மருத்துவர் கார்த்திகா
வெள்ளையினத்தவர் கருப்பினத்தவரை ஒடுக்குவது, மேல் ஜாதி கீழ்ஜாதியை ஒடுக்குவது போன்ற ஆதிக்கங்களும் ஏற்றத்தாழ்வுகளும் உலகளவில் நடக்க, அவற்றிற்கு எதிரான போராட்டங்களும் நடக்கின்றன. ஆனால், எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஏற்றத்தாழ்வும் ஆதிக்கமும் உண்டு என்றால், அது ஆண் _ பெண் அடிப்படையில் எழுவதுதான். ஆண் ஆதிக்கம் என்பதும், பாலின சமத்துவமின்மையும் உலகப் பொது.
ஒடுக்கப்பட்ட ஜாதியிலும் கூட அங்கும் ஓர் ஆண் அவன் வீட்டில் உள்ள பெண்ணை அடக்கித்தானே ஆதிக்கம் செலுத்துகிறார்? இப்படியிருக்க ஒவ்வொரு வீட்டிலும், தெருவிலும், சமுதாயத்திலும், நாட்டிலும் ஓயாத புரட்சி, பெண் விடுதலை வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக எத்தனை புரட்சியாளர்கள், எத்தனை வகை போராட்டங்கள், எத்தனை சட்ட வடிவமைப்புகள், எத்தனை இயக்கங்கள்? இவ்வளவு முயற்சிகளையும் கடந்து பெண்கள் விடுதலை அடைந்து விட்டார்களா என்ன? ஏன் இவ்வளவு தூரம் பெண் அடிமைத்தனம் வளர்ந்தது? எங்கு ஆரம்பமானது, எதிலிருந்து வேறூன்றியிருந்தது, ஏன் அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டே உள்ளது என்ற கேள்விகள் எழும்போது சிலவற்றைப் பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்குப் பொருத்திப் பார்க்கத் தேவைப்படுகிறது.
நிகழ்வுகால நடைமுறையை நாம் உற்று நோக்கும்பொழுது, பரவலாகக் காணப்படும் இரண்டு பொதுக் கருத்துகளை இணைத்துப் பார்க்க வேண்டி உள்ளது. முதலாவதாக, உலகம் முழுக்க, வளர்ந்த _ நாகரிகமடைந்த நாடுகள் எனக் கருதப்படும் உயர்ந்த நாடுகள் முதல் வறுமைக்கோட்டில் வாழும் நாடுகள் வரை, எல்லா நாடுகளிலும் பெண்கள் விடுதலைக்கு இன்றும் போராடவேண்டியே உள்ளது. இரண்டாவதாக, இதில் மற்ற ஏற்றத்தாழ்வுகள் நாடுகளுக்கேற்ப மாற்றங்களோடு காணப்-பட்டாலும் பெரும்பாலான பெண்கள் பொதுவாகச் சுமக்கும் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கம் மதம்.
மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியில் மதங்கள் உருவாவதற்கு முன்னரே, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பெண் அடிமைத்-தனம் பல காரணங்களால் உருவாக்கப்பட்டு-விட்டது. ஒரு கட்டத்தில் இவ்விரண்டும் இணையும் புள்ளியில், அதாவது மதம் பெண்களின் வாழ்க்கையில் கலந்த பின்னர், மதங்கள் பெண்களின் வாழ்கையில் ஏற்கனவே இருந்த அடிமைத்தனத்தை, குறைத்ததா _ அதிகரித்ததா? பெண்களுக்கான தனிப்பட்ட வளர்ச்சியில் மதங்கள் ஏதாவது வழி வகுத்ததுண்டா? மதங்களின் பங்குதான் என்ன? என்றைக்கோ மதவாதிகள் எழுதி வைத்த மதம் சார்ந்த கோட்பாடுகள், மற்றும் அதன் கலாச்சாரங்கள், பெண் அடிமைத்தனத்தை தகர்த்து, அவர்களுக்கு எதிர்காலத்திலாவது விடுதலைக்கு வழி செய்யுமா? அதற்கான வாய்ப்பு உள்ளதா? போன்றவற்றை மதத்தோடு பெண்களின் வாழ்க்கை நிலைமையும் இணைத்து இக்கட்டுரையில் விளக்க விரும்புகிறேன்.
ஒவ்வொரு தனிமனித “தேவைகள்” மட்டு-மல்லாமல், ஒரு சமுதாயத்தில் பல மனிதர்கள் கூடி வாழும் சூழலில் தனி மனித உரிமைகளையும் தேவைகளாகவே கொள்ள வேண்டியுள்ளது. உலகில் மனிதர்களுக்கு அடிப்படையான தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்தை அடைந்துவிட்ட பின்பு மனம் எதை நாடும் என்றால், தனிமனித சுதந்திரத்தையும் அமைதியான சூழலையும்தான். அதற்கான முயற்சிகளே கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் போன்ற அடுத்தகட்ட வளர்ச்சிகள். இதுபோன்று இலக்குகளை அடைய எல்லா மனிதர்களுக்கும் சமமான உரிமைகள், வாய்ப்புகள் கட்டாயமா-கின்றன. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவம்தான் மனிதகுலத்துக்கான சிறப்பு என்னும் இலக்கைத் தேடித்தான் உலகமே பயணமாக வேண்டும்.
கடந்த காலம் சொல்வது என்ன?
அடிப்படை உரிமைகளை சில மனிதர்கள் பல சக மனிதர்களுக்கு பங்களிக்க மறுத்திருந்-தார்கள். மறுப்பதற்கு இவர்கள் பயன்படுத்திய யுக்தி ஆதிக்கமும் ஒடுக்குமுறையும். அதிகாரம் தேவை என்பதற்காக ஆதிக்கத்தை செலுத்த முற்பட்டிருக்கிறார்கள். பலவிதமான ஒடுக்குமுறைகள் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டிருந்தாலும், பாலின ஒடுக்குமுறையில் ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பிரித்துப் பார்த்தால், ஆதிக்கவாதிகளின் அணுகுமுறை எவ்வாறு இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது …. அதாவது, ஒடுக்கு முறையை வன்முறையால் நடைமுறைப் படுத்துவதைவிட, அச்சம், ஒழுக்கம், மானம், குற்ற உணர்ச்சி போன்ற உணர்ச்சிகளைத் தூண்டினால் மக்கள் எதிர்த்துக் கேள்வி கேட்கும் இயல்பை இழந்துவிடுவார்கள். அதனால் ஒடுக்குமுறையை கையில் எடுக்கும்முன் மக்கள் மனதில் ஆழ்ந்த சில (மூட) நம்பிக்கைகளை அச்சத்தின் வழியாக விதைக்க, கண்ணுக்குப் புலப்படாத சக்திகளை உருவாக்கினார்கள். ஒரு காலகட்டத்தில் சில இடங்களில் மனிதர்கள் சூரியனையும், நீரையும், இயற்கை வளங்களையும், தாயையும், உடல் உறுப்புகளையும் அதாவது அவர்கள் வாழ்க்கைக்கு அன்று எதுவெல்லாம் பயன்பட்டதோ இன்பம் அளித்ததோ அதையெல்லாம் வணங்கிவந்தவர்கள், பின்பு கண் முன் தோன்றா உருவங்களையும், அவற்றைக் கொண்ட கற்பனைக் கதைகளையும் ஏற்றுக் கொண்டனர். “மதம்” என்பது வாழ்வியல் சம்மந்தமான கோட்பாடுகளின் வரையறை என்றும் சமுதாயத்தில் நல்லிணக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முறைக்கான வழிகாட்டி என்றும் கொண்டனர். அதன் மூலம் மதம் மனிதன் மீது திணிக்கப்பட்டது. அனைத்து மதக் கட்டமைப்புகளும் ஆண்களால் _ குறிப்பாக ஆதிக்க மனநிலையிலிருக்கும் ஆண்களால் மட்டுமே எழுதப்பட்டவை. இன்றும், மக்கள் உலகெங்கும் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நடைமுறை விதிகளின் அனைத்து அதிகாரங்-களையும் ஆண்களே அவர்கள் கட்டுப்-பாட்டுக்குள் வைத்து இயக்குகிறார்கள்.
பல நூற்றாண்டுகள் கடந்தும் அன்று கற்பிக்கப்பட்ட மதம் இன்றுவரை எவ்வா-றெல்லாம் பயன்பட்டிருக்கின்றது என்றால், அதை நாம் கண்ணெதிரில் அன்றாடம் காணும் காட்சிகளே போதுமான பாடத்தை சொல்லிவிடுகின்றன. பாகுபாடுகளும் ஒடுக்கு முறைகளும் மனிதர்களை மிக கடினமான துயரங்களுக்கு ஆளாக்கியுள்ளன. ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒடுக்குமுறை தொடங்கி, சமுதாயத்தின் பொதுத்தளங்கள் வரை மதத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து வைத்திருப்பதைக் காணலாம்.
இதில் வெளிப்படையாக பெண்கள் _ பெருமளவில் மதம் சார்ந்தவர்கள் ஒடுக்கு முறைக்கு ஆளாகியுள்ளார்கள். எந்தளவுக் கென்றால் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை அவர்களே இயல்பாக ஏற்கும் மனநிலைக்கும், அந்த அடிமைத் தனத்தை அவர்களே உணரமுடியாதவாறும், பெண்களே ஆணாதிக்கத்தை உயர்த்திப் பிடிப்பதற்கும் ஆன நிலைக்குத் தள்ளப்பட்டு-விட்டார்கள். கூர்ந்து கவனித்தால் பெரும்-பாலான மதங்கள் பெண்களை மரியாதையோடு-தானே நடத்துகிறது, பெண்களுக்கு பாதுகாப்புத் தானே அளிக்கிறது, பெண்களை தெய்வமாகத்-தானே பார்க்கிறது, என்பன போன்ற மேம்போக்கான உணர்ச்சி மிகுந்த வாதங்களை முன்வைத்து, அவர்களது சுதந்திர வாழ்வுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கும் பாணியில் வரையப்பட்டிருக்கும். இவ்வாறெல்லாம் சொல்லிவிட்டு ஆண்களைச் சார்ந்து வாழும் வாழ்க்கையே சிறப்பு என்பதையும் பல கோணங்களில் வலியுறுத்தும். பெண்கள் விரதம் இருந்தால் கணவன் ஆயுள் கூடும் என்பதைப் போதிக்கும் மதம் அதையே ஆண்களிடம் மனைவிகள் நலனுக்காக விரதம் இருக்கக்கோரிப் போதிக்காது. பெண்களுக்கு ஒழுக்கம் என்னும் உணர்வைப் புகுத்துவதால் அவர்களுக்கான இயற்கை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வரையப்பட்டிருக்கும்.
ஆக மொத்தத்தில் திருவள்ளுவர் வடிவமைத்த கல்வி, செல்வம், காமம் ஆகிய மனித வாழ்க்கைக்கு அவசியமான மூன்று செல்வங்களையும் மதங்கள் பெண்களுக்கு சமமாக அளித்துள்ளதா? அளித்திருந்தால் இன்றைய பெண்கள் ஏன் இவற்றில் பின்தங்கியிருக்கிறார்கள்?
மேலும், ஆண்களே மதக் கலாச்சாரங்-களிலிருந்து விலகினாலும் பெண்கள் _ அந்தக் கலாச்சாரம் சார்ந்த நம்பிக்கைகளைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திலும், அவற்றைவிட்டு விலகுவதென்பது அது அவர்களை பெரும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கக்கூடும் என்பதுமே நாம் காணும் நிதர்சனம்.
இவ்வாறான ஒரு நிலையிலிருந்து இன்று பல பெண்கள் அவர்களுக்கான சுதந்திரத்தைத் தேடிச் செல்லும் ஒரே ஆயுதம்தான் கல்வி. எந்தக் கல்வி கற்றால் இவர்கள் சந்திக்கும் ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதைத்தான் இவர்கள் தேர்வு செய்கிறார்கள். வேதமும், கீதையும், குரானும், பைபிளும் படிப்பதன் மூலம் அவை “கற்பித்தல் மற்றும் பின்பற்றுதல்” என்னும் செயலைத்தான் உணர்த்துகின்றனவே தவிர, அதனால் ஒருவரது அறிவியல் மனப்பான்மையைத் தூண்டவோ மற்றும் சுயசிந்தனையை வளர்த்துக் கொள்ளவோ இயலாது என்ற வேறுபாட்டை நன்கு அறிகின்றனர். மாறாக, நவீனக் கல்வி முறைதான் உலகத்தை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது என்பதைப் புரிந்துகொண்ட பெண்கள் இன்று அவர்களுக்கான சுதந்திரப் போராட்டத்திற்கும் அந்த நவீனக் கல்வியைத்தான் நாடுகிறார்கள். மத நூல்களில் கற்பித்தல் என்றிருந்ததால், நவீனக் கல்வியில் கற்றல் என்பதனையே இளைய தலைமுறை-யினர் விரும்புகிறார்கள்.
