பெண்ணே, பெண்ணே போராடு!
முனைவர் வா.நேரு
“பெண்ணே, பெண்ணே போராடு, பெரியார் கொள்கையின் துணையோடு” என்ற பாடல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு நண்பர் “பெண்ணே, பெண்ணே போராடு என்பது சரி, அது ஏன் “பெரியார் கொள்கையின் துணையோடு என்று பாட வேண்டும்.?” என்று என்னிடம் கேட்டார்.” கருவறை தொடங்கி, இறக்கும் வரை பெண்களின் வாழ்க்கை என்பதே போராட்டம்-தான். அந்தப் போராட்டத்தில் அவர்களின் கைகளில் இருக்கும் ஆயுதம் போன்றது பெரியார் கொள்கை. தங்களைக் காக்கவும், தங்களுடைய உரிமையைப் பெறவும், போராடும் பெண்களுக்கு, பெரியார் கொள்கையின் துணை தேவைப்-படுகிறது” என்று நான் அவருக்கு பதில் சொன்னேன் என்றாலும் அவர் கேட்ட கேள்வியின் அடிப்படையில் எனது சிந்தனை ஓடியது.
அடுத்தடுத்து இரண்டுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறந்தால், அதை கொல்வது சில இடங்களில் நடக்கிறது. ஆண் பிள்ளைகளுக்கு அதிக கவனிப்பும், உரிமையும் அளிக்கும் நிலையில், பெண் குழந்தைகளுக்கு அவை தரப்படுவதில்லை. பெண்களுக்கு கல்விகூட பெரியாரின் பிரச்சாரத்தால் பெற்ற விழிப்புணர்ச்சி-யின் காரணமாகவே அதிகரித்து வருகிறது.
பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும், திருமணத்திற்காகவே வளர்க்கப்பட்ட நிலையில், திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்க்கையல்ல என்று மண்டையில் அடித்துச் சொன்னவர் பெரியார் அல்லவா! எனவே, பெண் ஒவ்வொரு பருவ நிலையிலும் போராட வேண்டியிருக்கிறது. அப்படிப் போராடு-வதற்கான கருத்தினை, தன்னம்பிக்கையை, துணிவைக் கொடுப்பதாக பெரியாரின் கொள்கை இருக்கிறது.
இப்போது 2022, மார்ச் மாதம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1922இல் தமிழ்நாட்டில் பெண்கள் நிலை எப்படி இருந்தது? இன்றைக்கு எப்படி மாறியிருக்கிறது என்ற ஒப்பீட்டின் மூலம் நாம் உண்மையை உணரலாம். கல்வி கற்ற பெண்கள் சதவிகிதம், பணிகளுக்கு சென்ற பெண்களின் சதவிகிதம், பெண்கள் திருமணம் நடைபெற்ற வயது என்று பல ஒப்பீடுகள் மூலம் இன்றைக்கு பெண்கள் நிலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்னும் உண்மையை உணர முடியும். குழந்தைத் திருமணம் போன்ற நிகழ்வுகள், விதவைகளுக்கு நடத்தப்பட்ட கொடுமைகள் என்று அந்தக் கால கட்டத்தில் பெண்கள் மேல் நடத்தப்பட்ட அடக்குமுறைகளை அறிந்து கொள்ள பல புத்தகங்கள் இன்றைக்கு உதவுகின்றன.
பெண்கள் பிறக்கிறார்கள். வளர்கிறார்கள். கணவருக்கு மனைவியாகிறார்கள். குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். பின்பு மரணமடை-கிறார்கள் என்பதுதான் இயல்பான வாழ்க்கைச் சுழற்சி முறை. இந்தச் சுழற்சி முறையில் இருந்து மாற்றித் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அன்னை மணியம்மையார். அன்னை மணியம்மையாரின் ஆளுமை என்பது தனித்தன்மையானது. உறுதியானது. பெரியார் சொல்லும் கருத்துகளின் உண்மையை உணர்ந்து, அதை உலகெங்கும் பரப்ப உறுதுணையாக இருக்க வேண்டும் என்னும் உறுதியில் விளைந்தது அன்னை மணியம்மையாரின் பொதுப்பணி.
