகப் பின்னணி உள்ளவர்களும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதையும், உலகின் பல நாடுகளுக்குப் பணி செய்யப் போவதையும், கணினியில் பல நாட்டவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதையும் காண்கிறோம்.

ஆங்கிலம் அந்நிய மொழி என்ற பழைய கருத்துகளை விட்டுவிட்டு அது உலக அறிவுத் தேடலின், உலகளாவிய தொடர்பின் மொழி என்பதைப் புரிந்துகொண்டு பள்ளிக் காலத்திலேயே ஆங்கில மொழித் தேர்ச்சியில் உரிய கவனத்தைச் செலுத்தினால் அதுவே இந்திய ஒன்றியத்தின் வளமிக்க எதிர்காலத்தை உறுதி செய்யும். தாய்மொழிக் கல்வி, ஆங்கில மொழித் தேர்ச்சி ஆகிய இரண்டும் மாணவர்களுக்கு பள்ளியில் இணைந்தால் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்கள் தேவைக்கேற்ப ஆங்கில அறிவைப் பயன்படுத்திக் கொள்வர்.

அமித்ஷாவிற்கு எதிராய் ஆர்த்தெழும் மாநிலங்கள்!

தமிழ்நாடு:

தமிழர் தலைவர் கி.வீரமணி

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ஆங்கிலத்தை ஆட்சி மொழியிலிருந்து அறவே நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஹிந்தி மொழியையே பயன்-படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது, நாட்டில் ஒரு பெரும் புயலையே கிளப்பி வருகிறது.

மொழி உரிமையில் கை நுழைப்பது, கொழுந்துவிட்டு எரியும் தீக்குள் விரலை விட்ட விபரீதம் ஆகிவிடும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

இந்தியாவை விட்டு மத, கலாச்சார அடிப்படையில் பிரிந்த அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, வங்காள தேசம் என்ற ‘பங்களாதேஷ்’ உருவானதற்கு எது அடிப்படை? வங்க மொழியை – அந்நாடு புறக்கணித்துவிட்டு, பெரும்பான்மை என்ற பெயரில் உருது மொழியை கிழக்கு வங்க மாநிலத்திலும் திணித்ததுதானே!

இதை மறந்து ஒரே நாடு, ஒரே மொழி (சமஸ்கிருதம், ஹிந்தி), ஒரே மதம் (பார்ப்பனர்களின் ஹிந்து மதம்), ஒரே கலாச்சாரம் (சமஸ்கிருத, ஆரிய வேத கலாச்சாரம்) என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்பை – நாட்டின்மீது திணிப்பது, நாட்டின் ஒற்றுமை – ஒருமைப்பாட்டுக்கு உலை வைப்பதாகாதா? ‘புருட் மெஜாரிட்டி’ என்று அதிகப் பெரும்பான்மை என்ற மணல்மேட்டில் கட்டடம் கட்டி மகிழலாமா? உள்துறை அமைச்சர்; ஒன்றிய ஆட்சியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். முதலிய பா.ஜ.க. பிரதமர் மோடி தலைமையில் ஜனநாயகம்மூலம் ஆட்சியைப் பிடித்து, அதனை அதிவேகமாக எதேச்சாதிகாரமாக ஆக்கி வருகின்றவர்கள் வரலாற்றின் சில பக்கங்களைப் புரட்டிப் படிக்க வேண்டும்.

1938இல் தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தைப் புகுத்துவதற்கு முன்னோட்டமாக ஹிந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்கினாரே, முன்னாள் கவர்னர் ஜெனரலும், சென்னை மாகாணப் பிரதமருமான (Premier) ஸ்ரீமான் சி.இராஜகோபாலாச்சாரியார். அப்போது பழைய சென்னை மாகாணத்தில் _- தமிழ்நாட்டில் மூண்ட எதிர்ப்பு அலை ஓயாமல்தான் உள்ளது என்பதை அறிந்ததோடு, அவரே தலைகீழாக மாற்றத்திற்குள்ளானாரே! Hindi Neverஹிந்தியை ஏற்கமாட்டோம்; English Ever எப்போதும் ஆங்கிலம்  என்று முழங்கினாரே!

