வீ.குமரேசன்
கம்பெனி நிதி மூலதனத்தின் அடிப்படையான பங்குகளை (shares) பரிவர்த்தனை செய்திடும் அமைப்பான தேசியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் (National Stock Exchange) பல்லாண்டுகளாக நடைபெற்று வந்த ‘ஆன்மிக’ ஊழல் வெளியில் தெரிய வந்துள்ளது. ஊழல் நடைபெற்ற வாரியமானது, அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும், அதன் நடவடிக்கைகளைக் கண்காணித்து நெறிப்படுத்துகின்ற செபி (SEBI – Securities Exchange Board of India) அமைப்பு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதாகும்.
இத்தகைய கட்டுப்பாட்டு நெறிகளுடன் செயல்பட வேண்டிய தேசியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த (2013__2016) சித்ரா ராமகிருஷ்ணன் என்ற ஒரு பார்ப்பன பெண் தலைமை நிருவாகி, ‘மிகவும் நம்பிக்கை-யுடனும் பாதுகாப்புடனும், பரிவர்த்தனை செய்யப்பட வேண்டிய பங்கு விவரங்களை’ வாரியத்திற்குத் தொடர்பில்லாத ஓர் ஆன்மிக சாமியாருடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் அந்த தலைமை நிருவாகி, இமயமலையில் வாழ்வதாகக் கூறும் சாமியாரின் அறிவுரைகளை ஏற்று பரிவர்த்தனை வாரியத்தின் நிருவாக முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார். அந்த சாமியாரின் பரிந்துரைகளுடன், ஒரு பார்ப்பனரை ஆலோசகராக, ஆண்டுக்கு ரூ.1.68 கோடி ஊதியத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் நியமித்து பயன்படுத்தி வந்துள்ளார் என்கின்ற செய்திகள் வெளிவந்துள்ளன.
பங்குச் சந்தை பரிவர்த்தனை என்பது அங்கீகாரம் பெற்ற ஒரு சூதாட்டம் போன்றதே. பங்கு விலையானது அந்தந்த கம்பெனியின் செயல்பாடு, லாபம் ஈட்டுவது ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்வதைவிட, செயற்கையாக அனுமானங்களின் அடிப்படையில்தான் பெரும்பாலும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. எடுத்துக்காட்டாக அரசின் சில அறிவிப்புகள், நம் நாட்டுக்குத் தொடர்பே இல்லாத பிற நாடுகளில் நிகழும் சம்பவங்களின் அதிர்விலேயே, அப்படிப்பட்ட செய்திகள் மக்களைச் சென்று சேருவதற்கு முன்பாகவே, பங்குகளின் விலையில் ஏற்றத்தை _ இறக்கத்தை ஏற்படுத்தி விடுவார்கள். நிதி நிலைமையில் சிறு அதிர்வுகளை வைத்துக் கொண்டு பங்கு விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் செயல்படும் பங்குப் பரிவர்த்தனையில், பெரு நிறுவனங்கள் தாங்களாகவே கணினி மூலம் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளும் அன்றாட இணையான இணையதள வசதி வாய்ப்பை
(co-location access) வாரியம் வழங்கியது. இந்த வசதியான பரிவர்த்தனையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள சேகரிப்புப் புல விவரங்-களையும் (backend server) தொடர்பு கொண்டு இடைத்தரகர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பங்குப் பரிவர்த்தனையின் விவரங்களை, ஒரே நாளில் பலமுறை மாறி, மாறி வரும் பங்கு மதிப்பினைப் பார்த்து அதனை வாங்கிடுவோரும், முதலீட்டாளர்களும் முனைவார்கள். அங்கீகாரம் பெற்ற இடைத்தரகர்களும் ஈடுபடுவார்கள்.
சேகரிப்புப் புல கணினித் தொடர்பால் விவரங்களை ஒரே நாளில் பங்கு விலையில் ஏற்ற இறக்கங்களை இடைத்தரகர்கள் முன்கூட்டியே நிர்ணயம் செய்து கொள்ள வழி ஏற்பட்டது. ஒரு சில நொடிகள் நிலவிடும் பைசா அளவிலான மாற்றங்களால், பல கோடி ரூபாய்களை இடைத்தரகர்கள் சம்பாதிக்க இந்த சேகரிப்புப் புல கணினித் தொடர்பு. வழி ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க-வில்லை. அந்த தலைமை அதிகாரி! பரிவர்த்தனைக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத ஆன்மிகச் சாமியாருடன். காப்பாற்றப் படவேண்டிய விவரங்களை மின்னஞ்சலில் பகிர்ந்து அவரது ஆலோசனையின்படி நடந்த தலைமை நிருவாகியிடம் வாரியமே விசாரித்து தனிப்பட்ட காரணங்களுக்காக என அவரைப் பதவியை விட்டு ராஜினாமா செய்ய வைத்ததே தவிர, வேறு எந்த கடுமையான நடவடிக்கை-யையும் வாரியம் எடுக்கவில்லை. கூடுதலாக விதிக்குப் புறம்பாக நடந்து கொண்ட அந்த தலைமை அதிகாரிக்கு நன்றி பாராட்டியது பரிவர்த்தனை வாரிய உயர்நிலைக் குழு.