“இல்லறம் என்ற குறுகிய வட்டத்துக்குள் குதூகலத்துக் குடும்பச் சூழலில் மாட்டி வாடிடும் மகளிர் கூட்டத்தில், இல்லறம் என்பதைவிட தொண்டறம் என்பதே எமது தூய வழி என்று காட்டி வாழ்ந்து தன்னைத்தானே எரித்துக் கொண்ட மேன்மை வரலாற்றுக்கு உரிய மெழுகுவத்தி அவர்! அடக்கம் அவரது அணிகலன்! வீரம் அவரது குருதியோட்டம்! விவேகம் அவரது தலைமைப் பண்பு. தான் கண்ட _ கொண்ட கொள்கைக்காக அதனைத் தந்த தலைவருக்குத் தன்னைத் தந்து செறிவான வாழ்வை அய்யாவுக்குத் தந்து அவர்தம் ஆயுளை நீட்டித்த ஒப்பற்ற செவிலியர்! அய்யாவுக்குப் பின்னும் ஆற்றொழுக்காக கழகம் வளர தலைமையேற்று இயக்கம் வளர்த்த இணையற்ற தலைவி! பற்றற்ற உள்ளம் பகைக்கஞ்சா படைத் தலைமை; ஈடு இணையற்ற கொடை உள்ளம். தமக்குள்ள அத்தனை சொத்துகளையும் பொதுவுக்கே ஆக்கிய அருட்கொடை” என்று அன்னை மணியம்மையாரை இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுவார் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
“ஒரு பெண் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது என்பது இயல்பாக நடப்பது இல்லை…. பெண்களை பொதுவெளிக்கு அழைத்து வந்ததில் திராவிடர் கழகத்தின் பங்கு மிகவும் தனித்துவமானது. குடும்பத்தினருடன் கூட்டங்களுக்கு வரவேண்டும் என்பதை வாழ்க்கை முறையாக பெரியார் வலியுறுத்தினார்” பெரியாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தன்னை திராவிடர் கழக இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டவர். திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு 2 முறை சிறைக்குச் சென்றவர். அவரது இயற்பெயர் காந்திமதி. கே.காந்திமதி, கே.ஏ.மணி உள்ளிட்ட சில பெயர்களில் எழுத்தாளராக இருந்திருக்கின்றார். திராவிடர் கழகப் பேச்சாளராக இருந்திருக்கின்றார். “நான் படிப்பது நல்ல அடிமையாகவா? அல்லது மேன்மையும் விடுதலையும் பெறவா? இதற்கு மாதர் சங்கங்கள் பாடுபடவேண்டும்” என்று திருமணத்திற்கு முன்பே எழுதியிருக்கின்றார். திருமணத்திற்கு முன்பே பெண்கள் திராவிடர் கழகத்தில் வந்து பணியாற்ற வாருங்கள் என்னும் பெரியார் கொடுத்த அழைப்பைப் பற்றி மணியம்மையார் பேசியிருக்கின்றார், அவருக்கு திருமணம் ஆகும்போது வயது 30, அன்றைய காலகட்டத்தில் 15 வயதில் அனைத்துப் பெண்களுக்கும் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவரது வயது திருமண வயதைப் போல இருமடங்கு வயது, அந்த வயதுவரை அவர் திருமணத்தை மறுத்து பொது வாழ்க்கையில் இருந்திருக்கின்றார். மணியம்மையார், திராவிடர் கழகத்தை தேர்ந்தெடுத்தது அவரது சுய தேர்வாகும்” என்று எழுத்தாளர் ஓவியா குறிப்பிடுவார்.
அன்னை மணியம்மையார் என்றால் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் நமக்கு நினைவுக்கு வரும். ஆதரவற்ற அந்தக் குழந்தைகளின் தாயாக தன்னை ஆக்கிக் கொண்டு, நாகம்மையார் இல்லத்துக் குழந்தைகள் வளரவும், வாழ்க்கை பெறவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார். ஜாதி ஒழிப்புப் போரில் வீர மரணமடைந்த இரண்டு தியாகிகளின் உடலை திருச்சி நகரில் ஊர்வலமாகக் கொண்டு சென்று எரியூட்டி, தமிழர்களுக்கு உணர்ச்சி ஊட்டியவர் அன்னை மணியம்மையார்! நெருக்கடி நிலை காலத்தில் இயக்கத்தை, விடுதலை பத்திரிகையைத் தொடர்ச்சியாக உயிர்ப்பாக நடத்தி, அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் .நெஞ்சுரம் காட்டியவர் அன்னை மணியம்மையார்! இராவண லீலாவை நடத்தி திராவிட இயக்கத்தின் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றவர் அன்னை மணியம்மையார்! தனக்கு வந்த தன் குடும்பத்துச் சொத்தை எல்லாம் அறக்கட்டளையாக ஆக்கி, அதை மக்களுக்காக விட்டுச்சென்றவர் அன்னை மணியம்மையார்.
இப்படிப்பட்ட அன்னை மணியம்மையாரின் வரலாற்றை இன்றைய இளம் வயது ஆண்களும், பெண்களும் படிக்க வேண்டும். மார்ச் 8 என்பது சர்வதேச மகளிர் நாள் மார்ச் 10 என்பது அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாள். அன்னை மணியம்மையாரின் தொண்டு உள்ளத்தை, பொது நலனை, தனக்கென வாழாது கொள்கைக்கென வாழ்ந்த அவரை மனதில் கொண்டு உலகப் பெண்கள் நாளை நோக்கும்போது, அனைத்து உலகப் பெண்களும் தமிழ்ப் பெண்களும் போகவேண்டிய தூரம் இன்னும் தெளிவாகத் தெரியும். உலகப் பெண்கள் நாள் வாழ்த்துகள். அன்னை மணியம்மையார் பிறந்த நாள் வாழ்த்துகள்.