அவரைவிட இன்றைய ஒன்றிய ஆட்சியினர் ஆளுமையில், அனுபவத்தில் மேம்பட்டவர்களா?

‘ஹிந்தியை பெரும்பான்மை மக்கள் பேசுகிறார்கள்’ என்ற வாதம் அறிவுப் பூர்வமானதா? பன்மொழிகளும், பல கலாச்சாரங்களும் உள்ள ஒரு கூட்டாட்சியில், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ (Unity in Diversity) காண இப்படிப்பட்ட மொழித் திணிப்புகள் எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பதை ஆட்சி – அதிகாரம் படைத்துள்ள மத்தியில் உள்ளவர்கள் உணராமல், கூரைமீது ஏறி கொள்ளிக்கட்டையைச் சுழற்றலாமா?

அண்டையில் உள்ள சிங்கப்பூர் நாட்டை ‘நவீன சிங்கப்பூர்’ ஆக்கிய அதன் தந்தை ஆளுமையின் அதி உச்சமான லீ குவான் யூ அவர்கள், ‘இருமொழிக் கொள்கை’ என்று தனது அனுபவங்களை _- ஆட்சி மொழிப் பிரச்சினையை அணுகிய விதம்பற்றி ஓர் அருமையான நூலை எழுதியுள்ளார். அதில் அவர் விளக்கிய கருத்துகளை அமித்ஷாக்கள் படித்து கற்கவேண்டும்.

‘’சிங்கப்பூர் நாட்டில் பெரும்பாலும் சுமார் 75 சதவிகித மக்கள் சீனர்கள்தான். ஆனால், மொழிப் பிரச்சினை ஓர் உணர்ச்சியைத் தூண்டும் பிரச்சினை. இதில் பெரும்பான்மை, சிறுபான்மை பார்க்காமல், அனைத்து மக்களின் உணர்வுகளையும் மதிக்கவேண்டும்.

சிங்கப்பூர் நாட்டில் சீனமொழி, மலாய் மொழி, தமிழ் மொழி, யூரேஷிய மொழி (ஆங்கிலம்) போன்ற பல மொழிகள் உள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் ‘மொழிகள்’ என்ற தலைப்பில் 22 மொழிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மொழிக்கு மட்டும் ஏன் இப்படி சிம்மாசனம்?

தமிழ்நாடு மட்டும் ஹிந்தியை எதிர்க்கவில்லை _ பல மாநிலங்களிலும் அவர்கள் மொழி உணர்வை உரிமையெனக் கருதிடுகிறார்கள். இந்த உண்மையை  ‘டில்லியில் ஆளும் நவீன ராஜாக்கள்’ மறுக்கலாமா?

மக்களின் உணர்ச்சி நெருப்போடு விளையாட வேண்டாம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? மத்திய மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:

பாஜக இந்தியைத் திணிப்பதில் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் அணுகுமுறையைக் கையாண்ட பாஜகவினர் தற்போது இந்தி மொழித் திணிப்பை கையில் எடுத்திருக்-கிறார்கள். இதை உறுதி செய்யும் வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் செயலாகும். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை என்பது இந்திய அரசமைப்பு, ஆட்சி மொழிகள் சட்டத்துக்கும் விரோதமானதாகும். அமித்ஷா கூற்றின்படி ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி திணிக்கப்படுமேயானால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு பாஜகவின் இந்தித் திணிப்புக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்திதான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் பொருள் மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பதுதான். இந்தி இந்தியாவில் சற்று அதிகமாகப் பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல்ஆகும். அதை ஏற்றுத்தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தொடர நேரு அனுமதித்தார் என்பதுவரலாறு.

இந்தியாவின் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்குத்தான்உண்டு.

சுப. வீரபாண்டியன்

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் விலை ஏறிக் கொண்டே போகிறது. சமையல் எரிவாயுவின் விலையும் இதுவரை காணாத விலை உயர்வைக் கண்டிருக்-கிறது.

இந்நிலையில் அமித்ஷாவின் இந்தித் திணிப்புப் பேச்சு, திசைதிருப்பும் முயற்சி.