பதவி விலகிய பின் எழுந்த புகார்களின் அடிப்படையில் செபி அமைப்பு புலன் விசாரணையை 2016ஆம் ஆண்டு தொடங்கி 2018இல் அறிக்கையை அளித்தது. அதன் மீது தலைமை அதிகாரி, ஆலோசகர் மற்றும் முன்னாள் தலைமை அதிகாரி (அனைவருமே பார்ப்பனர்கள்) மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு சி.பி.அய். வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இப்பொழுது தேசியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் நடந்த “ஆன்மிக ஊழல்” பற்றிய விவரங்கள் பொது வெளியில் தெரிய வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விசாரித்து, விரைவாக வழக்கைப் பதிவு செய்து, விதியை மீறி நடந்தவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தந்து, இத்தகைய பங்கு பரிவர்த்தனை, சீர்கேடுகள் நடைபெறாமல் தடுத்திட வேண்டும். ஆலோசனை வழங்கிய ‘இமய மலையில் வாழும் ஆன்மிக சாமியாரையும்’ கண்டுபிடிக்க வேண்டும். இது நியாயமானவர்கள் அனைவரின் எதிர்-பார்ப்பாகும்.
நாட்டுப் பங்குச்சந்தையின் முக்கிய அமைப்பான தேசியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பொழுது எந்தவித பொறுப்புணர்வும் இல்லாமல் பங்குப் பரிவர்த்தனை விவரங்களை முகமே தெரியாத சாமியாருக்குத் தெரிவித்திருக்கிறார் அந்தப் பெண் அதிகாரி.
அப்படிப்பட்ட அதிகாரியைத் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக (அவரைப் பாதுகாத்திடும் நோக்கத்தில்) ராஜினாமா செய்திட எப்படி வாரியத்தின் நிருவாகக் குழு அனுமதித்தது?
இப்படி அந்த தலைமை அதிகாரி ராஜினாமா செய்ததை செமி அமைப்போ, ஒன்றிய அரசோ நீண்ட நாள்களாக எப்படி கண்டு கொள்ளாமல் இருந்தன?
சிறிய அளவிலான விதிமீறல்கள் நடை-பெறும்பொழுதே சி.பி.அய்., அமலாக்கத்துறை, தேசிய விசாரணை அமைப்பு நேரடியாகத் தலையிடும்பொழுது, தேசியப் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தின் தலைமை அதிகாரி மீது 2016 முதல் தற்சமயம் வரை எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், வருமான வரித்துறை சோதனை மட்டும். அதுவும் காலதாமதாக இப்பொழுதுதான் நடை-பெற்றுள்ளது _ குதிரை வெளியில் சென்ற பின்பு லாயத்தைப் பூட்டுவதைப் போல!
இதே தலைமை அதிகாரியும், ஆலோசகரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்காமல் விட்டு வைத்திருப்பார்களா?
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அத்தகைய உயர்பதவிக்கே சென்றிருக்க முடியாது என்பது ஒரு நிலை; சென்றிருந்தாலும் இத்தகைய விதிமீறல்களைச் செய்திருக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையான உண்மை.
தகுதி, திறமையின் இலட்சணம் என்பது தேசியப் பங்குப் பரிவர்த்தனை அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்பட்ட பார்ப்பன அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் _ ஆன்மிக ஊழலால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஒரே ஓர் ஒப்பீடு _ 2ஜி சேவையில் ஒவ்வொன்றையும் விதி முறைகளுக்கு உட்பட்டு, உரியவர்களின் பார்வைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்திய ஒன்றிய அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் அனுமான நஷ்டம் (presumptive loss) ஏற்பட்டதாக ஆதாரமும் இல்லாமல் உடனே கைது செய்யப்பட்டனர். வழக்கும் பதியப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு எந்தவித ஆதாரங்களையும் அளிக்கவில்லை’ எனக் கூறி குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்-பட்டவர்-களுக்கு ஏற்பட்ட இன்னல், இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
இப்பொழுது வெளிக் கிளம்பியுள்ள ‘பரிவர்த்தனை ஆன்மிக ஊழலில்‘ அப்பட்டமான விதி மீறல்கள் 2013_2016 ஆண்டுகளிலேயே நடைபெற்றுள்ளன. விதியை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எதுவும் கிடையாது. ஆன்மிகத்தினை உடன் வைத்துக் கொண்டு ஊழல் செய்துள்ளார்கள். இதுநாள் வரை உறுதியான நடவடிக்கை ஏதும் ஏன் எடுக்கவில்லை?
காரணம் _ 2ஜி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வர்ணாஸ்ரம (அ) தர்மப்படி சூத்திரர்கள் ஆவர். பரிவர்த்தனை ஆன்மிக ஊழல்களில் அப்பட்டமாக விதியை மீறி பொறுப்பில் இருந்த அனைவருமே பார்ப்பனர்கள். இதைத் தவிர வேறுபாடு எதுவும் இல்லை.
‘பார்ப்பனர் பண்ணையம்‘ இன்றைக்கும் தொடரும் நிதர்சனம் ஆகும்.
பின்குறிப்பு: நாட்டின் பொருளாதார, நிதிநிலை உறுதிப்பாட்டில், நிறுவனங்களின் பங்குப் பரிவர்த்தனைக்குப் பெரும் பங்கு உண்டு. காப்பாற்றப்பட வேண்டிய பரிவர்த்தனை விவரங்கள் முகமே ‘தெரியாத‘ ஆன்மிக சாமியாருக்குப் பகிரப்பட்டுள்ளதால், வெளிநாட்டு ஆதிக்கச் சக்திகளால் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். இந்த விதி மீறல்கள், ஆவணக் காப்பு மீறல்கள், ஆன்மிக சாமியாரின் ஆலோசனையால் பங்கு விலையில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்கள், இதனைப் பயன்படுத்தி ஆதாயம் பெற்ற இடைத்தரகர்கள், பெருநிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறித்து முழுமையாக விசாரிக்கப்-பட்ட வேண்டும். ஆன்மிக காவிக் கட்சியான பா.ஜ.க.வின் தலைமையிலான ஒன்றிய அரசு உண்மையான ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுத்திட முன்வருமா?