கே: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வரலாறு காணாத வெற்றி பெற்ற நிலையில், அதற்கு முறைகேடுகளே காரணம் என்போருக்கு, தங்கள் பதில் என்ன?
– அ. மனோகரன், மதுராந்தகம்
ப: கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் திரும்பத்திரும்ப அதே வரியை ஒலிப்பது போல் இது. தோல்வியை ஏற்க பரிபக்குவ அறிவு தேவை. மக்கள் தீர்ப்பு பற்றி நோய் நாடி நோய் முதல் நாடுவதுதான் சரியான அரசியல் அணுகுமுறை. தேர்ந்த அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்!
கே: மேகதாது அணை கட்ட கருநாடக அரசு நிதி ஒதுக்குவது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? ஆணையத்திற்கு எதிர்நிலை அல்லவா?
– த. பரமசிவன், திருச்சி
ப: நிச்சயமாக! உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்; காரணம், நிலம் ஆறு அப்பகுதி. தடையாணை பற்றி நிருவாகத் துறையை இணைத்து நீதி கேட்க தமிழ்நாடு அரசு முந்த வேண்டுமென்பது கட்டாயமாகும்.
கே: ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறாமல் தடுக்கவும், காதலர்களுக்கு அடைக்கலம் தரவும் நிரந்தர பாதுகாப்பு இடங்கள் மாவட்ட வாரியாய் அரசு ஏற்படுத்தினால் என்ன?
– கா. தருமன், வேலூர்
ப: இது உச்சநீதிமன்றத்தில் அண்மைத் தீர்ப்பு வரை பல தீர்ப்புகளில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு விதித்துள்ள கட்டளை. இன்னும் ஏனோ அவை கவலை-யற்று இருக்கின்றன. இதற்கு முன்பு ‘விடுதலை’ தலையங்கமும்கூட வந்துள்ளது!
கே: “முரசொலி’’ ஆசிரியர் முரசொலி செல்வம் அவர்கள் எழுதிய “சில நினைவலைகள்’’ நூல் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– பழநி, புதுவண்ணை
ப: என்னங்க. நீங்க ‘விடுதலை’யையும், ‘முரசொலி’யையும் தவறாமல் படித்திருந்தால் இந்தக் கேள்வியை கேட்காமல் வேறு கேள்வி கேட்டிருப்பீர்கள். அந்நூலைப் பற்றி இரண்டு வாழ்வியல் சிந்தனை கட்டுரைகள் ‘விடுதலை’யில் வெளிவந்தன. பல வாரங்களுக்கு முன்பே! ‘முரசொலி’யிலும் அது வெளிவந்துள்ளது. பார்க்க -_ படிக்கவே இல்லையா? அருமையான அரசியல் நிகழ்வுகளின் சான்றாவணம் அது!
கே: முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை, தி.மு.க.விலுள்ள சிலரே சிதைப்பதால், எஃகுக் கோட்டையாக மாற்ற தாய்க் கழகத்தின் வழிகாட்டல் என்ன?
– தி. மாணிக்கம், திருப்பூர்
ப: மேலே கூறிய பதிலே. எனது ‘விடுதலை’ அறிக்கை (‘முரசொலி’யிலும் வெளிவந்தது) அதனை வெளிச்சப்படுத்தி, வழிகாட்டிப் பாராட்டியுள்ளது! களையெடுப்பு பயிர்செழிக்க முக்கியம், முக்கியம்!
கே: தந்தை பெரியாரின் கொள்கைகளை வடமாநிலங்களில் கிராமங்கள்தோறும் பரப்புவதற்கு கட்டாயத் தேவை எழுந்துள்ளதால், அதற்கான திட்டங்களை அந்தந்த மாநிலத்தில் உள்ள கொள்கை யாளர்களைக் கொண்டு செய்ய ஒரு செயல்திட்டம் வகுத்தால் என்ன?
– பெரு. இளங்கோ, திருவொற்றியூர்
ப: நடைமுறைகளையும் யோசித்து எண்ணித் துணிய வேண்டும் தோழரே, ஆசை இருந்தால் மட்டும் போதாது! துணிந்த பின்பு எண்ணுவது என்பது இழுக்கு அல்லவா?
கே: வரலாற்றுப் பெருமைவாய்ந்த சென்னை மாநகர மேயராய் ஒரு பட்டியல் இனப் பெண் அமர்ந்தபோது, உங்கள் உள்ளத்தில் எழுந்த உணர்வுகள், எண்ணங்கள் எவ்வாறு இருந்தன?
– குமரகுரு, சைதை
ப: திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி -_ சுயமரியாதை இயக்கம் _ திராவிடர் கழகம் மூலகாரணமாக தந்தை பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் இது செயலுருக் கொண்டிருக்குமா? என்ற கேள்வியும் மகிழ்ச்சியான விடையும்தான்!
கே: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது என்ற பிதற்றல் எப்படிப்பட்டது?
– சுந்தரம், தாம்பரம்
ப: சில இடங்களில் பணம், மேற்கு மாம்பல அக்கரகார வெற்றி மாதிரி. தனிமரம் என்றாலும் நச்சுக்கிருமி நுழையும் பேராபத்து. பெரியார் ‘கிருமிநாசினி’யை உடனே அடித்துத் தடுக்க வேண்டும். அவசர அவசியம்!
கே: ‘நீட்’ குறித்த சட்டமன்றத் தீர்மானத்தை ஆளுநர் இரண்டாம் முறையாக கிடப்பில் போடுவதைத் தடுக்க, நீதிமன்றத்தை அணுக வழியுண்டா? மக்கள் போராட்டந்தான் தீர்வா?
– மூர்த்தி, ஆவடி
ப: அரசியல் சட்டப்படி வழியில்லை. மீறினால் அதற்குரிய பலனை ஆளுநர் அனுபவிக்க வேண்டும். இது மக்களாட்சி. மன்னராட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ அல்ல!