ஆங்கிலம் ஒழிந்தால்தான், இந்தியும், இந்தி வழி சமஸ்கிருதமும், சமஸ்கிருதத்தின் வழி பார்ப்பனியமும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இது வெறும் மொழிப்போர் அன்று. இது ஒரு பண்பாட்டுப் போர்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

“உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியால்-தான் இந்திய ஒருமைப்-பாட்டை உருவாக்க முடியும் என்று கூறி இருக்கிற கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது. இந்தியாவின் பன்மொழி, பண்பாடு, மரபு உரிமைகள், தேசிய இனங்களின் தனித்துவமான அடையாளங்கள் சிதைக்கப்பட்டால், ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கி, இன்னொரு சோவியத் யூனியனாக இந்தியா மாறிவிடும். அதற்கு பாஜக அரசு வழி வகுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாதுகாப்புத் துறை _ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் இந்தி அலுவல் மொழிதான்; தேசிய மொழி அல்ல என்று கூறியுள்ளார். ஆகவே, இந்தி ஏகாதிபத்தியமே இந்தியாவுக்குச் சாவுமணியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அபிஷேக் சிங்வி

நான் மிகப் பெரிய இந்தி ஆதரவாளன்; ஆனால், அதனை திணிப்பதை ஆதரிக்க மாட்டேன்; அமித்ஷாவோ என் போன்ற வர்களுக்கே இந்தி மொழி குறித்து பிரசங்கம் செய்ய முயற்சிக்கிறார் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சாடியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அமித் ஷாவும் பா.ஜ.க.வும் இந்தி பேசாத மாநி லங்களில் அதனைத் திணித்தால் கடுமையாக எதிர்ப்போம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே  மதம் என்ற பா.ஜ.க. கொள்கை எடுபடாது. பாசி சம் இதுபோலத்தான் செயல்படும். இந்தித் திணிப்பு என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் அடிப்ப டைக்கு மாறாக பா.ஜ.க. அரசு செயல்படுகிறது என்று சுகேந்து சேகர் ராய் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியை எதிர்க்கும் மாநிலங்கள்

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியை நாட்டின் ஒருங்கிணைந்த மொழியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

கர்நாடகா

அமித்ஷா கூறியிருப்பது, அவருடைய தாய் மொழிக்கே (குஜராத்தி) செய்த துரோகம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.

கேரள முதல்வர்

நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்தும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டம் நடத்தப்பட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

வலுவான ஒன்றியம், தன்னிறைவான மாநிலங்கள், வட்டார அரசுகளாக மாறும் உள்ளாட்சி அமைப்புகள் என்கிற கோட்பாட்டை முன்வைத்தே கூட்டாட்சி குறித்த நிலைப்பாட்டை இடதுசாரிகள் கடைப்பிடிகிறார்கள். கூட்டாட்சித் தத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்க்கிறது. அவர்களது நோக்கம் மத்திய- மாநில உறவுகளைப் பலவீனப்படுத்துவதும் ஜனநாயகத்தைத் தகர்ப்பதுமாகும். ஜம்மு _-காஷ்மீரைப் பிளவுபடுதி, மாநிலம் எனும் தகுதியை அகற்றினர். லட்சத்தீவு விசயத்திலும் அதுபோன்ற நிலைப்பாடு மேற்கொள்ளப் படுகிறது. இத்தகைய பிரச்சினைகளை அதிக அளவில் எதிர்கொள்ளும் மாநிலமாக கேரளமும் மாற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் கண்டனம்

அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயல்கிறது _ அமித்ஷாவின் பேச்சுக்கு வடகிழக்கு மாநில அமைப்புகள் கண்டனம்.

கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதியின் மாணவர் பிரிவான சத்ர முக்தி சங்க்ராம் சமிதி, அமித் ஷாவின் கருத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. மேலும், அசாமிய மொழியை அழிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டியுள்ளது

இந்நிலையில், அமித்ஷாவின் கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள கே.டி.ராமாராவ், “மொழிப் பேரினவாதமும் மேலாதிக்கமும் ஒரு பூமராங். நான் முதலில் இந்தியன். அடுத்து, பெருமைக்குரிய தெலங்கானாவைச் சேர்ந்தவன். எனது தாய்மொழியான தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மற்றும் கொஞ்சம் உருது மொழியிலும் என்னால் பேச முடியும்’’ என்று இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், தங்கள் எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே, ஒவ்வொரு மாநில மொழியையும் பின்னுக்குத் தள்ளி, ஹிந்தியை ஆட்சி மொழியாக்கி வருகிறது.

