ஆதிலெமு, திருப்பாலை
“என்னம்மா, திடீர்ன்னு குண்டத் தூக்கிப் போடுறே… இது எனக்கு பத்தாவது வருடப் பயணம்… இப்ப நான் போயிட்டு வந்துட்டா அடுத்த தடவை குருசாமி ஆயிடுவேன்…
நம்ப வீட்டிலே தொட்டில் கட்ற பாக்கியம் அவன் புண்ணியத்திலே கைகூடி வந்திருக்குற இப்பப்போய் இப்படி மாட்டேனா நியாயமா…’’
இத பாருங்க மாமா, நீங்க கெஞ்சிக் கொஞ்சிக் கேட்டாலும் என் முடிவிலே எந்த மாற்றமும் கிடையாது…..’’
“இதுக்கெல்லாம் உன் தங்கச்சிதானே காரணம்….’’
“ம்ம்… நீங்க சொல்றது சரிதான் ஆனா முடிவு மட்டும் என்னது…’’
“என்ன சொல்ற…?’’
“ஆமங்க, அவ உங்கள மாதிரி படிச்சவ .. நீங்க மாலை போடப்போறதாலே வீட்டைக் கழுவி சுத்த பத்தமா சூதானமா இருக்கணும்ன்னு கூடமாட தங்கச்சியா ஒத்தாசையா இருன்னு அவகிட்ட கேட்ப …. நான் கேட்கிறதுக்குப் பதில் சொல்லிட்டேனா, நீ சொல்றத நான் தட்டாமச் செய்றேன்னுட்டு….. அவ கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரிய-லேன்றத விட, எனக்குப் புரிஞ்சதே கொஞ்சம்-தான்.. ஆனா ஒன்னு, அவ கேட்டதிலே நெறைய உண்மை இருந்ததுன்னு மட்டும் புரிஞ்சுச்சு…’’
“அப்ப இப்ப எடுத்த முடிவுக்கு… ஒன் தங்கச்சி சொல்லித்தானே?….’’
“இல்லை, இல்லை. அவகிட்ட பதில் சொல்ல முடியாம நான் நின்னாலும்… முடிவு நான் எடுத்ததுதான்…’’
“என்ன மாமா, அக்கா என்ன முடிவு எடுத்து இருக்கா?”
“வாடி வா, ஏங்ககிட்ட கேட்டத ஒன் வாத்தியார் மாமா கிட்ட கேளு! மாமனுக்கு பதில் தெரியுதான்னு பார்ப்போம்…’’
“அப்படி என்னத்தக் கேட்டே… வெள்ளந்தியா எதைச் சொன்னாலும் கேட்டுக்கிறவ இப்ப யோசிச்சு முடிவு எடுக்கிற அளவுக்கு அவகிட்ட அப்படி என்னத்தக் கேட்டே….’’
“ஏண்டி எங்கிட்ட கேட்டமாதிரி மாமாகிட்ட கேட்காம அவரு வாயப் பாத்துக்கிட்டு நிக்கறே?’’
“ஆமாம், நீ கேளு…..’’
“மாமா, நீங்க மாலை போட்டு விரதமிருந்து கும்பிடப் போற சாமி பிறந்த கதை பக்தரான உங்களுக்கு நல்லா தெரியும்.. அந்த மாதிரி பிறந்தவர் ஒருத்தரைச் சொல்லுங்க.. ஆணோட- _ ஆண் மட்டுமல்ல; பெண்ணோட பெண்ணு இணைச்சுக்கூட குழந்தை பிறக்க வைக்க முடியாது. இதை, அறிவியல் வாத்தியாரான உங்களுக்குச் சொல்ல வேண்டாம்…’’
“அறிவு, நம்பிக்கை சார்ந்த விடயங்களை சயின்ஸ் பூர்வமா பார்க்கக் கூடாது…’’
“பாக்கக்கூடாதுன்னு சொல்ற நீங்க வகுப்புலே இனப்பெருக்கம் பற்றிய பாடத்த எப்படி எடுப்பீங்க?…’’
“அது வந்து….’’
“மாமா, என் வினாவுக்கான விடையும் உங்களுக்குத் தெரியும். அதைச் சொல்ல விடாம உங்க பக்தி தடுக்குது … இறைவன் முன்னாடி எல்லாரும் சமமுன்னு சொல்லிக்கிட்டு, ஹரிஹர புத்திரனைத் தரிசிக்க பெண் பக்தர்களுக்கு அனுமதி கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளே வரவிடமாட்டேங்குது உங்க புத்தி கெட்ட கூட்டம்…’’
“ஆண்டாண்டு காலமா கடைப்பிடிச்சு வர்ற அய்தீகத்தை மீறக்கூடாதுன்னுதான்…’’
“பெண் வாடை பட்டாலே உங்க சாமி விரதம் கலைஞ்சுடுமுன்னுலே வாதடுறீங்க… சர்வ சக்தி கொண்டவரு பொம்பளைகளைப் பாத்ததுமே மோகம் கொள்ற அளவுக்கு அவ்வளவு பலகீனமானவரா?….’’
நீங்களும் படிச்சவருதானே மாமா.. .ரெண்டு பெண்டாட்டிக்காரனா இருந்துக்கிட்டு பொம்பள பொறுக்கியா இருக்கறவன் உங்க குருசாமி வேற…’’
“வாய்க்கு வந்த மாதிரி பேசாதே! மாலை போட்டுட்டா ஒழுக்க சொலக்கமா விரதமிருந்து-தான போறோம்.. அவன் புண்ணியத்தாலே உங்க அக்கா உண்டாகி இருக்கா… அது என் உண்மையான பக்திக்குக் கிடைத்த பரிசு….’’
“மாமா, படிச்ச வாத்தியார் பேசுற பேச்சா இது…; உங்களுக்குக் குழந்தை பிறக்கப் போறது மருத்துவ உலகத்தின் வளர்ச்சிதான். அதை விட்டுட்டு… ஏன் உங்கள வருசா வருசம் மலைக்குக் கூட்டிட்டுப் போற அந்த மூத்த பக்தரோட மனைவியே குழந்தை இல்லை-யேன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… உங்கள மாதிரி அரை வேக்காடுக் கூட்டத்துக்கு ஏன் எப்படின்னு கேட்டா விடை சொல்ல முடியாம.. மனம் புண்படுது… வெங்காயம்ன்னு எதாவது கதை விடுறதே பொழப்பாப் போச்சு… உண்மை தெரிந்த எங்களப் போன்றவங்களுக்கு உங்க பயித்தக்காரப் பேச்சாலும் செயலாலும் எங்க மனம் மட்டும் புண்படாதா.. ஆனா கட்டாயம் இந்தத் தடவ அக்கா உங்க பூஜை விருந்து போன்ற வேலைகளைச் செஞ்சுதர நான் விடமாட்டேன்.. ஏன்னா மருத்துவர் ஆலோசனைப்படி அவ நல்லா ஓய்வுலே இருக்கணும்… அதுக்காகத்தான் அக்காவுக்கு ஒத்தாசையா இருக்க எங்க அப்பா அம்மா உங்கள் வீட்டுக்கு அனுப்புச்சிருக்காங்க…’’
“நீ என்ன, உங்க அக்காவ என் அய்யப்ப விரதத்துக்கு உதவ விடமாட்டேன்றது… அவளே உன் பேச்சக் கேட்டு முடியாதுன்னு நீ சொல்லறதுக்கு முன்னாலே முடிவா சொல்லிட்டா..’’
“அப்ப உங்க முடிவு…..?’’
“ஏத்தா, வௌங்கல வௌங்கலேன்னு சொல்ற எம் பொஞ்சாதி ஒனக்குப் புரிஞ்சதப் பாத்து, எனக்கும் பக்தி போதை தெளிஞ்சுருச்சு…. அறிவு, அடுத்த மாத பகுத்தறிவாளர் கூட்டத்துக்கு நானும் உங்க அக்காளும் வர்லாம்ல்லே….’’
“பகுத்தறிவுச் சிந்தனை கொண்டு முடிவு எடுத்த அக்காவும், நீங்களும் தாராளமாக வரலாம் மாமா.’’