அதனாலேயே பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய சுதந்திரக் களம் என்றாகிவிட்டது. இங்கு மனுநீதியும் கிடையாது, ஸாரியா சட்டமும் கிடையாது. இங்கு மட்டுமே இவர்கள் அறிவியல்பூர்வமான _ தயக்கமில்லாத சிந்தனைகளைச் சிதறவிட வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனாலும் ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து அனைத்து பெற்றோர்களும் அவரவர் பின்பற்றும் மதநம்பிக்கையை அந்தக் குழந்தையின் விருப்பத்தைக் கேட்காமலேயே, அதன் பழக்கவழக்கங்களைத் திணித்துத்தான் வளர்க்கிறார்கள். அதுபோன்ற சூழலில், பல ஆண்டுகள் தங்களது குழந்தைப் பருவத்தை முழுவதும் அந்த மதரீதியான கோட்-பாடுகளுடன், எந்தக் கேள்வியும் கேட்காமல், அவை அனைத்தையும் உள்வாங்கி வளர்ந்து வரும் ஒரு சராசரிக் குழந்தை, அதனைப் பின்பற்றுதலுக்கு தன்னை அறியாமலேயே உள்ளடங்கிப் போய் விடுகிறது. அந்தக் குழந்தை ஒருசில மத அடையாளங்களை அறிந்தும் அறியாமலும், பல ஆண்டுப் பழக்கத்தில், தனது உடலுடன் ஓர் அங்கமாகவே மாற்றிக்கொள்கிறது. உதாரணத்திற்கு பொட்டு வைப்பது, ஹிஜாப் அணிவது, கைகயிறுகள் அணிவது போன்ற மத அடையாளங்களை எதற்காக பின்பற்று-கிறார்கள் என்று, அவர்கள் இளைஞர்களாகிக் கேள்வி எழுப்பும் முன், மதங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே அதன் அடையாளங்களை ஆழமாகப் புகுத்தி, அதன்பின் பகுத்தறிவுத் தன்மை எழவிடாதவாறு பழக்கிவிடுகிறார்கள். இதை பல தலைமுறைகளாக காலங்காலமாகத் தொடர்ந்து பின்பற்றி வரும் கலாச்சாரங்கள் என்று வலியுறுத்தப்படுவதால், பகுத்தறிவுக்கான இடம் மேலும் சுருங்கிவிடுகிறது.
கல்வியின் முக்கியத்துவத்தை அண்மைக் காலங்களில் பெண்கள் உணர்வதற்குக் காரணம், விடுதலையை நோக்கித்தான். அதில் மத அடையாளங்கள் உள்வாங்கிய காரணத்தினாலும், அதே சமயம் கல்வியை முதன்மையான குறிக்கோளாகக் கருதுவதாலும், அடிமைத்தனமான சில அடையாளங்களைப் பொருட்படுத்தாமல், அவற்றைப் பின்-பற்றியவாறே, கல்வி பெறுவதை மட்டுமே ஒரே லட்சியமாக்கி, அதை நோக்கிப் பயணம் செய்கிறார்கள்.
ஹிஜாப் என்னும் இஸ்லாமியரின் மத அடையாளத்தை இன்றும் உலகமெங்கும் பெரும்பாலான பெண்கள் அணிந்து கொண்டு-தான் இருக்கிறார்கள். சிலர் அதை விட்டு விலகியும் உள்ளனர். அணிந்து இருப்பவர்கள் அனைவருமே விரும்பியே அணிந்துள்ளார்களா என்றால், கிடையாது. விரும்பி அணிபவரும் இருக்கின்றார்கள். கட்டாயத்தின் அடிப்படை-யில் அணிபவரும் இருக்கின்றார்கள். அவர்-களைக் கட்டாயப்படுத்தி யிருந்தாலும், பல காலமாக மறுக்கப்பட்ட கல்வியைப் பெற, வாய்ப்புக் கிடைக்கும் நேரத்தில், இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு பல காலங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலைமாறி, இன்று கல்வித்தகுதி அடைவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்போது, அதைப் பொருட்படுத்தாமல் அணிபவரும் இருக்கிறார்கள்.
அரசியல் லாபத்திற்காக இஸ்லாமிய சமூகத்தை நோக்கி இந்துத்துவாவாதிகள் தொடர்ந்து அவர்களின் மேல் வன்கொடுமை-களைக் கட்டவிழ்த்துவிடும் காலத்தில், தற்போது மிகக் கொடிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பவர்கள் யார் என்றால், “இந்தக் கல்வியாவது கிடைக்காதா என்று ஏங்கி எப்படியாவது படித்து முன்னேற வேண்டும்” என்று துடிக்கும் இஸ்லாமிய மாணவிகளே. கர்நாடகாவில் ஒரு கல்லூரி வளாகத்துக்குள் ஒற்றை மாணவியின் முன் அய்ம்பது முதல் நூறு ஆண்கள் “ஜெய்ஸ்ரீராம்’’ என்று கூச்சலிட்டு அச்சுறுத்துவதைக் கண்டோம். அவ்வாறு சீண்டுவதும் துன்புறுத்துவதுமா மதப் புரட்சி? அந்தப் பெண் தலையைக் குனிந்தபடி பயந்து ஓடாமல், தெளிவாக எதிர்த்து நின்றதும், “ஜெய்ஸ்ரீராம்’’ என்னும் முழக்கத்திற்குத் தகுந்த எதிர்வினை “அல்லாஹு அக்பர்’’ ஆற்றியதும், அந்தச் சூழலை அப்பெண் மிகச் சரியாக, துணிவுடன் எதிர்கொண்டிருக்கிறார்.
அந்தக் காட்சியைக் காணும்போது பயத்துடன் அவர் வீரமாக எதிர்கொண்டதைக் கண்டு, கூடுதல் வியப்பாகவும் பாராட்டுக்குரிய-தாகவும் இருந்தது. இந்தத் தெளிவான சிந்தனையும் துணிச்சலும் இன்றைய இளம்பெண்களிடம் காணும்போது, ஒருவகையான எழுச்சி உணர்வை உணர முடிகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன், கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்த சூழலில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்-பட்ட பெண், கல்வி பயில தனது விடாமுயற்சியைக் கைவிடாது, தினசரி வீதிகளில் பள்ளிக்குச் செல்லும் வழியில், எதிர்கொண்ட கல்வீச்சுக்கும், சாணி எறிதலுக்கும் ஆளானவர் நாம் கொண்டாடும் சாவித்ரிபாயின் மிகச் சிறந்த புரட்சி வரலாறு அன்றும் அவர் உயர்ஜாதியினாரின் ஆதிக்க வெறி கடந்துதான் கல்வியில் சாதனை படைக்க முடிந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை, இப்படி சில கொடூரங்களை எதிர்க்க, ஓர் அச்சமில்லாத தருணத்தை அடைய, ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு இன்னல்களுடன் போராட வேண்டியுள்ளது, பார்த்தீர்களா?
கர்நாடகத்தில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சையினால், அரசியல் மதவெறியர்களின் நோக்கம், பல ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் கல்விப் பயணத்தைக் கேள்விக்-குள்ளாக்குவதுதான். அதன் பின் விளைவு-களுக்கும் மதவாத அச்சுறுத்தலுக்கும் இஸ்லாமிய மாணவிகள் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகிவிட்டிருக்கிறார்கள்.
அரசியல் காட்சிகள் ஒருபுறம் இருக்க, அந்தக் குடும்பத்தினர் குழந்தைகளின் கல்வியை எப்படிக் கையாள்வார்கள் என்பதும் குழப்பமாகவே உள்ளது. சில பெற்றோர்கள் மத உணர்வுகளை முன்னிலைப்படுத்திவிட்டால் அரசாங்கத்தின் பிடியில் ஒரு பக்கம், மத நம்பிக்கையின் பிடியில் மற்றொரு பக்கம், என்று சிக்கியுள்ள மாணவிகள் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டால்? அப்பெண்கள் படிப்பை இழந்து விடும் நிலை வந்துவிட்டால்? என்பதுதானே மிகப்பெரிய கவலை? இன்றைய காலகட்டத்தில் கல்வியின்மை என்பது பெண்களுக்கு இழப்பு, இயலாமை என்பதைக் கடந்து அது ஓர் ஆபத்தும்கூட என்பதே என் கருத்து. கல்வியின் வழியாக வரும் தன்னம்பிக்கை மிக வலிமையானது; எதையும் எதிர்கொள்ளும் சக்தி உடையது. நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள் என்றாலும் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் உயர்ந்த ஜாதிகளின் ஆதிக்கத்தில்தான் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. இந்த வழக்கில் அமர்ந்துள்ள மூன்று நீதிபதிகளில் ஒருவர்கூட இஸ்லாமியரும் இல்லை; பெண்களும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்பு எப்படியாயினும் மதவாதிகள் அவர்களது ஆதிக்கத்தையும் வன்முறையையும் கைவிடப் போவதில்லை என்பதில் எந்தவித அய்யமு-மில்லை.
இஸ்லாமியப் பெண்கள் இந்துத்துவாவின் ஆதிக்கத்தை எதிர்த்து கல்வி உரிமைகோரி நிற்கின்ற இந்தப் போராட்டக் குணம் மேலும் தொடர வேண்டுமா என்று கேட்டால், ஆம், கட்டாயம் தொடர வேண்டும் என்பேன். எதற்காக என்றால், இந்தப் புரட்சியை இளைய தலைமுறை மாணவிகளுக்கு முதல் கட்ட விடுதலையாகத்தான் நான் பார்க்கிறேன்.
ஆதிக்கத்திலிருந்தும், உரிமைப் பறிப்பிலிருந்தும் மீளுவதால் மட்டுமே இவர்களுக்கு முழு சுதந்திரமும் கிடைத்து விடாது. அடுத்தகட்டமாக மதத்துக்குள் புதைந்திருக்கும் அடிமைத்தனத்தையும் கூர்ந்து கவனித்து, அதனுள் கண்ணுக்குத் தெரியாத நிர்ப்பந்தங்களையும் உணர்ந்து, தங்களது அடுத்தகட்ட விடுதலைக்காக, அதே மனநிலையோடு, அதே எழுச்சியோடு குரல் எழுப்ப வேண்டும். அந்தத் துணிச்சலை இன்றைய அளவில் ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி மட்டுமே தரக்கூடும்.
ஹிஜாப் விவகாரத்தோடு பொருத்திப் பேசுவதால் இஸ்லாமியப் பெண்களைக் குறிப்பிட வேண்டியதாயிற்றே ஒழிய, அனைத்து மதங்களில் இருக்கும் கலாச்சாரத்தின் வாயிலாகச் செயல்படுகின்ற அடிமைத்தனத்தை, முதல்கட்டமாக பெண்கள் உணர்ந்தாக வேண்டும். பின்பு அவற்றை எதிர்த்து, எழுச்சி அடைவதென்பது அவர்களின் விடுதலைக்கான அவசியம். ஏனெனில், மதங்களையும் ஆணாதிக்கத்தையும் பிரித்துவிட முடியாது.
அனைத்து மதங்களும் அவர்களது புத்தகங்களும் அதைத்தான் போதிக்கின்றன என்பதற்கும் ஆதாரங்கள் அப்புத்தகங்களே. ஆதலால் மதத்தைப் பின்பற்றும் அனைத்து பெண்களும் ஏதோ ஒரு விதத்தில் ஆணாதிக்கத்தை மறைமுகமாக உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது.
ஆணாதிக்கமும், பெண் அடிமைத்தனமும் இரண்டு வெவ்வேறு பாகங்கள் அல்ல; நெருக்கமாக ஒன்றோடு ஒன்றாகப் பிணைந்துதான் கிடக்கின்றன. ஒன்றை ஒழித்தால் மற்றொன்று தானாகவே ஒழிந்து விடும். இந்தப் பிணைப்பிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் _ விலக வேண்டியவர்கள் இழப்புக்குள்ளாகும் பெண்களே.
ஆகவே “கல்வியைக் கை கழுவிவிடாமல்” மதமும் கலாச்சாரமும் நமக்கு என்ன பயனளித்தது, மதங்கள் பாலின சமத்துவத்தை விரும்பியிருந்தால் நாம் (பெண்கள்) ஏன் இரண்டாம் தரத்தினர்களாகவே நடத்தப்படுகிறோம் என்று தமக்குள்ளேயே தமக்கான விடைகளைத் தேடினால் மட்டுமே, பெண்கள் பெருமளவில் சுதந்திரத்தை அடைவதற்கான, அனைத்து சாத்தியக்கூறுகளும் ஏற்படும்.
மதம் அறத்தின் பக்கம் நின்றிருந்தால், ஏன் கலாச்சாரங்கள் பெண்களையே அடிமைப் படுத்தியுள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாக் காலத்திலும் மனிதகுலத்தின் உயர்ந்த பண்பே அறம்தானே?!
அறமற்ற எதுவும் அடிமைத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்குமே வழிவகுக்கும். எனவே, பாலியல் சமத்துவம் முதன்மையானது. கல்வி கட்டாயமானது. மதம் கூறும் மார்க்கங்களுக்காக இவற்றை இழக்கக் கூடாது. கல்வியைத் தொடர்ந்துகொண்டே உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.