எம்.ஞானசேகர், தொழில் ஆலோசகர்
இந்தியாவில் விமானப் போக்குவரத்தும், விமான நிலையங்களும், பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகமாகி விட்டன. இந்தியாவில் ஏவியேஷன் துறையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. கமர்ஷியல் எனப்படும் நாம் பயன்படுத்தும் விமானம், விமானப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் ராணுவ விமானப் பிரிவு. நாம் பயன்படுத்தும் போக்குவரத்து பயணிகளுக்கான மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டு பிரிவுகளாக உள்ளன. இதையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து என மேலும் பிரிக்கலாம். ராணுவ விமானப் பிரிவு என்பது இந்திய விமானப் படையின் செயல்பாடுகள், தரைப்படை மற்றும் கப்பற்படையின் விமான செயல்பாடுகள் என விரிந்து செயல்படுகின்றன.
கமர்ஷியல் பிரிவு எனப்படும் விமானத் துறையில் ஏர்லைன் ஆபரேஷன்ஸ், பராமரிப்பு, மார்க்கெட்டிங், நிதிப் பிரிவுகள் ஆகியவை உள்ளன. இவற்றில் பைலட் பணியானது ஆபரேஷன்ஸ் பிரிவில் வருகிறது. பைலட்டுகள் குறுகிய மற்றும் நீண்ட தூர விமானப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஒரு பயணம் தொடங்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே “பிரீபிளைட் செக்அப்’’ எனப்படும் பயணத் திட்டத்தை அவர்கள் சரி பார்ப்பது உறுதி செய்து கொள்கிறார்கள்.
எந்த வழியில் பயணமாகப் போகிறோம், எவ்வளவு உயரத்தில் பறக்கவிருக்கிறோம், நிலவுகின்ற வானிலை மற்றும் தட்பவெட்ப அம்சங்கள் என்னென்ன போன்றவற்றை பைலட்டுகள் மனதில் கொள்கிறார்கள். விமானத்தின் “டேக் ஆஃப்’’ மற்றும் “லேண்டிங்’’ ஆகியவை ஒரு பைலட்டுக்கு உண்மையில் கடினமான பணிகள். இது தவிர விமானத்தின் உபகரணங்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் இவர்கள் உறுதி செய்து கொள்கிறார்கள். விமானத்தின் எரிபொருள் போதுமானதாக உள்ளதாக இல்லையா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள்.
விமானத்தின் இந்த அம்சங்களை கேபினின் பிற உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். பயணத்தின்போது பயணிகளோடு அவ்வப்போது பேசி பயண நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கிறார்கள். கோ பைலட் எனப்படும் சக பைலட் ஒருவரோடு இணைந்து பயணத்தை வழிநடத்துகிறார்கள். இந்தப் பணிக்கு நன்னடத்தை, பொறுப்புணர்வு, காலம் தவறாமை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகிய அடிப்படை குணாதிசயங்களைப் பெற்றிருப்பது முக்கியம். கடும் உழைப்பு, நல்ல உடற்தகுதி, விழிப்புணர்வு, அனுசரித்துப் போகும் தன்மை, அவசரச் சூழலில் யோசித்து முடிவெடுக்கும் தன்மை ஆகியவையும், அடிப்படை அம்சங்களாகத் தேவைப்படுகிறது. பைலட் லைசன்ஸ் என்பது 3 நிலைகளைக் கொண்டது.
ஸ்டூடன்ட் பைலட் லைசன்ஸ்:
இதை பைலட் கிளப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்துகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 16 வயது நிரம்பியவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். ரூ.10,000/-_க்கான வங்கி உத்தரவாதம் தரவேண்டும். மருத்துவத் தகுதிச் சான்றிதழ் மற்றும் செக்யூரிடி கிளியரன்ஸ் என்னும் சான்றிதழைப் பெறுவதும்தான் இதில் முக்கியம். இதில் பைலட் ஆட்டிடியூட் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.
பிரைவேட் பைலட் லைசென்ஸ்:
ஸ்டூடன்ட் பைலட் லைசென்ஸைப் பெற்றவுடன் பிளையிங் இன்ஸ்ட்ரக்டர் ஒருவரின் துணையுடன் பிளையிங் பயிற்சி தொடங்கப்படுகிறது. பறப்பதன் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இருவராக 15 மணி நேரம் பறந்த பின் பயிற்சி மாணவர் முதன்-முதலாக விமானத்தை ஓட்ட வேண்டும். மொத்தம் 60 மணிநேரம் விமானம் ஓட்டிய பின் இந்த லைசென்ஸ் தரப்படுகிறது. இதில் 20 மணி நேரம் தனியாக ஓட்டுவதும் 5 மணி நேரம் கிராஸ் கன்ட்ரிபிளை-யிங்கும் அடங்கும். 17 வயது நிரம்பியிருப்பதும் ப்ளஸ் 2 முடித்திருப்பதும் முக்கியம். மிக அதிகமான செலவை உள்ளடக்கியது இந்தப் பயிற்சி.
கமர்சியல் பைலட் லைசென்ஸ்:
மொத்தம் 250 மணி நேரம் பறந்த பின்பு இந்த லைசென்ஸ் தரப்படுகிறது. இயற்பியல் மற்றும் கணிதத்துடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பறப்பது தவிர எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். தற்போதைய சூழலில் நாளுக்கு நாள் விமான சேவை அதிகரித்து வருவதால் பைலட்டுகளுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது.
ஏவியேஷன் பயிற்சி பெற பாருங்கள்:
1. www.flyairaviationacademy.in
2. www.m.indiamart.com/aviation
3. www.sulekha.com/airhosters
4. www.worldpte.com
5. www.jtaviation.in
6. www.panamaacademy.com
7. www.collegedunia.com>aviation
8. www.targetstudy.com
9. www.getmywin.com