வடஇந்தியாவில் பல மாநிலங்களில், அம்மாநிலத் தாய்மொழிகளைப் புறந்தள்ளி விட்டு, இந்தி ஆட்சிக்கட்டிலில் ஏறிவிட்டது என்பது வெளிப்படை!

உத்தர்காண்டில் இந்தியும், சமஸ்கிருதமும் ஆட்சிமொழிகள். ஆனால் அங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் தாய்மொழி கடுவாலி. அரியானா மாநில மக்கள் பெரும்பான்மையோரின் தாய்மொழி ஹரியானி என்றபோதும் அங்கும் இந்திதான் ஆட்சிமொழி.

மிகப்பெரிய கொடுமை ராஜஸ்தானில் நடக்கிறது. அங்கே 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ராஜஸ்தானி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் அம்மக்களின் மொழி அங்கு ஆட்சி மொழியாக இல்லை என்பது மட்டுமில்லை, எட்டாவது அட்டவணையில் கூட அந்த மொழி இடம்பெறவில்லை. இந்தியே ஆட்சிமொழியாக உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இந்தி பலருக்குத் தாய்மொழியாக உள்ளது என்ற போதிலும், அங்கு உருது, அவதி, மால்வி, பகேலி போன்ற பல மொழிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கு எந்த மதிப்பும் இல்லை.

சத்தீஸ்கரில், அவர்களின் சட்டிஸ்கரி மொழியை விட்டுவிட்டு இந்தியை ஆட்சிமொழி ஆக்கியுள்ளனர். ஜம்முவின் தாய்மொழி டோக்ரி. லடாக்கின் தாய்மொழி லடாக்கி. ஆனால் அங்கும் இந்தியே ஆட்சிமொழி என்று அண்மையில் அறிவித்துள்ளனர். எனவே இன்றைய அமித்ஷாவின் பேச்சு நாளை இந்தியா முழுவதும் உள்ள தாய்மொழிகளை அழிக்கும் முயற்சி! ஆங்கிலத்திற்கு மட்டும் எதிரானது என்று எண்ணி ஏமாந்துவிடக் கூடாது.

நாம் ஒன்றும் ஆங்கில மோகம் உடையவர்களோ, ஆங்கில அடிமைகளோ இல்லை. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் ஆட்சிமொழிகளாக இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை. ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக மட்டுமே கோருகின்றோம். நம் இந்த நிலைப்பாடு திடீரென்று தோன்றியதில்லை. அது நீண்ட நெடிய வரலாறு உடையது என்பதை மேலே கண்டோம்.

எதிரிகளும் சிலவற்றில் தெளிவாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் திராவிடத்தை ஒழிக்காமல், ஆரியத்தை நுழைக்க முடியாது, ஆங்கிலத்தை ஒழிக்காமல் இந்தி, சமஸ்கிருத மொழிகளை நுழைக்க முடியாது என்று உணர்ந்துள்ளனர். அதனால்தான், திராவிட எதிர்ப்பு, ஆங்கில எதிர்ப்பு என இரண்டிலும், தீவிரமாக உள்ளனர்.

எனவே, நாமும் ஆரியத்தை ஒழிப்பதிலும், சமஸ்கிருத _ இந்தித் திணிப்பை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியுடன் போராட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து, வலிமையுடன் தங்கள் தாய்மொழியைக் காக்கவும், இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை நிலைநிறுத்துவதிலும் வலிமையான ஒருங்கிணைப்பை முன்னெடுக்க வேண்டும்.

முதலில் இந்தியை நுழைத்து, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தைக் கொண்டுவந்து, இந்தியை அகற்றிவிட்டு இந்தியா முழுக்க சமஸ்கிருத ஆதிக்கத்தைக் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். திட்டம் வகுத்துச் செயல்படுகிறது.

எனவே, இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொரு மொழி மக்களும் தங்கள் தாய்மொழி பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பாதுகாத்து நிலைநிறுத்த ஓரணியில் திரண்டு, உறுதியுடன் போராட வேண்டும். அது ஒன்றே தீர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *