பெண்ணால் முடியும்! : ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் கல்லூரி மாணவி

ஏப்ரல் 1-15,2022

தமிழ்நாட்டிலிருந்து நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்று பன்னாட்டு அளவில் பங்கு பெறுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஆண்ட்ரியா ஷெரின்.

தற்போது எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் சமூகவியல் (Sociology) இறுதியாண்டு படித்து வருகிறார். அவரது வெற்றிப் பயணம் பற்றிக் கூறுகையில்,

“எனக்கு ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டு மேல் தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. பள்ளியில் படிக்கும்போது, அங்கு நடைபெறும் 600 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் போட்டிகளில் பங்கேற்பேன். அதில் டிவிஷனல் வரைக்கும் சென்று வெற்றி பெற்றிருக்கேன். பத்தாவது படிக்கும் வரை, டிவிஷனல் அளவிலான போட்டிகளில்தான் என்னால் பங்கேற்க முடிந்தது. விளையாட்டு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பிலும் நான் நன்றாகத் திகழ வேண்டும் என்பது என் பெற்றோரின் விருப்பம். மேலும் எனக்கு விளையாட்டு மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது.

+2 படிக்கும்போது பல போட்டிகளில் தீவிரமாகப் பங்கேற்க ஆரம்பித்தேன். மாவட்ட அளவிலான போட்டிகள் பலவற்றில் பங்கு பெற்று வெற்றி பெற்றேன். அந்த வெற்றி என்னை அடுத்த கட்டமாக தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.

முதலில் ‘ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இண்டியா’ சார்பில் நடத்தப்படும் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கு பெற்றேன். இந்திய அளவில் 14, 15ஆம் இடத்தைதான் என்னால் பெற முடிந்தது. இதற்கிடையில் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றேன். அதில் 5.56 மீட்டர் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றேன். இதுதான் நான் வாங்கிய முதல் பதக்கம்.

அடுத்து ராஞ்சியில் நடைபெற்ற ஜூனியர் நேஷனல் போட்டியில் 5.99 மீட்டர் நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்றேன்.

“2018இல் புனேயில் 2வது கேலோ இண்டியா யூத் கேம் போட்டியில் 6.15 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்றேன். அதன் பிறகு சென்னையில் நடந்த ஜூனியர் ஸ்டேட் மீட் மற்றும் ஏ.லட்சுமணன் முதலியார் போட்டிகளில் 6.20 மீட்டர் தாண்டி, புதிய சாதனையை நிகழ்த்தினேன்.

6.24 மீட்டர் தாண்டி வெள்ளி வென்றேன். அதைத் தொடர்ந்து ஆந்திராவில் நடந்த சீனியர் ஓபன் நேஷனல்சில் 6.27 மீட்டர் தாண்டி வெள்ளி வென்றேன். ஆல் இந்தியா இன்டர்யூனிவர்சிட்டி போட்டியில் தங்கம் வென்றதால் ரஷியன் இண்டோர் கேம்ஸ்க்கு செலக்ட் ஆனேன். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அப்போட்டி நடைபெறவில்லை. நான் முதல் தடவையாக தகுதி பெற்ற சர்வதேச போட்டி இதுவாகும். அதில் பங்கேற்க முடியாமல் போனது சற்று ஏமாற்றம்தான்.

அதன் பிறகு பங்கு பெற்ற தேசிய அளவிலான அனைத்து போட்டிகளிலும் தங்கம், வெள்ளி என பதக்கங்களை வெல்ல ஆரம்பித்தேன். அதில் ஆல் இந்தியா இன்டர்யூனிவர்சிட்டி போட்டியில் 6.23 மீட்டர் தாண்டி புதிய சாதனையுடன் தங்கம் வென்றதை என்றைக்கும் மறக்க முடியாது.

தினமும் காலை, மாலை இரண்டு மணி நேரப் பயிற்சியுடன் இந்தப் போட்டிக்குத் தேவையான, டெக்னிக் வொர்க் அவுட்டும் செய்வேன். வெயிட் டிரெயினிங், கால்களை வலுப்படுத்த ஸ்க்வாட், பென்ச் பிரஸ் போன்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இவை எல்லாவற்றையும் விட மனதளவில் கவனம் சிதறக் கூடாது.

2024ஆம் வருடம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு பெற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்று தன் இலக்கை நிர்ணயித்து அதில் கவனம் செலுத்தி, பயிற்சி பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *